Tuesday, February 26, 2013

Eluthatha Kaditham


எழுதாத கடிதம்

இந்தியா எதிர்பார்த்த மாதிரி முன்னேறவில்லை என்று பெரும்பாலானோர் நினைக்கின்றார்கள் .புரியாத புள்ளி விவரங்களை அடுக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கின்றது என்றோ இந்தியா அடுத்த 10,15,20.... ஆண்டுகளில் முன்னேறிவிடும் என்றோ விவரம் தெரியாத சாதாரண மக்களை நம்பும் படி செய்துவிடலாம். சில பல காரணங்களைச் சொல்லி .கால எல்லையை நீட்டித்து கொண்டே போவதால் மக்கள் புரியாமல் இன்னும் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள் என்றாலும் முழுமையான புரிதல் யாரிடமும் இல்லை .

மனித வளமே முதலீட்டைக் காட்டிலும் ,நவீன சாதனங்களைக் காட்டிலும் அதிக மதிப்புள்ளது.முதலீடு இல்லாவிட்டாலும் ,சாதனங்கள் இல்லாவிட்டாலும்,மனித வளம் இருந்தால் சாதிக்கும் வாய்ப்பு அதிகம். இந்தியாவில் இந்த மனித வளம் தூரதிருஷ்ட்டவசமாக அதிகமாக வீணடிக்கப் படுகின்றது.ஒரு நாடு தன் மனித வளத்தை மிகப் பெரிய சுமையாகவும்,பாரமாகவும் நினைக்காமல் மிகப் பெரிய சொத்தாக நினைக்கவேண்டும்.இந்த எண்ணம் எல்லோரிடமும் சிறந்து விளங்க அரசியல் தலைவர்களே முன் உதாரணமாகத் திகழவேண்டும் .பிற வளங்கள் அனைத்தையும் இழப்பதற்காக மனித வளத்தைத் தவறாகப் பயன்டுத்திக் கொள்வதை மாற்றிக் கொள்ள எல்லோரும் முன் வரவேண்டும் .சீனா மனித வளத்தை நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதில் முதலிடத்தில் இருக்கின்றது.இருப்பும் அதிகம்,ஏற்றுமதியும் அதிகம் அது நிலையான முன்னேற்றத்தின் அறிகுறி. நாம் அப்படியில்லை,முன்னேறாவிட்டால் அதற்குக் கையிருப்பில் உள்ள காரணங்களை அடுக்கி வைப்போம்.நம்முடைய முன்னேற்றம் நிலையில்லா முன்னேற்றம். விழித்துக் கொள்ள வேண்டிய இறுதிக் கால கட்டத்திலும் விழித்துக் கொள்ளா விட்டால் நமக்கு பொழுது விடியாமலேயே போய்விடலாம்.

