வளரும் பலவீனமும் வராத பலமும்
ஆதார் அட்டை, நிலப் பட்டா, சான்றிதழ் வாங்க தொடர்புடைய அலுவலகத்திற்கு பல முறை படையெடுத்தாலும் வாங்க முடியாமல் வீடு திரும்பும் போது நமது ஆட்சி மற்றும் அலுவலகங்களின் பலவீனத்தைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. காவல் துறையாவது, நீதித் துறையாவது. வீட்டில் திருட்டு,கொள்ளை ,தீயோருக்கு இணங்காததால் விளையும் துன்பங்கள், ஏமாற்றுவோரால் ஏமாற்றப்பட்டு ஏற்படும் இழப்புகள் இவற்றால் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டாலும் நமது காவல் துறையாலும் நீதித் துறையாலும் ஒரு பாதுகாப்பும் கிடைக்காமல் தவிக்கும் போது பாதுகாப்பின் பலவீனத்தைப் புரிந்து கொள்ள முடிகின்றது
எவ்வளவுதான் வளர்ச்சியைப் பற்றி பீற்றிக் கொண்டாலும்,ஒழுக்கம் இல்லாத ஆசிரியர்கள், மாணவர்களால் கல்வியின் பயனூறு திறன் குறைந்து கொண்டே போவதைக் காணும் போது நமது கல்வி மற்றும் ஆளுமைத்திறனின் பலவீனத்தைப் புரிந்து கொள்ள முடிகின்றது.வெறும் பதவிக்காக, பதவியால் கிடைக்கும் வரம்பு மீறிய சுகங்களுக்காக , நாட்டையே சுரண்டிப் பிழைக்கும் உரிமை தனக்கு மட்டும் இருப்பதாக நடந்து கொள்ள ஆளுமைத் திறனை இழந்து விட்ட திறமையற்ற அரசியல்வாதிகளைக் கொண்ட நாட்டின் சரிவைக் காணும் போது நமது அரசியல் அமைப்பின் ஓட்டு மொத்த பலவீனத்தைக் கண்டு நொந்து போக மட்டும் முடிகின்றது. மக்களிடம் அளவில்லாத சகிப்புத் தன்மை இருக்கும் வரை இது தொடரவே செய்யும் இதில் இனி ஒரு மாற்றம் ஏற்படும் என்பதற்கும் எந்த வழியும் இல்லை. அப்படியே ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தினாலும் அது நடைமுறைக்கு வர வெகு நாளாகும். ஒரு கெட்ட பழக்கம் எப்படி வந்ததோ அப்படியே அது வெளியேற வேண்டும் என்பது இயற்கையின் நடைமுறை. சுதந்திரம் பெற்று நூற்றாண்டுகளைக் கடந்தாலும் இந்தியாவில் ஒரு நல்ல மாற்றமும் வரப் போவதில்லை. தடைகள் மிகுந்த பாதையில் பயணம் சுகப்படுவதில்லை
No comments:
Post a Comment