Wednesday, July 11, 2012

அலுமினியம் -பண்புகள் அலுமினியம் ஒரு வெண்மையான உலோகம். இதன் அடர்த்தி 2698 கிகி/கமீ.உருகு நிலை 933 K கொதி நிலை 2740 K,அணு எண் 13,அணு நிறை 26.98.வெள்ளியைப் போன்று உறுதியான அலுமினியத்தை அடித்து தகடாகவும் ,மெல்லிய கம்பியாக நீட்டவும் முடியும். அலுமினியம் நல்ல கடத்தியாக விளங்குவதால் வெப்பத்தையும்,மின்சாரத்தையும் எளிதாகக் கடத்துகிறது.தங்கம்,வெள்ளி செம்புக்கு அடுத்த படியாகச் சிறந்து விளங்குவது அலுமினியம். இதற்குக் காரணம் இதிலுள்ள கட்டற்ற எலக்ட்ரான்களே(free electrons)ஆகும். அலுமினியம்,அதே அளவு எடை கொண்ட செம்பை விட இரண்டு மடங்கு கூடுதலாகக் கடத்தும் திறனைப் பெற்றிருக்கிறது.இவற்றுள் அலுமினியமே 904 ஜூல்/கிகி /கெ என்ற அளவில் மிக அதிகமான சுய வெப்பத்தை(specific heat)ப் பெற்றுள்ளது.சுயவெப்பம் ஒரு பொருளின் வெப்ப ஏற்புத் திறனை மதிப்பிடுகின்றது. ஒரு கிகி நிறையுள்ள பொருளின் வெப்ப நிலையை 1 டிகிரி C உயர்த்தத் தேவையான வெப்ப ஆற்றலே அப்பொருளின் சுய வெப்பம் என்பதால் உயரளவு சுயவெப்பம் கொண்ட அலுமினியம் குறைந்த வெப்ப நிலை மாற்றத்தோடு உயரளவு வெப்பத்தைச் சேமித்து வைத்துக் கொள்கிறது அலுமினியத்தின் வெப்ப ஏற்புத் திறன் செம்பை விட 2.35 மடங்கும்,வெள்ளியை விட 3.86 மடங்கும்,தங்கத்தை விட 6.85 மடங்கும் அதிகமானது . வறண்ட மற்றும் ஈரமான காற்று வெளியில் அலுமினியம் நிலையானது. எனினும் அதன் பொலிவு,ஒரு மெல்லிய ஆக்சைடு படலத்தைத் தன் புறப்பரப்பின் மீது ஏற்படுத்திக் கொள்வதால் மங்கிப் போகிறது.இது கவசமாகச் செயல்பட்டு காற்று வெளி மற்றும் நீர்மங்களில் உள்ள வீரிய ஆக்சிஜனிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. அலுமினியப் பொடியைச் சூடு படுத்தி போதிய அளவு வெப்ப நிலையை உயர்த்தினால் ,அது ஆக்சிஜனோடு இணைந்து பிரகாசமான வெண்ணிற ஒளியை உமிழ்ந்து எரிகின்றது.அப்போது அதிக அளவு வெப்பம் வெளிப்படுகிறது.அலுமினியம்,நைட்ரஜன் மற்றும் கந்தகத்துடன் நேரடியாக இணைகிறது.அலுமினியம் ஆக்சிஜன் மீது நாட்டம் கொண்டிருப்பதால் இது ஒரு வலிமையான ஆக்சிஜநீக்கி ஊக்கியாகச் (reducing agent) செயல்பட வல்லது.

No comments:

Post a Comment