Mostly in Tamil language in different topics-kavithai,Cartoon,Chemical elements(Vethith thanimangal),Structure of universe and galaxy(Vinveliyil Ulaa),Unwritten letters (Eluthatha Kaditham),Sonnathum Sollathathum(Quotes from Modern Scientists),Mind without fear (encouragement to depressed students),Micro aspects of inherent potentials (self development),Fun with Mathematics,Scientific Tamil
Saturday, May 16, 2020
அப்துல் கலாமின் பொன்மொழிகள்
இளைய தலைமுறையினருக்கு பண்பாட்டுப் பாரம்பரியத்துடன் இணைந்த பொருளாதார வளர்ச்சியால் விளைந்த ஒளிமயமான மற்றும் பாதுகாப்பான நாட்டைக் கொடுத்தால் மட்டுமே நாம் நினைக்கப்படுவோம்
தனி நபர் முன்னேற்றம் என்பது அவர் தனக்கான வாழ்வாதாரத்தைப் பெறுவதற்குரிய வாய்ப்புகளை குறைவின்றிப் பெற்று சுயமாகச் சம்பாதித்து பொருளாதார நிலையில் மேனிலை அடைவதாகும் .வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள பாதுகாப்பும் வேண்டும் இவற்றை வழங்க வேண்டிய பொறுப்பு நாட்டிற்கும் உண்டு . ஒரு நாடு கடமை தவறும் போது தனிநபர் நலம் பாதிக்கப்படுகின்றது . நாட்டின் நலம் தனிநபரின் நலத்தையும் உள்ளடக்கியது .என்பதால் தனி நபர் நலத்தின் பாதிப்பு நாட்டு நலத்தையும் பாதிப்படையச் செய்கின்றது. இது நாட்டின் அடிப்படைக் கடமைகளுள் ஒன்று தனி மனிதர்களின்நலனைத் தனி அக்கறையுடன் கவனித்துப் பாதுகாக்கவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறுவதாக இருக்கின்றது
நூறு வயதுக் கிழவனொருவன் ஒரு மாம்பழத்தைச் சாப்பிட்டுவிட்டு ,அதன் கொட்டையைத் தூக்கியெறியாமல் தன்னுடைய தோட்டத்தில் குழி தோண்டி விதைத்தான் . அதைப்பார்த்த ஒரு சிறுவன் , " ஐயா , இந்த மரம் வளர்ந்து கனிகொடுக்க பல வருடங்கள் ஆகும். அது எப்போது காய்க்கின்றது, நீங்கள் எப்போது சுவைக்கின்றது . உங்களுக்குப் பயன்தராத இந்த மரத்தை ஏன் சிரமப் பட்டு நடுகின்றீர்கள் ?” என்று கேட்டான். அதற்கு அந்தக் கிழவன் “ தம்பி நான் சாப்பிட்ட மாம்பழம் யாரோ நட்டுவைத்த மரத்திலிருந்து கிடைத்தது. . அந்த யாரோ ஒருவர் அந்த மரத்தை நட்டு வைக்கவில்லை என்றால் எனக்கும் உனக்கும் மாம்பழம் கிடைத்திருக்காது ..நாம் வாழ் நம் முன்னோர்கள் என்ன செய்தார்களோ அதை நாம் நம் சந்ததியினர் வாழ் செய்யவேண்டும்”. என்று சொன்னார் அந்தக் கிழவன் யாரோ தெரியாது ஆனால் இந்தக் கதை மூலம் அவரை எல்லோரும் ஒவ்வொருநாளும் நினைத்துப் பார்க்கத் தவறுவதில்லை
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவதில்லை
மனதில் இருக்கும் நம்பிக்கை சுயமுயற்சியால் வேலைகளை முடிக்கும் வழக்கத்தைக் கற்றுக்கொடுக்கும். அவநம்பிக்கை இருந்தால் ஒவ்வொருமுறையும் , அது எளிய செயலாக இருந்தாலும் கூட பிறரின் உதவியைத் தேடும் .. தானாகச் செய்யும் எந்த வேலையையும் கால தாமதமின்றிச் செய்ய முடியும். ஆனால் பிறர் உதவியோடு செய்யும் அனைத்து வேலைகளிலும் காலதாமதம் தவிர்க்கமுடியாது . மனதில் நம்பிக்கை நிறைந்தவர்கள் பிறரிடம் உதவி கேட்பதை அந்த நம்பிக்கைக்கு இழுக்கு என்று நினைப்பதால் , அப்படிச் செய்வதில்லை.
