Thursday, July 13, 2017

chess board puzzle

ராஜா, ராணி உடன் ரதம், குதிரை ,யானை மற்றும் காலாட்படை கொண்டு 64 சதுரக் கட்டங்கள் கொண்ட 8 x  8 சதுரப் பலகையில் விளையாடப்படும் ஒரு விளையாட்டே சதுரங்கமாகும். யோகா போல சதுரங்க விளையாட்டை முதன் முதலாக உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் இந்தியர்களே ஆவர். 
வெளியரங்கில் விளையாடப்படும் விளையாட்டுகள் உடல் வளத்தைத் தரும். உள்ளரங்கில் விளையாடப்படும் சதுரங்கம் மூளையின் திறனைத் தூண்டி மேம்படுத்துகிறது.
ஒருவர் தன் வாழ்க்கையில் வெற்றி பெற உடல் வலிமையோடு மன வலிமையையும் பெற்றிருக்க வேண்டும். உடலும் மனமும் ஒன்றிணைந்து செயல்படும் போதுதான் எச்செயலும் மிகச்  சரியாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படுகின்றது, இவைகளுக்கு இடையேயான இணக்கமின்மை ஒவ்வொருமுறையும் இழப்பையே ஏற்படுத்துகின்றது. .
சிறு வயது முதற்கொண்டு தொடர்ந்து சதுரங்க விளையாட்டில் ஆர்வம் காட்டி வளரும் குழந்தைகள் படிப்பிலும் ,செயல் திறனிலும் கெட்டிக்காரர்களாக  விளங்குவார்கள் .மூளையைத் தொடர்ந்து தூண்டிக்கொண்டே  விளையாடும் பழக்கம்  வெவ்வேறு செயல்களிலும் வெளிப்படுகின்றது. கற்றலிலும், சிந்திப்பதிலும் ,பகுப்பாய்வு செய்வதிலும் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பதிலும், தன்னம்பிக்கையை வளப்படுத்திக் கொள்வதிலும், நினைவாற்றலை மேம்படுத்திக் கொள்வதிலும் இப்பழக்கம் முக்கியப் பங்காற்றுகிறது.  .
இவ் விளையாட்டில் ஒவ்வொருவருக்கும்  ஒரு ராஜா, ஒரு ராணி, 2 ரதங்கள்  . 2 குதிரைகள், 2 யானைகள் 8 காலாட்படை என 16 காய்கள் எதிரெதிர் பக்கங்களில் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருக்கும். ஒருவர்க்கு கறுப்பு நிறக் காய்கள் என்றால் மற்றவருக்கு வெள்ளை நிறம். இவற்றுள் ராணி மிகவும் பலம் கொண்டது  என்றாலும் ராஜாவே முக்கியமானது . ராஜாவை இழந்து விட்டால் விளையாட்டு இல்லை. ஒரு ராஜாவை முற்றுகையிட்டு நகரமுடியாமல் செய்துவிட்டால் அடுத்தவர் ஜெயித்தவராவார் .
சதுரங்க விளையாட்டில் பல புதிர்கள் உள்ளன. பொதுவாக பலகையில் இறுதி நிலையில்  இருக்கக் கூடிய கருப்பு - வெள்ளை நிறக் காய்களின் அமைவிடத்தைக் கொடுத்து இரண்டே இரண்டு நகர்தல்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே இப் புதிர்களாக இருக்கும்
இவை தவிர்த்து சதுரங்கப் பலகையைக் கொண்டும்  புதிர்களை போடலாம்  ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாமல் ஒரு சதுரங்கப் பலகையில் எவ்வளவு குதிரைகளை நிறுத்தி வைக்கலாம் என்பது அப்படிப் பட்ட ஒரு புதிர்.  இதற்கான தீர்வு  32 குதிரைகள்.

