Sunday, March 31, 2019

சிறந்த மாணவர்களாக வளர்வது எப்படி ? - 19

சிறந்த மாணவர்களாக வளர்வது எப்படி ? 
கற்பது எளிதில்லாமல் போவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. எதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை விட எதைக் கற்றுக் கொள்ளக் கூடாது என்பதைப் பற்றி அதிகம் சிந்திப்பதும், எதையும் விரைந்து கற்றுக்கொண்டு விடவேண்டும் என்று கற்பதில் அவசரம் காட்டுவதும் , கற்பதின் முக்கியத்துவத்தை உணராமல், இயந்திர கதியில் பிறருக்காகப்  படிப்பதும் ஒரு சில முக்கியக் காரணங்களாகும் . இதனால் கற்றுக்கொள்ள வேண்டியதைத் தவறவிட்டுவிட்டு , கற்றுக் கொள்ளக்கூடாதனவற்றைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களே அதிகரிக்கின்றன.  நேர்மறையான எண்ணங்களை விட்டுவிட்டு எதிர்மறையான எண்ணங்களை வலிந்து விடாப்பிடியாக வைத்திருப்பதால் நேர்மையான கல்வியைப் பெறுவதில் அகத் தடைகள் ஏற்படுவதைத் தடுத்துக் கொள்ள முடிவதில்லை .இதை ஒரு வேத காலக் கதையொன்றால்  புரிந்து கொள்ளலாம் . 
ஒரு இளைஞன் அந்தரத்தில் மிதத்தல், நீரின் மேல் நடத்தல்,  தீயை விழுங்குதல் , முன் ஜென்ம நிகழ்வுகளைக் கூறுதல்,எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னறிவித்தல்  போன்ற  தெய்வீக சக்திகளைப் பெறவேண்டும் என்றும் அதைக்கொண்டு சமுதாயத்தில் பேறும் புகழும் சம்பாதிக்க வேண்டும் என்றும்  விரும்பினான். அவற்றைக் கற்றுத்தரக்கூடிய குருவை த் தேடித்தேடி அலைந்தான்.நீண்டகாலமாக  அவன் எதிர்பார்த்த மாதிரி அவனுக்கு ஒரு குரு கிடைக்கவில்லை .கடைசியில் ஒரு துறவி அவனுக்கு  " இது போன்ற தெய்வீக சக்திகளைக் கற்றுத்தரக்கூடிய ஒரு குரு திபெத்தின் இமயமலை அடிவாரத்தில் உள்ள புத்த மடாலயத்தில் இருக்கின்றார் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரைப் போய் பார்த்தல் ஒருவேளை உன் விருப்பம் நிறைவேறலாம் "  என்று ஒரு யோசனை கூறினார் .   கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் நடைப்பயணமாகவே பல மாதங்கள் சென்று இறுதியில் அந்த புத்த மடாலயத்தைச் சென்றடைந்தான் . தலைமைக் குறுவைச் சந்தித்து தன் விருப்பத்தைக் கூறினான் . அவரும் அதைக் கேட்டுவிட்டு " தெய்வீக சக்திகள் தெய்வங்களுக்கு மட்டுமே உரியவை . தெய்வீகப் பண்புகளைப் வளர்த்துக் கொண்ட  மனிதர்களால் மட்டுமே அப்படிப்பட்ட சக்திகளைப் பெறமுடியும் , மற்றவர்கள் அதைக் கற்றுக் கொண்டாலும் விரைவில் இழந்துவிடுவார்கள் " என்றார் . அந்த இளைஞன் கீழே விழுந்து குருவை வணங்கி " நான் இதைக் கற்றுக்கொள்ள  நெடுந்தொலைவு கடந்து வந்திருக்கின்றேன் , தாங்கள் மறுக்காது கற்றுத்தர வேண்டுகின்றேன் " என மன்றாடினான். குருவும் அவனுக்குக் கற்றுத்தர சம்மதித்து  மறுநாள் விடியற்காலையில் 4 மணிக்கு ஆற்றில் நீராடி, புத்தரை வணங்கிவிட்டு வரச் சொன்னார் . அவனும் அப்படியே வர, குருவும் தெய்வீக சக்திகளைப் பெறுவதற்கான மந்திரங்களை அவன் காதில் மெல்லக் கூறினார்.  