நாம் வளரும் போது மனதிற்கு மகிழ்ச்சி தருகின்றது என்று சிறு வயதிலேயே சில தவறுகளைச் செய்ய ஆரம்பிக்கின்றோம். அது பிறருக்குத் துன்பம் தருகின்றது என்பது ஒரு பாதிப்பை ஏற்படுத்தாத போது தவறுகளினால் கிடைக்கும் சுகத்தை விட்டுவிட மனம் ஒப்புக் கொள்வதில்லை.அதனால் காலம் செல்லச் செல்ல தப்புகளே வாழ்க்கையாகி விடுகின்றது. சில தவறுகள் பல தவறுகள் செய்யப்படுவதற்குக் காரணமாகி விடுகின்றன.அதற்கு தவறுகள் செய்வதை சமுதாயத்தால் அனுமதிக்கப்படுவதும்,தொடக்கத்திலேயே தவறுகள் திருத்தாமல் வளர விடுவதும்தான்.ஒரு தவறைச் செய்யும் போது அது பிறராலும் பின்பற்றி ஒழுக சம வாய்ப்பிருப்பதை பெரும்பாலும் பலர் சரியாக அறிவதில்லை. பின்விளைவுகளைப்
பற்றிக் கவலைப்படுவதுமில்லை யாருக்கும் தெரியாமல் செய்கின்றோம் என்று திரை மறைவில் பலர் தொடர்ந்து தப்புக்களைச் செய்து கொண்டே இருக்கின்றார்கள். தவறுகள்
செய்வது
மனிதர்களின் இயல்பு. ஆனால் அதைத் திருத்திக் கொள்ள வேண்டும் .தவறுகள் தப்புகள் செய்வதற்கு அடிப்படையாகின்றது. தப்புகள் குற்றங்கள் செய்வதற்கு காரணமாக அமைகின்றது.
தவறுகள் செய்யப்படும் போது அவை சமுதாயத்திற்கு ஒரு தவறான முன் உதாரணமாகி விடுகின்றது. கட்டுப்பாடுகள் பலவீனமாக இருக்கும்போது,பெரும்பாலானோரின் உள் மனம் அதை
ஏற்றுக்கொள்வதில்லை. மக்கள் உண்மையாக அதற்குக் காட்டும் எதிர்ப்போ மிகவும் பலவீனமாகி விடுகின்றது.
நாம் வாழ மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோமோ அப்படியே மற்றவர்களும் வாழ நாமும் நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்முடைய எதிர்பார்ப்பிற்கு ஒரு நியாயமான அர்த்தம் இருக்கும். தப்பைத் தப்பென்று தெரிந்து கொண்டு தவிர்த்துக் கொள்ளத் தெரியாதவன் வாழ்க்கை அவனுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் தப்பான வாழ்க்கையாகி விடுகின்றது. இன்றைக்கு இந்திய நாட்டில் எங்கும் பரவி மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஊழல் இதைத்தான் சுட்டிக் காட்டுகின்றது.
No comments:
Post a Comment