Wednesday, July 12, 2017

Tharkkappu

தற்காப்பு
ஆபத்து வரும் போது மனிதர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள பல செயற்கை வழி முறைகளை மேற்கொள்ளுகின்றார்கள். ஒளிந்து கொள்ளுதல், பொய்யான காரணம் சொல்லித் தப்பித்தல், நவீன சாதனங்களின் உதவியால் விரைந்து விலகிப் போதல், ஆயுதங்களைக் காட்டி பயமுறுத்துதல்  போன்றவை பெரும்பாலான மனிதர்களுக்குத் தற்காப்பு வழி முறையாக இருக்கின்றது. ஒரு சில மனிதர்களே ஆபத்துக்களை வீரமாகச் சந்தித்துப் போராடுகிறார்கள்
மனிதர்கள் இரவில் வீட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளே பாதுகாப்பாக இருக்கின்றார்கள். தினம் தினம் உணவு குடி நீர் தேடி அங்கும்மிங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. கடுங் குளிரையும், கோடையின் தாக்கத்தையும்  வெப்ப மற்றும் குளிர் சாதனங்களைக் கொண்டு தவிர்த்துக்கொள்கின்றார்கள்.  கட்டுப்பாடான சமுதாயத்தில் வாழ்வதால் ஒரு விதமான பாதுகாப்பு அமைப்பு ரீதியாகக் கிடைத்து விடுகின்றது.  ஆனால் காட்டில் வாழும் விலங்குகளின் உயிர் வாழ்க்கைக்கு உத்திரவாதம்  தரக்கூடிய உறுதிமொழி ஏதும் இல்லை. அவைகள் பெரும்பாலும் பாதுகாப்பை விட தற்காப்பையே அதிகம் நம்பி வாழ்கின்றன. 
இறைவன் படைப்பில் எல்லா உயிரினங்களும் சமம் . திறந்த வெளியில் வாழ வேண்டி இருப்பதால் விலங்குகள் தங்களைத் தாங்களே  தற்காத்துக் கொண்டு பாதுகாப்பாக நிலைத்து வாழ ஒவ்வொன்றிற்கும் உடலின் கட்டமைப்பில் தற்காப்புக்குத் தேவையான ஒரு சிறப்பு உறுப்பை படைக்கும் போதே கொடுத்து விடுகின்றான். அதனால் அவைகள் எந்த அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றன அல்லது தவிர்த்துக் கொள்கின்றன.
காட்டில் கூட்டம் கூட்டமாய் வாழும் காட்டெருமைகள் . காட்டு மாடுகள் எல்லாம் கூட்டமாய் ஒன்றுகூடி இருப்பதையே முதன்மைப் பாதுகாப்பாகக் கொண்டுள்ளன. யானைகள், ஹைனாக்கள், மீர் காட், காட்டு நாய்கள்   போன்றவை  கூட்டமாய் வாழ்வதையே பாதுகாப்பாகக் கொண்டுள்ளன.  வலியோரைத் தனித்துப் போராடி வெற்றி பெற முடியாத சூழல்களில் கூட்டு முயற்சியே வெற்றி தரும்  என்ற மந்திரத்தை உலகோர்க்கு முதன் முதலில் சொன்னது இந்த காட்டு விலங்குகள்தாம் .கூட்டமாய் இருக்கும் போது தனக்குப் பின் பலர் தோள் கொடுக்க தன் அருகில் இருக்கின்றார்கள்  என்ற துணிச்சலில்  மாடுகளுக்கு வீரம் அதிகம் சுரக்கும். சிக்கத்தைக் கூட துணிந்து எதிர்க்கும். மாடுகளுக்கும், மான்களுக்கும்  அவற்றின் கொம்புகளே ஆயுதம்..
வரிக்குதிரை  ஒட்டகச்சிவிங்கி போன்றவை முரட்டுத் தனமாக உதைக்கும்  உதையில் வேட்டை விலங்குகளின் எலும்பு நொறுக்கிப் போய் விடும். சிங்கம், புலி போன்ற வலிமையான காட்டு விலங்குகளுக்கு தொடர்ந்து வேட்டையாடவும் தற்காத்துக் கொள்ள விரைந்து ஓடவும் உடல் தகுதி மிகவும் அவசியம். அதனால் எந்த காட்டு மிருகமும் தேவையில்லாமல் காயம்பட்டுக் கொள்வதை விரும்புவதில்லை  
ஒட்டகச் சிவிங்கி உயரமாக இருப்பதால் வேட்டை விலங்குகளின் நடமாட்டத்தை தொலைவிலிருந்தே தெரிந்து கொண்டு விடும்
சிறுத்தை  போன்ற புலிகள் எளிதாக மரம் ஏறி சிங்கம் மற்றும் ஹைனா என்ற கழுதைப் புலி போன்ற விலங்குகளின் தாக்குதல்களிலிருந்து தப்பித்துக் கொள்கின்றது . சிங்கங்களும் மரம் ஏறும் என்றாலும் உடல் பருமனாக இருப்பதால் புலிகளைப் போல அதிக உயரம்  ஏற முடிவதில்லை .பாம்புகளுக்கு விஷமும் விரைந்து செயல் படும் தன்மையும்  அவற்றின் தற்காப்புக்குக் கைகொடுக்கின்றன..யானைகளுக்கு உடல் வலிமையையும் தும்பிக்கையும், காண்டா மிருகத்திற்கு தடித்த தோல் கவசமும் கொம்பும் . சில விலங்குகள் விரைந்து ஓடுதல் செயல்படுதல் போன்றவற்றால் ஆபத்துக்களைத் தவிர்த்துக் கொள்கின்றன சில ஏமாற்று விதைகளைக் கையாளுகின்றன. பல்லிகள் தன் எதிரியை ஏமாற்ற தன்  வாலின் நுனிப் பகுதியை தானே வெட்டி துடிதுடித்துக் கொண்டு விழுமாறு தள்ளி விடுகின்றது.

