மரம் -சமுதாய வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒரு பாடம்
எப்பொருளும் அப்படியே தனித்திருந்தால் அப்பொருளால் யாருக்கும் பயனில்லை. யாருக்காவது பயன் தருமாறு தன்னை மாற்றிக் கொள்ளாதவரை அதற்கும் பெருமையில்லை.
விதை விதையாகவே விழுந்து கிடந்தால் அதற்கும் வாழ்க்கை இல்லை அதனால் பிறருக்கும் பயன் இல்லை. அதனால் விதை வேர் விட்டு ,துளிர் விட்டு முழித்துப் பார்க்கிறது.இது யாருக்காக ? நிலத்திலிருந்து நீரையும் காற்றிலிருந்து கார்பன்டை ஆக்சைடையும் உறிஞ்சி எடுத்துக் கொண்டு வளர்கிறது.இது யாருக்காக ? பருவத்தில் பூப் பூத்து,காய் காய்த்து விளைச்சலைத் தருகிறது. இது யாருக்காக ? எல்லாம் சாகாத சமுதாயத்திற்காக,உலகில் உயிர் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் பயன் தருவதற்காக.
மரத்தின் நோக்கமே மற்றவர்களுக்கு பயன் தருவதுதான் .அது வேர் விட்டு துளிர் விட்டுச் சின்னச் செடியாக இருக்கும் போதே மக்களுக்கு ப் பயன்பட வேண்டும் என்று விரைந்து செயல் பட்டிருந்தால் விளைச்சலைத் தாங்க முடியாது முறிந்து மடிந்து போயிருக்கும். தான் வழங்கும் பயன் உறுதியானதாக இருக்கவேண்டும் என்பதற்காக அது பயன் தரும் காலம் வரை தன்னை வளர்த்துக் கொள்ள பொருளை உறிஞ்சி எடுத்துக் கொண்டு தன்னைத் தகுதிப் படுத்திக் கொள்கிறது .பயனீட்டும் காலம் வந்தவுடன் பிறருக்குப் பயன் தருவதற்காக மட்டுமே பொருளை உறுஞ்சிக் கொள்கின்றது . ஆனால் மனிதர்கள் மாறுபட்டிருக்கின்றார்கள். சாகாத சமுதாயத்தை நிரந்தர நோயாளியாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் .வளரும் போது வளர்வதற்காகவும் வாழும் போது வசதிக்காகவும் பொருளை உறிஞ்சிக் கொள்கிறார்கள் .சிலர் வளரும் போதே வசதியைத் தேடுகிறார்கள் . யாரும் பிறரின் பயன்பாட்டிற்காக வளர்வதில்லை.
எங்கு நோக்கினும் மரங்கள் இருந்தும் அவை மனிதர்களின் சிந்தனைத் தீண்டவில்லை என்றால் மனிதன் வழித் தடம் மாறி விட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்
No comments:
Post a Comment