Monday, May 4, 2020

மண்டேலாவின் பொன்மொழிகள்


மண்டேலாவின் பொன்மொழிகள்
நீங்கள் உங்கள் எதிரியுடன் அமைதியை ஏற்படுத்த விரும்பினால், அவருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். பிறகு அவர் உங்கள் பங்குதாரர் ஆகிவிடுவார்”.

நம்மிடமுள்ள ஈகோ மனப்பான்மை எதிரிகளை ஒழுத்துக்கட்டவே விரும்புகின்றது  நல்லுறவு கொண்டு அவர்களையும்  அனைத்துச் செல்லும் உயர்ந்த எண்ணம் இருப்பதில்லை. முதலில் நாம் பிறருக்கு எதிரியாக இல்லாமல் நண்பர்களாக மாறினால் , மற்றவர்களும் நமக்கு எதிரியாகவே இருக்காமல் நண்பர்களாக மாறுவார்கள். கொடுத்தால்தான்  பெறுவதற்கான தகுதியைப் பெறமுடியும் என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்.

“பணத்தால் வெற்றியை உருவாக்கிவிட முடியாது”.

நேர்மையைச் சுயநலமின்றி நேசிக்கின்றவர்கள்  பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை .கொள்கையில் உறுதியில்லாதவர்களே பணத்தைக் கண்டு மயங்குகின்றார்கள் .

பணத்தால் ஒரு வெற்றியைப் பெறமுடியும் என்றால் அதே பணத்தைக் கூடுதலாகக் கொடுத்து தோல்வியையும் ஏற்படுத்த முடியும் .எல்லோரும் பணம் சம்பாதிக்க விரும்புகின்றார்கள் ஏனெனில் பணம் ஒரு பொதுவான செலவாணியாகவும்   
எளிதான பண்டமாற்றுப் பொருளாகவும் இருப்பதுதான் .பணத்திற்கு உள்ள இந்த சிறப்பு அதை மனதிற்கு போதையூட்டும் பொருளாகியிருக்கின்றது. நேர்வழியில் தேவையான அளவு சம்பாதிப்பதை விட தவறான வழியில் அதிகம் சம்பாதிக்க ஆசைப்படுகின்றார்கள் .ஒவ்வொருவரிடமும் உள்ளூறும் இந்த ஆசையை தவறான வழியில் முன்னேற நினைப்பவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றார்கள் .அது அவர்களுக்கு வெற்றி போலத் தோன்றலாம் ஆனால் அது உண்மையில் சமுதாயத்திற்கு மிகப்பெரிய தோல்வியே . லஞ்சப் பணத்திற்காக அரசு ஊழியர்கள் வேலை செய்தால், லஞ்சம் கொடுக்கப்படாத போது ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருப்பதற்குச் சம்பளம் வாங்கிக் கொண்டு போவார்கள் .அங்கே உழைப்பு இல்லை நாட்டில் வளர்ச்சியும் இல்லை என்பதை இவர்கள் உணரவேண்டும் . உடனடிப் பாதிப்பு இல்லை என்று இந்தத் தவறை தொடர்ந்து செய்கின்றார்கள். சமுதாயத்தின் தோல்வி உடனே இல்லாவிட்டாலும் ஒரு காலத்தில் சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு மனிதனையும் பாதிக்கும். அதன் நிரந்தரம் அழிவு காலத்தின் எல்லைக்கே அழைத்துச் செல்லும்..கொள்கைப் பிடிப்புள்ள அரசாங்கம் அமைந்தால் அது  லஞ்சப்பேர்வழிகளுக்கு  கொடுக்கும் உடனடிப் பாதிப்பால் நாடு தழுவிய ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி அச்சுறுத்தும் அழிவைத் தடுத்து நிறுத்தலாம்  .

“எனது வெற்றிகளின் மூலம் என்னை மதிப்பிடாதீர்கள், எத்தனை முறை நான் கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதன் மூலம் மதிப்பிடுங்கள்”.

 ஒரு செயலால் கிடைக்கும் பலன்களைக் கொண்டே வெற்றி ,தோல்வி யை மனம் தீர்மானிக்கின்றது .. எல்லோருக்கும் வெற்றி என்றால் அது முழுமையான வெற்றி என்றும் எல்லோருக்கும் தோல்வி எஎன்றால் அது முழுமையான தோல்வி . என்றும்  கூறலாம்  ஒரு தனி மனிதன் தனக்கு க் கிடைத்த வெற்றியை பொதுமைப்படுத்தும் போது அது முழுமையான வெற்றியாக அங்கீகரிக்கப்படுகின்றது . மண்டேலா மக்கள் விடுதலைக்காகப் போராடி ப் பெற்ற வெற்றியை நாட்டுடைமையாக்கினார் , அதனால் அவர் நிலைத்த புகழைப் பெற்றார். வெற்றியை விட அவருடைய போராட்டம் நமக்கு வழிகாட்டும்  ஒரு பாடமாக விளங்குகின்றது.