இதனால் எதிரில் கவனம் திசை மாறிப் போவதால் அச்சமயத்தில் பல்லி தப்பித்து ஓடிவிடுகிறது . எதிரிகள் விலகிச் செல்லும் வரை சில பாம்புகள் செத்தது போல நடித்து தப்பிப் பிழைக்கும். துப்பும் ஒரு வகைப் பாம்பு தன் விஷத்தை எதிரியின் மீது துப்பி தப்பிக்கும்.
பாலை வனத்தில் ஒரு வகையான  பல்லி அருகில் வந்து விட்ட பாம்பிடமிருந்து தப்பிக்க தன்னைத் தானே மண்ணுக்குள் புதைத்துக் கொள்ளும் தேனீ, தேள் போன்றவைகளுக்கு விஷம் நிறைந்து கொடுக்கு தற்காப்பு ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது .
சில வகைச் சிலந்திப் பூச்சிகள் தன் பின் பகுதியில் உள்ள அடர்த்தியான நுண்ணிய ரோமங்களை கால்களால் தீண்டி உதிர்த்து எதிராளியின் முத்தத்தில் வீசும்
. இதனால் கலங்கிப் போகும் எதிராளியிடமிருந்து தப்பிக்கின்றது..ஒரு வகையான சிறு பூச்சி இனம் தன்னைப் பிடித்து சாப்பிட நினைக்கும் ஓணானிடமிருந்து தப்பிக்க  தன் உடலை ஒரு சிறு பpந்து போல சுருட்டி வைத்துக் கொண்டு  சாய்வான நிலப்பகுதியில் விரைவாக உருண்டோடிவிடும். முள்ளம் பன்றி தன் உடலிலுள்ள முட்களையே தற்காப்புக் கவசமாக கொண்டு நடமாடுகின்றது. ஆமைகள்  நொறுக்க முடியாத தன் மேலோட்டை தற்காப்புக் கவசமாக கொண்டு வாழ்கின்றது. ஆபத்து வரும் போது ஆமைகள் இந்த ஓட்டுக்குள்  உட்புகுந்து கொண்டு விடும் .
வெடிப்பு பூச்சி ( bombarder beetle) மட்டுமே உலகில் இருக்கும் பூச்சி இனங்களில்  வெடி வெடித்து தப்பிக்கும் பூச்சியாக இருக்கின்றது. ஆபத்து வரும் சமயங்களில் இது தன் உடலின் பின் பகுதியில் உள்ள ஒரு பையில் இரு வேறு வேதி பொருட்களை கலந்து  வெடிக்கச் செய்கின்றது. வெளிப்படும் வெப்பமிக்க புகையை  ஒரு சிறு துவாரத்தின் வழியாக எதிரிகளை நோக்கி பீச்சுகின்றது. அதன் நாற்றம் மற்றும் தாக்கத்தினால் எதிரிநிலை குலைந்து போகும் சமயத்தில் தப்பித்து விடுகின்றது
மின்சார ஈல் (eel) தன்னைத் தாக்க வரும் எதிகளுக்கு மின் அதிர்ச்சி கொடுத்து நிலை குலையச் செய்து தப்பிக்கின்றது. இந்த மின் அதிர்ச்சியால் சில விலங்குகள் இறந்து போவதும் உண்டு முண்டக் கண்ணுடைய ஒரு வகையான கடல் வாழ் உயிரினம் ( lobster ) உருவத்தில் சிறியதாக இருந்தாலும்  உருவத்தால் சிறியதாக இருந்தாலும் தன்னைத் தாக்க வரும் உருவத்தால் மிகவும் பெரிய ஆக்டோபஸ் போன்ற எதிரிகளைத் துணிந்து  தாக்குகின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் காலால் பலமாக உதைத்து நிலை குலையச் செய்து தப்பிக்கின்றது கடலில் வாழும் சிறிய வகை மீன்கள், சிட்டுக் குருவி போன்ற ஒரு வகைப்  பறவை  கூட்டமாக ஒன்று சேர்ந்து இயங்கி தங்களை ஒரு பெரிய உருவங் கொண்ட விலங்கினம் போலக் காட்டி எதிரியை குழப்பிவிடும்
இதை பார்த்த எதிரிகள் பெரும்பாலும் ஏமாந்து போகின்றன அல்லது தாக்குவதற்குத் தடுமாறுகின்றன. கணவாய் மீன் (cuttlefish), ஆக்டோபஸ், பச்சோந்தி போன்றவை சூழ்நிலைக்கு ஏற்ப தன் உடலின் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன ஆக்டோபஸ் நிறத்தை மட்டுமின்றி உடலின் வடிவத்தையும் பல விதமாக மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது .  நெருப்புக்கு கோழி  பறக்க முடிய விட்டாலும் விரைந்து ஓடக் கூடியது. வலிமையான தன்கால்களால் உதைத்து  நரி போன்ற உயிரினங்களின் உயிரைப் பறித்து விடும்

தன்னை இரையாக்கிக் கொள்ள விரட்டி வரும் புலி சிங்கம் போன்ற விலங்குகளிடமிருந்து தப்பிக்க மான்கள் வேகமாக  ஓடும்  மான்களுக்குத் தெரியாமல் புலியால் அவைகளுக்கு நெருக்கமாக வரமுடிந்தால்  மட்டுமே  மானை வெற்றிகரமாக வேட்டை ஆடமுடியும். சற்று பிசகிப் போனாலும் மான் தப்பித்து விடும். அதற்குக் காரணம் புலி, சிங்கம் இவற்றால் 30 வினாடிகள் மட்டுமே அதிக வேகத்தில் ஓட முடியும். அதற்குப் பிறகும் ஓடினால் இரத்தஅழுத்தம்  அதிகரித்து அது இறந்து விடக் கூடும்  என்பதால் அது தன் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டு தோல்வியை ஒப்புக் கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டு விடுகின்றது. மான்கள் கூடுதல் நேரம் தொடர்ந்து வேகமாக ஓடக்  கூடியவை என்பதால்  எளிதாக தப்பித்து விடுகின்றன

