Monday, August 1, 2022

நெகிழி எனும் பிளாஸ்டிக்

 

நெகிழி எனும் பிளாஸ்டிக்

               வார்க்கத் தக்க ஒரு பொருள் என்னும் பொருள் தரும் "பிளாஸ்டிகோஸ்" என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது. . பிளாஸ்டிக் என்ற சொல்லை நெகிழி என்று தமிழ்ப் படுத்தியுள்ளனர். பீங்கான், கண்ணாடி போன்ற பொருட்கள் நீட்சியுறுவதில்லை அவற்றைத் திட நிலையில் முறுக்கவும் முடியாது. எளிதில் உடைந்து நொறுக்கி விடும் தன்மையுடையன..தங்கம். வெள்ளி, இரும்பு போன்ற உலோகங்களும் உலோகக் கலவைகளும் நுண்ணிய அளவில் நீட்சியுறுகின்றன .செயல்படும் விசையை நீக்கிவிட்டால் அவை மீட்சியுற்று தன் பழைய இயல்பு நிலையைத் திரும்பப் பெறுகின்றன. .நீட்சி விசை ஒரு வரம்பைத் தண்டி செயல்படும்போது அவை மீட்சியுற்று பழைய இயல்பு நிலையைத் திரும்ப அடைவதில்லை. .இதை மீட்சி முறிவு நிலை என்று கூறுவார்கள். மீளமை நிலையைக் கடந்த நிலையை நெகிழ்வு நிலை என்பர். நெகிழி இயல்பான வெப்பநிலையில் எளிதாக நீட்சியுறும் இயல்புடையனவாக இருக்கின்றன.. சற்று உயர் வெப்பநிலையில் இளக்கி விரும்பியவாறு பொருட்களை வார்த்தெடுக்க முடிகின்றது இதனால் பலவிதமான பயன்பாட்டுப் பொருட்களை பொருட் களை  உற்பத்தி செய்யநெகிழி மிகவும் அனுகூலமிக்கதாக இருக்கின்றது.. தாழ்ந்த அடர்த்தி ,பல நிறங்களில் பல வடிவங்களில் பொருட்களை உற்பத்தி செய்ய இருக்கும் எளிமையான வழிமுறை ,கரைப்பான்களுக்கு எதிர்ப்பு ,மிகத் தாழ்ந்த வெப்ப மற்றும் மின் கடத்தும் திறன் போன்ற பல அனுகூலமான சிறப்புப் பண்புகளினால் இன்றைக்கு நெகிழியின் பயன்பாடு வெகுவாக அதிகரித்து வருகின்றது.. பிளாஸ்டிக் நீர்ம நிலையில் இருந்தால் அதை பிசின் (resin ) என்பர்

 

               நெகிழி முதன் முதலில் 1862 -ல் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த  அலெக்சாண்டர் பெர்க்ஸ் என்பவரால் செல்லுலோஸ் என்ற பொருளிலிருந்து தயாரிக்கப்பட்டு  அறிமுகப்படுத்தப்பட்டது து. இதற்கு அவர் "பெர்க்ஸ்டைன்" என்ற பெயரிட்டார்.  .பில்லியர்ட்ஸ் பந்துகள் செய்ய தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க 1869 -ல் ஜான் ஹயாத் என்பவர் செல்லுலோஸ் என்ற மாற்றுப் பொருள் ஒன்றை உருவாக்கினார். பிறகு மரப்பட்டை, நைட்ரிக் அமிலம், கற்பூரம், பசை ஆகியவை கொண்டு செல்லுலாய்டு என்ற நெகிழி உருவானது. 1907-ல் லியோ பேக்லாண்டு என்பவர் வீட்டு உபயோகத்திற்கான மின்னதிர்ச்சி கொடுக்காத மின்சாவி போன்ற பொருட்களுக்காக    செயற்கை வேதிப் பொருள்கள் கொண்டு பேக்லைட் என்ற பொருளை உருவாக்கினார். முதல் உலகப் போரில், 'டுபாண்ட் அமெரிக்க நிறுவனம்'  நெகிழித் தொழிற்சாலையைத் தொடங்கி   பல புதிய  நெகிழிப் பொருள்களை உருவாக்கியது.  1933-ல் பாசெட் மற்றும் கிப்ரான் ஆகியோர் உருவாக்கிய பாலிதீன் அதாவது பாலி எத்திலீன், இரண்டாம் உலகப் போரில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இன்று வரை மிக அதிகமாகப் பயன்படுத்தும் பொருளாகவும் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் ஒரு பொருளாகவும் இருந்து வருகிறது.

 

       நெகிழி என்பன கரிமப் பல்மங்களாகும் (organic polymer ).அதாவது ஒரே மாதிரியான பல மூலக்கூறுகள் பிணைக்கப்பட்டு ஒன்றிணைந்த பேரியல் மூலக்கூறுகளாகும் .வெப்பம், அழுத்தம் அல்லது இவை இரண்டையும் செயல்படுத்தி நெகிழியை நம் விருப்பம் போல எந்த உருவத்தையும் வடிவத்தையும் வார்த்தெடுக்க முடியும் அதனால் இது பொருள் உற்பத்தியாளர்களுக்கு வர்த்தக அளவிலான மூலப்பொருளாகவும் ,அவற்றைப் பயன்படுத்தும் மக்களுக்கு மலிவான பயன்பாட்டுப் பொருளாகவும் விளங்குகின்றது .

