Wednesday, May 1, 2019

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? - 49

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? 
நம் சான்றோர்கள் மாணவர்களை மூன்று வகையாகப்  பிரித்து அவர்களின் பொதுவான குணங்களைக் கூறுவார்கள். சொல்வதை அப்பொழுதே  புரிந்து கொள்பவர்களை  தீயிட்டால் சட்டெனெ பற்றிக் கொள்ளும் கற்பூரம் போன்றவர்கள் என்றும் . மீண்டும்  சொல்லி  அதற்கு விளக்கமும் சொன்ன  பிறகு  ஓரளவு அறிந்து கொள்பவர்களை . ஊதி  ஊதி  பற்றிக்கொள்ளும் கரித்துண்டு போன்றவர்கள் என்றும் , எவ்வளவு முயன்றாலும் கொஞ்சம் கூடத் தெரிந்து கொள்ளாதவர்களை எவ்வளவு முயன்றாலும் சிறிதும் பற்றிக் கொள்ளாத வாழைத்தண்டு போன்றவர்கள் என்றும் கூறுவார்கள்.      
சீன ஞானி கான்பூசியஸ்சும் மாணவர்களை மூன்று வகைப்படுத்துகின்றார்.முதல் தரம் வானம்பாடிப் பறவை போன்றவர்கள். வானம்பாடி மழைத்துளி மேகத்திலிருந்து பிரிந்து பூமியில் விழுவதற்கு முன்னதாகவே வானவெளியில் தன் அலகினால் பற்றிக்கொள்ளும்.துல்லியமாகச் சரியாகவும்,விரைவாகவும் செய்ய முடிந்தால் மட்டுமே மழைத்துளியை இப்படிக் கவர முடியும்.பறவைக்கு இதுவெறும் பயிற்சியினால் மட்டும் வந்ததில்லை.இது அதனுடைய உள்ளார்ந்த இயல்பு, வானம்பாடிபோன்ற மாணவர்கள் கல்வியைக் கற்கும் போதே அதைப் புரிந்து கொள்வதோடு விரித்துக் கொண்டு பயன்படுத்திக் கொள்ள சிந்திக்கும் திறனையும் வளப்படுத்திக் கொள்வார்கள். கல்வியைப் பயன்படுத்திப் பயனீட்டும் வழி முறையினால் சமுதாய நலம் காப்பார்கள். வேற்றுச்சிந்தனைகளுக்கு நினைவில் இடமும், நிகழ்வில் நேரமும் இல்லாததால் தீய செயல்களைச் செய்யத் துணிவதில்லை.இவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்திக் காட்ட வாய்ப்புக்களைத் தேடிச் செல்வார்கள். வாய்ப்புகள் வரும் வரை காத்திருக்க மாட்டார்கள் .
முத்துச் சிப்பி போன்றவர்கள் இரண்டாம் வகையினர் .முத்துச்சிப்பி மழைத் துளிக்காக நெடுநாள் காத்திருக்கும் .மழைத் துளி விழுந்ததும் அதை வாங்கிக் கொண்டு வாயை மூடும்.முத்துச்சிப்பி முத்தினை உருவாக்க இதைச் செய்கிறது.முத்துக்களைப் பெற்று பயன்படுத்த வேண்டுமானால் கடலில் முத்துக் குளிக்க வேண்டும்.முத்துச் சிப்பிபோன்ற மாணவர்கள் குடத்திலிட்ட விளக்குப் போன்றவர்கள். தங்கள் திறமையை ஒரு குறிப்பிட்ட துறையில் ஒரளவு பெரிதாக வளர்த்துக் கொள்வார்கள்.இவர்களுடைய புலமையையும் திறமையையும் மற்றவர்களே இனமறிந்து வெளிப்படுத்த வேண்டும். இவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தாலும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாது.  
தவளையைப் போன்றவர்கள் மூன்றாமவர். தவளை மழைக்கு முன்னும்,பெய்யும் போதும், பெய்த பின்பும் தொடர்ந்து கத்திக் கொண்டேஇருக்கும். தன்வாயால் தானே கெடுவது தவளையின் இயல்பு.இவர்கள் எதையும் புரிந்து கொள்ள விரும்புவதில்லை.அறிந்து கொள்ளுவதுமில்லை.தானே எல்லாம் அறிந்தவன் போல பேசுவார்கள்.மற்றவர்கள் பேசினால் குறுக்கிட்டுப் பேசுவார்கள்.எதையும் காதுகொடுத்துக் கேட்க மாட்டார்கள்.இவர்கள் தானும் கெட்டு சமுதாயத்தையும் கெடுப்பார்கள். 
மாணவர்களில் 10 சதவீதம் பேரே  முதல் வகையினராகவும் , 50 சதவீதம் பேர் இரண்டாம் வகையினராகவும் ,40 சதவீதம்  பேர் மூன்றாம் வகையினராகவும் இருக்கின்றார்கள் . சிறந்த மாணவராக வளர இரண்டாம் வகையினர் முதல் வகையினரை நட்புக்  கொள்ளவேண்டும் . மூன்றாம் வகையினரோடு நட்புக் கொண்டால் இருக்கும் திறமையையும் இழக்க நேரிடலாம் , மாணவனின் மன வலிமையைப் பொறுத்தது  மூன்றாம் வகை மாணவன் கல்வி கற்பதில் ஓரளவு முன்னேறலாம்.      