Tuesday, July 11, 2017

migration

உயிரினங்களின் குழுப்பெயர்ச்சிப் பயணம்
ஒரு நாட்டில் உள்நாட்டுக் கிளர்ச்சி ஏற்படும் போது பலர் அங்கிருந்து அகதிகளாக வெளியேறுவார்கள். பொதுவாக அவர்கள் அண்டை நாடுகளுக்கு கூட்டம் கூட்டமாக நடந்து சென்று தஞ்சமடைவார்கள். .இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது பல லட்சக்கணக்கான மக்கள் புலம் பெயர்ந்தார்கள். இது தான் வரலாற்றில் அதிக மக்கள் புலம் பெயர்ந்த நிகழ்வாகும்.
பொதுவாக மனிதர்கள் குழுவாக  நெடுந்தூரம் புலம் பெயர்வதை பழக்கமாகக் கொண்டிருக்கவில்லை.. ஆனால் பல விலங்கினங்களும், பறவைகளும்,கடல் வாழ் உயிரினங்களும் புலம் பெயர்ந்து வாழ்வதையே வாழ்க்கை முறையாகக் கொண்டுள்ளன. பருவ கால மாற்றம் போல ஒவ்வோர் ஆண்டும் இது திரும்பத் திரும்ப மேற்கொள்ளப்படுகின்றது   . 
உயிரினங்களின் நெடுந்தூரப் பயணத்திற்கு பொதுவாக மூன்று  காரணங்கள் இருக்கின்றன. முக்கியமானது உணவு மற்றும் நீர் கிடைக்குமிடங்களை  நோக்கிச் செல்லுதல், மற்றொன்று இனச்சேர்க்கை மற்றும் இனப்பெருக்கம் செய்ய தகுந்த இடம் தேடுதல், இளம் குட்டிகளையும் குஞ்சுகளையும் பாதுகாப்பாக வளர்த்தல், இயல்பான  வசிப்பிடத்தில் உள்ள மிகையான குளிர் அல்லது வெப்பத்தை தவிர்த்துக் கொள்ளுதல் போன்ற காரணங்களுக்காக இவை குழுப்பெயர்வை  மேற்கொள்கின்றன  .
ஆப்ரிக்காவில் காட்டெருமைகள்,மாடுகள் மற்றும் வரிக்குதிரைகள் உணவு குடிநீர் தேடி ஒவ்வோர் ஆண்டும் பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவு பல நாடுகளைக் கடந்து செல்கின்றன. இவைகள் எப்போதும் குழுவாகப் பயணிப்பதால் வேட்டை விலங்குகளிடமிருந்து ஒரு பாதுகாப்பு கிடைக்கின்றது.. எனினும் புலம் பெயர்ப்பின் கூட்டத்தை விட்டு விலகி தனித்து மேயும் விலங்குகளும்,காயம்பட்டு  விரைந்து செல்ல முடியாத விலங்குகளும், அனுபவமில்லாத இளம்  குட்டிகளும் வேட்டை விலங்குகளுக்கு எளிதாக இரையாகி விடுகின்றன. புதிய சுற்றுச்சூழலுக்கு போதிய அனுபவம் இல்லாமையால் அவைகள் எளிதில் அப்பகுதி வேட்டை விலங்குகளுக்கு இரையாகிப் போகின்றன . கடுமையான குளிர் மற்றும் வெப்ப நிலை மாற்றங்கள்,உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு போன்ற காரணங்களும் வழியில் ஏற்படும் உயிர் இழப்பை ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. கடந்து செல்லும் பாதையில் இவைகள் முதலைகள் நிறைந்த ஆறுகளைக் கடந்து செல்ல வேண்டி இருக்கும்..அப்போது இந்த நாடோடி விலங்குகள் ஆற்றைக் கடந்து செல்வதற்கு  சில உயிர் தியாகம் செய்யும். தான்  மடிந்தாலும் தன் இனம் மடிந்து போய் விடக்கூடாது என்ற உள்ளுணர்வு மனிதர்களை விட பிற உயிரினங்களிடையே தான் அதிகமாக இருக்கின்றது. என்பதை இவற்றின் உயிர் தியாகம் எடுத்துக் காட்டுகின்றது
காட்டு விலங்கினங்களைப் போல பெங்குவின், கடல் ஆமை, திமிங்கிலம்,  டூனா மீன் போன்ற கடல் வாழ் உயிரினங்களும் பிளமிங்கோ, செர்பியன் நாரை, ரூப், கருப்பு வால் கடல் பறவை போன்ற பறவைகளும் குழுப் பெயர்வை ஆண்டுதோறும் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன
பறவைகள் புலம் பெயர்ந்து செல்லும் போது வழக்கத்தை விட அதிக உயரத்தில் பறந்து செல்கின்றன. இதனால் அவைகளுக்கு தொலைவிடங்களைத்  தெளிவாகப் பார்த்து பயணத்தை இடைவிடாது தொடர முடிகின்றது  குழுவாகச் செல்லும் போது ‘V’  வடிவில் பறந்து செல்வதால் காற்றைக் கிழித்துக் கொண்டு செல்வது எளிதாகிறது  . இதில்  மூத்த அனுபவம் மிக்க பறவை தலைமை ஏற்று அழைத்துச் செல்கின்றது  புலப்பெயர்வின் போது கடக்க வேண்டிய தொலைவு, உடல் கட்டமைப்பு, ஆற்றல் சேமிப்பு இவற்றைப் பொறுத்து ஒவ்வொரு பறவையினமும் நாள் ஒன்றுக்கு 80 - 1000 கிமீ தொலைவு கடக்கின்றது. உணவும் நீரும் அதிகமாகக் கிடைக்கும் இடை வழியில் இவை அதிக நேரம் ஓய்வெடுத்துக் கொள்வதுமுண்டு  பொதுவாகப் பறவைகள் 25 80 கிமீ/மணி என்ற வேகத்தில் ஒரு கிலோ மீட்டர்  உயரத்தில் பறக்கின்றன. சில இன்னும் கூடுதலாக 10 - 12 கிமீ உயரத்தில் கூடப் பறக்கின்றன. உலகில் உள்ள 10000 பறவை இனங்களில் சுமார் 4000 பறவையினங்கள் புலப்பெயர்வை வழக்கமாகக் கொண்டுள்ளன
