Saturday, May 3, 2025

  இந்தியா தடையின்றி முன்னேறவேண்டும் ,தன்னிறைவு பெற்று ஒரு வல்லரசு நாடாக விளங்கவேண்டும் , உலக மக்களுக்கு இந்தியா ஒரு சுபிட்சமான நாடு என்ற தோற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பது நம் ஒருமித்த விருப்பம் என்றாலும் அது எல்லோரிடத்திலும் வெறும் எண்ணங்களாக மட்டும் முடங்கிப் போயிருக்கின்றது . எண்ணங்களிலும் சிந்தனைகளிலும் தெளிவான உறுதியான நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் இது என்றைக்கும் கனவுலகக் கொள்கையாக மட்டுமே இருக்கும் . முதலில் அதிகாரமிக்க, செயல்களை மக்களிடையே முடுக்கிவிடும்.வாய்ப்புள்ள ஆட்சியாளர்கள் மாறவேண்டும். அவர்களுக்கு நாடும் நாட்டு மக்களும் தான் முக்கியமே ஒழிய எதிர்க்கட்சியினர் இல்லை. அவர்களுடைய செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மை உடையதாக இருந்தால் , மக்களுக்கு பயனு ள்ளதாக இருந்தால் , தன்னலத்தை மறைவு இல்லாதிருந்தால் அவைகளுக்கு விளம்பரம் தேவையில்லை . விமர்சனங்களும் எழுவதில்லை .மக்கள் ஆதரவு இயல்பாகவே வளர்ந்துவிடும் . மாறாக அதிகாரம் என் கையில் ,என் முடிவே மகேசன் முடிவு என்று ஆணவத்துடன் செயல்பட்டால் , நல்லாட்சியை ஒருநாளும் ஏற்படுத்தமுடியாது ,. ஆட்சியாளர்கள் தங்களுடைய சேவையை விரிவு படுத்தவும் ,மக்களிடம் கொண்டு சேர்க்கவும் திட்டமிடும் போது பொதுநலத்தில் அக்கறையுள்ள ,தன்னலமற்ற தொண்டர்களை இணைத்துக்கொள்ளவேண்டும் .அவ்வப்போது அவர்களுடைய நேர்மைத்தனத்தை மதிப்பீடு செய்து தகுந்த திருத்தங்களைச் செய்யவேண்டும். மக்கள் நலனில் அக்கறை காட்டாத ,பாதிப்பை ஏற்படுத்துகின்ற அதிகாரிகளைக் கண்காணித்து களையெடுக்கவேண்டும். .தீயவர்களாக இருந்துகொண்டு தீயவர்களை யும் சேர்த்துக்கொண்டு தீமைகளை செய்து கொண்டே இருந்தால் நாடு இனி திருத்தவே முடியாது என்ற இழி நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும் . காவல்துறையும் ,நீதித்துறையும் மக்களின் பாதுகாப்புக்கானது . ஆட்சியாளர்கள் அதை அவர்களுடைய மறைவொழுக்க நடவடிக்கை களுக்கு பாதுகாப்புக் கவசமாக மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடாது . ஏனெனில் இதை எதிர்கட்சியினரும் அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் செய்ய வாய்ப்பிருப்பதால் .ஆட்சியாளர்களாலும்  எதிர்கட்சியினராலும் நாடு சீரழிந்து போவதற்கான வாய்ப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

Tuesday, April 29, 2025

 ஓய்வூதியம்  என்பது ஒருவர் வயது மூப்பின் காரணமாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், அவர் தன்னுடைய மற்றும் அவரை நம்பி இருக்கின்ற அவருடைய குடும்பத்தினருடைய வாழ்வாதாரத்தை பாதுக்காப்பதற்காக க் கொடுக்கப்படும் நிதி ஆகும். இது MLA  க்களுக்கு பொருந்தாது. ஏனெனில் அவர்கள் பதவிக்காலம் முடிந்த பின்பு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வென்று MLA  ஆக முடியும் . இதற்காக அவர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்கின்றார்கள் . அரசு ஊழியர்கள் அப்படி புதிய பணிபெறமுடியாது .  MLA க்கள் தங்களுடைய பதவிக்காலத்தில் அளவுக்கு மீறிய அளவில் சம்பாதித்து விடுகின்றார்கள் ..அரசியல் என்பது மக்களுக்கான சேவை. சில பல சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம் . ஆனால் சேவைக்காக வாழ்நாள் முழுக்க ஓய்வூதியம் பெறுவது தவறு. .MLA  க்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள   இது போல இன்ப அதிர்ச்சி தரக்கூடிய அறிவிப்புக்களை  அவ்வப்போது அறிவிக்கவேண்டிது அவசியமாகின்றது .ஓய்வூதியதாரர்கள் மட்டுமின்றி மக்களும் இதை க் கடந்து தான் செல்லவேண்டும் 