Monday, April 29, 2019

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? - 48

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? 
நேரத்தைக் கழிப்பதற்காக மனிதர்கள் பிறப்பதில்லை . குறுகிய வாழ்நாளில் அரிய காரியங்களைச் செய்து முடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருக்க வேண்டும் .அது சமுதாயம் நிலைத்திருப்பதற்கு ஒவ்வொருவரும் கொடுக்கும் பங்களிப்பாகும்.  மண்ணில் மறைந்த பின்பும் மக்கள் மனதில் மறையாமல் வாழும் மாமனிதர்களின் பங்களிப்பு எங்ஙனம் சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி வளப்படுத்தி இருக்கின்றது என்பதையும் அதனால் நம்முடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பலன்களையும் எடுத்துக் கூறி  ஒவ்வொரு மனிதனும் எதாவது ஒரு வகையில் சாகாத சமுதாயத்திற்கு பங்களிப்புச் செய்ய வேண்டியதின் முக்கியத்தை வலியுறுத்திக் கூற வேண்டும். 
படிப்பு என்பது வகுப்பில் முதலிடம் பெறுவதற்காக இல்லை , வாழ்க்கையில் முதலிடம் பெறுவதற்காக என்பதை பெரும்பாலான மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே புரிந்து கொள்வதில்லை . மதிப்பெண் வகுப்பில் முதலிடத்தைத் தரலாம் . ஆனால் பயன்படுத்திக் கொள்ளும் அறிவும் தனித்த திறமைகளும் தான் ஒரு மாணவனுக்கு வாழ்க்கையில் முதலிடத்தைத் தரும். பெரும்பாலான மாணவர்கள் வகுப்பில் முதலிடம் பெறுவது என்பது வாழ்க்கையில் முதலிடம் பெற்றது போல என்று நம்புகின்றார்கள் .ஒழுக்கமும் ,உயர்ந்த நோக்கமும்  , சமுதாய நலம் சார்ந்த  கல்வியும் எண்ணத்தில் நிலைத்திருக்கும் போது  வகுப்பிலும் ,வாழ்க்கையிலும் முதலிடத்தைத் தரும்.
நல்ல பழக்கங்களைப் பின்பற்ற  சமுதாயத்தை ஒரு வழிகாட்டியாகக் கொள்ளலாம் ஆனால் தீயபழக்கங்களை கற்றுக் கொள்ள சமுதாயம் ஒரு காரணமாக இருக்கக் கூடாது . நல்ல சமுதாயமோ ,தீய சமுதாயமோ அது தானாக உருவாவதில்லை , மனிதர்களால்  மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டது.  இன்றைக்கு ஒவ்வொருவரும்  அக வொழுக்கத்தை  புறவொழுக்கத்திலிருந்து வேறுபடுத்தி மறைவொழுக்கமாகக் மேற்கொள்ளுவதால் சமுதாயம் மெல்ல மெல்லச் சீரழிந்துவருகின்றது .
தீய வழிகளில் முன்னேறிய  சமுதாயத்தை வெறுத்து அதை விட்டு தனித்துப் பிரிந்து  வாழ முடியாததால்  சமுதாயத்தைச் சீரழிக்கும் மனிதர்களைத் திருத்துவதைத் தவிர சிறந்த வழிமுறை ஏதுமில்லை . அது ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவதற்கு ஒவ்வொரு தனிமனிதனும் செய்ய வேண்டிய கடமையுமாகும் .இந்தக் கடமையின் முக்கியத்துவம் கருதி  உலகில் வாழ்ந்து மறைந்த மாமனிதர்கள் எல்லோரும் இதைத்தான் செய்தார்கள். ஏனெனில் ஒரு தீய சமுதாயத்தில் இப்பொழுது வாழ்ந்து விடலாம் ஆனால் முதிர்ந்த தீய சமுதாயத்தில்  நமக்குப் பிறகு நம் வருங்காலச் சந்ததியினர் வாழவே முடியாத சூழ்நிலையே நிலவும் .   