கொஞ்ச நேரம் தியானித்து விட்டு , " இந்த மந்திரத்தை எப்பொழுது உச்சரித்தாலும் பிழையில்லாமல் உச்சரிக்க வேண்டும். தவறினால் அந்த மந்திரத்தை மறந்து போவாய் என்றும் மந்திரத்தை உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் பாம்பை மட்டும் நினைக்கக் கூடாது ஏனெனில் அது தேவர்களிடமிருந்து தெய்வீக சக்திகளை விழுங்கிவிடக் காத்துக் கொண்டிருக்கின்றது ."  என்றார் . சில நாட்களுக்குப் பிறகு  குருவிடம் விடை பெற்றுக்கொண்டு  ஊருக்குத் திரும்பினான். வரும் வழியிலேயே அந்த மந்திரங்களை சோதித்துப் பார்க்க விரும்பி , பிழையில்லாமல் உச்சரிக்க வேண்டுமே என்ற மன அழுத்தத்தில் , பாம்பைப்பற்றி நினைக்கூடாது என்று சொன்னாரே என்று பாம்பை  நினைத்துக் கொண்டே மந்திரங்களைப் பிழையோடு உச்சரிக்க , அவன் ஊர் போய்ச் சேர்வதற்கு முன்னரே கற்றுக்கொண்ட தெய்வீக சக்திகளை இழந்துவிட்டான்.கற்றுக் கொள்ளும் போது , கற்றுக் கொள்ள வேண்டியவற்றோடு ,கற்றுக்கொள்ளக் கூடாதன வற்றையும் கற்றுக் கொள்வதால் , அவைகளின் குறுக்கீட்டால்  கற்றதைப் பயன்படுத்த முடியாத நிலையே ஏற்படுகின்றது. 

Saturday, March 30, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 18

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
இசைக் கருவிகளை மீட்டி இசைக்கத்தெரியா விட்டாலும் வாழ்க்கையின் எந்தப் பருவத்திலும் இசையை ரசிக்கலாம் .இசை உள்ளுணர்வுகளோடு எளிதில் உறவாடக் கூடியது . உள்ளுணர்வு என்பது ஒரு மனிதனைத் தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவரக்கூடிய ஒரு அற்புதமான சக்தியைக் கொண்டுள்ளது. அன்பு, காதல் என்பதெல்லாம் உள்ளுணர்வுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் .அதனால் அவற்றின் தாக்கம் பிற  குணங்களை விட வலிமையானதாக இருக்கின்றது . இதை மொசார்ட் விளைவு தெளிவு படுத்துகின்றது    
மொசார்ட் (Wolfgang Amadeus Mossart )ஆஸ்ட்ரியா நாட்டில் 1756 பிறந்து 1756 – 1791 காலத்தில் வாழ்ந்த ஒரு மாபெரும் இசை மேதை . 1993 ல் ரௌச்சர் (Rauscher) என்பார் மொசார்ட்டின் சொனாட்டா(Sonata)(K448) இசையை 10 நிமிடம் கேட்டால் சாதாரணப் பொருட்களுடன் தொடர்புடைய காலம் மற்றும் இடம் பற்றிய கற்பனைத் திறன் தற்காலியமாக மேம்படுகிறது என்று கூறினார். இந்த அக நிலை மாற்றம் 10 -15 நிமிடங்களுக்கு மட்டுமே இருந்தது . சில ஆராய்ச்சியாளர்கள் அதை உறுதி செய்தாலும் வேறு சிலர் இதை ஒப்புக் கொள்ள மறுத்தனர். இசையில் மயங்கி தன் மனதைப் பறிகொடுத்துவிட்டு மகிழ்ச்சியால் துள்ளி எழும்போது ஏற்படும் உற்சாகமே இப்படி வெளிப்படுகின்றது என்றும்,நுகர் உணர்வு இல்லாவிட்டால் இப்படி நிகழ வழியில்லை என்றும், மொசார்ட் விளைவு என்று ஒன்றும் இல்லை என்றும் இவர்கள் கூறினார்கள். இதனால் ஆராய்ச்சியாளர்கள் எலிகளை வைத்து மொசார்ட் இசையின் தாக்கம் எவ்வாறு இருக்கிறது என ஆராய்ந்தனர். எலிகளின் சுறுசுறுப்பு இசை கேட்ட பின் இயல்பு நிலையைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. ரசிப்புத் தன்மை ,திறன் வளர்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கவில்லை எனக் கண்டறிந்தனர்.