Monday, February 8, 2021

முன்னேற்றத்திற்க்காக முயற்சி மேற்கொள்ளும்போது அதில்  வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு யாருக்கும் ஒருபோதும் 1 ஆக இருப்பதில்லை , 1/2  க்கும் குறைவாகவே இருக்கின்றது முன்னேற்றம் என்பது அதற்கான திட்டங்களை முன்மொழிவதாலும் முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாலும் மட்டுமே நிறைவேறிவிடுவதில்லை .முன்னேற்றத்தில் முன்னழைத்துச் செல்லும் பொதுக் காரணிகள் இருப்பதைப்போல பின்னோக்கி இழுக்கும் வலுவான  காரணிகளும்   இருக்கின்றன . பொதுக் காரணிகளுக்கு இல்லாத  வலிமை பின்னோக்கி இழுக்கும் காரணிகளுக்கு  இருப்பதற்குக் காரணம் அவை தனி மனிதர்களால் அவர்கள் நலனுக்காக அவர்களால் மேற்கொள்ளப்படும் சுய முயற்சிகளாகவும் மறைவொழுக்கமாகவும்  இருப்பதுதான் பொதுவாக அரசாங்கமும் சரி தனி மனிதர்களும் சரி நேர்வழியில்  முன்னேற்ற நடவடிக்கைகளுக்குக் காட்டும் அக்கறையில்  பாதியளவு கூட அதற்குத் தடையாக இருக்கும் எதிர்மறைக் காரணிகளை அழிப்பதில் காட்டுவதில்லை .எதிர்மறைக் காரணிகளை முழுமையாக அழித்தால் மட்டுமே முன்னேற்றத்தை முழுமையாக அடையமுடியும். இந்தியா போன்ற வளரும் நாடுகள் சுயசார்பை நோக்கிய முன்னேற்றம் கானல் நீர் போலக் காட்சியளிப்பதற்குக் காரணம் ஊழல், இலஞ்சம் ,ஏமாறுபவர்க்குத் தெரியாமல் ஏமாற்றுவது போன்ற எதிர்மறைக் காரணிகள்  தாராளமயமாக்கப்பட்டு  ஆட்சிபுரிவதுதான் .
ஊழலை ஒழித்துக்கட்டாமல் பெறப்படும் முன்னேற்றம் உண்மையான முன்னேற்றமாகாது .அது ஊழல்  மேலும் வளர்வதற்கு வாய்ப்பைக் கொடுக்கும். எடுத்துக்காட்டாக நாட்டின் முன்னேற்றத்திற்காக கூடுதல் செலவு செய்யும்போது கூடுதல் ஊழலும் வெகு இயல்பாக நடக்கின்றது.,
*ஊழல் ஒழிய வேண்டும்,ஊழலற்ற ஒரு சமுதாயம் உருவாகவேண்டும்  என்றல் அது வெறும் வார்த்தைகளுக்குள் முடிந்து விடுவதில்லை உண்மையில் அது அவ்வளவு சுலபமான செயலுமில்லை . கட்டுப்படுத்தாமல் கட்டுப்பாடின்றி சமுதாயத்தில் ஊழல் பெரிதாக வளர நாமே காரணமாகிவிட்டோம்.நாம் அனுமதித்ததால்தான் அது இன்றைக்கு நம்மையே அச்சப்படுத்துமளவிற்கு பெரிதாக வளர்ந்துவிட்டது   .மக்களின் வாழ்க்கையோடு ஒன்றரக் கலந்து விட்ட ஊழலை ஒழிப்பது என்பது இன்றைக்கு எல்லோருக்கும் பெரிய சவாலான பிரச்சனையாக  மாறியிருக்கின்றது .
*எல்லோரும் ஊழல் ஒழிக்கப்படவேண்டும் என்று விரும்புகின்றார்கள். எல்லோரும் ஏகமனதாக விரும்பும் போது ஊழல் எப்படி இன்னும் தடுக்கப்படாமல் இருக்கின்றது  என்ற வியப்புடன் அதை நுண்ணாய்வு செய்யும் போது நம்முடைய விருப்பத்தின் உண்மையான முகம் தெரியவருகின்றது  ஒவ்வொருவரும் மற்றவர்கள் செய்யும் ஊழலை மட்டுமே கருத்திற்கொண்டு எதிர்க்கிறார்கள் .அவர்கள் செய்யும் ஊழலை மிகத் தாராளமாக அனுமதித்துக் கொள்கின்றார்கள் .இவர்களுடைய எதிர்ப்புக் கூட அவர்கள் செய்யும் ஊழலை மூடி மறைப்பதற்காக மட்டுமே வெளிப்படுகின்றது .