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?-47

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
 சாகாத சமுதாயத்திற்கு இது நல்லது , இது கெட்டது என்பதைப் பகுத்தறிந்து  நல்லனவற்றைத் தேர்வுசெய்து பின்பற்ற அறிவு தேவை .அறிவைப் பெறுவதற்கான வழிமுறைகள் பல உள்ளன , அவை ஒவ்வொன்றிற்கும் வேறுபட்ட தனிச் சிறப்புக்கள் இருந்தாலும் சுய தேவைக்கு ஏற்ப எல்லோராலும் எல்லா நிலைகளிலும் அவற்றைப் பயன்படுத்தி அறிவைப் பெறமுடியும். 
இந்த அறிவைப் பெறுவதற்கு இருக்கின்ற  முதலாவது வழியைப்  பட்டறிவு என்பர், எதையும் அனுபவப் பட்டு அறிந்துகொள்வதாகும் .  ஒருவர் தனக்குத் தானே கற்பிக்கும் ஆசிரியராகவும் , கற்றுக் கொள்ளும் மாணவராகவும் இருந்து கற்றுக் கொள்ளும் செய்முறை  வாயிலான கல்வி இது. அறிந்து கொள்ளும்போதே புரிந்தும் கொள்வதால்  ஆழமான பதிவுகளால் ஒருவர் அதைத் தன் வாழ்நாளில் மறப்பதேயில்லை. 
  நேற்றைய அனுபவம் இன்றைய ஆசிரியன் என்று சான்றோர்கள் கூறுவார்கள் .   ஆனால் வாழ்கைக்குத் தேவையான எல்லா அறிவையும் ஒருவர் வாழத் தொடங்குவதற்கு முன்பாக  தன் அனுபவத்தின் வாயிலாகவே பெறுவது என்பது  வாழ்நாள் காலத்திற்குள் இயலாததாகும்.
இரண்டாவது வகையான அறிவைப்  படிப்பறிவு   என்பர் . வாழ்க்கையில் நிறைந்த பட்டறிவினைப் பெற்ற அறிஞர்கள், ஆசிரியர்கள் , மூத்தவர்கள் எழுதிய நூல்களைப் படித்தும் பெறுவதாகும் .ஒவ்வொரு  அனுபவத்தையும் தானே பட்டறிவதற்குப் பதிலாக முன்னோர்களின் அனுபவங்களையே வழிகாட்டலாகக் கொண்டு பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்ட வாழ்க்கையைத் தொடங்குவதற்கு இது வழிவகுக்கின்றது .இதனால் கால விரயம் தவிர்க்கப்பட்டு  வாழ்க்கைப் பயணம் எளிதாகிறது .படிப்பறிவிற்காகச் செலவிடும் நேரம், தொகை , எல்லாம் நல்ல முதலீடுகளாகும். 
மூன்றாவது வகை சொல்லறிவு எனப்படும் . நூல்களைக் கற்கும் வாய்ப்பில்லாதவர்கள் , அந்நூலைக் கற்றுத் தேர்ந்த ஆசிரியர்கள் வாயிலாகக் கேட்டுப் பெறும் அறிவாகும். "கற்றிலன் ஆயினும் கேட்க " என்பது வள்ளுவம் . பட்டறிவையும் சொல்லறிவையும் பெறுவதற்கு ஒருவர் எவ்வளவு செலவு செய்கின்றாரோ அதைப்  போல பல மடங்கு  பயனீட்டமுடியும். 
பட்டறிவையும் சொல்லறிவையும் ஒரு குழந்தைத் தானாக விரும்பிச் செய்யுமாறு செய்வதற்கு சில வழிகள் இருக்கின்றன. இது நம்முடைய கல்வி முறையில் கூட பின்பற்றப்படுகின்றது . அகர வரிசையில் நன்னெறிகளைச் சொல்லும்  ஆத்திச்   சூடி , கொன்றை வேந்தனை ஆறு வயதில் படித்தாலும் நூறு வயதில் கூட மறப்பதில்லை.  புத்திசாலித்தனமான பெற்றோர்கள் இதைப் பின்பற்றி குழந்தைகளுக்கு மிக எளிதாகக் கற்றுக்கொடுக்கின்றார்கள். பாடம் எளிய பாடல் வரிகளாக இருந்தால் , எதுகை மோனையுடன் சொல்லப்பட்டால் , பட விளக்கத்தையும் காட்டினால், குழந்தைகள் மிக விரைவாகவும் விருப்பத்துடனும் கற்றுக்கொண்டு விடுகின்றன. இதற்குக் காரணம் இயலோடு இணைத்த இசையாகும். இசை மீது மனம் கொண்டுள்ள இயற்கையான பிரியத்தை கல்வி கற்பதில் பயன்படுத்தினால் இசையோடு சேர்ந்து கல்வியும் கற்றுக்கொள்ளப்பட்டு விடுகின்றது.