பெரிய சாதனைகளுக்கு ஒருவரைத் தகுதிப்படுத்த இயற்கை நடத்தும் தேர்வே தோல்வி இந்தத் தேர்வை எழுதாமலே தப்பிப்பவர் யாருமில்லை .ஒவ்வொரு தோல்வியும் ஒரு அனுபவம் .அதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் புதிய முயற்சியில் வெற்றி காணமுடியும். .தோல்வியிலிருந்து எதையுமே கற்றுக்கொள்ளவில்லை என்றால் அதுதான் மோசமான தோல்வி. .

வெற்றி என்பது உற்சாகத்தை சிறிதும் இழக்காமல் ஒரு தோல்வியிலிருந்து மற்றொரு தோல்விக்குச் செல்லும் பயணம். அப்படிப்பட்ட  பயணத்தின் முடிவு  நிச்சியமாக வெற்றியாக மட்டுமே இருக்கும் என்பதைத் தெரிவிக்கின்றது. தொடரும் தோல்வி என்பது பயணத்தின் முடிவு அல்ல , அது இடைநிலை . மேலும் பயணத்தைத் தொடரும் போது மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன சும்மா இருந்தால் தோல்விகள் வெற்றியாக மாறும் மாற்றங்கள் நிகழ வாய்ப்பின்றிப்போகும் ஒரு பெரிய வெற்றிக்காக மண்டேலா சிறைச்சாலையில் நெடிய காலம்  காத்திருந்தார் பல முறை சிறைக்குச் சென்றாலும் . சித்திரவதைக்கு ஆளானாலும் மனம் தளரவில்லை. மன்னிப்புக் கேட்டு வெற்றியைக் கேவலப்படுத்தவில்லை

 
 உங்களால் இந்த உலகை மாற்ற பயன்படுத்த முடிந்த மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வியே”.

“நாட்டின் குடிமக்கள் கல்வியறிவு பெறாதவரை, எந்த நாடும் உண்மையில்  மேம்பாடடைய முடியாது”.

செல்வத்தை ஈட்டலாம் .ஈட்டியதை இழக்கலாம் ஆனால் பெற்ற கல்வியை ஒருவர் ஒருபோதும் இழக்கமுடியாது.தன் வாழ்நாளில் இழக்கமுடியாத கல்வியைப் பெறுவதே சிறந்த பொருள் ஈட்டுவதாகும். ஏனெனில் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வாதாரத்தை தேடிக்கொள்ள இந்த கல்வியே துணை செய்கின்றது . கல்வி மட்டுமே இறுதிக் காலம் வரை பாதுகாப்பைத் தரும் என்ற நம்பிக்கையை வளர்க்கின்றது ..தனி மனிதன்  வாழ்வதற்குத் தேவையான திறமைகளை கல்வி அறியச் செய்கின்றது பிறருக்கு உதவி செய்யக்கூடியஅளவிற்கு நிலையை உயர்த்துகிறது. கல்வி ஒன்று மட்டுமே தேவையான எல்லாவற்றையும் பெறுவதைக்கான தகுதியைத் தருகின்றது பிறருடைய உதவி தேவையின்றி ஒவ்வொருவரும் தன்னைச் சார்ந்தே வாழும் போது மனவேற்றுமைகளால் பிரச்சனைகள் இருவருக்கிடையே வருவதில்லை என்பதால் சமுதாயத்தின் வளர்ச்சி தடைப்பட்டுப் போவதில்லை. புரியாமையால் ஏற்படும் கருத்து வேறுபாட்டை கல்வி கரைத்துவிடுகின்றது. நாட்டில் ஒருமித்த வளர்ச்சிக்கு ஒற்றுமையும் கூட்டு முயற்சியும் தேவை என்பதை அறிவுத்துகின்றது.