*ஊழல் ஒழிப்பு  வெறும் உணர்ச்சிகரமான வார்த்தைகளுக்குள் முடிந்து விடுவதில்லை. முனைப்புடன் கூடிய ஒரு செயல் திட்டத்தால் மட்டுமே நிறைவேற்றமுடியும் . அதையும் தனி மனிதனோ அல்லது அரசாங்கம் தனித்தோ  ஈடுபட்டு வெற்றி காணமுடிவதில்லை .ஏனெனில் அது ஒரு மறைவொழுக்கமாக இருப்பதால் எல்லோரும் ஒன்றிணைத்து  செயல்பட்டாலே  அதை ஓரளவாவது கட்டுப்படுத்த முடியும்.  தற்காலியப்  பயன் கிடைக்கின்றது என்பதற்காக அதில் சுயவிருப்பம் கொள்வதை ஒவ்வொருவரும் புரிதலோடு தவிர்த்துக் கொள்ளவேண்டும்.
*ஊழலைக்  கட்டுப்படுத்தும் முயற்சியை யார் மேற்கொண்டாலும் அதை முழுமையாக  நிறைவேற்றக் கூடிய கடமையும்  அதிகாரமும்  அரசாங்கத்திற்கு மட்டுமே உண்டு. அதனால் ஊழல் ஒழிப்பில் ஆட்சியாளர்கள்   நேர்மையாக நடந்து கொள்ளவேண்டும். ஏழை -பணக்காரன், பதவியிலிருப்பவன்- பதவியில்லாதவன்  என்ற பாகுபாடெல்லாம் ஊழல் ஒழிப்புக்கு எதிரானவை .ஊழல் ஒழிப்பு வெற்றி பெறவில்லை என்றால் அதற்கு முழு முதல் குற்றவாளி  அரசாங்கமே என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் .  தலைக்கவசம் அணியாதவன் , வங்கியில் சேமிப்புக்கு கணக்கில் குறைத்த பட்ச பணம் இல்லாதவன் போன்றவர்களுக்கு கடுமையாக இருக்கும் சட்டம் ஊழல் புரிவோருக்கு அதில் பாதியளவு கூடக் கடுமையாக இல்லாமலிருப்பது அரசாங்கத்தின் தவறான ஊழல் கொள்கையையே படம் பிடித்துக் காட்டுகின்றது.
*குறிப்பிட்டபடி முன்னேற்றத்தை எட்டமுடியாததற்குக் காரணமாக, மக்கள் தொகைப் பெருக்கம், எழுத்தறிவின்மை, வேலைவாய்ப்பின்மை, கடமையாற்றாமை  மதம், இனம் , மொழி  ,தொழில், நிறம் போன்ற பலவிதமான வேற்றுமைகளினால்  அவ்வப் போது தலைகாட்டும் ஒற்றுமையின்மை, இயற்கைச் சீற்றத்தால் அழிவு,  பருவ மழை பொய்த்து போவதால் ஏற்படும் பஞ்சம் போன்ற  நிரந்தரமில்லாத சில காரணங்கள் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக  இருக்கலாம்.ஆனால் ஊழல்,இலஞ்சம்  ஏமாற்றுபவர்களுக்குத் தெரியாமல் ஏமாற்றுதல் இவற்றை முழுமையாக ஒழித்துக் கட்டிவிட்டால் வேறு எந்த புதிய முயற்சியுமின்றி சும்மா இருந்தாலே வளர்ச்சி வீதம் பல மடங்கு உயரும். 50 சதவீத முன்னேற்றத்திற்கான வளர்ச்சியை எட்டுவது கூட சாத்தியமே.
ஊழலற்ற ஒரு சமுதாயம் உருவாகவேண்டும் என்பது நம்முடைய நீண்டகாலக் கனவு .அது நமக்கு மட்டுமின்றி நம் எதிர்காலச் சந்ததியினருக்கும்,சமுதாயம் முழுமைக்கும்  இயற்கையான பாதுகாப்புக் கவசமாக விளங்கும் .தனி மனிதர்களுடைய முன்னேற்றத்தை மட்டுமேயல்லாது  சமுதாயத்தின் முன்னேற்றத்தை நெறிப்படுத்தக்கூடியது. எல்லோருக்கும் வேலைகிடைப்பதால்  வேலையின்றி தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள தீய செயல்களில் ஈடுபடுவது பெரிதும் தடுக்கப்படுகின்றது .ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் அரசாங்கத்திற்கு முக்கிய பொறுப்பு உள்ளது என்றாலும் அதில் தனிமனிதர்களுக்கும் பங்களிப்பு இருக்கின்றது. ஒவ்வொருவரும் மற்றவர்களைக் குறை கூறுவதை விட்டுவிட்டு சமுதாய நலன் கருதி தங்கள் பொறுப்புக்களை அக்கறையுடன் மேற்கொள்ளவேண்டும் .கூட்டு முயற்சியில் எதிரி என்று யாருமே இருக்கக்  கூடாது அப்போதுதான் அது சிறப்பாக நிறைவேறும் வாய்ப்பைப் பெறும்.
  

No comments:

Post a Comment