3000 ஆண்டுகளுக்கு முன்னால் முதன் முதலாக கிரேக்கர்கள் பறவைகளின் புலப்பெயர்வு பற்றி குறிப்பெழுதி வைத்துள்ளனர்.. இப் பறவைகள் புலம் பெயர்ந்து செல்லும் போது பெருங் கடல் மற்றும் கண்டங்களைத் தாண்டி பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் எப்படி சாமர்த்தியமாக பயணிக்கின்றது என்பது நீண்ட காலம் புரியாத புதிராகவே இருந்தது. பறவைகள் கடற்கரை ஆற்றின் வழித்தடம் .மலை முகடு போன்றவற்றை வழிகாட்டிகளாகக் கொண்டுள்ளன. சூரியன் சந்திரன் விண்மீன் போன்றவற்றை காந்தமுள் கருவியைப் போல பயன் படுத்திக் கொள்கின்றன. செல்லும் திக்கை புவி காந்தப் புலத்தைக் கொண்டும் துல்லியமாக அறிந்து கொள்கின்றன. காந்தப் புலத்தை உணரும் திறமை மனிதர்களிடம் இல்லை. பறவைகள் தங்கள் உடலில் உள்ள ஒரு வகை காந்த செல்களில் செல்லும் வழித்தடத்தை  பதிய வைத்துக் கொள்கின்றன என்றும் அதை புவி கந்தப்புலத்தின் உதவியோடு மீட்டுப் பெற்று வழி தவறாமல் செல்லுமிடத்தை சரியாகச்   சென்றடைகின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றார்கள் எந்த அளவிற்கு நினைவில் பதிய வைத்துக் கொண்டு  தான் சென்றையும் இடத்தை மிகச் சரியாக  அடைகின்றன என்பதை நிரூபிக்க ஐரோப்பாவை வசிப்பிடமாகக் கொண்டுள்ள ஒரு புலம்பெயரும்   பறவையைப் பிடித்து அதை விமானம் மூலம் கொண்டு சென்று அமெரிக்காவில் விடுவித்தனர். .அதன் இருப்பிடத்தை அறியும் கருவி மூலம் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப் பறவை அட்லாண்டிக் பெருங் கடலை 12 - 15 நாட்களில் கடந்து தன் தாய் நாடு வந்தடைந்து
இந்தியாவில் பலவிடங்களில் பறவைகள் சரணாலயம் இருக்கின்றது. இங்கு செபியன் நாரை பிளமிங்கோ, ரூப், கருப்பு வால் கடல் பறவை  போன்ற பல  வெளி நாட்டுப் பறவைகள் கோடை மற்றும் குளிர் காலங்களில் வந்து குடியேறி   இனப்பெருக்கம் செய்து தங்கள் குஞ்சுகளுடன் மீண்டும் பறந்து செல்கின்றன.
பறவைகளே அதிக தூரம் இடம்பெயர்ந்து செல்கின்றன.புலப் பெயர்வின் போது Arctic terns  என்ற வட துருவப் பறவை 45000 கிமீ தொலைவு கடக்கின்றது. வட துருவத்திலிருந்து தென் துருவம் வரை  மீண்டும் திரும்ப தன் இயல்பு இருப்பிடமான வட துருவம் வரை 6  மாதம் தொடர் பயணத்தை  செய்கின்றது. குறுகிய வால் உடைய ஒரு வகையான கடல் பறவை பசுபிக் கடலை 8 வடிவில் 33000 கிமீ தொலைவை  ஏறக்குறைய 3 மாதத்தில் கடக்கின்றது. வெகு தொலைவு தள்ளியுள்ள நிலப்பகுதியை அடைய இது போல வேறு எந்த விலங்கினமும் செய்வதில்லை.
கடலில் வாழும் சாலமன் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதை நன்னீரில் செய்வதால் அதற்கு புலம் பெயர்வு அவசியமாக இருக்கின்றது.கடலுக்குள் மீண்டும் செல்வதற்கு முன்னர் குறைந்தது 3 மாதங்களாவது இளம் குஞ்சுகளுடன் இந்த நன்னீரில் வாழ்கின்றன. 
ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பயணம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தொடங்குகின்றது .இளவேனிற் காலத்தில் லட்சகணக்கான சாலமன் மீன்கள் கடலிருந்து தன் பயணத்தை தொடங்குகின்றன .ஆற்றை எதிர்த்து நெடுந்தூரம் நீந்தி வழக்கமாக இனப்பெருக்கம் செய்யும் ஆற்றின் தோற்று வாய் பகுதியை அடைகின்றன. வழியில் பல வேட்டை ஆடப்படுகின்றன . கரடிகள் இவற்றை மிக லாவகமாகப் பிடித்து உண்ணுகின்றன. மீனுண்ணும் பறவைகளும் இம்மீன்களை உணவாக்கிக் கொள்கின்றன.

