Monday, March 11, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? -3

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?


ஒரு குழந்தை பெற்றோர்களின் அரவணைப்பில் வளரும் போது  அது தனக்கென ஒரு இலக்கை திட்டமிடும் திறமையைப்  பெற்றிருப்பதில்லை. தன் பிள்ளை எதிர்காலத்தில் என்னவாக வரவேண்டும் என்று திட்டமிட்டு   பெற்றோர்கள்  அதற்க்கேற்ப கட்டாயப்படுத்தாமல் வெகு இயல்பாக பிள்ளையே மனமுவந்து ஏற்றுக்கொள்ளுமாறு   ஊக்கப்படுத்தினால் அதுவே குழந்தைக்கு ஒரு ஊக்கக் காரணியாக அமைந்து இலக்கையை நோக்கிய பயணமாக அமையும். கட்டாயப்படுத்தினால் எதிர்மறையான விளைவுகளே ஏற்படும் . காரணத்தை புரியும்படி தக்க எடுத்துக்காட்டுகளுடன்  விளக்கிக் கூறும்போது குழந்தைகள் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தைப்  பெறுகின்றன.  பொதுவாக குழந்தைகள் பெற்றோர்கள் செய்யும் வேலைகளை அப்படியே செய்ய முயற்சிக்கும். பெற்றோர்கள் முன்மாதிரியாக இல்லாமல் குழந்தைகள் மீது திணிக்கப்படும் எந்த வேலையையும் விருப்பத்துடன் பின்பற்றப்படுவதில்லை. பெற்றோர்கள் படித்தால் பிள்ளைகளும் படிக்கும், செல் போனில் பேசினால் குழந்தைகளும் அப்படியே , டிவி பார்த்தல் குழந்தைகளும் டிவி பார்ப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளும் . பொதுவாகப்    பெற்றோர்கள் செய்யும் தவறுகளே குழந்தைகளுக்கு முதல் பாடமாக அமைந்துவிடுகின்றன. செய்முறையுடன் கற்றுக் கொள்ளும் இந்தப் பாடங்களை குழந்தைகள் மறப்பதேயில்லை,   குழந்தைகளின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு இது ஒரு முக்கியக் காரணமாக இருக்கின்றது என்பதைப் பெற்றோர்கள் மறந்துவிடக் கூடாது . குழந்தைகள் முதலில் தவறான பழக்கங்களை காரணமின்றிப்  பழகிக் கொள்ளும் பழக்கத்தால்  பிற்பாடு நல்ல பழக்கங்களை காரணத்தோடு கூட பழகிக் கொள்ள முன் வருவதில்லை .நல்ல பழக்கங்களைக் குழந்தைகள் அறிந்து கொள்வதும் அறிந்து கொண்டதைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதும்  தவறான பழக்கங்களைப் பின்பற்றுவதற்கு வெகு முன்பாகவே இருக்குமாறு கவனமாக பார்த்துக் கொள்வது இந்தப் பிரச்சனைக்கு ஒரு இயற்கையான தீர்வாகும் . தான் அடையவேண்டிய இலக்கு எது என்பதை ஒருவன் எந்த வயதிலும் ஏற்படுத்திக் கொள்ளலாம். அது இளம் வயதில் ஏற்படும் போது இலக்கை அடைவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் பிரகாசமாகவும் நிச்சியமாகவும்  இருக்கின்றன.   இலக்கை அறியாதவனும் , ஏற்படுத்திக்கொள்ளாதவனும் செய்யும் செயல்கள் எல்லாம்  சென்றடைய வேண்டிய இடத்தை அறியாதவன் செய்யும் நடைபயணம் போன்றவை. அவனால் தன்  விருப்பத்  துறையில் ஒரு காலகட்டத்திலும் முன்னேற்றம் காண முடிவதில்லை

No comments:

Post a Comment