இந்தப் பிரபஞ்சத்தில் விண்மீன்கள் வளருகின்றன . ஒவ்வொரு உலகிலும் உயிரினங்கள் வளருகின்றன. தொடர்ச்சியான மாற்றங்களே வளர்ச்சிப்படிகளாகின்றன ..ஒரு நாட்டின் வளர்ச்சிப்படியை  நாட்டு மக்களின் கல்வியே தீர்மானிக்கின்றது . கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளைக் கொடுப்பதும் , அக் கல்வியின் பயனைப் பயன்படுத்திக் கொள்வதும் அரசாங்கத்தின் வேலை . எந்த நாட்டில் அரசாங்கம் அதைச் செய்யத் தவறுகின்றதோ அந்த நாடு வளர்ச்சியில் பின்தங்கிப்போகும். எந்தப் பயனையும் பணப் பலனால் மதிப்பிடுவதால் கல்வியின் பயனை சமுதாயமும் ,அரசாங்கமும் சரியாக அறிந்து கொள்ளத் தவறிவிடுகின்றன.

உலகளாவிய பிரச்சனைகளுக்கு க் காரணமாக இருப்பது பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு அடிப்படையான கல்வியறிவு மக்களிடையே ஏறக்குறைய சமனின்றி இருப்பதாகும் . இதனால் கல்வியறிவு இல்லாதவர்கள் ஏமாறுகிறார்கள் அல்லது  ஏமாற்றப்படுகின்றார்கள்  கல்வியறிவுள்ளவர்கள் கல்வியறிவை ஏமாற்றுவதற்கு ப் பயன்படுத்துகின்றார்கள். முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் தடையில்லாமல் கிடைக்கக் கூடியதாகவும் ,உதவியோடு கூடிய வழிகாட்டல்  கிடைக்கக் கூடியதாகவும்  இருந்தால் ஒவ்வொருவரும் கல்வியறிவை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்தும் நம்பிக்கையை வளர்த்துக் கொள்வார்கள்
அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையின்  மூலமே தடையில்லாத வளர்ச்சியை ஒரு நாடு பெறமுடியும். .கல்வி படைப்பாற்றலைத் தருகின்றது. அது எந்த இக்கட்டான சூழ்நிலையையும் தாக்குப்பிடிக்கும் வலிமையைத் தருகின்றது. தனி மனிதர்களின் சாதனைகள்  நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகின்றன


 ஒரு வேலையைச் செய்து முடிக்கும் வரை அது சாத்தியமற்றதாகவே தோற்றமளிக்கும்.
  உயர்ந்த சிந்தனை உயர்ந்த மனதிலிருந்தே வருகின்றது”.

நமக்கு என்ன நடக்கின்றது என்பது முக்கியமில்லை , நமக்குள் என்ன நடக்கின்றது என்பதுதான் முக்கியம். ஒரு செயலைச் செய்வது உடலே என்றாலும் மனம்தான் அதைச் செய்யுமாறு கட்டளையிடுகின்றது . மனதின் ஒப்புதலின்றி உடல் ஒருசெயலையும் செய்வதில்லை . மனம் நினைத்தால் எதுவும் முடியும் . ஆனால் மனம் அப்படி நினைப்பதற்கு பழக்கப்படுத்த வேண்டும்.முடியாது என்று முடிவு செய்து சும்மா இருந்தால் அது அறியாமை . ஏனெனில் ஒருவனால் முடியாததை மற்றொருவன் முடித்துக் காட்டுகின்றான். இன்றைக்கு முடியும் என்று நிரூபிக்கப்பட்டவையெல்லாம் முன்பு முடியாதது என்று பட்டியலிடப்பட்டவைதான்
ஒரு வேலை சாத்தியமற்றதாகத் தோன்றுவதற்கு  விருப்பத்துடன் செயலைச் செய்யாதிருப்பது , விளை பலனை மட்டுமே எதிர்பார்த்து வழிமுறையை விட்டுவிடுவது, உடனடிப் பலன் இல்லாமை. நேர்வழி தெரியாமல் குறுக்குவழிகளைப் பின்பற்றுவதால் ஏற்படும் அச்ச உணர்வு , இடைவரும் சிக்கல்களைச் சமாளிக்கத் தேவையான திறமைகளின்மை போன்ற பல காரணங்களைக் குறிப்பிடலாம். அதற்காக எல்லாம் சாத்தியமே என்ற குருட்டு நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ளக்கூடாது. எதைச்  செய்வதற்கும் அதற்கான தகுதி இருக்கவேண்டும், இல்லாத தகுதிகளை வளர்த்துக் கொள்ளவேண்டும்


 ஒரு நல்ல தலைமை மற்றும் ஒரு நல்ல இதயம் ஆகியவை எப்போதுமே ஒரு வல்லமைமிக்க இணை.”