திமிங்கிலங்கள் பெரும்பாலும் கடற்கரையோரமாகச் செல்லும். பழுப்பு நிறத் திமிங்கிலம் மெக்ஸிகோ கடற் பகுதியிலிருந்து ஆர்டிக் கடல் வரை ஒவ்வோர் ஆண்டும் புலம் பெயர்ந்து செல்கின்றது அவை தன் வாழ்நாளில் ஏறக்குறைய 800000 கிமீ தொலைவு நீந்திச் செல்கின்றது இது உலகை 16 முறை வலம் வருவதற்கும் ஒரு முறை நிலவிற்குப் போய் வருவதற்கும் ஒப்பானதாகும். டூனா மீன்கள் , கடல் ஆமை போன்றவை புலம் பெயரும் போது 20000 கிமீ  தொலைவு கடந்து செல்கின்றன.
மனிதர்களை போல புலப்பெயர்ச்சி செய்யும் விலங்கினங்களுக்கு வரைபட வழிகாட்டி இல்லை. அவை தான்  செல்லும் வழித் தடத்தில் பயணிக்க வெவ்வேறு வழிமுறைகளிக் கடைப்பிடிக்கின்றன.
திமிங்கிலங்கள்  கடற்கரையை உணர்ந்து பயணத்தை தொடர்கின்றது சாலமன் மீன்கள் ஆற்றின் முகத்துவாரத்தில் நீரைச்  சுவைத்து எந்த ஆற்றோட்டத்தை எதிர்த்து நீந்த வேண்டும் என்பதை முடிவு செய்கின்றன. காட்டெருமைகள், வரிக்குதிரைகள்  போன்றவை பருவநிலை மாற்றங்களை உணர்ந்து இடப்பெயர்வு பயணத்தை மேற்கொள்கின்றன  

உயிரினங்களின் புலப் பெயர்வு ஒரு குறிப்பிட்ட கால வரையறையுடன் ஒவ்வோர் ஆண்டும் நிகழ்வதும்,வழித்தடம் பிசகாமல் பயணத்தை தொடர்வதும் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த வியப்பூட்டுவதாக இருக்கின்றது