 

          நெகிழி இயற்கையாகவும் செயற்கையாகவும் இருக்கக் கூடும் . செல்லுலோஸ் , அரக்கு கேசின் (casein ) போன்றவை இயற்கை நெகிழியாகும் .செயற்கை நெகிழியில் பலவற்றைக் கண்டறிந்துள்ளனர் .இயற்கை நெகிழிகளை விடச் செயற்கை நெகிழிகள் அதிகம் பயனுள்ளவைகளாக இருக்கின்றன. செயற்கை நெகிழிகள் வெப்பத் தாக்கத்தின் அடிப்படையில் நெகிழ்  நெகிழி (thermo  plastics) என்றும் நெகிழா நெகிழி (Thermosetting plastics) என்றும் இருவகைப்படும். குறிப்பிட்ட சில வேதிப் பொருள்களுடன் மரத்தூள் அல்லது மைக்கா போன்ற பொருட்கள்  வண்ணமூட்டத் தேவையான , நிறப் பொருட்களை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில்   சேர்க்க , கற்பூரம் போன்று நெகிழ்வுறுகின்றன  இதை , அச்சிலிட்டு  வார்த்தோ அல்லது நுண்துளைகள் வழி செலுத்தியோ அல்லது தகடுகளாக வார்த்தோ இயந்திரங்கள் மூலமாகப்  பொருள்களை உற்பத்திசெய்யும் போது  பொருள்களில்  வேதிவினை தொடர்ந்து நிகழ்ந்து வெடிப்புகளோ, நொறுங்குதலோ ஏற்படாமல் இருக்க சிவப்பு சிலிகேட், காரீயம் போன்ற வேதிப் பொருள்களைச் சேர்க்கிறார்கள்.  

நெகிழ் நெகிழி

முதல் வகை நெகிழி பிசின் போன்ற பல்ம மூலக்கூறுகளாகும் .இடை  வெப்பநிலையில் பாகியல் மீள்திறம் கொண்ட பிசினாகவும் ,உயர் வெப்பநிலையில் பாய்மப் பொருளாகவும் இருக்கும். அதாவது இதன் நெகிழ்தன்மை வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்கின்றது.. அதாவது அழுத்தம் கொடுத்தோ அல்லது இல்லாமலோ வெப்பத்தின் தாக்கத்தினால் மென்மையடைகின்றது .ஆனால் ஓர் உருவத்தை வார்த்தெடுக்க அதைக் குளிவூட்டவேண்டியது அவசியமாகின்றது .இதை மீண்டும் வெப்பப்படுத்தி மென்மையூட்டி மீண்டும் ஒரு புதிய வடிவத்தில் வார்க்க முடியும். அதனால் இதை அதிக உயர்  வெப்பநிலை நெடுக்கையில் பயன்படுத்த முடியாது. இவை மறுசுழற்சி செய்யக் கூடியவை. கோபாலிமர் வினார், நைலான், பாலி புரோப்பிலின், பாலிவினைல் குளோரைடு (PVC), பாலி அசிட்டேட் நெகிழி, வினைல்,அக்ரிலிக் நெகிழி,செல்லுலோஸ் அசிட்டேன், செல்லுலாயிட், ஈதைல் செல்லுலோஸ் பாலி எதிலின் ,பாலி ஸ்டைரீன்,வினைல் பாலிமர் அமைடுகள் ,அகிரிலிக்ஸ் ஆகியவை இளகும் வகை நெகிழிகள் ஆகும்..

 

              வெவ்வேறு வகை மூலக்கூறுகள், [பல்ம மாக்கம் முறை  மூலம் கிடைக்கும் நெகிழிப் பொருள் கோ பாலிமர் வினார் ஆகும்.வெவ்வேறு மூலக்கூறுகளைச் உறைவிப்பு (Condensation) மூலம் கிடைக்கும் நெகிழிப் பொருள் நைலான் ஆகும்.     

  எதிலின் மூலக்கூறுகளை அடுக்கடுக்காக ஒன்றிணைத்து பல்ம மாக்கம் செய்து உருவாக்கப்படும் பேரியல் மூலக்கூறு பாலி எதிலினாகும் .இது மிகவும் சிறப்பான மின்கடத்தாப் பொருளாக விளங்குவதால் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் மின்வடங்களுக்கும் ,மின் கம்பி களுக்கும்  உறை யாகவும் .பல கொள்ளளவுகளில்  வாளிகள் ,பைகள் . பாய் விரிப்புக்கள் . குழாய்கள் ,ஒளிப்படச் சுருள்கள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுகின்றது.

      ,பாலி ஸ்டைரீனை ஸ்டெரீன் மூலக்கூறுகளி பல்ம மாக்கத்திற்கு உட்படுத்தி உற்பத்தி செய்கின்றார்கள் இது ஒரு மின்கடத்தாப் பொருள் பண்பையும் ,வேதிப் பொருள் அரிமானத் தடையையும் பெற்றுள்ளது .இது மின்கம்பிகளுக்கு மின்னேமப் பொருளாகவும் (insulator ) .கார் ,மற்றும் போக்குவரத்து ஊர்திகள் குளிர் சாதனப் பெட்டிகளுக்கான, தொலைக்காட்சிப் பேழைகள் போன்றவற்றிற்கான  விளிம்பு வரிகள் ,  மற்றும் அவற்றின் உடலுறுப்புக்கள் பல் தேய்க்கும் குச்சி,படுக்கும் பாய், குடங்கள் ,தட்டிகள் போன்ற இன்ன பிற வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள்   உணவுப் பொருட்களை அடைத்து விநியோகிக்கும் உதவும் டப்பாக்கள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் முறையிலும்  பயன்படுகின்றது.