Saturday, April 26, 2025

 பொறுப்புத் துறப்பு தன் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று நினைத்தே பெரும்பாலான இந்தியத் தலைவர்களும் ஆட்சியாளர்களும் செயல்படுகிறார்கள் . இந்தியாவின் முன்னேற்றம் இந்தியமக்களால்  திட்டமிடப்படுவதை விட  பொறுப்புக்களைத் துறந்த ஆட்சியாளர்களின் தலைவரால்  மட்டுமே முடிவு செய்யப்படுவதால்  நாட்டின் முன்னேற்றம் மோசமான விமர்சனங்களோடு முடிவடைத்துவிடுகின்றது. மக்களுடைய வரிப்பணம் நாட்டின் கட்டமைப்பிற்கோ, மக்களின் நலனுக்கோ பயன்படுத்தப்படுவதை விட விமர்சனங்களைச் சரிக்கட்டும் வெட்டிச் செலவினங்களோடு காணாமற் போய்விடுகின்றது பொறுப்புத் துறந்த ஆட்சியாளர்களை தண்டிக்காவிட்டாலும் பரவாயில்லை  ,பதவி நீக்கம் செய்து வீட்டிற்கு அனுப்பும் சட்டத்தை நீதிமன்றம் இயற்றவேண்டும். இதை நீங்கள் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள் ? 

Wednesday, April 23, 2025

 எத்துணை முறை முயன்றாலும் ஒரே ஒரு நல்ல தலைவர் கூட நாட்டுக்கு க்கிடைப்பதில்லை .நல்ல தலைவர் உருவாவதும் உருவாகாமல் இருப்பதும் உண்மையில் பிறர் தர வாரா . அது உண்மையில் தலைவராக வரவேண்டும் என்பாரின் எண்ணங்களே.தூய்மையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நம்பிக்கையோடு செயல்படுபர்களே நல்ல தலைவராக உருவாகிறார்கள் . தீயஎண்ணங்களின் ஆதிக்கத்திற்கு அடிமையான   தலைவர்கள்  நாட்டின் முன்னேற்றத்திற்கு அகத்தடையாக இருக்கின்றார்கள்.எவரும் அகத்தடைகளை உணர்வதும் இல்லை ஒப்புக்கொள்வதுமில்லை ,இதற்கு மக்களால் தேர்தெடுக்கப்பட்ட தலைவர்களும் விதிவிலக்கில்லை. தங்களுடைய மறைவொழுக்கத்தை மறைப்பதற்காக அரசாங்கத்தின் கட்டமைப்பைப் பயன்படுத்தி போலி விளம்பரங்களை ஊடங்கள் மூலம் தினந்தோறும் அள்ளிவீசுகின்றார்கள் . இந்த போலி விளம்பரங்களுக்கு ஒப்புதல் கொடுத்து உலகெங்கும் பரப்புவதற்கென்றே பல போலி அரசியல்வாதிகள் தலைவரைச் சுற்றி மொய்த்து வருகின்றார்கள் .தலைவரின் கூட்டாளிகள் தீயவர்கள் என்றால் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காத  தலைவரும் தீயவர்தான் .  பெரும்பாலும் ஒரு தலைவர் தன்னுடன் இணைத்து செயல்படும் கூட்டாளிகளின் ஒரு நேர்மையாளரைக்கூட சேர்த்துக்கொள்வதில்லை. . அப்படிச் சேர்த்துக்கொண்டால் அவருடைய மறைவொழுக்கம் அவர் மூலமாக வெளிப்பட்டு அரசியல் வாழ்க்கையே மூழ்கடிக்கப்படலாம்  . தன்னுடைய கூட்டாளிகள் யாரெல்லாம் தீயவர்கள் என்பதை ஒரு தலைவர் தனக்குள்ள வலிமையான அதிகாரத்தினால் அறிந்திருப்பர் .இதை தலைவர் உணரவில்லை என்று கூறுவதை விட கூட்டாளிகளின் வலிமையான பாதுகாப்பு என்று கருதி தொடர்ந்து அனுமதிக்கிறார் என்று தான் நினைக்கவேண்டியிருக்கு .        


