Thursday, January 3, 2013

Mind without fear


Mind without Fear

பயம் மனதில் ஏன் வருகிறது ? ஒன்றைப் பற்றி மனதில் பயம் வருவதற்குக் காரணம் அதைப்பற்றி சரியாக எதுவும் தெரியாமலிருப்பதும் ,அல்லது அதன் அடுத்த நிலை என்ன,பின்விளைவு எப்படி இருக்கும் என்பது பற்றி ஏதும் புரியாமலிருப்பதும் ஆகும் .

கேள்விக்கு பதில் தெரியாவிட்டால் தேர்வின் போது பயம் வரும்.                             எதிர்பாராமல் சிக்கிக் கொண்டால் பயம் வரும்.மறைத்தது எல்லோருக்கும் தெரிய வந்தால் பயம் வரும்.சில சமயங்களில் சரியாகக் கணிக்க முடியாததால் வெறும் வாய்ப்புக்களினால் மட்டுமே முடிவு செய்ய வேண்டி வரும்.வாய்ப்புகள் எப்போதும் நாம் நினைத்தபடியே முடிவதில்லை.அவை தவறும் போது பயம் வரும்.இறப்பிற்குப் பின் என்ன என்பது தெரியாததால் எல்லோருக்கும் ஒரு கட்டத்தில் மரண பயம் வரும்.எதன் பொருட்டு மனதில் பயம் வருகிறதோ அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு தெளிவு பெற்றால் பயத்தை பெருமளவு தவிர்த்துக் கொள்ளலாம்.

பொதுவாக நம் பொறிகளே நமக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் சேகரித்துக் கொடுக்கின்றது. நம்மை உலகத்தோடு தொடர்பு படுத்துவது நம்முடைய ஐம்பொறிகளே .ஐம்பொறிகளின் வாயிலாக நாம் பெற்ற தவறான விஷயங்களே நம்மை தவறான பாதையில் கொண்டு செல்கின்றன கண் (பார்த்து அறிதல்),காது (கேட்டு அறிதல்),மூக்கு (நுகர்ந்து அறிதல்),நாக்கு (சுவைத்து அறிதல்),தோல் (தொட்டு அறிதல் )-இவற்றின் உதவியால் ஒரு பொருளின் முழுப் பரிமாணத்தையும் சரியாக நினைத்துப் பார்க்க முடிகிறது .எண்ணத்தை உணர்வுகளின் மூலம் வெளிப்படுத்திக் காட்ட இப் பொறிகளே துணை புரிகின்றன . இந்த ஐம்பொறிகள் தவறான விஷயத்தைக் கற்பித்துவிட்டாலும் அல்லது விஷயத்தை தவறாகப் புரிந்துகொண்டாலும் வாழ்க்கை விபத்துக்களைச் சந்திக்க அதிக வாய்ப்புகள் ஏற்படுகின்றன.உணர்ச்சிகள் சில சமயங்களில் உண்மையை மறைத்து தவறான அர்த்தத்தைக் கற்பித்து விடுகின்றன.

நம் ஐம்பொறிகள் தொடந்து விஷயங்களை நமக்காகத் தேடும்போது தேவையான வற்றோடு தேவையில்லாதன வற்றையும் சேர்த்தே சேகரித்து விடுகிறது.இவற்றை இனமறிய முடியாமல் பதிவு செய்யப் படும்போது மீட்டுப் பெறுவதில் குழப்பம் ஏற்படுகின்றது .மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் இடைவிடாது பல விஷயங்களைச் சேகரிக்கும் போது அவற்றை வகைப்படுத்த முடியாமல் முக்கியமானவற்றை வடிகட்டியும் முக்கியமில்லாதனவற்றை அனுமதித்தும் விடுகின்றோம் .அடுத்தடுத்து விஷயங்கள் பாய்ந்து கொண்டேயிருப்பதாலும் அவற்றை மனம் தொடர்ந்து தொடர்ச்சியின்றி சிந்தித்துக் கொண்டேயிருப்பதாலும்,எல்லோரும் இப்படி நிகழும் தவற்றை அறிவதில்லை.இதனால் ஒரு பொருளைப் பற்றி முழுமையான அறிவை நாம் முடிவெடுக்கும் ஒரு கணத்தில் பெற முடிவதில்லை. பயம் வருவதற்கு நாம் முழுமையான,சரியான ,நுட்பமான, தேவையான அறிவை மட்டும் பெறாமலிருப்பதே வலிமையான காரணமாக விளங்குகிறது.

Wednesday, January 2, 2013

Arika Iyarpiyal


அறிக இயற்பியல்

Empty vessal makes more noise என்று சொல்வார்கள்.ஒன்றும் தெரியாத மூடர்கள் தனக்கு எல்லாம் தெரியும் என்பது போலத் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள் .ஆனால் அதில் விஷயம் எதுவும் இருக்காது.உண்மையான அறிஞர்கள் விஷயங்களைத் தெரிந்திருந்தாலும் அதிகம் பேசி வெளிக்காட்டிக் கொள்வதில்லை.இதில் ஒன்றும் தெரியாமல் அதிகம் பேசுபவனும் ,அதிகம் தெரிந்திருந்து ஒன்றும் பேசாதவனும் யாருக்கும் பயனில்லாதவர்கள் .பேசுவதற்கு பேச வேண்டும் பேசக் கூடாத தற்கு பேசக்கூடாது .இது நல்ல மனிதர்களுக்கு அழகு. அதுவே சமுதாயத்திற்கு நற்பயனளிக்கும்.