Sunday, February 24, 2013

Vinveliyil Ulaa

விண்வெளியில் உலா -கோமா பெரனிசியஸ்


எகிப்து நாட்டின் ராணியாக இருந்த பெரனிஸ் என்பவளின் தலைமுடியாக இது கற்பனை செய்யப்பட்டுள்ளது.தன்னுடைய கணவரான தாலமி ,போர்க்களத்திலிருந்து பத்திரமாகத் திரும்பவேண்டும் என்று வேண்டிக் கொண்டு பெரனிஸ் தன் தலைமுடியைக் கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்துகின்றாள் என்பது சரித்திரம்.தேசப் படம் வரையும் டச்சு நாட்டு ஜெரார்டெஸ் மெர்காட்டர் என்பார் 16 ஆம் நூற்றாண்டில் இந்த வட்டாரத்தை உருவாக்கினார்.இதில் 50 விண்மீன்களை இன மறிந்துள்ளனர்.கிரேக்கர்கள் இவ் வட்டாரத்தை சிங்கத்தின் வாலாக வர்ணித்தனர்.இதற்குத் தெற்காக விர்கோ வட்டாரமுள்ளது.
விர்கோ போல இவ் வட்டாரத்திலும் எண்ணிறைந்த அண்டங்கள் காணப்படுகின்றன .எனினும் இவை விர்கோவை விடச் சற்று சிறியவை .இப் பகுதியில் ஓராயிரம் அண்டங்கள் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர் .இவை மிகவும் மங்கலாக இருப்பதால் பல அண்டங்கள் கணகளுக்குப் புலப்படுவதில்லை .இந்த அண்டங்களெல்லாம் சராசரியாக 85 மில்லியன் ஓளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளன .இவற்றின் செம்பெயர்ச்சி இவை 7400 கிமீ /வி என்ற வேகத்தில் நம்மை விட்டுச் செல்வதாக த் தெரிவிக்கின்றது .
ஒளிப் பொலி வெண் 5 உடைய ஆல்பா கோமே பெரனிசியஸ்(மெலொட் III ) என்ற விண்மீனுக்கு வலப்புறம் மிக அருகாமையில் ஒளிப் பொலி வெண் 8.7 உடைய விண்மீன் போலத் தோற்றம் தருவது M .53 என்று பதிவு செய்யப்பட்ட ஒரு கோளக் கொத்து விண்மீன் கூட்டமாகும் .இது 260 ஒளி ஆண்டுகள் ஆண்டுகள் தொலைவு ஆல்பா கோமே பெரனிசியஸ் லிருந்து தள்ளி உள்ளது.இதிலுள்ள விண்மீன்கள் சிதறியவாறு ஒரு கை விசிறி போன்று தோற்றம் தருகின்றன .
70,000 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள இந்த அண்டம் நம்மை விட்டு 100 கிமீ/வி என்ற வேகத்தில் விலகிச் செல்கின்றது .இவ்வட்டாரத்தில் M .64 என்று பதிவு செய்யப்பட்ட கரு விழி அண்டம் (Black eye galaxy) என்ற சுருள் புய அண்டமுள்ளது .இதைச் சுற்றி நீள் கோள வடிவில் பனிமூட்டம் உள்ளது .அண்ட மையத்தில் தூசிப் படலத்தால் ஒரு கரு வடிவம் காணப்படுகின்றது .அதாவது அண்டத்திலிருந்து வெளியேறும் ஒளி படர்ந்திருக்கும் தூசிப் படலத்தால் எதிரொளிக்கப் படுவதால் இந்த நிழல் வடிவம் தோன்றுகிறது என்று அறிந்துள்ளனர் .

Vethith Thanimangal-Chemistry


வேதித் தனிமங்கள் - காலியம் (Gallium)- கண்டுபிடிப்பு

1875 ல் பிரான்சு நாட்டின் பாய்ஸ் பௌட்ரன் என்பாரால் கண்டுபிடிக்கப்பட்ட து . இந்த உலோகம் தனிம அட்டவனையை நிறுவிய மென்டலீவ் என்பார் அலுமினியத்திற்கும் (அணுவெண் 13) இன்டியத்திற்கும் (அணுவெண் 49) இடையில் அவற்றின் பண்புகளை ஒத்த ஒரு தனிமம் இருக்க வேண்டும் என்றும் அதை ஏக அலுமினியம் என்று அழைக்கலாம் என்றும் கூறினார் .இந்த ஏக அலுமினியமே பாய்ஸ் பௌட்ரனின் கண்டு பிடிப்பிற்க்குப் பின்னர் காலியம் ஆனது .தனிம அட்டவணையில் மூன்றாம் வரிசையில் உள்ள போரான் ,அலுமினியம்,இன்டியம் போன்ற தனிமங்களின் நிறமாலைகளுக்கிடையேயுள்ள ஒற்றுமைகளை ஆராய்ந்த போது பாய்ஸ் பௌட்ரன் காலியத்தைக் கண்டுபிடித்தார்.