Sunday, April 28, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 46

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
பயன் முழுதும் தனக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்று உள்ளூர விரும்புவதால் பிறருடன் இணைந்து செய்ய வேண்டிய வேலைகளையும் தனித்தே செய்ய முற்படுகின்றோம் . நாம் எப்படி பிறருக்கு விளைபயன்களைக் கொடுப்பதை விரும்பவில்லையா அது போல பிறரும் நமக்குக் கொடுப்பதை விரும்புவதில்லை . கொடுப்பதால் நமக்கு ஏற்படும் இழப்பைவிட பெறாமல் போவதால் ஏற்படும் இழப்பு அதிகம்  என்பதால் இணைந்து செயலாற்ற வேண்டிய சூழ்நிலைகளில் இணைந்து செயல்படவேண்டும். 
மேலும் இதனால் வேலைகள் பயனுறுதிறனுடன் முழுமை பெறாமல் போபவதற்கும்  கால தாமதத்துடன் முடிப்பதற்கும்  வாய்ப்பு ஏற்படுகின்றது . இணைந்து செயலாற்றும் போது நட்பு வலுப்பெறுகிறது .ஆக்கப்பூர்வமான  புதிய நட்புகளும் பயன்தருகின்றன. போலித்தனமில்லாத இந்த நட்பு  வாழ்க்கை முழுவதற்கும் இனிமையையும் மகிழ்ச்சியையும் தருகின்றது. உதவி செய்வதற்கும் உதவி பெறுவதற்கும் கூடுதல் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ள முடிகின்றது .
இணைந்து செயலாற்றுவது பல நன்மைகளைக் கொண்டுள்ளது . முதலாவது  நேரம் மிச்சமாவதால் வேறு வேலைகளைச்  செய்ய தேவையான நேரம் கிடைக்கின்றது . இரண்டாவது கூட்டு முயற்சியில் எல்லோருடைய அறிவும் திறமையும் ஒன்று திரண்டு சங்கமிக்கின்றன.அதனால் வேலையை  பிழையின்றி பயனுறுதிறனுடன் செய்து முடிக்கும்  நிலை ஏற்படுகின்றது.
வேலை தெரியாதவர்கள் இருக்கலாம் ஆனால் வேலை இல்லாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது.ஊதியத்திற்காகச் செய்வதுதான் வேலை என்பதல்ல , நாமே மேற்கொள்ளும் கடமைகளும் வேலைதான் .  பலர் செய்வதற்கு ஒரு வேலையும் இல்லை என்று பொழுதை வீணாகக் கழித்து விடுகின்றார்கள் .தன்னுடைய அறிவையும் திறமையையும் வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்புத் தேடவும் . பிறருக்கு உதவி செய்யவும்,  சமுதாயத்தின் நலத்தைப் பாதுகாக்கவும் , நாட்டின் வளத்தை மேம்படுத்தவும்  ஒவ்வொரு குடிமகனும் செய்யவேண்டிய வேலைகள் நிறையவே இருக்கின்றன .இதை இனமறிந்து கொள்ள மனம் காட்டும் தயக்கமே வேலையில்லை என்று ஒப்புக்கொள்ளச் செய்துவிடுகிறது  உண்மையில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை முழுதும் செய்வதற்கு வேலைகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. பலர்  வேலைக்காக ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் , ஓய்வுக்காக வேலைசெய்யும் நாகரீகத்தை உட்புகுத்தி வருவதால் தனிமனிதனின் கடமைகள் செய்யப்படாமலே இருக்கின்றன  .
வேலை ஏதுமில்லை என்று நினைக்கும் நேரத்தில் மாணவர்கள் தங்கள் துணைத்  திறமைகளை  வளர்த்துக் கொள்ள வேண்டும்    