 தமிழில் இக் கருத்தைக் கூறும் பழமொழிகள் குறை குடம் தளும்பும் ,நிறை குடம் தளும்பாது ,மற்றும் வற்றிய ஓலை சலசலக்கும் .குறை குடம் ஏன் உரப்புடன் ஒலிக்க வேண்டும் ,நிறை குடம் ஏன் அமைதியாக இருக்கின்றது?

நிறை குடம் புறத்தாக்குதல்களினால் ஏற்படும் அதிர்வுகளைச் சமாளிப்பதால் நீர் ததும்பி வழிவதில்லை.ஆனால் குறை குடம் அப்படியில்லை .குடம் அதிர்வுறு ம் போது.சுற்றுப் புறத்திலுள்ள காற்றூடக அணுக்களும் அதிர்வுறுகின்றன.காலியான குடத்தில் அனைத்து காற்றூடக அணுக்களும் சமகாலத்தில் அதிர்வுறுகின்றன.இதை ஒத்ததிர்வு (Resonance)என்பர்.இதன் காரணமாக ஒலி பன்னிலை எதிரொலிப்புக்கு உள்ளாகி மேற்பொருந்துவதால் ஒலியின் உரப்பு அதிகமாகின்றது .காலியான குடம் அதிகமாகச் சத்தத்தை எழுப்புகின்றது என்று கூறுவது இதனால்தான்.குடத்தில் நீரிட்டு நிரப்பும் போது அதன் மொத்த நிறை அதிகரிக்கின்றது.இப்போது அதிர்வு விசை கூடுதலான நிறையுடைய பொருளை அதிர்வுக்கு உள்ளாக்குவதால் அலை வீச்சு பெரிதும் குறைவுற அதிர்வொலியின் உரப்பும் மெலிந்து போய்விடுகின்றது .

Tuesday, January 1, 2013


கடவுள்

*மனிதன் என்பவன் இறைவனாகலாம் .எப்போது ? தான் பெற்றதை எல்லாம் கொடுத்துவிட மனமிருந்தால் .

*சம்பிரதாயமாக த் கோயிலுக்குச் செல்வதாலோ ,இறைவனைத் தொழுவதாலோ நன்மைகள் விளைவதில்லை .இறைவன் உனக்கு நண்பனாக வேண்டுமானால் இயற்கையை நேசித்து இயற்கையைப் போல வாழவேண்டும்

*ஒவ்வொருவரும் தனக்குத் தானே உதவிக்கொள்ள பல பல உறுப்புக்களை ஆண்டவன் அளித்திருக்கின்றான் .அதில் நம்பிக்கை இல்லாதவர்களே பிறரிடம் போய் உதவிக்கு நிற்கின்றார்கள் .கடவுளிடம் போய் எதையாவது கேட்டுக் கொண்டிருக்காதே .ஏனெனில் அதைப் பெறுவதற்கு வேண்டிய எல்லாவற்றையும் உனக்கு ஏற்கனவே அளித்து விட்டார்.

*ஒன்றில் எல்லாவற்றையும் காணுதல் என்பதும் எல்லாவற்றிலும் ஒன்றைக் காணுதல் என்பதும் இறைவனிடத்தில்தான்

*உள்ளுக்குள் வைத்துவிட்டு நாம் எல்லோரும் கடவுளை வெளியில் தேடிக்கொண்டிருக்கின்றோம் .எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ,எதற்குக் கொடுக்கக் கூடாது என்பது தெரியாமல் போனதால் இந்நிலை உருவாக்கி நிலைத்து விட்டது .

*ஒரு பொருளை அறையில் வைத்து பூட்டிவிட்டு வீடு முழுக்கத் தேடினால் எப்படி அப்பொருள் கைப்படாதோ ,அது போல இறைவனையும் நாம் ஆக்கிவிட் டோம் .

*எவனொருவன் இறைவனிடம் எதையும் கேட்டு வாழாமல் இருக்கின்றானோ அவனே இறைவனின் நம்பிக்கைக்கு உரியவனாகின்றான் .ஏனெனில் இறைவன் நீ வாழ உனக்கு எதெல்லாம் வேண்டுமோ அதையெல்லாம் உனக்கு நீ பிறக்கும் போதே அளித்துவிட்டார் .அதை அனைத்தையும் கொண்டு வைத்துக் கொண்டு வாழ முடியாமல் மேலும் மேலும் எதையாவது இறைவனிடம் கேட்டுக் கொண்டே இருந்தால் அதனால் பயனொன்றுமில்லை.உன் வேண்டுதலுக்கு இறைவன் செவி சாய்க்க மாட்டார் .

*நம்பிக்கை தீவிரமானதாக இருப்பதால் மட்டும் எதிர்பார்ப்புகள் எல்லாம் சிறப்பாக சிறப்பாக நிறைவேறி விடும் என்று கூறமுடியாது .பலர் ஏமாந்து போவதும் இறைவனைத் திட்டுவதும் இதைப் புரிந்து கொள்ளாததினால் தான் .

*இறைவன் என்பது ஓர் இரகசியம்,மனப் பக்குவப் பட்டவர்களால் மட்டுமே அதைப் புரிந்து கொள்ள முடியும்.அவர்களால் மட்டுமே இரகசியத்தின் மூலமாக மக்களுக்கு நல்வழி காட்ட முடியும்.

*நல்லது நடக்குமெனில் பொய்யும் சொல்லலாம் என்பது சான்றோர்கள் நமக்களித்த உறுதிமொழி .அந்த அடிப்படையில் இறைவன் இன்றைக்கும் நிலைத்திருக்கின்றான்

*பரந்து விரிந்து கிடக்கும் இயற்கையை ஒரு பார்வையில் கண்டு களிக்க வேண்டும் என்ற விருப்பத்தின் வடிவமே இறைவன் .பேரளவிலான இயற்கையின் நுண்ணளவிலான உருவமே இறைவன்