தலைமைப் பண்பு பற்றிய வள்ளுவரின் கருத்துக்களைத் தெரிந்து கொள்வது நல்லது   அவையஞ்சாமை (73). அறிவைப்பெருக்குதல் (43) புரிந்துகொள்ளும் தன்மை (71) , தன்னடக்கம் (13) , பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருத்தல் (18) வாய்மை (30) நடுவு நிலை (12) பண்புடைமை (100), சான்றாண்மை (99) வினைத் திடபம் (67)  பணிவு  , மடியின்மை (61)  போன்றவை வள்ளுவர் காட்டும் சில தலைமைப் பண்புகளாகும் .
தலைவனாக விரும்பினால் வள்ளுவர் குறிப்பிட்ட பொதுப் பண்புகள் தவிர்த்து வேறு சில சிறப்புப் பண்புகளையும் கொண்டிருக்க வேண்டும். யாரையெல்லாம்  ஆளப்போகின்றோமோ அவர்களையெல்லாம் புரிந்துகொள்ளத் தெரியவேண்டும். அதிகாரத்தை  தேவையில்லாமல் அடக்குமுறையை தீர்வு என்று செயல்படக்கூடாது  எல்லோரையும் பகைத்துக் கொள்ளாமல் நட்புடன் பழகி பயன்படுத்திக் கொள்ளத் தெரியவேண்டும் . பொது நல நோக்கு, நேர்மை , உழைப்பில் நம்பிக்கை போன்ற வை குறைவின்றி இருக்கவேண்டும்.

நல்ல தலைவன் நல்ல தலைவர்களை உருவாகிவிடுவான். அப்படி அவன் உருவாக்கவில்லையென்றால் அவன் உண்மையிலேயே சிறந்த தலைவன் இல்லை என்றே கூறலாம். பல தலைவர்கள் இந்தப் பணியைச் செய்வதில்லை. இறுதிவரை தானே தலைவனாக அல்லது  தன் குடும்பத்தார்களே தலைவர்களாக  இருக்கவேண்டும் என்று முயற்சி செய்வார்கள், தலைவன் என்றால் அவன் எல்லோருக்கும் தலைவன். எதிர் கட்சி மக்களுக்கும்  தலைவன் என்பதை உணர்ந்து சேவைபுரிய வேண்டும். பிறரும் தலைவர்களாக வருவதில் மகிழ்ச்சி கொள்ளவேண்டும். ஏனெனில் ஒரு தலைவனுக்கு  மக்களுக்குச் சேவை செய்வதுதான் முக்கிய நோக்கமே ஒழிய தலைவனாகவே இருப்பது இல்லை. அந்தச் சேவையை பிறரும் செய்யவந்தால் அதை வரவேற்பதே தலைவனுக்குரிய பண்பு .  எதிர்ப்பை   அதிகாரத்தால் அடக்கிவிடலாம் என்று நினைத்து செயல்பட்டால் அது ஒரு காலகட்டத்தில் நம்மையே திருப்பித் தாக்கிவிடும் .அதிகாரம் அடக்குமுறைக்கானதில்லை.அது பலன்களை எல்லோருக்கும் பகிர்ந்தளிப்பதற்க்கானதாகும்.சூழ்நிலைகள் அனுமதிக்கும்போது அமைதி  மற்றும் அன்புடன் கூடிய அகிம்சை ஒரு நல்ல கொள்கை”. என்ற மண்டேலாவின் கருத்தை ஒரு தலைவன் தன் நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் அகிம்சை போராட்டம் மட்டுமே சிறிதும் அழிவைத்தராத போராட்டமாக இருக்கின்றது. சமுதாயத்தின் முன்னேற்றத்தைத் தடுப்பதுமில்லை பின்னேற்றத்தைத் தருவதுமில்லை. 
தலைமைக்கு தலையும் (அறிவும் ) இதயமும் ( அறமும் ) முக்கியம். இதில் காணப்படும் வேற்றுமைகளால் தலைவர்கள் வேறுபடுகிறார்கள். நல்ல தலை  நல்ல இதயம்  சிறந்த தலைவரையும் , நல்ல தலை , கெட்ட இதயம்  சர்வாதிகாரியையும் , கெட்ட தலை நல்ல இதயம் போராளியையும் , கெட்ட தலை கெட்ட இதயம் பயங்கரவாதியையும் இனங் காட்டுகின்றன

No comments:

Post a Comment