Saturday, April 27, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 45

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?  
பெரும்பாலான மாணவர்கள் காலத்தை வீணாக்கி விடுகின்றோம்  என்று தெரியாமலேயே வீணடித்து விடுகின்றார்கள் . இது அவர்களே அவர்களுக்குச் செய்து கொள்ளும் தீங்கு என்பதாலும் , காலம் இலவசமாகக் கிடைக்கின்றது என்பதால் இன்றைக்கு  இழந்த காலத்தை நாளைக்குப் பெறலாம்  என்று நம்புவதாலும் இதற்காக மனம் வருந்துவதுமில்லை , திருந்துவதுமில்லை      
ஒரே நேரத்தில் பல சிந்தனைகள் , பல வேலைகள் செய்வதும் . பல நேரங்களில் ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பதும் , சரியான நேரத்தில்  தவறாகச் செய்வதும் , தவறான நேரத்தில் சரியாகச் செய்வதும் நேரத்தை வீணாக்குவதற்குச் சமமாகும். பல வேலைகளில் ஈடுபட்டு ஒருவேலையையும் முழுமையாகச் செய்யாமல் பாதிப்பயனைப் பெறுவதைவிட ஒரு நேரத்தில் ஒரு வேலையை முழுமையாகச் செய்து அதனால் கிடைக்கும்  முழுப்பயனைப்  பெறுவதும் , அப்படி எல்லா வேலைகளையும் செய்து ஒவ்வொரு வேலையின் முழுப்பயனைப் பெறுவதும்  பயனுறு திறனை அதிகரிக்கும் .
தேவையில்லாத விவாதங்களில் ஈடுபடுவது நேரத்தையும் ,ஆற்றலையும் இழப்பதாகும் . சிறிதும் பயன்தராத , எண்ணத்தையும் ,செயலையும் திசை திருப்புகின்ற விவாதங்களிலிருந்து  விடுவித்துக் கொள்வது வெற்றிக்கு பாதி வழி வகுத்த மாதிரி . நேரமில்லை என்று சொல்வது ஒருவர் தன்னை அதிகப் பரபரப்பாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக  வாய் சொல்லும்  பொய். நேரத்தைச் சரியாகத்  கையாளத் தெரியாதவர்கள் ,  புத்திசாலித்தனமாக ஒரு வேலையை குறைந்த நேரத்தில் செய்து முடிக்கத்  தெரியாதவர்கள் , சும்மா இருப்பதில் இருக்கும் விருப்பத்தைக் காட்டிக்  கொள்ள விரும்பாதவர்கள் உச்சரிக்கும்  வார்த்தையே இது  .
ஒவ்வொரு  நிமிடத்தையும் செலவிடுவதில்  கவனமாக இருந்தால் எதிர்காலத்தைப் பற்றி கவைப்பட  வேண்டாம் . அது தானாகவே சிறந்ததாக அமைந்து விடும்  நிகழ்காலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றவனுக்கு வளமான எதிர்காலம் இலவசமாகக் கிடைத்து விடுகின்றது . நிகழ்காலத்தைத் தவறவிடுகின்றவனுக்கு எதிர்காலம் என்றொன்று வருவதேயில்லை . 

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? -44

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? 