Wednesday, April 9, 2025

 எல்லோரும் இன்றைக்கு இந்து மதம் பற்றி பேசுகின்றார்கள் . எனக்குத் தெரிந்த வரை யாரும் இந்து மதம் இல்லை வேறு எந்த மதம் பற்றியும் பேசுவதற்கு அறுகதையில்லாதவர்கள். உலகில் எல்லோரும் ஏதாவதொரு மதம் சார்ந்து இருந்தாலும் அவர்கள் முழுமையாக அவர்களுடைய மதத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுபவர்களாக இருப்பதில்லை. அப்படியிருக்க ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தை விமர்சிப்பது தவறாகும் உண்மையில் யாருக்கும் அவர்களுடைய  மதத்தைப்பற்றிய தெளிவு இல்லை. ஒவ்வொருவரும் தங்களுடைய மதமே உயர்ந்தது  என்று நினைத்துக்கொண்டு பிற மதங்களில் குறை காண்கிறார்கள் .  

       மதம் என்பது இனிய மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடிப்படையான ஒவ்வொருவரும் கடைப்பிடித்து ஒழுகவேண்டிய வாழ்வியல் ஒழுக்கங்களாகும்.  மதம் எம்மதமாக இருந்தாலும் அதன் அடிப்படையான கொள்கை இது மட்டுமே.  இனிய வாழ்க்கை வாழ இயற்கையைப் பின்பற்றினாலே போதும். அந்தவகையில் இயற்கை எல்லோருக்குமான ஒரு பொதுவான மதம். கடவுள் ஒருவரே என்பதைப்போல மதமும் ஒன்றே .

      வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் தனித்து வாழ்ந்து விடமுடியாது. பிறரைச் சார்ந்து வாழவேண்டியிருப்பதால் வாழ்க்கை , சமுதாய வாழ்க்கையாகின்றது .சமுதாய வாழ்க்கை கொஞ்சம் வேறுபட்டது . அதில் தனிமனித வொழுக்கத்தோடு சமுதாய நலனுக்காக பொதுவொழுக்கமும் சேர்ந்திருக்கிறது .  சுய முன்னேற்றம் என்பது  ஒவ்வொரு மனதர்களுக்குள்ளும் இருக்கும் மிகவும் வலிமையான உந்து சக்தி . பொருளாதார ஏற்றத்தைத் தரும் சுய முன்னேற்றத்தில்  எல்லோருக்கும் சம வாய்ப்பு உள்ளது என்றாலும் அதில்  முன்னிலை பெற திறமையை விட்டுவிட்டு மதம் என்ற பெயரால் புதிய நிபந்தனைகளை வரையறுத்துக் கொள்ளும் பழக்கம் உட்புந்தது.பின்னால் வந்தவர்கள் பொருளாதாரம் ,அரசியல் , தொழில் மற்றும் வர்த்தகம் போன்றவற்றில் கூடுதல் ஆதாயம் பெற   மதத்தில்  புதிய விதிகளையும் புகுத்தினார்கள். இந்த கூடுதல்விதிகள்  பெரும்பாலும் இயற்கைக்கு  முரண்பட்டதாகவே இருக்கும் . சமுதாயத்திற்கு பாதுகாப்பு என்று ஒரு சமுதாயத்தையே மாற்றுவதற்கு சிலபல புதிய கோட்பாடுகளை உட்புகுத்தி புதிய மதங்களை ஏற்படுத்தினார்கள்   அப்போது இயற்கை என்ற மதம் சுய நலம் மிக்க மனிதர்களால்  பல மதங்களாகப் பிரிந்து செயற்கையானது . நம் பிரிவினைக்கு பல காரணங்கள் புனைந்து கூறப்படுகின்றன ஆனால் ஒற்றுமைக்குத் தான் ஒரு காரணமும் இல்லை. ஒருநாள் இந்த உலகம் அழிய நேரிடலாம். அப்போது எல்லா மதமும் பாகுபாடின்றி இயற்கையோடு ஒன்றினையும். 

                           

             புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது

            வளரும் ஆசைக்கு அளவேது

            முடிவேது முடிவேது

            முடிந்தபின் உலகம் நமக்கேது- Kannadasan 

.

