உங்களை நீங்களே நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
+ 2 படிக்கும் சேகருக்கு இன்னும் மூன்று மாதத்தில் இறுதித் தேர்வு.எதோ படித்து வந்தான் என்றாலும் படிப்பில் முழுமை இல்லை.அவன் தந்தை கோயிலில் அர்ச்சகராக இருந்தார் தாயும் பூக்கட்டி அங்கேயே ஆன்மிகப் பணி செய்து வந்தார்.சேகருக்கும் கடவுள் மீதே அளவு மீறிய அன்பிருந்தது.கடவுள் எப்போதும் தன்னைக் காப்பார் என்று நம்பினான்.
முதல் மாதிரித் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண் வாங்கியதால் ஆசிரியர் அவனைக் கவனமாகப் படிக்குமாறு கடிந்து கொண்டார், அன்று கோயிலுக்குச் சென்று தான் அடுத்த முறை அதிக மதிப்பெண் பெற உதவுமாறு கடவுளிடம் முறையிட்டான் . சில நாட்களில் அடுத்த வீட்டிற்கு அவன் வகுப்பிலேயே முதல் மாணவனான சோமு வின் பெற்றோர்கள் குடி வந்தனர். சேர்ந்து படித்தாலும் கவனமின்மையால் படித்ததை நினைவிற் கொள்ள சேகரால் முடியவில்லை. தப்புத் தப்பாய் விடைகளைச் சொல்ல சோமு அவனைத் திருத்தினான்.தன் அறியாமை வெளிப்பட்டு விடும் என்று அவனோடு சேர்ந்து படிப்பதையே தவிர்த்தான்
இரண்டாவது மாதிரித் தேர்விலும் சேகர் குறைந்த மதிப்பெண்ணே வாங்கினான்.மீண்டும் கோயிலுக்குச் சென்று கடவுளிடம் முறையிட்டு அழுதான் "கடவுளே நானும் என் பெற்றோர்களும் ஆன்மிகப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.நீ ஏன் எனக்கு உதவ வெறுக்கின்றாய்?" ஆலய மணி ஒலித்ததை கடவுளின் கூற்றாக எடுத்துக் கொண்டு வீடு திரும்பினான் .சில நாட்களில் அவன் வீட்டு மாடிக்கு ஒரு ஆசிரியர் குடிவந்தார்.அவனுக்கு இலவசமாக பாடங்களை கற்பித்தார்.கடவுள் தனக்கு மிகவும் அறிமுகமானவர்,அவர் வரம்பு மீறி தனக்கு எப்படியும் உதவுவார் என்று சேகர் நம்பியதால் படிப்பில் கவனம் குறைவாகவே இருந்தது.இறுதித் தேர்வும் வந்தது,தேர்வுக்கு முதல் நாள் குடிவந்த ஆசிரியர் அவனை அழைத்து சில முக்கியக் கேள்விகளையும் அதற்குரிய விடைகளையும் கொடுத்து அதையாவது முழுமையாக படிக்குமாறு கேட்டுக் கொண்டார்.இருந்தும் கடவுள் மீது கொண்டிருந்த அதீத நம்பிக்கையால் அதை விட்டுவிட்டு கோயிலுக்குச் சென்று கடவுள் முன் பல கேள்விகளை எழுதிப் போட்டு அதில் ஒரு சில கேள்விகளை மட்டும் தேர்வு செய்தான்.கடவுள் அதை மட்டுமே படி என்று கூறுவதாக நினைத்துக் கொண்டான்.
தேர்வுக்கான கேள்வித்தாள் கொடுக்கப்பட்டது.அதில் அவன் தேர்வு செய்ததில் ஒரிரு கேள்விகள் மட்டுமே வந்திருந்தன.இருந்தும் அரைகுறையாக தேர்வை எழுதிவிட்டு வந்தான். எதிர்பார்த்ததைப் போல தேர்வில் அவன் தோல்வியடைந்து விட்டான்.வருத்தத்துடன் கோயிலுக்குச் சென்று கடவுளை அழைத்து"நான் உன்னை உண்மையாக நேசித்தேனே.உலகோர் எல்லோருக்கும் உதவும் நீ எனக்கு மட்டும் ஏன் உதவ முன்வரவில்லை" என்று கேட்டான். அப்போது கடவுள் அவன் முன் தோன்றி,"பக்தனே,நான் நேரிடையாக யாருக்கும் உதவ முடியாது என் உதவியை அவரவர் மூலமாகவே நிறைவேற்ற முடியும்.உனக்கும் அப்படித்தான் செய்தேன்.அடுத்த வீட்டில் உன் வகுப்பு மாணவனையே குடி வருமாறு செய்தேன்.நீ அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.அப்புறம் உன் வகுப்பு ஆசிரியரையே உன் வீட்டிற்கே குடி வருமாறு செய்தேன். அதையும் நீ பயன் படுத்திக் கொள்ளவில்லை" என்று கூறினார்.
"ஆனால் உங்கள் முன் நான் தேர்வு செய்த கேள்விகளையே தேர்வில் வராது செய்து விட்டீர்களே.உங்களை பரிபூர்ணமாக நேசித்ததற்கு இதுதான் பரிசா" என்று சேகர் கேட்க அதற்கும் கடவுள் அமைதியாக பதில் கூறினார்."பக்தனே நீ என்னை நேசித்தது சரி,முதலில் உன்னை நீ நேசித்தாயா? எப்பொழுது உன்னை நீயே நேசிக்கின்றாயோ அப்பொழுதான் கடவுள் நேசிப்பின் உண்மையான அர்த்தத்தை தெரிந்து கொள்வாய்.ஒவ்வொருவரும் முதலில் தங்களையும் பின்னர் மற்றவர்களையும் நேசிக்கவேண்டும் என்பதற்காகவே மக்கள் என்னை நேசிக்கும் படி செய்தேன்" என்று கூறி விட்டு மறைந்தார். இதன் பொருளைப் புரிந்து கொள்ள சேகருக்கு நெடு நேரமானது.
No comments:
Post a Comment