எழுதாத கடிதம்
உலகம் ஒரு நாள் அழிந்துவிடும். ஏனெனில் இந்த பிரபஞ்சத்தில்
எல்லாம் தோன்றியும் அழிந்தும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.உலகத்தில் உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதால்
இயற்கை ஒரு வேறுபாடான அணுகுமுறையைப் பின்பற்றுவதில்லை.
இயற்கையைப் பொறுத்த மட்டில் உயிருள்ளவையும் உயிரற்றவையும்
ஒன்றுதான்.எல்லாம் மீண்டும் தோன்றியிருப்பதற்காக அழிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன. இயற்கையாக உலகம் அழிவதை யாரும் தடுத்து விட முடியாது.
ஆனால் மனிதர்கள் ஒருவர்க்கொருவர் காட்டி வரும் மிகுதியான பகைமை உணர்வுகளால் இந்த உலகம் இயற்கையால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு வெகு
முன்பே மனிதர்களால் அழிந்துவிடும் அபாயத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றது. இனப் படுகொலை ,தீவிரவாதத்தின் முரட்டுத்தனமான போக்குகள்,மாசு படுத்துவதால் ஏற்படும் உலகலாவிய பருவ மாற்றங்கள்,உடலை முட்டித் தள்ள மனத்தில் வளரும் அளவில்லாத பேராசைகள்,மது மற்றும்
மாது மயக்கங்கள், வரம்பு மீறிய இனப்பெருக்கம் இப்படிப் பல
காரணங்களைக் கூறலாம். இது தவிர ஒவ்வொரு நாடும் வேறுசில தனித்த காரணங்களையும் தங்கள் அழிவிற்கென வளர்த்துக் கொண்டு வருகின்றன. இதில்
வளர்ந்த நாடுகளும் விதி விலக்கில்லை.வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகள் மீது அக்கறை
காட்டுவது போல ஆதிக்கம் செலுத்த முயலும் போது ஏற்படும் போட்டி பொறாமையால் மனவிகாரம்
பெறுகின்றன. இது வளரும்
போது உலகப் பெரும் போர் மூழும் அபாயமும் வளர்ந்து விடுகின்றது.இந்தியா போன்ற
வளரும் நாடுகளில் மதம் மற்றும் சமுதாயச் சிந்தனைகளால் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டு
வரும் ஒழுங்கின்மை வெடித்துச் சிதறும் ஒரு அபாயத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது.அரசியல் வாதிகளின் ஊழல்கள் ,நிர்வாகத் திறமையின்மை,நாடு மற்றும் நாட்டு மக்களின்
மீது உண்மையான அக்கறையின்மை,மக்கள் சம்பாதித்து வாழ எல்லோருக்கும் சமவாய்ப்பின்மை,எங்கும் எதிலும்
கட்டுப்பாடின்றி வளரும் அறநெறியின்மை -மக்களுக்கு
மக்களே அணு குண்டாய் மாறும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது
No comments:
Post a Comment