Tuesday, March 18, 2025

 


சின்னச் சின்ன தவறுகளைச் செய்யும் சாதாரண மக்களைக் கண்டால் தவிப்பாயும் சட்டம் பெருங் குற்றம் செய்யும் அரசியல்வாதிகளைக் கண்டு புன்னகை பூக்கின்றது .அமெரிக்காவில் டொனல்டு டிரம்ப் அதிபரே ஆனாலும் குற்றவாளியே  என்றார்கள் பல நாடுகளில் குற்றம் புரிந்த அதிபர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் அல்லது நாட்டை விட்டு ஓடிவிடுகின்றார்கள் .இந்தியா மட்டும் விதிவிலக்கு . இங்கு அரசியலவாதிக ளை இனம்பிரிக்காமல்  எல்லோரையும் போற்றிப்புகழ்வார்கள். அதற்குக் காரணம் மக்களிடம்  கல்வி, கேள்வி அறிவை விட வறுமையே மிகுந்திருக்கின்றது. வாழ்வாதாரம் கிடைக்காமல் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் நிலையே நீடித்திருக்கிறது  அரசியல் எதிரிகளே ஒருவருக்கொருவர் இகழ்ந்துகொள்கின்றார்கள். மக்களிடம் வரி வாங்கி அதைக்கொண்டே சட்டத்தை விலை பேசி வாங்கி  விடுகின்றார்கள் . அதனால் சட்டம் கூட அவர்களுக்கு முன்னால் கைகூப்பி நிற்கின்றது .மக்களின் வரிப்பணத்தில் கொஞ்சம் இலவசம் கொடுத்து வள்ளல் என்று நல்ல பெயர் வாங்கி செய்த தவறுகள் அனைத்தையும் மூடி மறைந்து விடுகின்றார்கள் .


Monday, March 17, 2025

 


பழங்காலத்தில்  தமிழ்  தூய மொழியாக ,பிற மொழிகளின் தாக்கமின்றி அணைத்து மக்களின் பயன்பாட்டு வழக்கில் இருந்துவந்திருக்கிறது . கிராமப்புறத்து பெண்கள் கூட எதுகை மோனையுடன் கவிதை மூலம் செய்தி சொன்னார்கள் . எதிர்ப்பாட்டின் மூலம் கருத்தைத் தெரிவித்தார்கள் . தாலாட்டு ,ஒப்பாரி  எல்லாம் தனி இலக்கியம் . உலகில் எம்மொழியிலும் இல்லாத ஒன்று . 

சமஸ்கிருதம் மொழி  புகுந்தபோது அது தமிழ்மொழியைப் பார்த்து பொறாமைப்பட்டு  அதை சீரழிக்க நினைத்து செயல்பாட்டிருக்கவேண்டும் . வேதம் ,கீதை போன்றவற்றிலுள்ள நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்ள  தமிழர்கள் ஆர்வம் காட்டியபோது   சமஸ்கிருத எழுத்துக்கள் மொழியில் திணிக்கப்பட்டன .மொழியின் மரபு சிதைந்தது . அப்போது ஸ்டாலின் வந்தாரு , பஸ் ஸ்டாப் தோன்றியது ,ஜாதகம் கணித்தார்கள், சஷ்டி விரதம் இருந்தார்கள் . தூய தமிழ்ப்பற்றாளர்கள் மொழியின் தனித்துவத்தை ப்பாதுகாக்கப் போராடினார்கள் .எங்கும் தமிழ் எதிலும் தமிழ் கண் விழித்துப் பார்த்தது . ஸ்டாலின் தூய தமிழுக்குள் வர மறுக்கின்றது . பஸ் பேருந்தானது, சம்ஸ்கிருத எழுத்துக்களை நீக்கிவிட்டு புழக்கத்திலுள்ள சொற்களுக்கு மறுவடிவம் கொடுத்தார்கள் . ஆங்கிலம் ஆண்ட போது மக்கள் அவர்களுடைய வாழ்வாதாரத்தை நிலைப்படுத்திக்கொள்ளவும் மேம்படுத்திக்கொள்ளவும் தமிழோடு ஆங்கிலத்தையும் சேர்த்துப் பேசுவதை ப்பெருமையாகக் கருதினார்கள் . டயம் என்ன ஆச்சு ? ரெம்ப டயடாக இருக்கேன் , இந்த அட்ரஸ் தெரியுமா ? பேங்க் போகணும் , டிரைவர் சார் பஸ்ஸை நிறுத்துங்க . மொழியால் பெருமை கொள்ளும் நாம் இதை எப்படி அனுமதிக்கின்றோம் ? இ ப்ப கைபேசி வந்தவுடன் எழுத்துப் பிழைகளும் சேர்ந்துகொண்டன. திணிக்கப்படாமல் புகுந்த மொழிகளால் ஏற்பட்ட சேதாரத்தையே புதுப்பித்துக்கொள்ள முடியவில்லை . இன்னுமொரு மொழி படையெடுத்தல் நாம் என்ன செய்வோம் ?