Friday, August 24, 2012


சின்னச் சின்னத் தோல்விகளால் மனம் துவண்டு சிலர் வாழ்கையை வெறுத்து தற்கொலைக்கு முயல்வார்கள்.இவர்களுக்காக பெரியோர்களால் சொல்லப்பட்ட வார்த்தைகளே ' வாழ்க்கை வாழ்வதற்கே’. இது எல்லோராலும் வழக்கமாகச் சொல்லப்படும் வசனம் என்று தனித்த சொற்களாக மட்டுமே அறியப்படுவதால் அதன் உட் பொருளைப் புரிந்து கொண்டு வாழப் புறப்பட்டவர்கள் குறைவு. வாழ்க்கை என்பது பிறருக்குப் பயன் தருவதற்காக நம்மைத் தகுதிப் படுத்திக் கொள்ளும் வழி முறைதான். ஒரு இளைஞன் வாழ்கையை வெறுத்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன் தொலைவிலுள்ள ஒரு குன்றை நோக்கிச் சென்றான்.வழியில் ஒரு வயதான பெரியவரைச் சந்தித்தான். அவரிடம் தன் சோகக் கதையைச் சொல்லி தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூற அவரும்,"சரி வா,நானும் உன் கூடசாகும் வரை துணைக்கு வருகிறேன் என்று சொல்லி விட்டு அவனுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினார் அங்கிருந்த ஒரு பள்ளத்தாக்கில் ஒருவன் மண்ணை த் தோண்டி அள்ளி வண்டியில் கொட்டிகொண்டிருந்தான் . அதைப் பார்த்த பெரியவர் அந்த மண்தோண்டியைப் பார்த்து " ஏன் இந்த மண்ணை அள்ளிச் செல்கிறாய் ?" என்று கேட்டார். அதற்கு அவன் கூறினான் " இந்த மண்ணில் இரும்பு இருக்கிறது " என்றான். இதைக்கேட்ட தற்கொலைக்குத் துணிந்த அந்த இளைஞன்,"இரும்பா ,இதுவும் சாதாரண மண் போலத்தானே இருக்கிறது " என்றான். அதற்கு அந்த மண்தோண்டி " இதில் இரும்பு கலந்திருக்கிறது .மண்ணை நீக்கி விட்டு பிரித்தெடுத்தால் தூய இரும்பு கிடைக்கும்" என்றான். இளைஞனும் பெரியவரும் குன்றை நோக்கி நடையைத் தொடர்ந்தனர் வழியில் ஒரு பட்டறையில் கருமான் இரும்பைச் சுட்டு பலவிதமான பொருட்களைச் செய்து கொண்டிருந்தான். அதைக் கண்ட பெரியவர், “இரும்பைக் கொண்டு ஏன் இப்படி பொருட்களைச் செய்கிறாய்?“என்று கேட்டார் .”இரும்பைச் சுட்டால் அது வளைந்து கொடுக்கும். அதைக்கொண்டு நமக்கு வேண்டியவாறு உருமாற்றம் செய்து பொருட்களைத் தயாரிக்கலாம்” என்றான். இன்னும் கொஞ்ச தூரம் சென்ற பின் அங்கே ஒருவன் கோடாரியால் மரம் வெட்டிக் கொண்டிருந்தான், மற்றொருவன் ரம்பத்தால் மரத்தை அறுத்துக் கொண்டிருந்தான்.அருகில் சில பெண்கள் சட்டியில் உணவு சமைத்துக் கொண்டிருந்தனர். ஒருவன் வண்டியில் வெட்டிய மரங்களை ஏற்றிக் கொண்டிருந்தான். அவர்களைப் பார்த்து பெரியவர்,“இந்த இளைஞன் தற்கொலை செய்து கொள்ளப் போய்க்கொண்டிருக்கிறான் .நீங்கள் ஏன் தற்கொலை செய்து கொள்ள முயலவில்லை?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் ,எங்களுக்கு இன்னும் நிறைய வேலை இருக்கிறது.அதைப் பற்றி யோசிப்பதற்கே நேரமில்லை” என்று கூறினார்கள். பெரியவர் அந்த இளைஞனைப் பார்த்து”நிலத்தில் மடிந்து கிடந்த இரும்பே உழைக்கும் கரங்களில் வாழ நினைக்கும் போது நீ மட்டும் ஏன் சாக நினைக்கிறாய் என்று கேட்டார்.எண்களும்,எழுத்துக்களும் தனித்தே இருந்தால் யாருக்கும் யாதொரு பயனுமில்லை .அவை ஒன்று கூடி கணக்காகவும் ,சொற்களாகவும் மாறினால் தான் பயன்.பயன் தருவதற்காக உருவாக்கப் பட்டவைகளே எண்களும், எழுத்துக்களும். வாழ்க்கையின் இரகசியமும் அதுதான்.சாகாத சமுதாயத்திற்குப் பயன் தருவதற்கென்றே பிறந்தவர்களே மனிதர்கள்.நீ ஏன் இன்னும் எண்ணாகவும் எழுத்தாகவும் இருக்கிறாய். கணக்காகவும், சொல்லாகவும் மாறிப் பார் .வாழ்கையின் பொருள் விளங்கும்” என்று கூறினார் குன்றின் மீதேறிய இளைஞன் அடிவாரத்தில் சிறியதாய்த் தெரியும் பெரிய மரங்களைப் பார்த்தான்.சலசலப்புடன் அசைந்த இலைகள் அவனைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது.வாழ்கையின் பொருள் புரிந்து கொண்டவன் போல அவனும் சிரித்தான்

No comments:

Post a Comment