யானையின் பலம் அதன் தும்பிக்கையில் என்பார்கள் .மனிதர்களுக்கு நம்பிக்கை வாழ்க்கையின் தும்பிக்கை எனலாம் . நம்பிக்கையை வாழும்போதே வளர்த்துக் கொள்ள வேண்டும் .அதாவது ஒவ்வொருவருக்கும் அவரவர் மீது நம்பிக்கை இருக்கவேண்டும். நம்புவதை நம்புவதும் நம்பக்கூடாததை நம்பாமலிருப்பதும்தான் நம்பிக்கை .நம்பிக்கை மனதின் வலிமை .மனதில் வலிமையிருந்தால் செயலில் ஆர்வமாக வெளிப்படும் .நம்பிக்கை இல்லாவிட்டால் எத்தகைய புற அனுகூலங்கள் இருந்தாலும் தோல்வியையே சந்திக்க நேரிடும் .மனதில் நம்பிக்கை வளர்வதற்கு நல்லொழுக்கம் , தூய அறிவு , நேர்மறையான எண்ணங்கள் ,உள்ளார்ந்த ஆர்வம், நினைவாற்றல் . மன உறுதி , தைரியம், செயல் திறனுக்கு வேண்டிய திறமைகள் போன்ற குணங்களை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் . இதற்கு நேர் எதிரான குணங்கள் அவநம்பிக்கையை ஊட்டும் .
நம்பிக்கை என்பது இலக்கு நோக்கிய பயணத்தைத் தொடர தைரியத்தைத் தருகின்றது .முதல் அடியையே எடுத்து வைக்காவிட்டால் இலக்கு நோக்கிய பயணம் ஒருபோதும் தொடங்கப்படுவதில்லை .அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு முறையும் மெலிதான நம்பிக்கை வலுப்பெற்று முழுமை அடைகின்றது .கண்ணுக்குப் புலப்படாமல் நெடுந்தொலைவில் இருக்கும் இலக்கு வெகு அருகில் வந்துவிட்டது போன்ற ஒரு தோற்ற உணர்வை ஏற்படுத்த பயணம் விவேகத்துடன் வேகம் பெறுகின்றது ..உள்ளுக்குள் நிகழும் ஒரு மின்வேதியில் வினையே இதற்குக் காரணமாக இருக்கின்றது
நாம் அனைவரும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் . ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புக்கள் உள்ளன
நாம் எல்லோரும் உருவத்தால் ஒன்றுபோல இல்லை . சின்னச் சின்ன புறவேற்றுமைகள் நம்மை வேறுபடுத்திக் காட்டும் அடையாளங்களாக இருக்கின்றன. .மனிதர்கள் அகத் தோற்றத்திலும் மிகுந்த அளவு வேறுபட்டு இருக்கின்றார்கள் ..இதற்கு காரணம் சிந்தையில் நிலைத்திருக்கும் எண்ணங்களே . எண்ணங்கள் யாருக்கும் தெரியாமல் உள்ளுக்குள்ளே உற்பத்தியாகி வளர்வதால் எல்லோரும் சுதந்திரமாக எண்ணங்களை வளர்த்துக் கொள்கின்றார்கள்
ஒருவருடைய வாழ்க்கை இந்த எண்ணங்களோடு பின்னிப் பிணைந்தது . எண்ணங்களுக்கு ஏற்ப திறமைகளையும் , திறமைகளுக்கு ஏற்ப வாழ்க்கையையும் பெறமுடியும் என்பதால் எண்ணங்களே வாழ்க்கையாகின்றது . வேறுபட்ட எண்ணங்களால் மாறுபட்ட திறமைகளுடன் மனிதர்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. . ஆனால் ஒவ்வொருவருக்கும் எண்ணங்களை வடிவமைக்கும் மனம் என்றொரு கருவி இருக்கின்றது. இயற்கையில் இது எல்லோருக்கும் ஒரேமாதிரியானது. இந்த மனதை இயக்குவது உடலோடு ஒன்றியிருக்கும் ஐம்பொறிகளே .அவைகளுக்குத் துணை புரிவது உடல் உறுப்புக்கள் .எல்லோருக்கும் வேறுபாடின்றி இரன்டு கைகள் , இரன்டு கால்கள் , ஒரு மூளை என, துணைக்கருவிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன அதனால் தான் இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று கூறுவார்கள் .இவற்றைக்கொண்டு தான் எல்லோரும் அவர்களுடைய வாழ்வாதாரத்தைப் பெற வாய்ப்புக்களைத் தேட வேண்டும் . இயற்கையில் எல்லோருக்கும் சம வாய்ப்புகளே கொடுக்கப்பட்டிருக்கிறது பயன்படுத்திக் கொண்டவர்கள் , பயன்படுத்திக் கொள்ளாதவர்களை விட முன்னேறுகிறார்கள்.வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தேவையான முன்தகுதிகளை வளர்த்துக்கொள்ளத் தவறியவர்களே வாய்ப்புகளே இல்லை என்று சொல்வார்கள். வாய்ப்புகள் கண்களுக்குப் புலப்படுவதில்லை , புலப்படுமாறு செய்யவேண்டும் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment