மாணவர்களே உங்களோடு கொஞ்ச நேரம்
கோடை விடுமுறைக்குப் பின் கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டன .மீண்டும் வகுப்பறை,ஆசிரியர்கள் ,பாடப் புத்தகம்,ஹோம் வொர்க் ,டெஸ்ட் இவையெல்லாம் ஒரு சராசரி மாணவன் தன் வாழ்கையில் வெற்றி பெறுவதற்கு வகுக்கப்பட்டு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சராசரி திட்டம் தாம்.இந்த சராசரித் திட்டங்களைக் கூட ஏற்றுக்கொண்டு பின்பற்றத் தவறுபவர்கள் வாழ்கையில் தோல்விகளைச் சந்திப்பர்கள் என்று சொல்வதை விட தோல்விகளைச் சந்திப்பதற்கு அதிகமான வாய்ப்புக்களைப் பெறுவார்கள் என்று கூறலாம் .
காலங் காலமாய் பெரிய மாற்றமின்றி பின்பற்றப்பட்டு வருவதால் இது உறுதியான வெற்றிக்கு உறுதி கூறும் நிரூபிக்கப்பட்ட வழிமுறை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை .பாடம் படிப்பது சுவாரசியமின்றி இருக்கிறதா அப்படியானால் குறை உங்களிடம் இல்லை உங்கள் மனதில் தான் இருக்கிறது.
அலிபாபாவின் அண்ணன் காசிம் திருடர்களின் குகைக்குள் நுழைவான் எங்கு பார்த்தாலும் தங்கமும்,வைரமும்,ரத்தினங்களும் கொட்டிக் கிடக்க என்ன தேவை என்பதும் தெரியாமல், எதை எடுப்பது என்பதும் புரியாமல் ,எல்லாவற்றையும் அப்பொழுதே தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பேராசையுடன் செயல்படுவான்.பேராசையில் குகையிலிருந்து வெளியேறும் மந்திரச் சொல்லையும் மறந்து,நேரத்தை வீணாக்கி விடுவதால் சிக்கிக் கொள்வான்.கைக்கருகிலிருந்த செல்வங்கள் எதுவும் கிட்டாமல் வாழ்கையை இழந்து விட்ட காசிம் நிலையைத்தான் இது நினைவூட்டுகிறது.
நீங்கள் கல்வி என்ற செல்வம் கொட்டிக் கிடக்கும் கல்லூரிக் குகையில் காலடி எடுத்து வைத்திருகின்றீகள்.வரையறுக்கப் பட்ட காலம் வரை நீங்கள் நிதானமாகவும் உங்களுடைய எதிர்காலத் தேவையைக் கருத்திற் கொண்டு அதற்கேற்ப புரிதலுடன் கல்வியைப் பெறுவதும் உங்கள் செயலாக இருக்குமானால் வெற்றியைத் தேடி நீங்கள் போக வேண்டியதில்லை, அது தானாக உங்களைத் தேடி வரும். கல்வி என்பது பயன்பாட்டின் மொழி. எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு கற்கும் கல்வி எப்போதும் சுவாரசியமாக இருக்கும்.
பயனின்றி குவித்து வைக்கப் பட்ட செல்வத்தை மீட்டு ஏழை மக்களின் பயனுக்கு கொண்டு வந்த அலிபாபா வாழ்கையில் வெற்றி பெற்றான் ஆனால் பயனற்ற செல்வத்தை அபகரித்து மீண்டும் பயனற்றதாகவே வைத்திருக்க நினைத்த காசிம் தன் முயற்சியில் தோற்றுப் போனான்.
மாணவர்களே நீங்கள் படிக்கும் கல்வியை சுவாரசியமாக்கிக் கொள்ளுங்கள். அது உங்களால் முடியும் ஏனெனில் இதற்கு புறத்தே எதிர்ப்புகள் இல்லை. எதிர்ப்பு இருந்தால் அது நிச்சியம் உங்களிடமிருந்துதான் விளைந்திருக்கும்.இதை நீங்கள் புரிந்து கொண்டால் இது மட்டுமல்ல உங்களால் எதுவுமே முடியும்.முடியாதது என்று எதுவும் உங்கள் அகராதியில் இருக்க முடியாது.
No comments:
Post a Comment