எழுதாத கடிதம்
அரசு இயந்திரத்தை இயக்கி அதைச் சரியாகக் கொண்டு செலுத்த மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்டதே அரசாங்கம். வேட்பாளர் போட்டியிட்டு தேர்தல் நடைபெறும் நாள் வரை மட்டுமே இதில் மக்களுக்கு முக்கியத்துவம்.
இந்திய அரசியல் அமைப்பில் இந்திய மக்கள் வெறும் கருவேப்பிலை மாதிரி தான்
மக்களுக்கு வேண்டிய சமுதாயப் பணிகளைச் செய்து முடிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும் அதை நிர்வகிக்கும் பொறுப்பு அரசு அதிகாரிகளுக்கும்,அரசுப் பணியாளர்களுக்கும் உண்டு. அவற்றை எல்லாம் கண்காணித்து மேலும் மேலும் நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஆளும் அரசுக்கு உள்ளது. இவர்கள் எல்லோரும் வரையறுக்கப்பட்ட பொறுப்புக்களை மறந்து பல இந்தாண்டுகள் ஓடிவிட்டன. சுய விருப்பங்களின் காரணமாகப் புதிய பொறுப்புக்களை மட்டுமே இரகசியமாகச் செய்து வருகின்றார்கள். பெரும்பாலும் அவர்களுடைய செயல்பாடுகளில் முழுமையான வெளிப்படைத் தன்மை இருப்பதில்லை.
அரசாங்கம் ஒவ்வொரு முறையும் தேர்தல் மூலம் மக்களால் தீர்மானிக்கப்படுகின்றது. நேர்மையான, சரியான வேட்பாளர்கள் யாரும் களத்தில் யாருமில்லாததால் ,இதில் மக்கள் செய்யக்கூடிய பிழைகள் ஏதுமில்லை. அதனால் மக்கள் வோட்டளித்தாலும் வோட்டளிக்காவிட்டாலும் தேர்தலுக்குப் பின் ஏற்படும் பின் விளைவுகளில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. தவறு செய்த வேட்பாளரை தேர்தலில் போட்டியுடும் வரை வளர விட்டதே நிர்வாகத்தின் குற்றமே. ஆனால் பிழையை மக்கள் மீதே நிர்வாகம் சுமத்தப்பார்க்கிறது.
ஆட்சிப் பணி என்பது ஒரு விதத்தில் மக்களுக்குச் செய்யும் தொண்டுதான். மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பது உண்மையான,கொள்கை ரீதியிலான விருப்பமாக இருக்குமானால் அதைச் செய்து முடிப்பதற்கு அரசுப் பதவி தேவையேயில்லை.அரசுப் பதவி தந்தால் அதைச் செய்வேன்,இதைச் செய்வேன் என்று சொன்னால் அது தொண்டு இல்லை,பணியின் கடமை. அரசின் வருவாயை மக்கள் நலனுக்காகச் செலவழிக்க வேண்டும் என்பது அரசியல் .
அரசின் வருவாயைச் செலவு செய்வதில் முறைகேடுகள் செய்து தனக்காக ஆதாயம் தேடிக்கொள்ளும் வழிமுறைகள் தோற்றுவிக்கப்பட்டிருப்பதால் அரசியலுக்கு வருவோர் அத்தகைய தவறான எண்ணத்தை மனத்தில் நிலை நிறுத்திக் கொண்டே வருகின்றார்கள்.
இவர்கள் தனித்துச் தவறு செய்யும் போது அப்படி வாய்ப்புக் கிடைக்காத எதிரிகளால் பிடிபட குறுகிய வாய்ப்பிருப்பதால் அதை அடைப்பதற்கு அதையே கூட்டணியாகச் செய்யும் போக்கு இன்றைக்கு வளர்ந்து கொண்டு வருகின்றது. அரசியல்வாதிகளிடம் மட்டுமிருந்த இந்த எண்ணப் போக்கு இப்பொழுது அதிகாரிகளையும், பணியாளர்களையும் பற்றிக்கொண்டு விட்டது. அலுவலகங்களில் யாரும் தனக்காக மட்டும் லஞ்சம் கேட்பதில்லை,மேல் அதிகாரிகளுக்கும் மற்றும் கீழ் அலுவலர்களுக்கும் என தனியாகக் கேட்கின்றார்கள்.அதிகாரிகளையும் அலுவலர்களையும் சேர்த்துக் கொள்வதால்,மாட்டிக் கொள்ளாமல் தவறு செய்யும் புதிய பரிணாமம் ஏற்பட்டிருக்கின்றது.இதனால் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் தவறு செய்யும் போது அதைத் தட்டிக் கேட்க வேண்டிய அரசாங்கம் மௌனமாக இருந்து விடுகின்றது.ஆட்சியாளர்கள் அவர்களைக் கண்காணித்து நெறிப்படுத்துவதில்லை.மக்களும் இதில் தவறு செய்கின்றார்கள். அப்படியொரு வாய்ப்பு யாருக்கும் இருக்கவே கூடாது என்று அவர்கள் விரும்புவதில்லை. இந்த எண்ணமே தவறான போக்கின் பரிணாம வளர்ச்சிக்கு வலிமையான ஊக்கக் காரணியாக இருக்கின்றது.
No comments:
Post a Comment