எழுதாத கடிதம்
எங்கும்
தலைவிரித்தாடும் ஊழல் மிகுந்த இந்நாட்டில்,ஒவ்வொரு சாதாரண குடிமகனும் நிம்மதியாக வாழ்வதற்கு இருக்கும் வழிகள் வெகுவாகச் சுருங்கி வருகின்றன.தப்பிப் பிழைத்து வாழ்வதற்கான வழிகள் சுருங்கச் சுருங்க எண்ணங்களிலும்,செயல்களிலும் வன்மையும் ஒரு முரட்டுத்தனமும் அதிகரிக்கின்றன.பிறர் கண்ணுக்குத் தெரியாத இந்த அக நிலை மாற்றங்கள் சாகாத சமுதாயத்திற்கு ஒரு உட் பகையாகிவிடுகின்றது. கூட இருந்தே குழி பறிக்கும் நண்பன் போல .
ஊழல் மலிந்து விட்ட இத்திருநாட்டில் பிறந்து வாழ்வதை இனி ஒவ்வொரு நேர்மையான குடிமகனும் அவமானமாகவே கருதுவான்,
ஊழல் ஒழியாமல் ஓங்கி வளர்ந்து கொண்டுவதையே நாம் பார்க்கின்றோம்.இதற்குக் காரணம் அரசியல்வாதிகளே ஊழலை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று மனப்பூர்வமாக நினைப்பதுமில்லை, செயல்படுவதுமில்லை.
மேடைகளில் அதைப்பற்றி விடிய விடியப் பேசுவார்கள், ஆனால் காரியத்தில் கருத்தாய் செயல்படமாட்டார்கள். அவர்களுடைய பிழைப்பு அதை மட்டுமே பற்றி இருக்கும் போது அரசியல்வாதியால் ஊழலை ஒழித்துக் கட்ட முடியாது. ஊழலின் பிறப்பிடமே அவர்களாக இருக்கும் போது அதை அவர்களால் எப்படி ஒழித்துக் கட்ட முடியும்.
இந்தியாவில் எல்லோருக்கும் உண்மையாகப் உழைத்துப் பிழைப்பதற்கு வழியில்லை. அதனால் பெரும்பாலானோர் தவறான வழி முறைகளினால் சம்பாதிக்க ஆர்வப்படுகின்றார்கள்,ஊழல் புரிவோருக்குத் துணை போகின்றார்கள். ஊழல் தன் ராஜ்ஜியத்தை மிக
எளிதாக விரித்துக் கொள்வதற்கு இந்த மனித மனப் போக்கே காரணம்.
ஊழல் புரிந்து விட்டு ஒன்றும் தெரியாதவர்கள் போல் இருப்பவர்கள் அரசியல்வாதிகள். ஊழல் செய்ய தன் அதிகாரத்தையும், தப்பிக்க தன் செல்வாக்கையும் பயன்படுத்திக் கொள்பவர்கள் அரசியல் வாதிகள். ஊழல் செய்வதற்கான வாய்ப்பு,பணப் புழக்கம் அதிகமான அரசாங்கத்தில் தான்அதிகம். அதனால்தான் தொண்டு செய்யப் போகின்றேன் என்று பொய் சொல்லி தவறான வழிமுறைகளினால் தவறு செய்ய வந்திருக்கின்றார்கள்.
அதிகாரம் உள்ளவர்கள் பொறுப்பில்லாவிட்டால் அதிகாரத்தை எப்போதும் தவறாகத்தான் பயன்படுத்துவார்கள்.இன்றைக்கு அரசியலில் பிரவேசிப்பவர்கள் பெரும்பாலானோர்
பொறுப்பில்லாதவர்களே..இவர்களை நம்பி இந்த நாடு இன்னும் என்னென்ன பாடு படப்போகின்றதோ .மனத்தில் ஒரே அச்சமாக இருக்கின்றது.
No comments:
Post a Comment