Sunday, July 9, 2017

about meteors

எரிக்கல்லால் பூமிக்கு ஆபத்தா ?    
பூமியின் இயற்கைச் சூழலை  மாசுபடுத்தி சாகாத சமுதாயத்தின் உயிர் வாழ்க்கைக்கு மனிதர்களால் ஏற்படும் ஆபத்துகள் பல - தாறுமாறான பருவ மாற்றங்கள்,.தாங்கமுடியாத வெப்பம், கன மழையும் வெள்ளப் பெருக்கும் , நஞ்சாகும் சுவாசக் காற்று போன்ற ஆபத்துகள் ஒட்டு மொத்த உலகையே அச்சப் படுத்தி வருகின்றன. . பூமிக்கு பூமியைப் படைத்த இயற்கையாலும் அவ்வப்போது ஆபத்துகள் வருவதுண்டு.- நில மண்டலத்தில்  நில நடுக்கம்,.நீர் மண்டலத்தில் சுனாமி, வளி மண்டலத்தில்  புயல், சூறாவளி  போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
ஏவுகணைத் தாக்குதல் போல  விண் வெளியிலிருந்து பூமியைத் தாக்கும் விண்கற்களும் இயற்கை தரும் ஆபத்துகளே. பூமியானது புறவெளியிலிருந்து தொடர்ந்து விண்கற்களால் தாக்கப்பட்டாலும் பெரும்பாலான கற்கள் அதிருஷ்ட வசமாக மிகவும் சிறியனவாக இருப்பதால் அவை பூமியின் பல அடுக்கு வளிமண்டலத்தை கடக்கும் போது உராய்வின் காரணமாகத் தீப்பற்றி எரிந்து காற்றோடு கலந்து விடுகின்றன . இருப்பினும் மிக அரிதாக பெரிய விண்கற்களும் பூமியில் விழுவதுண்டு. இவை பூமியின் ஈர்ப்பினால்  பெறும் வேக முடுக்கத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் வெடித்துச் சிதறிப் போவதுமுண்டு . வெகு சிலவே எரிந்தது போக எஞ்சிய பகுதி பூமியில் மோதுவதுண்டு. அப்போது அவை மிகப் பெரிய  பள்ளத்தை பூமியின் மேற்பரப்பில் ஏற்படுத்துகின்றன.. அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் காணப்படும் மிகப் பெரிய பள்ளம் அங்கு விண்கல் விழுந்ததின் சான்றாக இருக்கின்றது. இப்  பள்ளத்தின் விட்டம் 12 கிமீ ஆழம் 170 மீ ஆக உள்ளது. இது 20000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்டிருக்கலாம் என்று கணக்கிட்டுள்ளனர்.
விண்வெளியிலிருந்து எரிகற்கள் பூமியின் வளிமண்டலத்தை ஊடுருவும் போது உராய்வின் காரணமாகப் பெருமளவு வெப்பத்தைப் பெறுகின்றன . இதனால் அவை வளி மண்டலத்தைக் கடக்கும் பொழுதே எரிந்து சாம்பலாகி விடுகின்றது. வளி மண்டலம் மட்டும் இல்லாது போனால் இந்த விண்கற்கள் அங்குமிங்குமாய் பூமியில் விழும். நிலவில் அப்படி விழுந்ததனால்தான் அதன் முகப்பு பரப்பு மேடு பள்ளமாக ஆகி நமக்கு களங்கமாகத் தோன்றுகின்றது. அவற்றின் இயக்க வேகம் மிக அதிகமாக இருப்பதால் சிறிய கல் கூட பெரும் சேதத்தை உண்டாக்கி விடுகின்றது. விண்வெளியில் இயங்கும் விண்கலங்கள் இதன் பாதையில் குறுக்கிடும் போது  சத்தமில்லாமல் துளை போட்டு விடுகின்றன இதனால்  விண்கற்கள் பாதுகாப்பான விண்வழிப் பயணத்திற்குத் ஒரு தடையாக இருக்கின்றது.
போராட்டக்காரர்கள் போல பூமியை நோக்கி எரிகல்லை வீசுபவர்கள் யார்? இந்தக் கற்கள் எங்கிருந்து வருகின்றன? விண்வெளியில் கல் குவாரி எங்காவது இருக்கின்றதா என்ன?
சூரிய மண்டலத்தில் மிகப் பிரும்மாண்டமான ஒரு கல் குவாரி இருக்கின்றது. அது செவ்வாய்க்கும் வியாழனுக்கு இடையில் சூரியனைச் சுற்றி அமைந்திருக்கின்றது .இதை விண்கல் மண்டலம் (asteroid belt ) என்று குறிப்பிடுகின்றார்கள்.
உண்மையில் சூரிய மண்டலம் உருவான போது இந்த விண்கல் மண்டலம் உருவானதில்லை .அந்த இடத்தில் ஒரு கோள் இருந்திருக்க வேண்டும் என்றும் அது ஏதோ ஒரு சில காரணங்களால் வெடித்துச் சிதறி விண்கல்மண்டலமாக மாறியிருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
இதில் 1  முதல் 1000  கி.மீ தடிப்புள்ள பல கோடிக்கணக்கான கற்கள் பல வேகங்களில் அகலமான சுற்றுப் பாதையில் சுற்றி வருகின்றன. இவை   பாறை, உறைந்த பனி, வளிமம் இவற்றால் ஆனது. பொதுவாக ஒரு விண்கல் பூமியை நோக்கி விரையும் போது அதன் வேகம் 12  கி மீ / வினாடி என்ற அளவில் இருக்கும். இது பூமியின் ஈர்ப்பிலிருந்து ஒரு பொருள் விடுபட்டு வெளியேறிச் செல்லத் தேவையான குறைந்த பட்ச வேகமாகும்.. ஈர்ப்பினால்  பெறும் வேக முடுக்கத்தினால்  இதன் வேகம் பூமியை எட்டும் போது 32 முதல் 95  கிமீ வரை அதிகரிக்கின்றது. . .

