அணு உலையும் வாழ்வியலும்
எப்பொருளை எடுத்துக் கொன்டாலும் அதில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. இவ்வுலகில் வெறும் நன்மையை மட்டுமே தரும் ஒன்று எதுவுமில்லை. அதுபோல வெறும் தீமைகளை மட்டுமே தரக்கூடிய ஒன்றும் இல்லை. அமுதம் கூட ஒரு நிலையில் நஞ்சாகலாம், நஞ்சு
கூட ஒரு கட்டத்தில் அரு மருந்தாகலாம்.. இரண்டையும் சீர்தூக்கி எது மிகையோ அதை அறிந்து கொண்டு பயனில் கொள்ள வேண்டும் என்று வள்ளுவப்பெருந்தகையின்
கருத்து இங்கு நினைவுகூரத் தக்கது.
அணு உலை என்பது சமநிலையில் வாழும் ஒரு சமுதாயம் போன்றது. அணு உலை தொடர்ந்து இயங்கினாலும் அதிலிருந்து ஆற்றல் ஒரு சீராக வெளிப்படுவதால் ,
மிகை ஆற்றல் வெளிப்பட்டு உலையே வெடித்துச் சிதறி அழிந்து போய் விடுவதில்லை. அல்லது குறைவாக வெளியேறி போதைமையால் நலிவடைந்து அழிவதுமில்லை. அது சாகாத சமுதாயம் போல தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அப்படி இயங்குவதற்கு திட்டமிட்ட புற முயற்சிகள், தேவைப்படுகின்றன.
அணு உலையில் U-235 என்ற யுரேனிய அணுக்கள் மெது வேக
நியூட்ரான்களால் தாக்கப்படும்போது பிளக்கப்பட்டு இரு கூறுகளாக வகுக்கப்பட்டு சமுதாயத்திற்குப் பயன்தரக்கூடிய ஆற்றலைத் தருகின்றது. அப்போது மேலும் 2 அல்லது 3 நியூட்ரான்கள் வெளிப்படுகின்றன. இதைப் புறத் தூண்டுதலின்றி அடுத்த கட்ட யுரேனியப் பிளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆணால் அப்படி வெளிப்படும் அணைத்து நியூட் ரான்களையும் அடுத்த கட்ட யுரேனியப் பிளவுக்குப் பயன்படுத்தினால் விரைவில் கட்டுப்படுத்த முடியாத அளவில் கணக்கிலடங்காத யுரேனிய அணுக்கள் சமகாலத்தில் பிளவுற்று மிக அதிகமான ஆற்றல் வெளிப்படும் .
அதனால் அணு உலையே வெடித்துச் சிதறிவிடும். எனவே தீமை தரக்கூடிய அந்த வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாக இருக்கின்றது .
இதற்கு அணு உலையில் ஒரு காட்மியத் தண்டை உட்சொருகி
அதிகமாகப் பெருகிவரும் நியூட்ரான்களை உட்கவர்ந்து பாதுகாப்பாக இயங்க விடுவார்கள். அடுத்த கட்ட யுரேனியப் பிளவுக்கு ஒரேயொரு
நியூட் ரான் மட்டுமே பயன்படுமாறு செய்வதற்கு இது அனுகூலமா இருக்கின்றது. இக்கட்டுப்பாடு சமுதாயத்தில் அரசுத் துறை, காவல்துறை, நீதித் துறை போன்றது. சமுதாயத்தில் கண்காணிப்பு பிழையின்றித் தொடர்ந்து இருந்தால் மட்டுமே எப்படி அணு உலை பாதுகாப்பாக இயங்க முடியுமோ அது போல மக்களால் மக்களுக்காக மக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இத் துறைகளும்
பிழையின்றி தொடர்ந்து இயங்கி வரவேண்டும்.சிறிய அளவில் பிழையிருந்தாலும் அது மளமளவென்று காலப் போக்கில் பல்கிப் பெருகி சமுதாயத்தை முழுதுமாக சீரழித்துவிடலாம். அப்படி அச்சந்தரும் பிழைகள் இன்றைக்கு சமுதாயத்தில் மிகச் சாதாரணமாக நடந்து வருகின்றன.கண்காணிப்பு இல்லாத ஆட்சியின் பிழையால் ஒட்டு மொத்த
சமுதாயமும் தொடர்ந்து சீரழிவதுடன் இனித் திருந்தி ஒற்றுமையாய் வாழவே முடியாத சூழலே
உருவாகி வருகின்றது.
இதைத்தான் அணு உலை நமக்குப் பாடமாகப் புகட்டுகின்றது .எச் சமுதாயத்தில்
காவலர்-மக்கள் விகிதம் குறைவாக இருக்கின்றதோ அச் சமுதாயமே மேம்பட்டு வாழும் சமுதாயமாகும்.அச் சமுதாயத்தில்
மட்டும் ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்கு உயரிய
சிந்தனைகளும் தங்கு தடையில்லாத வளர்ச்சிகளும்
எல்லோருக்கும் வசப்படும்.பாதுகாப்புக்காக நாம் மேற்கொள்ளும் அளவில்லாத முயற்சிகள் நம்முள்
பகைபோல ஊடுறுவியிருக்கும் தீயவர்களையே சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றது.இவர்களின் பெருக்கம் நிச்சியம்
ஆட்சி, காவல் மற்றும் நீதி துறைகளின் அவல நிலையையே எடுத்துக் காட்டுகின்றது
No comments:
Post a Comment