பெற்றோர்களின் கவனிப்பு , அக்கறை  மற்றும் வழிகாட்டலுடன் வளர்ந்த குழந்தைகளில் 95 சதவீதம் பேர் வாழ்க்கையில் தோற்றுப்போனதில்லை .பயனுறு திறன்மிக்க வாழ்க்கையை தன்வசப் படுத்திக் கொள்கின்றார்கள் . பெற்றோர்களால் அக்கறை காட்டப்படாத அல்லது  தவறாக அக்கறை காட்டப்பட்ட குழந்தைகள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்ததே இல்லை. இடையில் எதாவது  மாற்றம்  நிகழ்ந்தலேயொழிய அவர்களுடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதில்லை.பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ப் பள்ளியில் சேர்த்து விடுவதோடு சரி. அதன் பின்னர் குழந்தைகளின் கல்வித் பயணம் ஆசிரியரோடு மட்டும் தொடருகின்றது .ஒரு ஆசிரியர் பள்ளியில் பல மாணவர்களுக்கும் பொதுவானவராக இருப்பதால் தனிப்பட்ட முறையில் ஒரு மாணவரிடம் மட்டும் அக்கறை காட்டமாட்டார்.         
கவனிப்பு என்பது ஒவ்வொரு முறையும் தவறான வழியில் சென்றுவிடாமல் ,திட்டமிட்ட சரியான வழியில் மேற்கொள்ளும் முன்னேற்றத்தை க் கண்காணித்தலாகும். வழிமாறிச் செல்லும் போது  கண்டிப்பை விட அன்பான அறிவுரை அதிகப் பலன்தரும் .கடுஞ் சொற்கள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.  கண்காணிக்கின்றோம் என்பது குழந்தைகளுக்குத் தெரியாமலே கண்காணித்தல்  அவர்களுடைய சுயமதிப்பிற்கு பங்கம் ஏற்படுத்தாது .  குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோர்கள் அக்கறை கொண்டிருப்பதை அவர்கள் உணருமாறு செய்யவேண்டும் .
அக்கறை என்பது குழந்தைகளுடன் ஒவ்வொருநாளும் கொஞ்ச நேரம் இருப்பது மட்டுமில்லை , அவர்களுக்குப் புரியாத பாடங்களைச் சொல்லிக் கொடுக்கலாம், கல்வி சம்பந்தமான அறிவுரைகளை க் கொடுக்கலாம். பொது அறிவியல் பற்றி விளக்கங்களை விவரிக்கலாம் . வளர்ச்சிக்கான வாய்ப்புக்களை உருவாக்கித் தரலாம்.
இயற்கையில் ஒரு மிருகத்தின் குட்டி தன் தாயிடமிருந்து  வாழ்க்கை முழுவதற்கும் தேவையான வாழும் முறையைக் கற்றுக்கொள்கிறது . இயற்கையின் விதி அதுதான் .ஒரு தாய் மிருகம் தன் குட்டியிடம் காட்டும் அக்கறை அக்குட்டித்  தானாகத் தனித்து வாழ நம்பிக்கை பெற்று தாயை விட்டுப் பிரிந்து செல்லும்வரை தொடர்கின்றது. பிள்ளைகளை வளர்க்கும் போது தவறு செய்து  விட்டு அவர்கள் வாழும் போது வருத்தப்பட்டுக் கொள்வதால் எந்தப் பயனும் விளைவதில்லை. 
வழிகாட்டல் என்பது குழந்தை தனக்கென  ஒரு குறிக்கோளை உருவாக்கிக் கொள்வதற்கும் , அதை நிறைவேற்ற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதும் , அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள உதவுவதும் ஆகும்  