சிங் பிளண்டு துத்தநாகத்திற்கும் ஈயத்திற்கும் ஒரு பொதுவான கனிமம் .இதை இராஜ திராவகத்தில் கரைத்து ,கரைத்த துத்தநாகத்துடன் பண்டுவம் செய்த பொழுது கிடைத்த வீழ்படிவு ஆக்ஸி -ஹைட்ரஜன் சுவாலையில் ஊதா முனையில் இரு புதிய வரிகளை ஏற்படுத்தியது .இந்த வீழ்படிவு புதிய உலோகமாகக் காலியமானது .பிரான்சு நாட்டிற்கு இலத்தீன் மொழியில் காலியா என்று பெயர் .தன் நாட்டைக் கௌரவிக்கும் வகையில் இப் புதிய தனிமத்திற்கு காலியம் எனப் பெயரிட்டார்..பூமியில் இதன் செழுமை ஈயத்தின் செழுமைக்குச் சமமானது.பாதரசத்தின் செழுமையை விட 30 மடங்கு அதிகமானது .இயற்கையில் துத்தநாகம் ,ஜெர்மானியம் ,அலுமினியம் போன்றவற்றுடன் சேர்ந்தே காலியம் காணப்படுகின்றது .

பண்புகள்

இதன் வேதிக் குறியீடு ,அணுவெண் 31,அணுநிறை 69.72 ,அடர்த்தி 5950 கிகி /கமீ ,உறை நிலையும் ,கொதி நிலையும் முறையே 29.78 டிகிரி C ,2403 டிகிரி C .அறை வெப்ப நிலைக்கு அருகாமையில் நீர்ம நிலையில் இருக்கும் உலோகங்களுள் பாதரசம் ,சீசியம் மற்றும் ருபீடியம் தவிர்த்து காலியமும் ஒன்றாகும் .இப் பண்பினால் காலியம் உயர் வெப்பநிலையை அளவிடும் வெப்ப மானிகளில் பயன்படுத்தப் படுகின்றது .எல்லா உலோகங்களிலும் இதுவே நீண்ட வெப்ப நிலை நெடுக்கையில் நீர்மமாக இருக்கின்றது .உயர் வெப்ப நிலையிலும் இதன் ஆவி அழுத்தம் மிகவும் குறைவு .நீர்மக் காலியம் திண்மமாக உறையும் போது 3.2 % பருமப் பெருக்கம் அடைகின்றது .இது போன்ற பண்பை ஆண்டிமணி ,பிஸ்மத் மற்றும் ஜெர்மானியம் போன்ற தனிமங்கள் மட்டுமே பெற்றிருக்கின்றன .

காலியம் பெரும்பாலான உலோகங்களை அரித்தெடுத்து விடுகின்றது .ஏனெனில் அணித் தளங்களில் காலியம் மிக எளிதாக ஊடு பரவுகின்றது .காலியம் பல உலோகங்களுடன் சேர்ந்து கலப்பு உலோகங்களைத் தருகின்றது .தாழ்ந்த உருகு நிலை உடைய சில கலப்பு உலோகங்கள் ,தாழ்ந்த வெப்ப நிலையில் பற்றவைப்புக்குப் பயன்படுகின்றன .காலியம் பிற உலோகங்களின் இயற்பியல் பண்புகளை குறிப்பிடும் படியாக மாற்றி விடுகின்றது .காலியம் தோய்த்த அலுமினியம் மிக எளிதில் உடைந்து நொறுங்கி விடுகின்றது .இதனால் காலியத்தை வானவூர்திகளில் ஏற்றிச் செல்வதில்லை.

வேதியியல் வினையால் காலியம் ஏறக்குறைய துத்தநாகத்தை ஒத்திருக்கிறது .அலுமினியத்தை விடச் சற்று குறைந்த அளவு வினைகளில் ஈடுபடும் தன்மை கொண்டது .அலுமினியத்தைப் போல காலியமும் ஒரு மெல்லிய ஆக்சைடு படலத்தைப் புறப்பரப்பில் ஏற்படுத்திக் கொள்கிறது .இப் படலம் காலியம் வளி மண்டலத்திலுள்ள ஆக்சிஜனுடன் வினையாற்றுவதைத் தடுக்கின்றது .

பொதுவாக காலியம் மட்டும் செறிவுள்ள கனிமம் அதிகமில்லை .அலுமினியத்தின் கனிமமான பாக்சைட்டில் காலியம் 0.001 முதல் 0.008 சதவீதம் என்ற என்ற அளவில் காணப்படுகின்றது .இன்றைக்குப் பெருமளவு காலியம் அலுமினியச் சுத்திகரிப்பு வழிமுறையிலிருந்தே பெறப்படுகின்றது .