Saturday, April 25, 2020

ஜார்ஜ் வாசிங்டன் கார்வரின் பொன்மொழிகள்


ஜார்ஜ் வாசிங்டன் கார்வரின் பொன்மொழிகள்

 .”உயர்ந்த,உறுதியான கண்ணோட்டம் இல்லாத போது மனதில் நம்பிக்கை 
தோன்றுவதில்லை 

நம்பிக்கை என்பது ஒரு சொல்லில்லை . அதனுள்  அறிவு , முயற்சி ,உழைப்பு ,கூர் நோக்கு ,சுறுசுறுப்பு போன்ற பல சொற்களின் பொருண்மைகள் அடங்கியுள்ளன . இவற்றின் நிறைவான  உறுதியான சேர்க்கையே உயர்வான ,நிலையான கண்ணோட்டத்தைத் தருகின்றது. எங்கு கூர்நோக்கு இல்லையோ அங்கு நம்பிக்கை வலுப்படுவதில்லை என்பது கார்வரின் நம்பிக்கை. உழைப்பு நம்பிக்கையை த் தரும் . நம்பிக்கை உழைப்பை நாடும் . நம்பிக்கையும் உழைப்பும் உற்ற தோழர்கள்  

நம்பிக்கை என்பது தன்னம்பிக்கையையே குறிக்கும். தன் மீது சிறிதும் நம்பிக்கையில்லாமல் பிறர் மீது அது கடவுளேயானாலும் முழு நம்பிக்கை கொள்வதென்பது  முட்டாள்தனமானது.நாம் ஓய்வாக இருந்து கொண்டு உழைப்பை மற்றவர்கள் மீது திணிப்பதற்கு செய்யும் தந்திரமே பிறர் மீதான நம்பிக்கை. நம்பிகை இருக்கும்போதுதான் வழிமுறைகள் தேடப்படுகின்றன .உள்ளத்தில் நம்பிக்கை தோன்றும்போது உடலில் தேவையான ஆற்றல்கள் ஊற்றெடுக்கின்றன எண்ணங்கள் மேலும் சுத்திகரிக்கப்படுகின்றன ,திறமைகள் கூடுதலாய் அதிகரிக்கின்றன .வெற்றி இலக்கு மனக்கண்முன்னே தெரிய வருகின்றன. .


“,சாதனைகள் புரிவதற்கு குறுக்கு வழி எங்கும் இல்லை 
.
வெற்றிக்கு மூன்று ரகசியங்கள் இருக்கின்றன. அவை உழைப்பு உழைப்பு உழைப்பு என்று கூறுவார்கள். திறமையில்லாமல் கூட வெற்றிபெற்றுவிடலாம் ஆனால் உழைக்காமல் பெறவே முடியாது. குறைந்த உழைப்பில் நிறைந்த பலனைப் பெறுவதற்கே திறமைகள் தேவைப்படுகின்றன
வெற்றியைப் பெற குறுக்கு வழியைத் தேர்ந்தெடுப்பாயேயானால் எல்லோரும் அதுபோல குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்க அனுமதித்தது போலாகிவிடும். பிறருக்குத் தெரியாமல் குறுக்குவழியைப் பின்பற்றி நாம் அவர்களைக் காட்டிலும்  முன்னேறிவிடுவோம்  என்று தவறுதலாக ஆசைப்படுகின்றோம் .பலர் பிறர் குறுக்குவழியில் முன்னேறுகிறார்கள் என்று அவர்களாகவே நினைத்துக் கொண்டு அவர்களும் குறுக்கு வழியைப் பின்பற்றுகிறார்கள் அல்லது பின்பற்றும் குறுக்கு வழியை விட்டுவிட மறுக்கின்றார்கள் . உலகம் வெப்பமயமாவதால் பருவநிலைக் கோளாறுகளால் ஒட்டு மொத்த உலகமும் தடுத்து நிறுத்தமுடியாமல் அழிந்துவருவதைப்போல உள்ளம் வெப்பமயமாவதால் மனித நேயம் சீரழிந்து மனித குலமே புனராக்கம் செய்யமுடியாமல் சீரழிந்து போக நேரிடலாம். நாம் இயற்கையைப்  பார்த்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கு. இந்த பரந்த பிரபஞ்சத்தில் கணக்கிலடங்கா சாதனைகளை இயற்கை ஒவ்வொருநாளும்  ஒவ்வொரு இடத்திலும் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது , ஒன்றைக்கூட அது குறுக்கு வழியில் செய்து மகிழ்ச்சி கொள்வதில்லை .

வாழ்கையில் ஒரு சாதாரண செயலை அசாதாரணமான வழியில் செய்யும் போது ,நீ  உலகையே உன் உள்ளங்கைக்குள் அடக்கிவிடுகின்றாய் .

