Thursday, September 19, 2024

 நூறாண்டு காலம் வாழ்வது எப்படி ?  -2

எல்லாம் இறைவன் செயல் என்று யாரும்  கடமையாற்றாமல் சும்மாவே இரு என்று சொல்வதில்லை. சும்மா இருந்துவிட்டு வாழ்க்கையை முடித்துக்கொள்வதற்கு பிறக்காமலேயே இருப்பது இன்னும் மேலானது. நூற்றுக்கு நூறு சதவீதம் எதிர்காலத்தை முடிவு செய்யும் திறமை இருந்தால் கடவுள் என்ற நிழலுருவம் தேவையேயில்லை . கடவுளை வேண்டினால் செய்யும் செயலால் கிடைக்கும்   பயன் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்ற நம்பிக்கைதான். உண்மையில் ஒருவருடைய எண்ணங்களே அவரை வழிநடத்திச் செல்கின்றது . மற்றவர்கள் தவறு செய்யலாம் அது அவர்களுடைய எண்ணங்களின் போக்கு ஆனால்  நீ தவறு செய்வதற்கு ஒருபோதும் காரணமாக இருந்துவிடக்கூடாது என்பதற்காகவே சொல்லப்பட்ட வாக்கியங்களே எல்லாம் இறைவன் செயல் . எல்லோரும் தங்களுடைய தேவையின் எல்லை என்ன என்பது தெரியாமலேயே அளவுக்கு மீறி சம்பாதிக்க விரும்பி செயல்படுகிறார்கள் இவர்களால் இவர்களுடைய வாரிசுகளும் தீயவொழுக்கங்களை பின்பற்றி ஒழுகும் பழக்கத்தை ஏற்றுக்கொண்டு விடுகின்றார்கள் . இவர்கள் தங்களுடைய வாரிசுகளுக்காகவும்  சம்பாத்தித்து சேர்த்துவைக்க நினைத்து வரம்பின்றி சம்பாத்தியம் செய்கின்றார்கள். வாரிசுகளுக்காகவும் இவர்களே சம்பாதித்து வைப்பதால் இவர்களுடைய வாரிசுகள் உழைப்பில் ஆர்வம் கொள்வதில்லை    .  இயல்பான நேர்மையான வழிமுறைகளில் முடியாத போது தவறான வழிமுறைகளில் மறைவொழுக்க நடவடிக்கைகளினால் செய்யும் பழக்கம் இன்றைக்கு ஏறக்குறைய அனைவரிடமும் தொற்றிக் கொண்டுவிட்டது .  அதிகம் சம்பாதிக்க அதிக இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றார்கள். அதிக சுகபோகங்களை அனுபவித்து சமுதாயத்தின் நல்லொழுக்ககங்களை சீர்குலைக்கின்றார்கள். எதிர்காலத்தைப் பற்றிய  நம்பிக்கையின்மையின் வெளிப்பாடே இச்செயல் . அளவற்ற சம்பாத்தியம் என்று வாழ்க்கையின்  குறிக்கோளைத்  தவறாகக் கொள்ளும்போது மன நிறைவான மகிழ்ச்சி கிடைப்பதில்லை. கையிருப்பை அதிகரித்துக் கொள்ளும் விருப்பத்தால்  அவர்கள் யாருக்கும் உதவக்கூட மாட்டார்கள் . மனம் கெட்டு அதனால் உடலும் கெட்டு அவர்களுடைய வாழ்நாளை சுருக்கிக்கொள்ள அவர்களே ஒரு காரணமாகி விடுகின்றார்கள் .அது இயற்கையின் விதி என்றுகூடச் சொல்லலாம் , யார் மற்றவர்களுக்கு பயனற்று வாழ்கின்றார்களோ அவர்கள் உலகில் மேலும் வாழ்வதற்குத்  தகுதியற்றவர்கள் என்று இயற்கையே ஒரு முடிவு எடுத்து விடுகின்றது.

No comments:

Post a Comment