எழுதாத கடிதம்
இந்தியாவின் வளத்தைச் சுரண்டாமல் இருந்தாலே அது இயல்பாகவே தன்னிறைவு பெற்று ஒரு வல்லரசு நாடாக உருவாகும். இந்தியா முன்பு தவற விட்டுவிட்ட தடையில்லாத முன்னேற்றத்தை இனியாவது எட்டிப் பிடித்திட வேண்டும் என்பது 110 கோடி இந்தியர்களின் நெடுநாளயக் கனவு. இந்தக் கனவு நிஜமாவதற்கு இருக்கும் வாய்ப்புகள் சுருங்கிக் கொண்டே வருகின்றன. அரசியல்வாதிகள் இதைப் பற்றி பேசும் அளவிற்கு செயல்படுவதில்லை. இதற்குக் காரணம் அது அவர்களுடைய உண்மையான நோக்கமில்லை. இந்தியாவின் மிகப் பெரிய பலவீனம் இன்றைக்கு மிகுந்து வரும் பொறுப்பில்லாத அரசியல்வாதிகள் தான். மக்களும் புதிய மாற்றத்தை விரும்பி வரவேற்பதை விட மாறியதில் மறைந்திருக்கவே மனப்பூர்வமாக விரும்புகின்றார்கள் .இதில் பெரும்பாலானோர்க்கு எண்ணமும் பேச்சும் வேறுவேறாக இருக்கின்றன.
இந்தியாவை வளப்படுத்தி தன்னிறைவு பெற்ற ஒரு வல்லரசு நாடாக நிலைப்படுத்த மிகச் சரியான வழி, இருக்கும் ஒரே வழி,நல்லோரை இனமறிந்து ஆட்சியில் அமர்த்துவது தான். நல்லோர்கள் அரசியலில் நுழைவதை அநாகரீக அரசியல் வாதிகள் விரும்புவதில்லை.அநாகரீக அரசியல் தெரியாததால் அவமானப் பட்டுப் போவதால்,அரசியலில் நல்லோர்கள் அரிதாகிக் கொண்டே வருகின்றார்கள்.தப்பித் தவறி ஒரு நல்லவர் அரசியலுக்கு வந்து விட்டால்,எங்கே அவர் மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்று உயர்ந்து விட்டால், தான் அங்கே நிலைத்திருந்து பிழைத்திருக்க முடியாது என்று நினைத்து அவர் முதல் அடி எடுத்துவைக்கும் போதே அவர் உயிருக்கும், உடைமைக்கும் உலைவைத்து விடுகின்றார்கள், இந்த அச்சம் நல்லோர்கள் மனத்தில் இருக்கும் வரை அப்படியொரு மாற்றத்தை நாம் எதிர்பார்க்க முடியாது. மேலும் அரசியலில் அடி எடுத்து வைப்பதற்கு நல்லவர்கள் போல நாடகமாடுவதால் உண்மையான நல்லோரை இனமறிவது இயலாததாக இருக்கின்றது.
அரசியலில் தூய்மையும் தொண்டுமில்லை. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பொதுப் பணத்தை அபகரித்துக் கொள்வதற்கு அங்கே எதிர்ப்புகள் இல்லாததால் இந்திய அரசியலில் இப் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
ஒரு அரசியல் தலைவர் மனது வைத்தால்தான் ஒருவர் அரசியலில் பதவி பெறமுடியும் என்ற நிலை இருப்பதால் ஒருவர் அரசியல் தலைவர்களைக் காக்காய் பிடிப்பதும் குஷிப் படுத்துவதும் ,அரசியல் தலைவர் வாய்ப்பளிக்காவிட்டால் கட்சியை விட்டு வேறு கட்சிக்கு மாறுவதும்,அல்லது புதிய கட்சியொன்றைத் தொடங்குவதும் மிகச் சாதாரணமாக நடைபெறுகின்றது. 10 ஆண்டுகள் கட்சியில் இப்படிக் காக்காய் பிடித்து ,தலைவரின் கலைப் பிடித்து தேர்தலுக்கும், ரகசிய ஒப்பந்தங்களுக்கும் 10 கோடிக்கு மேல் செலவளித்து மக்களுக்குத் தொண்டு செய்ய ஓடி வருகின்றார் என்றால் அதன் உண்மையான உள் நோக்கம் வேறொன்றாகத்தான் இருக்கும்.பதவியேற்ற 10 நாளில் 100 கோடியை திட்டச் செலவில் கணக்கெழுதிவிட்டு தானே எடுத்துக் கொள்ளும் இவர்களைப் போன்ற அரசியல்வாதிகள் இருக்கும் வரை இந்திய சமுதாய நலத்தில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. அரசியலில் நல்லோர்கள் இல்லை என்பதை விட அரசியலுக்கு வருவதற்கு இனி நல்லோர்கள் இல்லை என்பதே எதிர்காலத்தில் இந்தியாவை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடக் கூடியது.
No comments:
Post a Comment