பொதுவாக ஒழுக்கமின்மை சமுதாயக் கட்டுப்பாடுகளுக்கு மதிப்புக்கொடுப்பதில்லை. சமுதாயம் நலமாக இருந்தால் சமுதாய மக்கள் ஒவ்வொருவரும் நலமாகவே இருப்பார்கள் என்ற கொள்கையில் நம்பிக்கையின்றி சமுதாய நலனைப் புறக்கணிக்கும் போக்கை ஒழுக்கமின்மை தூண்டிவிடுகிறது. சுயநலத்தில் கொண்டுள்ள அளவில்லாத விருப்பம் சுய கட்டுப்பாடுகளின்றி செயல்படும் துணிவைத் தந்து மறைவொழுக்க நடவடிக்கைகளில் ஈடுபடும் விருப்பத்தை பெருவிருப்பமாக்கி சமுதாயம் தழுவியவாறு வளர்த்து விடுகின்றது. தீய செயல்கள் .மறைவொழுக்கமாக இருப்பதால் பொதுவாக எல்லோரும் தங்களுக்குத் தாங்களே நியாப்படுத்திக்கொண்டும் ,தங்களுக்கென்று ஒரு வரையறையையும் தனித்த வரம்பையும் ஏற்படுத்திக் கொண்டும் மறைவொழுக்கச் செயல்களில் ஈடுபடுகின்றார்கள். .மறைவொழுக்கச் செயல்களில் பிறர் அறியாமல் தொடர்ந்து செய்ய முடியும் என்பதாலும் , தப்பித் தவறி கையும் களவுமாகப் பிடிபட்டாலும் தப்பித்துக் கொள்ள பல வழிமுறைகள் இருப்பதாலும் இப்போக்கு சமுதாயம் தழுவியவாறு வளர்ந்து வருகின்றது. பொதுநலத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு சுயநலத்தைப் பேணிக்காக்கும் ஒரு சமுதாயக் காரணியாக நிலைப்பட்டு வருகின்றது. புறத்தே எதிர்க்கப்பட்டாலும் . எல்லோராலும் அகத்தே ஏற்றுக்கொள்ளப்படுவதால் பிற்காலத்தில் எந்த எதிர் நடவடிக்கைகளினாலும் தடுக்க முடியாத கடிய சமுதாயச் சூழலையே உருவாக்கி நிலைப்படுத்தும்.
சுயநல எண்ணத்தையும் , செயல்பாடுகளையும் இந்த ஒழுக்கமின்மை வளர்த்துவிடுகின்றது . ஒழுக்கமின்மை தற்காலிகமான இலாபங்களை மட்டுமே தரும் .அது நிரந்தரமானதில்லை. ஒரு சமுதாயத்தில் ஒரு சிலர் மட்டுமே தீய செயல்களைச் செய்வார்களேயானால் அங்கு ஒழுக்கத்தின் அழுத்தத்தால் அவர்கள் தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் . ஆனால் மறைவொழுக்கத்தால் பெரும்பாலானோர் தீயவர்களாக மாறினால் , சீரழியும் சமுதாயம் திருத்தப்படுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போகும். இதன் பரிணாம வளர்ச்சி ஒட்டு மொத்த சமுதாயத்தின் அழிவிற்கு காரணமாக அமையும் .
No comments:
Post a Comment