 

         பாலி வினைல் வகைகளை வினைல் கூட்டுப் பொருட்களைப் பல்ம மாக்க ம் செய்து பெறலாம் .இவை மின்கடத்தாத் தன்மையையும்  ,உறுதி மிக்கதாகவும், உடனே தீப்பற்றி எரியக்கூடியதாகவும் இருப்பதால் கைப்பை. நனையாமலிருக்க மழைக்காலத்தில் அணியும் மேலாடை ,கார் உறைகள் , தார்ப்பாய்கள். மேஜை மற்றும் தரை விரிப்புக்கள் , கூடைகள் கயிறு போன்ற பொருட்கள் செய்யப் பயன்படுகின்றன .

 

       அக்ரெலிக்ஸ் பாலிமர்களை அக்ரெலிக் அமிலங்களின் எஸ்டர்களை வேதிவினைக்கு உட்படுத்திப் பெறுகின்றார்கள் இதில் ஒன்று சார் ஸர்பெக்ஸ் எனப்படும் பாலி மீதைல்              மெதாக்ரைலேட் .இது  ஒளியை  ஏறக்குறைய  முழுமையாக ஊடுருவிச் செல்ல அனுமதிப்பதாலும் எளிதாக வடிவங்களை வார்க்க முடிவதாலும் ஈரத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாலும் ,இதை விளக்குகளுக்கான  உறைகள் ,மூக்குக் கண்ணாடிகளுக்கான சட்டங்கள் , வில்லைகள் ,பிளாஸ்டிக் பொருட்களாலான அலங்காரச் சேலைகள் , நவ நாகரிக உடைகள் ஆபரணங்கள் போன்றவை செய்யப் பயன்படுத்துகின்றார்கள் பாலி அமைடுகள் என்பன நைலான் களாகும். இவை பளுவையும் ,மின்சாரத்தையும்  தாக்குப் பிடிக்கும் தன்மை கொண்டுள்ளன இவை அதிகமாக உயர் அதிர்வெண் மாறு திசை மின்னோட்டத்திற்கான  மின்னேமக் காப்பாகவும் பெட்ரோலியப் பொருட்களை வடிகட்டும் வடிப்பான்களாகவும் தானியங்கு வண்டிகளிலும் , இயந்திரங்களிலும் தானாக மசகிடும் அமைப்பிலும் பயன்படுகின்றன

          பாலி புரோப்பிலின் கொதி நீரில் உருமாற்றம் அடையாததால் பால் புட்டிகள், நீர் பாட்டில்கள் , உணவுப்பொருட்கள் ,குளிர் பானங்கள் போன்றவற்றை அடைத்து விநியோகிக்கும் புட்டிகள்  ஆகியவை செய்யவும், இலேசாகவும் பலமிக்கதாகவும் உள்ளதால் நீர்பாய்ச்சும் குழாய்கள்,கயிறுகள் ஆகியவை செய்யவும் பயன்படுகின்றன..பாலிவினைல் குளோரைடு (PVC)

நிறமற்ற இளகும் நெகிழியாகும். மின்கம்பிகளில் மின்னேம உறை  நீரேற்றும் குழாய்கள் ஆகியவை செய்யப் பயன்படுகிறது.பாலிவினைல் அசிட்டேட் நெகிழி வண்ணப் பூச்சுகள் ஒட்டும் பசைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. வினைல், (டெரிலின் இழை போல)  இழைகள் தயாரிக்கலாம். இவ்விழைகள் சுருங்குவதில்லை. அழுக்கை எளிதில் நீக்கிக் கொள்ள முடிகின்றது. பலவகையான வண்ணங்களை ஏற்றமுடிகின்றது. இதனால் இதைக்கொண்டு  இவற்றிலிருந்து ஆடைகள் தயாரிக்கிறார்கள்.அக்ரிலிக் நெகிழி[  நிறமற்றது. ஒளிபுகக் கூடியது. கண்ணாடிக்கு மாற்றுப் பொருளாகவும், இயந்திரம், கட்டிடப் பொருள்கள், மீன் தொட்டிகள் செய்யவும்  பயன்படுகிறது.செல்லுலோஸ் அசிட்டேனைக் கொண்டு  கார் மற்றும் போக்கு வரத்து ஊர்திகளுக்கான உடல் பாகங்களைச் செய்கின்றார்கள்..முதன் முதலில் உருவாக்கப்பட்ட நெகிழி செல்லுலாயிட் எளிதில் தீப்பற்றக் கூடியது. விளையாட்டுப் பொருள்கள்,செய்யப் பயன்படுகிறது. பொருள்கள் மீது மேல் பூச் சிடவும் ஒளிப்படச் சுருள்கள்  செய்யவும், ஈதைல் செல்லுலோஸ் பயன்படுகிறது...

          பாலி டெட்ரா புளுரோ எதிலின்  என்பது டெப்லானாகும் (Teflon). .இது மின்சாரம் மற்றும் வெப்பத்தைக் கடத்துவதில்லை .இது இயந்திர உதிரி பாகங்கள்  தயாரித்தல் . விற்பனைப் பொருட்களையும் மருந்துகளையும் சிப்பமிடல் போன்றவற்றில் பயன்படுகின்றது  செல்லுலோஸ் என்பது தாரங்களிலிருந்து பெறப்படும் இயற்கைப் பாலிமெர் களாகும் . இதன் வேதிக் கூட்டுப் பொருளான செல்லுலோஸ் எஸ்டர் மற்றும் செல்லுலோஸ் ஈதர் போன்றவை பயனுள்ளவைகளாக இருக்கின்றன. செல்லுலோஸ்  எஸ்டர் என்பன செல்லுலோஸ் நைட்ரேட்டுக்கள் மற்றும் அசிடேட்டுக்களின்கூட்டுப் பொருளாகும் .ஈதைல் செல்லுலோஸ், செல்லுலோஸ் ஈதர் வகையாகும். இவை பட்டறைப் பயன்பாடுகளுக்கு இணக்கமாக இருப்பதால் ,வர்த்தக ரீதியிலான பல பயன்பாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்கின்றார்கள். பொம்மைகள். தலைக் கவசம், தாம்பாளத் தட்டுக்கள் . ஒளிப்படச் சுருள்கள் ,செயற்கை இழைகள் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்

