எழுதாத கடிதம்
இந்தியா முயன்றாலும் முன்னேறுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றுதான் சொல்வேன்.முன்னேற்றம் என்பது பொது ஒழுக்கத்தோடு தொடர்புடையது.சுய
ஒழுக்கத்தால் பொது ஒழுக்கம் இன்றைக்கு மிகவும் சீர்கெட்டு வருகிறது.
குழந்தைகள் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவ மனைகள்,பள்ளிக் கூடங்கள்,திருவிழாக் கூட்டங்கள்,பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலிருந்து குழந்தைகளைக் கடத்தி சொற்பத்தொகைக்கு விற்றுவிடுகின்றார்கள் அல்லது மறைத்து வைத்திருந்து விடுவிக்க பெரிய தொகை கேட்கிறார்கள்.தான் வாழ இந்த கடத்தல் குழந்தைகளைக் கொடுமைப்படுத்தி பிச்சை எடுக்க விடுகிறார்கள் குழந்தைத் தொழிலாளிகளுக்குப் பிறப்பிடமே இந்த கடத்தல் தான்.பாலியல் தொழிலுக்காகவும்,வீடுகளிலும் குவாரிகளிலும் அடிமைகளாய் வாழ்நாள் முழுதும் வேலை செய்வதற்காகவும், பெண்கள் மற்றும் படிக்காத சிறுவர்களை கடத்துவதும் இன்றைக்கு அதிகரித்து வருகிறது. பிச்சைக் காரர்கள் இல்லாத இயல்பு நிலையை உருவாக்க முடியாத ஆட்சியாளர்களால் இந்தியாவிற்கு உண்மையாக என்ன முன்னேற்றத்தைக் கொண்டு வரமுடியும்?
தங்கம்,வெள்ளி மற்றும் விலையுயர்ந்த பொருட்களையும்,பணத்தையும் வீடு,கடை புகுந்து கொள்ளை அடிப்பது அதிகரித்து வருகிறது.இரவில் பெண்கள் பயமின்றி தெருக்களில் நடமாடமுடிந்தால்அன்றைக்குத்தான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் என்று காந்தி அடிகள் சொன்னார்கள்.ஆனால் இன்றைக்கு பகலில் கூட ஆண்கள் பயமின்றி நடமாட முடியாத சூழல் நிலவுகிறது.கூட்டமாய் பட்டப் பகலில் வீடு புகுந்து கொள்ளையடிப்பது ,கார் மோட்டார் சைக்கிள் களில் வந்து மறித்து த்தாக்கி பொருளை அபகரிப்பது போன்ற குற்றங்கள் பெருகியுள்ளன.களவுகளில் 10 % மட்டுமே வெளியே தெரிய வருகின்றன. தெரிய வருவதில் 30 % மட்டுமே உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுகின்றார்கள் .கண்டுபிடிக்கப்பட்டாலும் இழந்ததை முழுமையாக மீட்டுப் பெற முடிவதில்லை. எங்கே இருக்கிறது நம் முன்னேற்றம் ?
வேலையில்லாதவர்கள், உழைக்காமலேயே சொகுசாய் வாழ ஆசைப்படுபவர்கள்,வறுமையை விரட்ட வழி தெரியாதவர்கள், முன்னேறுவதற்கு வாய்ப்பு மறுக்கப் பட்டவர்கள், தற்பெருமைக்காக விளையாட்டாய் ஆரம்பித்து பின் அதையே தொழிலாக்கிக் கொண்டவர்கள் போன்ற கீழ்தர மக்கள் பெருகிப் போன நிலையையே இது சுட்டிக்காட்டுகிறது. வேலை வாய்ப்பு பெருகா விட்டால் இந்நிலை நிலைப்பட்டு விடுவதுடன் இன்னும் தீவிரமடையும் .
பரிணாம வளர்ச்சியை ஒருபோதும் பின்னுக்கு எடுத்துச் செல்ல முடியாது என்ற அறிவியல் உண்மையை நம் அரசியல் வாதிகள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர் . நேர்மையை மூட்டை கட்டி வைத்து விட்ட வர்த்தகர்கள் புற்றீசல் போல பல்கிப் பெருகி விட்டார்கள். மக்களை அவர்கள் கண் முன்னாலே ஏமாற்றுவது இவர்கள் சாமர்த்தியம்.எடைக் குறைவாக, தரக் குறைவாக பொருட்களையும், கலப்படப் பொருட்களையும் கூடுதல் விலைக்கு விற்று பிழைக்கும் புண்ணியவான்கள்.சட்டம் கண்ணை மூடிக்கொள்வதாலும்,சட்டத்தை விலைக்கு வாங்க முடிவதாலும் இப்போக்கு பெருகி வருவதைத் தடுக்க வழி தெரியாது மக்கள் நொந்து நூலாகி விட்டார்கள்.
வீடு கட்டி கட்டடப் பொறியாளரிடம் ஏமாறாத மக்களே இருக்க முடியாது. அரசு அலுவலங்களில் அன்பளிப்பு கொடுக்காமல் காரியத்தை முடித்து விட்ட மனிதர்களே இல்லை.
நான் சொல்வதே திட்டம் , நான் செய்வதே சேவை என்று சொல்லும் அரசியல் வாதிகளின் தற்பெருமையால் நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவதற்குப் பதிலாக சறுக்கிக் கொண்டிருக்கிறது.இந்தியர்களின் மதிப்பீட்டில் இந்தியா தரப் பட்டியலில் முன் வரிசையில் இருக்கலாம். ஆனால் நம்மைப் பற்றி மற்றவர்களின் மதிப்பீட்டில் நாம் வெகுவாகத் தாழ்ந்திருக்கிறோம் .நாமை விடத் தாழ்ந்தவர்களைப் பார்த்து நாம் திருப்பதிப் பட்டுக் கொள்வதால் இதைப் பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை.
உண்மையான வேலை வாய்ப்புக்களை உருவாக்கி உண்மையான முறையில் மக்களுக்கு வழங்காவிட்டால் ,அரசு அதிகாரிகள் மூலம் மக்களுக்கு எதிரான தவறுகளைக் கண்காணித்து களையாவிட்டால், மக்களுக்குத் தொண்டு செய்ய முன் வருவோர் சுய ஒழுக்கம்,கட்டுப்பாடோடு சேவை புரியாவிட்டால் அரசு-சட்டம்-காவல் இவை மூன்றும் நேர்மையாகச் செயல்படாவிட்டால் இந்திய மக்களுக்கு விடிவு காலம் என்பதே இல்லை.
No comments:
Post a Comment