Friday, April 26, 2019

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? -43

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ?
நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இளம் வயதிலிருந்தே பழக்கத்தால் பெறவேண்டிய ஒரு திறமை  இதனால் நேரத்தின் அருமையை அவ்வப்போது குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் .இப் பழக்கத்தால் ஒவ்வொருநாளும் கூடுதல் பணி செய்ய போதிய நேரம் கிடைக்கின்றது .குறைந்த நேரத்தில் நிறைவாகச் செய்வது வேலையின் பயனுறு திறனை அதிகரிக்கச் செய்கின்றது .இது நிறுவனங்களில் பணியாற்றும் போது நிர்வாகத் திறனை மேம்படுத்துகிறது. அதனால் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரித்து , தேவையில்லாத செலவுகள் தவிர்க்கப்பட்டு , பொருள் ஆதாயமும் அதிகரிக்கின்றது.
நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள உடனுக்குடன் திட்டமிட்டு தகுந்த சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ளவும் , முன்னுரிமை அளித்து செய்யவேண்டிய வேலைகளைச்  செய்யவும்  . தேவையில்லாத வேலைகளை விட்டுவிடவும்  தெரிந்து கொள்ளவேண்டும். ஆளுமைத் திறமைகளுள் நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுதல் என்பதும் முக்கியமானது. இதை ஒருவரது இயல்பான அனுபவத்தின் மூலமே தெரிந்து கொள்ள முடியும் என்பதால் சிறப்புத் தேர்வு மூலமே இதைச் சரியாக மதிப்பிடமுடியும். ஒரு நிறுவனத்தின் செயல் திறனை அதிகரித்து பயனுறு திறனை அதிகரிக்க இது பெரிதும் உதவுகின்றது 
ஒரு குறிப்பிட்ட பணியில் இருக்கும் போது குறுக்கிடும் பிறவற்றைத் தடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குறுக்கீடு புறத்திலிருந்து மட்டும் வருவதில்லை, தனக்குத் தானே குறுக்கீடாகவும் இருக்கமுடியும். கவலைப்பட்டு பணியை த் தாமதப்படுத்துவதும், பிறருடன் குறை கண்டு கோபப் பட்டு கவனத்தை இழப்பதும் . முக்கியமான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது செல்போன் பேசுவதும்  அகக் குறுக்கீடாகும் .