நெகிழா நெகிழி

 

நெகிழா நெகிழி

 எளிதில் நொறுங்கக் கூடிய இது  இளகும் வகையை விட தரம் குறைந்தவையாகக் கருதப் படுகின்றன               சிலவகைப் பாலிமெர்கள் அழுத்தத்தினால் உருக்குலைவு அல்லது உருத்திரிபு  பெறுவதில்லை பாலியெஸ்டர் பினோலிக்ஸ் என்ற பேக்லைட் ,யூரியா பார்மால்டிஹைடு எபாக்சைடு ஆல்கைடு ரெசின்,. மெலனின் ரெசின், பினாலிக் ரெசின் போன்றவை போன்ற நெகிழிகள் இவ்வகையினதாகும் .உறைவிப்பு  பல்மமாக்க  முறையினால் இவ்வகை நெகிழிகள் தயாரிக்கப்படுகின்றன . உறைவிப்பு பல்மமாக்கம் குறுக்கிணைப்பு மூலக்கூறுகளைத் தோற்றுவிக்கின்றது. இதனால் இதன் மீது வெப்பம் மற்றும் அழுத்தத்தைச் செயல்படுத்தி திண்மப்பொருட்களுக்கு வேண்டிய உருவத்தையும் வடிவத்தையும் கொடுக்கலாம். சூடுபடுத்தும் போது மென்மையடைவதால் இது இயலுவதாகின்றது ஒரு வரம்பிற்கு அப்பாற்பட்டு சூடுபடுத்தும் போது அதில் நிலையான வேதிமாற்றங்களுக்கு உட்பட்டு நிரந்தரமாகக் கடினமாகிவிடுகின்றது ஒருமுறை அப்படி ஏற்பட்டுவிட்டால் அதை வெப்பத்தினால் மீண்டும் மீண்டும் மென்மையூட்டமுடியாது. இந்நிலையில் குறுக்கிணைப்புகள் விடுபட்டுப்போகின்றன .எதிர்ப்போக்கான வேதிவினைகள் தூண்டப்பட்டு அதன் இயல்பான பண்புகள் அனைத்தையும் இழக்கின்றது .இதை பல்மநீக்கம் ( depolymerization)   என்பர்

 

       பாலிஸ்டெர் என்ற பாலி மெர்கள் பாலி கார்பாக்சிலிக் அமிலங்கள் மற்றும் பாலி ஹைட்ரிக் ஆல்ஹகாலை உறைவிப்பு பல்மமாக்க முறையில் பெறப்படுகின்றது . இது  அதிகமான மின்கடத்தாப் பொருள் மாறிலியையும் புறப்பரப்பு கடினத் தன்மையையும் கொண்டுள்ளது . இது தாள்,,பாய்,,துணி மின்கம்பி மற்றும் வடங்களுக்கான உறைகள் தயாரிக்கப் பயன்படுகின்றது

 

          பீனால் மற்றும் பார்மால்டிஹைடு மூலம் பினோலிக் நெகிழிப் பொருட்களை உற்பத்திசெய்கின்றார்கள் இவை கடினமாகவும் மின் கடத்தாப் பொருளாகவும்  இருப்பதால் மின் னிணைப்புச் சாவிகளுக்கான  துணைப் பொருட்கள் ,கைப்பிடிகள் தயாரிக்கவும் மின் சாதனங்களுக்கான கட்டுமானப் பொருளாகவும் பயன்படுகின்றது யூரியா பார்மால்டிஹைடு  மூலம் பெறப்படும் நெகிழிப் பொருட்களும் இது போன்ற பயங்களைத் தருகின்றது    .  

       . .

          எபாக்ஸைடுகள் ஒட்டுப் பசைகள் தயாரிக்கப் பயன்படுத்தப் படுகின்றது .  உடைந்து போன மரம். உலோகம் .பீங்கான்  பொருட்களை ஒட்டி இணைப்பதற்குப் பயன்தரும் பிசின் களைத் தருகின்றன. வார்னிஷ் , உயர் மின்னழுத்த மின்னேமப் பொருள் போன்றவை களின் உற்பத்தி முறையிலும் இது பயனளிக்கின்றது.

இழைகளினால் வலுவூட்டப்பட்ட நெகிழிகள்

 

இழைகளினால் வலுவூட்டப்பட்ட நெகிழிகள்  Fiber reinforce plastics)

 

             இது ஒருவகையான கூட்டுப் பொருளாகும். நமக்குத் தேவையான ஒரு பண்பைக் கொண்டிருக்கவும் அல்லது அப்பண்பை மேம்படுத்தவும் கூட்டுப் பொருட்களை உண்டாக் கிக் கொள்கின்றார்கள் சில சமயங்களில் மிக நுண்ணிய அளவு சேர்மானத்தால் அதன் பண்பில் குறிப்பிடும்படியான அளவில் மாற்றம் ஏற்படுவதுண்டு .உயரளவு உறுதி மீள்திறன் வெப்பத்தடை மற்றும் இயந்திரங்களுக்கான தாழ்ந்த எடை கொண்ட உதிரி பாகங்கள்  போன்றவற்றைத் தயாரிக்க இவ்வகை நெகிழி அனுகூலமிக்கதாக இருக்கின்றது கார் ,ஸ்கூட்டர் போன்ற வண்டிகளுக்கான உடல் பாகங்கள் செய்ய இதைப் பயன்படுத்து கின்றார்கள். வலுவூட்டப்பட்ட நெகிழிகளில் கண்ணாடி இழைகள் இடைஊடாகச் செருகி  இறுக்கப்படும் இழைகளாக மடித்து வைத்தும்  சிறு துண்டு முறுக்கிழைகளாகப் பொதித்தும்  பின்னப்பட்ட துணையாகவும் பயன்படுகின்றது.

