எழுதாத கடிதம்
மனிதனை நல்வழிப்படுத்தி சமுதாயத்திற்கு பயன்படுமாறு செய்வதற்கு சமுதாயம் பின்பற்றும் ஒரு பொதுவான வழி கல்வி.மக்களிடையே பரவலான வளர்ச்சியைத் தூண்டி.சமுதாயத்தின் வறுமையைப் போக்க அடிப்படையாக இருப்பது இக் கல்வி மட்டுமே.அனைவருக்கும் அடிப்படைக் கல்வி என்பது நம் வளர்ச்சியை நாமே முடுக்கி விட்டுக் கொள்ளும் ஒரு முயற்சி .வேலை வாய்ப்பு அதிகமுள்ள B.E படித்து வெளிவரும் மாணவர்கள் இன்றைக்குத் தொடர்ந்து அதிகரிந்து வருகிறார்கள்.உயர் கல்வி படிக்கும் மாணவர்களும் எண்ணிக்கையால் பெருகி வருகிறார்கள்.பள்ளிக்கும்,கல்லூரிக்கும்,பல்கலைக் கழகத்திற்கும் சென்று கல்வி கற்றவர்களால் நாம் நினைத்தது நிறைவேறியதா?
கற்றவர்களே மோசமாக ,கீழ்த்தரமாக,சமுதாயத்திற்கு பாதகமாக நடந்து கொள்ளும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது நம்முடைய கல்வி கற்பிக்கும் முறையிலோ கல்வி கற்கும் முறையிலோ எதோ குறைபாடு இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது.ஒரு பத்திரம் பதிவு செய்ய வேண்டும் ,ஓட்டுனர் உரிமம் வாங்க வேண்டும் ,பட்டா வாங்கவேண்டும் சான்றிதழ் வாங்கவேண்டும் என நாம் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய ஓர் அரசு அலுவலகத்திற்குச் சென்றால் அரசுக்கு என்ன கட்டணம் செலுத்த வேண்டுமோ அதை மட்டுமே செலுத்தி விட்டு முடித்து விடமுடியாது. கூடுதலாக ப் பணம் கேட்பார்கள் அதைக் கொடுக்கா விட்டால் தட்டிக் கழிப்பார்கள்.நாம் பல மாதம் வீட்டிற்கும் அரசு அலுவலகத்திற்கும் அலைந்து கொண்டிருக்க வேண்டியதுதான்.இதனால் அரசு அலுவலங்களுக்குப் போக வேண்டி வந்தால் ,மனதில் ஒரு தயக்கமே வருகின்றது. நாம் அந்தச் செயல்களைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருவோம்.
அரசுக்கு உரிய கட்டணத்தைச் செலுத்தி விட்டால் அதற்குரிய பணி கூடுதல் பணம் கொடுக்கப்படாததால் மறுக்கக்கூடாது.கற்றவர்களும்,கல்லாதவர்கள் போல நடந்து கொள்கின்றார்கள். இப்பழக்கம் சமுதாயத்தை மேம்படுத்தாது,சமுதாயம் மேலும் மேலும் சீரழிந்து போகவே இது துணை செய்யும் என்பதை இவர்கள் அறிந்தும் புரியாதவர்களாக இருக்கின்றார்கள் .கற்ற கல்வியின் மீது நம்பிக்கை இல்லாதவர்களே இப்படி நடந்து கொள்வார்கள். இவர்கள் அவர்களுக்கு வாழ்வாதாரம் தந்த அரசுக்கும் துரோகம் செய்கின்றார்கள் .இதனால் காலப் போக்கில் அவர்கள் உண்மையாக உழைக்கும் பண்பை இழந்துவிடுவார்கள் .இந்நிலை புற்று நோய் போல வளர்ந்து முதல் கட்டத்தையும் கடந்து , சமுதாயம் முழுக்கப் பரவி இரண்டாம் கட்டத்தையும் தாண்டி, மறைவிடங்களில் பதுக்கி மூன்றாம் கட்டத்தையும் மீறி இன்றைக்கு கடைசிக் கட்டமான நான்காவது கட்டத்தை அடைந்து விட்டது. மக்களும் மாறாமல் ,அரசும் மாறாமல் ஒப்புக்கு பேசுவதாலும்,செயல்படுவதாலும் திட்டங்களால் பெரிதாக ஏதும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. வலிமையான நடவடிக்கை இல்லாமால் இதில் சமுதாயம் நலம் பெறுமாறு ஏதாவது செய்ய முடியுமா என்பது எனக்கு ஐயமாக இருக்கிறது.
No comments:
Post a Comment