சாதனையாளர்களின் சுயசரிதைகளை வாசிக்கும் போது ஒரு உண்மை தெரியவருகின்றது. .அவர்கள் புதிதாக எதையும் செய்யவில்லை , நாம் செய்யும் அதே சாதாரண விஷயங்களையே புதுமையாகச் செய்கின்றார்கள்.ஒரு சிறிய வித்தியாசமே மிகப்பெரிய வெற்றியை பரிசாகக் கொடுக்கின்றது .ஒன்றைப்பற்றிச் சிந்திக்கும் போது அதனுடன் தொடர்புடைய நேர்மறையானவிஷயங்களை மட்டுமின்றி எதிர்மறையான விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் . ஆழமாகச் சிந்திக்கும் போது எதிர்மறையானவற்றை  எப்படி நேர்மறையானதாக மாற்றமுடியும் என்பதற்கான நுட்பங்களை  அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது. .செலவு குறைவாகவும் ,பயன் அதிகமாகவும் இருக்கும்போது அது மக்களிடையே மகத்தான வரவேற்பைப் பெறுகின்றது . நேர்மையும் கைகோர்க்கும் போது அந்த வரவேற்பு நிரந்தரமாகின்றது

எண்ணெய் வாணிகத்தில் மூலம் பணம் குவித்த  ராக் பெல்லர், ஒளிப்படத்துறையில்  கோடி கோடியாய்  சம்பாதித்த  ஈஸ்ட்மென்,தேயிலை உற்பத்தியில் அளவற்ற பொருள் தேடிய லிப்டன் ,கார் உற்பத்தியில் சிறந்து விளங்கி செல்வத்தை அள்ளிக் குவித்த போர்டு , சாக்லேட் உற்பத்தியில் சாதனை புரிந்த காட்பெர்ரிஸ், கணனி மென்பொருள் உற்பத்தியில் கோலோச்சும் பில் கேட்ஸ் , ஸ்டீவ் ஜாப்ஸ்  இவர்களெல்லாம் என்ன பணக்காரர்களாகவா பிறந்தார்கள் . இல்லையே, மிகவும்  வறுமையான ஏழ்மையான ஏழைக்குடும்பத்தில்தான்  பிறந்தார்கள் .சரியான உணவிற்கும் , தடையில்லாத படிப்பிற்கும் துன்புற்றார்கள் . வேலைக்காக அலைந்தார்கள் ..இதிலெல்லாம் அவர்கள் நம்மைப்போலத்தான். ஆனால் எதோ ஒரு உந்து சக்தியை உள்ளூரப்  பெற்று அதை வெளிப்படுத்த விடாமுயற்சியுடன் உழைத்தார்களே அந்த விதத்தில் அவர்கள் நம்மிடமிருந்து வேறுபடுகிறார்கள் . செயல் முறையில் காட்டிய அந்த வேறுபாடு அவர்களுக்கு வற்றாத புகழைத் தந்தது

“பெரும்பாலானோர் வெற்றிக்கான திறவுகோலை எங்கும்  தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கின்றார்கள், அவர்களுடைய கனவுகளுக்கான திறவுகோல் அவர்களிடம் தான் இருக்கின்றது என்பதை அறியாதிருப்பார்களேயானால்”



யாராக இருந்தாலும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மகத்தான சக்தி ஒளிந்துகொண்டிருக்கின்றது .ஒருவருடைய வாழ்க்கையின் வெற்றி என்பது இந்த சக்தியை இனமறிந்து வெளிக்கொணர்வதில் இருக்கின்றது ..
ஒருவருடைய முயற்சியாலும் செயலாலும் வருவதுதான் அவருக்குக் கிடைக்கும் அவருடைய வெற்றி பிறருடைய செயலால் தீர்மானிக்கப்படுவதில்லை.
ஒருவருடைய வெற்றிக்கான திறவுகோல் அவரிடமே இருக்கின்றது என்பதைப் பலர் அறிவதில்லை .நம்புவதுமில்லை . அதனால்தான் சமுதாயத்தில் உண்மையான வெற்றி பெற்றவர்கள் சிலராகவும் , போலியான வெற்றிக்காக அலைபவர்கள் பலராகவும் இருக்கின்றார்கள் .

செயல் தொடங்கப்பட அதற்கு முன் அது தொடர்பான எண்ணம் தோன்றி வளர்ந்திருக்க வேண்டும் ஒரே எண்ணத்தை மீண்டும் மீண்டும் சிந்திக்கின்ற போது அது வலுப்படுவதுடன் , அகமனத்திலும் குடியேறிவிடுகின்றது . உள்ளத்தை த் தொட்ட உண்மையான விஷயங்கள் மட்டுமே அங்கு குடியேறமுடியும் . மனம் இந்த விஷயங்களை அசைபோடும் அது இரவில் கனவாக மலர்கின்றது கனவு கள் ஒரு செய்தியை மொழியின்றிச் சொல்லும் காட்சிகளே.அதை மொழிபெயர்த்து புரிந்து கொள்ள முடியுமானால்  வெற்றிக்கான திறவுகோலைப்  பொருள் செலவின்றிப் பெற்றுவிடமுடியும் பெரும்பாலானோருக்கு உள்மனத்தில் தேவையற்ற விஷயங்களையும் ஒரு குப்பைத் தொட்டி போலச் சேமித்து வைத்திருப்பதால் , வெற்றிக்கான கனவுகளே வருவதில்லை.

