Thursday, January 3, 2013

Mind without fear


Mind without Fear

பயம் மனதில் ஏன் வருகிறது ? ஒன்றைப் பற்றி மனதில் பயம் வருவதற்குக் காரணம் அதைப்பற்றி சரியாக எதுவும் தெரியாமலிருப்பதும் ,அல்லது அதன் அடுத்த நிலை என்ன,பின்விளைவு எப்படி இருக்கும் என்பது பற்றி ஏதும் புரியாமலிருப்பதும் ஆகும் .

கேள்விக்கு பதில் தெரியாவிட்டால் தேர்வின் போது பயம் வரும்.                             எதிர்பாராமல் சிக்கிக் கொண்டால் பயம் வரும்.மறைத்தது எல்லோருக்கும் தெரிய வந்தால் பயம் வரும்.சில சமயங்களில் சரியாகக் கணிக்க முடியாததால் வெறும் வாய்ப்புக்களினால் மட்டுமே முடிவு செய்ய வேண்டி வரும்.வாய்ப்புகள் எப்போதும் நாம் நினைத்தபடியே முடிவதில்லை.அவை தவறும் போது பயம் வரும்.இறப்பிற்குப் பின் என்ன என்பது தெரியாததால் எல்லோருக்கும் ஒரு கட்டத்தில் மரண பயம் வரும்.எதன் பொருட்டு மனதில் பயம் வருகிறதோ அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு தெளிவு பெற்றால் பயத்தை பெருமளவு தவிர்த்துக் கொள்ளலாம்.

பொதுவாக நம் பொறிகளே நமக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் சேகரித்துக் கொடுக்கின்றது. நம்மை உலகத்தோடு தொடர்பு படுத்துவது நம்முடைய ஐம்பொறிகளே .ஐம்பொறிகளின் வாயிலாக நாம் பெற்ற தவறான விஷயங்களே நம்மை தவறான பாதையில் கொண்டு செல்கின்றன கண் (பார்த்து அறிதல்),காது (கேட்டு அறிதல்),மூக்கு (நுகர்ந்து அறிதல்),நாக்கு (சுவைத்து அறிதல்),தோல் (தொட்டு அறிதல் )-இவற்றின் உதவியால் ஒரு பொருளின் முழுப் பரிமாணத்தையும் சரியாக நினைத்துப் பார்க்க முடிகிறது .எண்ணத்தை உணர்வுகளின் மூலம் வெளிப்படுத்திக் காட்ட இப் பொறிகளே துணை புரிகின்றன . இந்த ஐம்பொறிகள் தவறான விஷயத்தைக் கற்பித்துவிட்டாலும் அல்லது விஷயத்தை தவறாகப் புரிந்துகொண்டாலும் வாழ்க்கை விபத்துக்களைச் சந்திக்க அதிக வாய்ப்புகள் ஏற்படுகின்றன.உணர்ச்சிகள் சில சமயங்களில் உண்மையை மறைத்து தவறான அர்த்தத்தைக் கற்பித்து விடுகின்றன.

நம் ஐம்பொறிகள் தொடந்து விஷயங்களை நமக்காகத் தேடும்போது தேவையான வற்றோடு தேவையில்லாதன வற்றையும் சேர்த்தே சேகரித்து விடுகிறது.இவற்றை இனமறிய முடியாமல் பதிவு செய்யப் படும்போது மீட்டுப் பெறுவதில் குழப்பம் ஏற்படுகின்றது .மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் இடைவிடாது பல விஷயங்களைச் சேகரிக்கும் போது அவற்றை வகைப்படுத்த முடியாமல் முக்கியமானவற்றை வடிகட்டியும் முக்கியமில்லாதனவற்றை அனுமதித்தும் விடுகின்றோம் .அடுத்தடுத்து விஷயங்கள் பாய்ந்து கொண்டேயிருப்பதாலும் அவற்றை மனம் தொடர்ந்து தொடர்ச்சியின்றி சிந்தித்துக் கொண்டேயிருப்பதாலும்,எல்லோரும் இப்படி நிகழும் தவற்றை அறிவதில்லை.இதனால் ஒரு பொருளைப் பற்றி முழுமையான அறிவை நாம் முடிவெடுக்கும் ஒரு கணத்தில் பெற முடிவதில்லை. பயம் வருவதற்கு நாம் முழுமையான,சரியான ,நுட்பமான, தேவையான அறிவை மட்டும் பெறாமலிருப்பதே வலிமையான காரணமாக விளங்குகிறது.

No comments:

Post a Comment