இவை பூமியில் மோதும் போது திடீரென விளையும் வெடிச் சத்தம் அதிர்ச்சி அலைகைளை ஏற்படுத்துகின்றன.. ஒலியின் வேகத்தைக் காட்டிலும் அதிக வேகத்தில் செல்லும் சூப்பர் சானிக் விமானங்கள் சிறிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகின்றன . அந்த விமானம் மேலே பறக்கும் போது கீழேயுள்ள வீடுகளின் சுவர்களில் வெடிப்புகளை ஏற்படுத்தலாம், கண்ணாடி ஜன்னல்கள் நொருங்கிப் போய்விடலாம் பெரிய அளவிலான அதிர்ச்சி அலைகள் பல அடுக்கு மாடிக்கு கட்டடங்களைக் கூட தரை மட்டமாக்கிவிடும் வலிமையானவை.
ஒவ்வொரு நாளும் குறைந்தது 50 டன் அளவிற்கு பூமியில் எரிகற்கள் விழுகின்றன  என்று மதிப்பிட்டிருக்கின்றார்கள் இவை சிறிய துகளிலிருந்து பெரிய பாறை வரை இருக்கின்றன . சிறியவை  சில மீட்டர் தடிப்புள்ளன பெரியவை சில கிலோமீட்டர் தடிப்புள்ளன.. பூமியின் வளிமண்டலத்தை ஊடுவிச் செல்லும் போது உராய்வினால்   எரிந்துகொண்டே கீழே விழுகின்றன. இதை இரவு நேரத்தில் வானத்தில் பார்க்கலாம் பகலில் சூரிய வெளிச்சத்தில் இதை பார்க்கமுடிவதில்லை.
. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது  500  எரிகற்கள் சற்று பெரியனவாக இருக்கும் என்றும் இப்படி விழும் பெரிய விண்கற்கள் பூமியில் புதைந்து விடுகின்றன என்றும். 1000 ஆண்டுகளுக்கு ஒருமுறை அளவில் பெரிய விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு இருக்கின்றது என்றும் கணக்கிட்டிருக்கின்றார்கள். ஏனெனில் விண்கல் மண்டலத்தில் சிறியதும் பெரியதுமாக பல கோடிக்கணக்கான கற்கள் இன்னும் இருக்கின்றன. இவை தடம் மாறிச் செல்லும் போது சுற்றுப் பாதையிலிருந்து விலகி சூரியனை நோக்கிச் செல்கின்றன. வழியில் பூமி குறுக்கிடும் போது திசை மாறி பூமியில் விழுகின்றன.
ஏறக்குறைய 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் டைனோசர் போன்ற ராட்சச விலங்கினங்கள் இருந்தன. .இவை இன்றும் பரிணாம வளர்ச்சி பெற்று நம்மோடு உயிர் வாழ்ந்திருந்தால் நம்முடைய  வாழ்க்கைக்கு பெரும் இடையூறாக இருக்கும்.
 இப்போது மெக்சிகோ நாடாக இருக்கும் பகுதியில்  நிலத்தை யொட்டியுள்ள கடல் பகுதியில் அப்போது 10 கி மீ தடிப்புள்ள ஒரு பெரிய விண்கல் ஒன்று விழுந்து பெரிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்றும் அது சுனாமியாக உருவெடுத்து எங்கும் பரவி நிலத்தில் வாழ்ந்து வந்த டைனோசர் போன்ற ராட்சச விலங்கினங்களை முழுதுமாக அழித்து விட்டன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். அதற்கு இப்போது ஆதாரமாக இருப்பது அவ்விடத்தில் உள்ள விண்கல் தாக்கிய வடு மட்டுமே. 100 கிமீ அகலமும் 12 கிமீ ஆழமும் உள்ள இந்தப் பள்ளம் மிகப் பெரிய விண்கல்லைத் தவிர வேறொன்றினால் ஏற்படுத்த முடியாது..கடலில் ஏற்பட்ட ஆழிப்பேரலை 1 கிமீ உயரத்திற்கு அதிகமாக  இருந்திருக்க வேண்டும் என்றும் இது எங்கும் பரவி நிலத்திலுள்ள டைனோசர்களை முழுவதுமாக அழித்து விட்டன என்றும்  காணாமல் போன ராட்சச விலங்கினங்களுக்கு விளக்கம்  கொடுத்திருக்கின்றார்கள்.
அரிசோனாவில் விழுந்ததைப்போல  இந்தியாவில் பெரிய விண்கல் விழுந்திருக்கின்றதா என்று கேட்டால் அதற்கு விண்கல்  ஆராய்ச்சியாளர்கள்  அப்படி விழுந்ததற்கான வடுக்களை சுட்டிக்காட்டு கின்றார்கள்
Lonar Crater Lake.jpg
 .இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் புல்தானா மாவட்டத்தில் லோனார் என்ற இடத்தில் வட்ட வடிவில் மிகப் பெரிய ஏரி யும்அதற்கு மிக அருகில் அதைப்போல ஆனால் சிறிய எரியும் உள்ளது. பெரிய ஏரியின் விட்டம் சராசரியாக 1 . 5 கி மீ ஆழம் ஏறக்குறைய 140  மீ.50 ௦௦௦ - 60000 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய ஏரிகள் ஒன்று விழுந்ததினால் எது உண்டாகியிருக்கலாமாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றர்மல் .இது விழும் போது தெறித்து 700 மற்ற தள்ளி விழுந்த சிறு துண்டு சிறிய பாலத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று சொல்கின்றார்கள். இதை இன்றைக்கு அம்பர் ஏரி (Ambar lake) என்றும் சோட்டா லோனார் என்றும் அப்பகுதி மக்கள் அழைக்கின்றார்கள்.