எங்கள் தமிழ் வெல்லும்
மண்ணில்லாமல்
பயிர் செய்ய நினைத்தாய்
மழை நின்று போனது
உண்ண ஒரு வாய் நீரில்லை என் தோழா!
கலை இல்லாமல்
தொழில் செய்ய நினைத்தாய்
நேர்மை நிறம் மாறிப் போனது
நேயமும் மறந்து நெடுநாள் ஆனது என் தோழா!
அடிவாரமில்லாமல்
கட்டடம் கட்ட நினைத்தாய்
அங்கே வாழ நினைத்தவன்
அங்கேயே புதைந்து போனான் என் தோழா!
நூலில்லாமல்
துணி நெய்ய நினைத்தாய்
பஞ்செல்லாம் பறந்து போனது
நிர்வாணமே எல்லோருக்கும் கிடைத்தது என் தோழா!
மொழியில்லாமல்
வளம்பெற நினைக்கின்றாய்
முன்னேற்றம் இல்லையென்றால் கவலையில்லை
வாழ்க்கையே இல்லையென்றால் செய்வதென்ன என் தோழா?
தாய் மொழி என்பது அன்பும் அறிவும்
தமிழ் மொழி என்பது அகமும் அழகும்
தாய் மொழி என்பது உள்ளும் புறமும்
தமிழ் மொழி என்பது உணர்வும் உறவும்
தாய் மொழி என்பது பழமையும் பண்பாடும்
தமிழ் மொழி என்பது புதுமையும் ஒருமைப்பாடும்
இவை இரண்டும் இணையாவிட்டால்
இல்லை மூவறமும் என் தோழா
I wonder, do you know Tamil?
ReplyDelete