                இன்றைக்குக் கண்ணாடிக்குப் பதிலாகக் கார்பன் இழைகள் சிலிகான் மற்றும் போரான் இழை களையும்  நெகிழிகளை வலுவூட்டப் பயன்படுத்துகின்றார்கள். கார்பன் இழையால் வலுவூட்டப்பட்ட நெகிழி அயர்ச்சியை (fatique ) அதிகம் தாக்குப்பிடிக்கின்றது அதாவது இயந்திர அதிர்வுகளை அதிகம் தாக்குப்பிடித்து நிலைத்திருக்கிறது மேலும் இதன் அடர்த்தி மிகவும் குறைவாக இருக்கின்றது . அதனால் இவ்வகை நெகிழி வான வூர்தி களுக்கான இயந்திரங்களிலும் உயர் அழுத்த சுழலிகளுக்கான விசிறித் தடுகளிலும் பயன்படுத்த அனுகூலமையிருக்கின்றது .சிலிகா இழைகளால் வலுவூட்டப்பட்ட நெகிழி .கார்பன் இழைகளால் வலுவூட்டப்பட்ட  நெகிழியை விட சற்று கூடுதலான உறுதியைக் கொண்டுள்ளது. எனினும் அதைப்போல மலிவானதில்லை .கண்ணாடி இழைகளால் வலுவூட்டப்பட்ட நெகிழி உயரளவாக 600 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரையிலும் பயன்படுத்த இணக்கமானவை .சிலிகா இழைகளானால் இது 1100 டிகிரி செல்சி யஸ்ஸாகவும்  போரான் இழைகளானால் இது பெரும அளவாக 2000 டிகிரி செல்சியஸ் ஆகவும் உள்ளது.

           வலிமைக்கும் எடைக்கும் உள்ள தகவு வலுவூட்டப்பட்ட நெகிழிப் பொருள்களுக்கு மிகவும் அதிகம் .இவற்றை எளிதாகப் பட்டறைப் பயன்களில் பயன்படுத்திக் கொள்ள முடிகின்றது . உயரளவு வெப்பத் தடையும் மேன்மையான மின்னியல் பண்புகளும் கொண்டுள்ளன  இது புறச் சூழல் மாற்றங்களையும் எளிதாகத் தாக்குப்பிடிக்கின்றது  எனினும் இது ஒருசில குறைபாடுகளையும் கொண்டுள்ளது .இதன் உற்பத்திச் செலவு ஓரளவு அதிகமாக இருக்கின்றது.இழை நிலைகொண்ட திசைக்குச் செங்குத்தான திசைகளில் இதன் வலிமை குறைவாக உள்ளது  அதாவது இதன்  வலிமை வெவ் வேறுதிசைகளில் வெவ்வேறாக இருக்கின்றது வெப்பத்தை பரிமாற்றம் செய்யும் வீதமும் வெப்பத்தை இழக்கும் வீதமும் குறைவாக இருக்கின்றது வளைந்து வளையும் உருமாற்றத்திலிருந்து மீளப்பெறும் தன்மை எஃகை விடக் குறைவாக இருப்பதால்  சம அளவிலான வலிமைக்கு நெகிழி கூடுதல் தடிப்புடன்  இருக்க வேண்டியது அவசியமா கின்றது அதாவது கூடுதல் மூலப் பொருள் தேவையாக இருக்கின்றது.

குறைக்கடத்தும் நெகிழி (Semiconducting plastic)

 

      நெகிழிகள் பொதுவாக மின் கடத்தாப் பொருளாகவே  இருக்கும். இவற்றின் மீள் திறன் 10 - 12 மோ /செமீ என்ற அளவிற்கும் குறைவாக இருக்கின்றது .தற்பொழுது கடத்துத்திறன்    10 -9 முதல் 10  3 மோ /செமீ  அல்லது அதற்கும் கூடுதலாக இருக்குமாறு செயற்கை நெகிழிப் பொருட்களைக் கண்டறிந்து பயன்படுத்தி வருகின்றார்கள் நற்கடத்திகளுக்கும் அரிதிற் கடத்திகளுக்கும் இடைப்பட்ட கடத்துதிறன் கொண்ட இவற்றைக் குறைக்கடத்தி வகை நெகிழி என்று கூறுகின்றார்கள்.

               ஒரு கரிம மூலக்கூறின் எலெக்ட்ரான் கடத்து திறனைப் பொதுவாக உலோக அணுக்கள் அல்லது கனிமச் சேர்மங்களை உட்பொதித்து அதிகரிப்பார்கள். இரு வெவ்வேறு உலோக அணுக்கள் அல்லது ஒரே உலோகத்தின் வெவ்வேறு ஆக்சைடுகளை பாலிமெர் மூலக்கூறு பெற்றிருக்கும் போது அது அதன் கடத்துதிறனை மேம்படுத்துகிறது இவ்வகைக் குறைக்கடத்தும் நெகிழிகள் நுண்ணலை மெலிவித்தல் காந்த நினைவகங்களில் பயனுள்ளதாக இருக்கின்றன

மின்கடத்தும் நெகிழிகள்

 