99   சதவீதத் தோல்விகள்  மன்னிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்திக் கொள்ளும் மக்களாலேயே விளைகின்றது.

தவறுகள் மன்னிக்கப்படுகின்றன என்றால் தவறுகளை மீண்டும் செய்ய வாய்ப்பளிக்கப்படுகின்றது என்றே அர்த்தம் .அறியாமல் செய்த தவறுகள் .மன்னிக்கப்படலாம் ஓரிரு முறை அதுவும் போதிய அறிவுரையுடன் ,ஏனென்றால் தவறுகள் மனித இயல்பு . ஆனால் வேண்டுமென்றே செய்யப்படும் தவறுகளை மன்னிக்கவே கூடாது . ஏனெனில் அவைதான் மீண்டும் மீண்டும் அரங்கேறுகின்றன தவறு செய்வதால் ஒருவன் வெற்றி பெறலாம் ஆனால் அது நிலையானதில்லை . நீட் தேர்வில் சிலர் ஆள்மாற்றட்டம் செய்து வெற்றிபெற்றார் , அது கண்டுபிடிக்கப்பட்ட வுடன் குடும்பத்தோடு சிறைத் தண்டனை பெற்றார்கள் .
மன்னிப்பு வெற்றிபெறுவதற்கு மற்றொரு வாய்ப்பைக் கொடுக்கின்றது .என்றாலும் அது மற்றொரு வாய்ப்பேயில்லை  என்ற நிலையில் இருந்த அக்கறையை இழந்து  கவனமின்மையோடு செயல்படச் செய்கின்றது. பொதுவாக மன்னிப்போடு மேற்கொள்ளும் அடுத்தடுத்த முயற்கிகளில்  வெற்றி வாய்ப்பு வீதம் படிப்படியாகக் குறைகின்றது.

“உன்னிடம் இருப்பதைக் கொண்டு எங்கிருக்கின்றாயோ அங்கேயே தொடங்கு சும்மா இருக்காதே . அதைக்கொண்டு எதையாவது செய் ஆனால்  ஒருபோதும் திருப்தி அடைந்துவிடாதே”

எதையாவது ஒன்றை வெகுமதியாகப் பெறவேண்டுமென்றால் அதற்கு அதிர்ஷ்டம் வேண்டும் என்று நினைப்பார்கள் எதற்கும் அதிர்ஷ்டம் இருந்தால் தான் கிடைக்கும் என்றே நினைக்கப் பழக்கப்பட்டுவிட்டதால் அதைப் பெறுவதற்கு தான் ஒருபோதும் காரணமாக இருக்க முடியாது என்றே நம்புவார்கள் .உழைக்க உழைக்க அதிர்ஷ்டம் ஒருவரைத் தானாகத் தேடிவரும் .உண்மையில் அது அதிர்ஷ்டம் இல்லை உண்மையான உழைப்புக்குக் கிடைக்கும் வெகுமதி .

“உன்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது நீ எப்படி இளையவர்களிடம் நட்புடனும், முதியவர்களிடம் பாசத்துடனும் , ஏழைகளிடம் இரக்கத்துடனும், வலியோர் மற்றும் மெலியோரிடம் சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொள்கிறாயோ அதைப் பொறுத்தது . ஏனெனில் உன் வாழ்வில் நீ ஒருநாள் அப்படியெல்லாம் இருப்பாய்”.

சிறந்த வாழ்க்கையை வாழ்வது எளிது .ஏனெனில் அது முழுக்க முழுக்க நம் கையில் மட்டுமே இருக்கின்ற எதிர்வினையற்ற செயல். பிறருக்கு மனித நேயத்துடன் உதவுவது , இயற்கையை உணர்ந்து இயல் வாழ்க்கையை மேற்கொள்வது , தான் வாழுமிடத்தில் பிறரும் பின்வருவோரும் மகிழ்ச்சியாக வாழ நம்பிக்கையளிப்பது .மூலம் யாரொருவரும் சிறந்த வாழ்க்கையைத் தனதாக்கிக் கொள்ள முடியும் . ஆனால் போட்டி பொறாமை போன்ற குணங்களால் மனிதநேயத்தைத் துறந்துவிட்டு உள்ளுக்குள் ஓர் இழிவான வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். வாழ்க்கை என்பது ஒரு சக்கரம்போல . நாம் பிறருக்கு என்னென்ன செய்கின்றோமோ அவைதான் பிறரால் நமக்கும் செய்யப்படும். .தீயதைக் கொடுத்து விட்டு அதற்குப் பதிலாக நல்லதை ஒருநாள் வாங்கலாம் ஆனால் எல்லாநாளும்  எல்லாரிடமிருந்தும்  வாங்கமுடியாது.தீய பரிமாற்றம் தொடர்ந்து அதிகரிக்கும் போது சமுதாய வாழ்க்கை மேலும் சிக்கலாகிவிடும் .

No comments:

Post a Comment