மின்கடத்தும் நெகிழிகள்      

       நெகிழிகளுடன் தகுந்த வேற்றுப் பொருட்களைச் சேர்த்து அவற்றை மின்கடத்தி களாகவும் பயன்படுத்த முடியும் என்றும் கண்டறிந்துள்ளனர் . இவற்றைச் செயற்கை உலோகங்கள் (Synthetic metals ) என அழைக்கின்றார்கள் இவை உலோகங்களின் மின் கடத்தும் திறனையும் ,நெகிழியின் அனுகூலங்களை ஒரு சேரப் பெற்றுள்ளன . இதனால் இவை பல துறைகளில் உலோகங்களுக்குப் பதிலாக மாற்றுப் பொருளாகப் படன்படுத்தப் படுகின்றன .குறிப்பாக மின்னணுவியல் சாதனங்கள் விண்கலம் , வானவூர்தி ,விமானங் களுக்கான உதிரி பாகங்கள் வீட்டுப் பயன்களுக்குரிய மின்சாதன ங்களுக்கான உதிரி  பாகங்கள் போன்றவற்றைக் கூறலாம் .

         1978  ல் அமெரிக்க நாட்டின்  ஹீஜெர் (A.J.Heeger)  மாக் டையர்மிட்(A.G.Mac Diarmid)  மற்றும் சிரகாவா (Shirakawa)  போன்ற ஆராய்ச்சியாளர்கள்முதன்முதலாக மின்கடத்தும் நெகிழி இருப்பதை இனமறிந்து உலகிற்கு அறிமுகப்படுத்தினார்கள் .பாலி அசிடிலின்  என்ற பாலிமெரில்  ஆகிஜனேற்றத் தூண்டி (எலெக்ட்ரான் உள்வாங்கி )அல்லது ஆக்சிஜநீக்கத் தூண்டிகளை(எலெக்ட்ரான் ஈந்து )  பாலிமெர் மூலக்கூறில் இணைக்கும் போது   அது மின் கடத்தும் திறனை அதிகரித்துக் கொள்கின்றது .

           அறைவெப்பநிலையில் தூய பாலி அசிட்டிலினின் மின் கடத்து திறன் மிகவும் குறைவு. அதன் மதிப்பு 10 - 5 முதல் 10 - 9 மோ / செமீ என்ற நெடுக்கைக்குள் இருக்கின்றது அயோடின் கரைசல் போன்ற ஆக்சிஜனேற்றத் தூண்டி , சோடியம் ,பாதரசக் கரைசல் போன்ற ஆக்ஜிச நீக்கத் தூண்டி போன்றவற்றால் பாலி அசிடிலினை பண்டுவம் செய்யும் போது அதன் மின்கடத்தும் திறன் பல மடங்கு அதிகரிக்கின்றது .இன்றைக்கு பத்து இலட்சம் மோ/செமீ கடத்துதிறன் கொண்ட பால் அசிட்டிலினை  உற்பத்தி செய்துள்ளனர் . சாதாரணமாக வேற்றுப் பொருள் கலவாத  சிலிகானின் மின்கடத்துதிறன் மிகவும் குறைவு . ஆனால் அதில் எலெக்ட்ரான் ஏற்பி  (எலெக்ட்ரான் உள்வாங்கி) (acceptor )  சேர்க்கும் போது  அது நேர்மின் மிகு வகை குறைக் கடத்தியாகின்றது . அது போல எலெக்ட்ரான் இழப்பி  (எலெக்ட்ரான் கொடுப்பி ) (donor ) சேர்க்கும் போது அது எதிர்மின்மிகு வகைக்  குறைக்கடத்தியாகின்றது . மூலக்கூறுகளில் ஆக்சிஜனேற்றம் தூண்டி , ஆக்சிஜநீக்கந் தூண்டிகளின் சேர்மானமும் இத்தகைய விளைவுகளை ஏற்படுத்துவதால்  அதையும் நேர் மின் தூண்டப்பட்ட மூலக்கூறு என்றும் எதிர்மின் தூண்டப்பட்ட மூலக்கூறு என்றும் கூறுவார்கள்

         பை எலெக்ட்ரான் ( π-electron ) எனப்படும் தளர்ச்சியாகக் கட்டுண்ட எலெக்ட்ரானுடன் தெவிட்டாத பாலிமெர்களில் ஆக்சிஜனேற்ற அல்லாது ஆக்சிஜநீக்கத் தூண்டல் வினைகளை எளிதாகச் செய்யமுடியும் இந்த வகை பாலிமெர்களை வேற்றுப்பொருள் சேர்மானத்தால் மின்கடத்திகளாக மாற்றுவதற்கு உகந்தவைகளாக இருக்கின்றன.

 

           இந்த வகையான பாலிமெர்கள் புதிய தொழிநுட் பங்களையும் ,புதிய பயன் பாட்டுப்  பொருட்களையும் வழங்கியுள்ளன. மின்சாரம் எடுத்துச் செல்ல உகவும் மின்வடங்கள், மின்சாரத்தால் வெப்ப மூட்டக்கூடிய சுவர் பதிவுத் தாள்கள் ,கடத்தும் திறன் மிக்க வண்ணப்பூச்சுக்கள் ,அச்சுத் தொழிலுக்குத் தேவையான வண்ண நயம் மற்றும் அழுத்தம் , வானவூர்திகளுக்கான உதிரி பாகங்கள் போன்றவற்றில் இது நற்பயனளிக்கின்றது .இது மின்காந்தக் குறுக்கீடுகளின் தாக்கத்திலிருந்து கணினிகளைக் கவசமிடவும் விரை வேக ஏவுகணையின் புறப்பரப்பில் விளையும் மின்னூட்டதை  கசிய விடவும் மின்னணுவியல் மற்றும் மிக எளிதில் எரிந்து போகக்கூடிய உற்பத்திப் பொருட்களை எடுத்துச் செல்லும் தானியங்கு ஊர்தி நாடாக்களில் உராய்வினால் ஏற்படும் மின்னூட்டத்தை வெளியேற்றவும் பயன்படுகின்றது.

           பாலிபியூரான் மற்றும் பாலிதயோபீன் போன்ற மின் கடத்தும் பாலி மெர்கள்   ஈரத் தன்மை உணரும் சாதனங்களிலும் நச்சு வளிமம் உணரும் சாதனங்களிலும் கதிர்வீச்சு ஆய்கருவிகளிலும்  பயன்தருகின்றன  

 

            நெகிழிப் பயன்பாட்டில் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் முன்னணியில் இருக்கின்றன .. இரப்பர், கண்ணாடி, இரும்பு, அலுமினியம், மரம் போன்றவற்றால் செய்யப்பட்ட பொருட்களுக்கு மாற்றாக இன்று நெகிழிப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் இரும்பு அலுமினியம் போன்ற மூலப் பொருட்கள் அதிகம் தொழில் துறையில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது பொருளாதார முன்னேற்றத்தில் அவை முக்கியப் பங்காற்றுகின்றன . இந்தியாவில் பல்லாயிரம் டன் கணக்கில் பாலித்தீன் தயாரிக்கப்படுகிறது. பாலித்தீன் என்ற செயற்கை நெகிழி கீழ்க்கண்ட வகையில் உருவாகிறது.

1.கார்பன்+இயற்கை வாயு+ ஹைட்ரஜன்(அல்லது) பெட்ரோலியம் எத்திலீன் . ஹைடரஜனுக்குப் பதிலாக குளோரின் அல்லது ஆக்ஸிஜன் அல்லது நைட்ரஜன்  போன்ற வளிமங்களைப் பயன்படுத்தியும் பல்வேறு வகை நெகிழிகளை  உருவாக்கலாம். குறைந்த அடர்த்தயுடைய  பாலித்தீன்கள், அதிகமாக நெகிழக்கூடிய வகையில் இருப்பதால் சில வேதி மாற்றங்கள் செய்து சிப்பக் கட்டு, லாமினேசன், பைகள் ஆகியவை செய்ய பயன்படுகிறது. சற்று இறுக்கமான நிலையிலுள்ள அதிக அடர்த்தியுடைய  பாலித்தீன்களைக் கொண்டு உருளை, கொள்கலன், குடம் , வாளி, மேஜை ,நாற்காலி என்று பல பொருள்கள் செய்ய முடியும்.                                      2.எத்திலீன்(பலபடியாக்கம்)பாலிஎத்திலீன்                                                                                           3.புரோபிலின் (பலபடியாக்கம்)பாலிபுரோபிலின்

பாலிபுரோபலின் என்ற நெகிழிதான் பயணங்களுக்கான கைப்பெட்டிகள்  செய்யப் பயன்படுகிறது. உறுதி , வண்ணம் .பளபளப்புக்காக இவ்வகை நெகிழிகளில்  பல்வேறு வேதிப் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன.

நெகிழியின் தீமைகள்

 

நெகிழியின் தீமைகள்

         நெகிழிப் பொருள்களில்  அதிகம் தீங்கு தரும் வேதிப் பொருள்கள் சேர்க்கப்படு வதால் பல்வேறு தீமைகளுக்குக் காரணமாகின்றன.நெகிழிப் பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகளில் மறு சுழற்சி செய்யும் போதும், உருகும்போதும் வெளியேறும் வாயுக்கள் நத்தன்மை உடையதால் ஆலைத் தொழிலாளர்கள், அருகில் வசிக்கும் மக்கள் ஆகியோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

        பாலித்தீன் பைகளால் சுற்றுச் சூழல் பாதிப்பு  ஏற்படுகிறது. ஒருமுறை பயன்படுத்தியபின் குப்பையாகத்  தூக்கி எறியப்படும்  பாலிதீன் பைகள்  தீமையே தருகிறது. நீர் வழிந்து செல்லும் கால்வாய்களை அடைத்துக் கொள்வதால் .மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு ஏற்படுகின்றது..  சாக்கடைகள் அடை    பட்டுத் தேங்கும் நீரால் துர்நாற்றமும் கொசு உற்பத்தியும் ஏற்படுகின்றது இது வேறு பல பிரச்சனைகளுக்குக் காரணமாகின்றது நெகிழிகள் பிற பொருட்களைப் போல மக்குவதில்லை . அது நிலைமாறாமல் நீண்ட காலம் அப்படியே இருப்பதால் மண்ணில் தங்கி விடுகின்றன. இது நிலத்தடி நீரை மழைக் காலத்தில் புதுப்பித்துக் கொள்வதில் தடை ஏற்படுகின்றது. நிலத்தின் வளத்தை சீரழிப்பதால் ,தாவரங்கள் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது . மேலும்   இரையோடு பாலிதீன் பைகளையும் சேர்த்து உண்ணும் கால்நடைகளின்  உடல் நலம்   பாதிக்கப்பட்டு அவைகள் இறக்க நேரிடுகின்றன.            . சிலருக்கு தொட்டால் கூட ஒவ்வாமை (allergy)  ஏற்படுகிறது. தோல்நோய் முதல் புற்று நோய் வரை பல நோய்களைத் தூண்டுவதற்கு நெகிழி காரணமாக இருக்கின்றது. நெகிழி உறைகள்சுற்றப்பட்டு வரும் சாக்லேட்டு, பால்கோவா போன்றவற்றில் நெகிழியிலுள்ள  வேதிப் பொருளான பென்சீன் வினைல் குளோரைடு கலந்து விடுகிறது. இதனால் புற்று நோய் ஏற்படக் காரணமாகிறது ஏற்படுகின்றது என்று மருத்துவ ஆய்வறிக்கை கூறுகின்றது .மூச்சுக் குழாய் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, நரம்புத்தளர்ச்சி, ரத்த, சிறுநீரகச் செயல் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படக் கூடும் எனவும் இவ்வாய்வுகள்  கூறுகின்றன.

       

        நெகிழிப் பொருட்களை எரிப்பதால் டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளிவருகிறது. இது வளிமண்டலத்தைப் பெரிதும் மாசுபடுத்திகின்றது. வளிமண்டலத்தில் அதிகம் சேரும் கார்பன் டை ஆக்ஸைடு புவியின் வெப்பநிலை ஏற்றத்திற்கு ஒரு காரணமாக இருக்கின்றது. இதனால் பருவ மாற்றங்கள் தூண்டப்படுகின்றன. துருவப் பகுதிகளில் உறைந்திருக்கும் பனிக்கட்டிகள் உருகி கடலின் நீர்மட்டத்தை உயர்த்திவிடுகின்றது .இதனால் தாழ்ந்த நிலப்பகுதிகள் கடலில்  மூழ்கிவிடும் அபாயம்   ஏற்படுகின்றது

நெகிழியால் ஏற்படும் தீமைகளை தடுப்பது எப்படி ?

 

நெகிழியால் ஏற்படும் தீமைகளை தடுப்பது எப்படி ?

ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியப்படும் பாலிதீன் பைகளைப் பயன்படுத்தக் கூடாது. இதைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு அரசுக்கும் உண்டு. பொதுவாக 

விவரம் புரியாமல் அதைப் பயன்படுத்தும்  பல இலட்சக்கணக்கான மக்களைக் கட்டுப் படுத்துவதை விட அதை உற்பத்தி செய்யும் ஒரு சில நூறு உற்பத்தியாளர்களைக் கட்டுப்படுத்துவதே மேலானது.பணம் வாங்கிக் கொண்டு சமுதாயக் கேடுகளை அனுமதித்தால் அதன் பின்விளைவு மக்களை மட்டுமின்றி அதை அனுமதித்தவர்களையும்  சேர்த்தே பாதிக்கும்..ஒரு அரசாங்கம் ஆட்சியாளர்களுக்குப்  பல வசதிகளைத் தருகின்றது என்று வரி  வருவாயில் மட்டும் குறியாக இருக்காமல் மக்கள் நலனையும் பாதுகாக்க வேண்டும் ,அது வெறும் வார்த்தைகளோடு அடங்கிவிடுவதில்லை

        பாலிதீன் பைகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் மக்கள். இலை, சணல் ,காகிதப் பை , துணிப் பை போன்றவைகளை மட்டுமே பயன்படுத்தினார்கள் அதையே மீண்டும் பயன்படுத்த மக்களை வழிபடுத்தலாம். தவிர்க்க முடியாத நேரத்தில் 40 மைக்ரான் தடிமனுக்கு மேற்பட்ட தடித்த பிளாஸ்டிக் பைகளையாவது பயன் படுத்தலாம். இவை மறுசுழற்சி செய்யப்படக் கூடியவை .  . தேனீர் கடைகள் மற்றும் உணவகங்களில் தடித்த பேப்பர் மற்றும் பாக்கு மட்டைகளினால் ஆன குவளைகளைப் பயன்படுத்தலாம். நெகிழிப் பொருட்களில் 10% பொருள்களே 'மீண்டும் பயன்படுத்த'ப் படுகின்றன. 90% பொருட்கள் பெரும்பாலும்  எரிக்கப்பட்டுவிடுகின்றன.. இது புவி வளிமண்டலத்தை மாசு படுத்துவதற்கு முக்கியக் காரணமாக விளங்குகின்றது. எரிப்பதினால ஏற்படும் கரும் புகையும் கார்பன் டை ஆக்ஸைடு வளிமமும் வளிமண்டலத்தின்  ஆக்சிஜன் - கார்பன் டை ஆக்ஸைடு  சமநிலையைப் பாதிக்கின்றது. வளிமண்டலத்தில் கூடுதலாய்ச் சேரும் கார்பன் டை ஆக்ஸைடு புவியின் சராசரி வெப்பநிலையை அதிகரிக்கச் செய்கின்றது.. இதனால் பூமியின் பருவங்கள் மாற்றம் பெறுகின்றது .துருவப் பகுதிகளில் உறைந்து கிடைக்கும் பனி மண்டலங்கள் உருகி கடலின் மட்டம் அதிகரிக்கக் காரணமாகின்றது. இதனால் தாழ்வான நிலப்பகுதிகளை நிரந்தரமாக இழக்கவேண்டிய நிலை ஏற்படும் நெகிழிகளை ஒருபோதும் எரிக்கக்  கூடாது  மக்காத குப்பையாகச் சேமித்து மறு சுழற்சிக்குப்  பயன்படுத்தும் அமைப்புகளிடன் வழங்கவேண்டும் . தூய மணலுடன் மக்னீசியத்தைக் கலந்து வேதி வினைகள் மூலம் உண்டாகும் சிலிகான் கூட்டுக் கனிமத்தை நெகிழிக்கு மாற்றாகப்ப் பயன்படுத்தலாம். இது இரப்பரைப் போல நீட்சியுறவும் , மீட்சியுறவும் தன்மையது எளிதில் தீப்பற்றாது . நெகிழியைப் போல எல்லா நற்பண்புகளை மட்டும் கொண்டுள்ளது. நெகிழியின் தீய பண்புகள் சிறிதும் இல்லை . இதன் உற்பத்தி பொருளாதார ரீதியில் இலாபகரமாக இல்லாததால் இது வணிக முறையில் இடம்பெறவில்லை