சிறு வயதுக் குழந்தைகளுக்கு இசைப் பயிற்சி அளித்த போது அவர்கள் இசைப்பயிற்சி பெறாத குழந்தைகளை விட செயல் திறன்மிக்கவர்களாக இருந்தனர்.இதை PET எனப்படும் பாசிட்ரான் உமிழ்வு வரைபடம் காட்டி(Positron emission tomography ) மூலமும் காந்த ஒத்ததிர்வு வரைபடம் காட்டி மூலமும் மூளையை விரிவாக ஆராய்ந்தனர். இசை கேட்டு ரசிக்கும் போது மூளையின் பல பகுதிகள் ஒரு சேர தூண்டப்படுகின்றன. இசையின் சுருதி,தாளம்,பண்திறம் அதிர்வெண், ஒத்ததிர்வு, சுரம்,ஒலிப்பண்பு,ஏற்ற இறக்கம் போன்ற பல இயற்பியல் தன்மைகள் மூளையின் வெவேறு பகுதிகளினால் உணரப்படுகின்றன. அதாவது இசை மூளையின் பல பகுதிகளை சட்டென உறக்க நிலையிலிருந்து இயக்க நிலைக்கு உயர்த்தி விடுகின்றது. அது போல ஒரு பொருளைக் கொண்டு வினையாற்றும் போதும் மூளையின் வேறு பல பகுதிகள் தூண்டப்படுகின்றன. இப் பகுதிகள் யாவும் இசை உணர் பகுதிகளுடன் மேற் பொருந்தியிருக்கின்றன (ovrerlap) .இதனால் இசை கேட்டுக் கொண்டே வினையாற்றும் போது செயல் திறன் வெகுவாக மேம்படுகின்றது எனக் கண்டறிந்துள்ளனர். ஆடிப் பாடி வேலை செய்தா அலுப்புத் தெரியாது .இசை கேட்டுக் கொண்டே வேலை செய்தாலும் உற்சாகம் குறையாது. இதனால்தான் துணி துவைப்பவர்கள், தேய்ப்பவர்கள் ,தைப்பவர்கள் ,கட்டட வேலை செய்பவர்கள், இயந்திரங்களை இயக்குபவர்கள் எனப் பலதரப்பட்ட தொழிலாளிகள் சினிமாப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே அலுப்புத் தெரியாமல் வேலை செய்கின்றார்கள் போலும். காதலர்களுக்கு இசை காதலை வளர்க்கும் மயக்கும் மொழி.கோகுலத்தில் கண்ணன் தன் குழலோசையால் பசு மாடுகளைக் கவர்ந்தான். பாம்பாட்டி தன் மகுடியால் பாம்புகளை மயக்கிப் பிடிப்பார். இசைக்கு இறைவனும் அடிமை என்று பக்திப் பாடல்களைப் பாடுவார்கள்.இசையால் தாவரங்களின் வளர்ச்சி முடுக்கப்படுகின்றது எனப் பலரும் சொல்லக் கேட்டிருக்கின்றோம். இசைக்கும், உயிரினங்களுக்கும் ஒரு உள்ளார்ந்த தொடர்பு இருப்பதையே இவை தொட்டுக் காட்டுகின்றன. 
உணர் திறனைக் கொண்டு நினைவாற்றலை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கு மொசார்ட் விளைவு ஒரு சான்று .கவிதை மற்றும் வேற்று மொழி கற்றுக் கொள்ளுதல் போன்றவற்றில் திறன் மேம்படுகிறது. சிறிது நேரமே மொசார்ட் இசையை கேட்டாலும் குழந்தைகளின் செயல் திறன் பெரிதும் மேம்படுகின்றது. கற்பனைத் திறனில் குறிப்பிடும்படியான தற்காலிய மாற்றமும், கணக்குப் போடுதல்,சதுரங்கம் விளையாடுதலில் புத்திசாலித்தனமும்,குழப்பமின்றி விரைந்து செயல்படும் தன்மையும் ஏற்படுகின்றன .வலிப்பு நோய்(epilepsy) உள்ளவர்கள் இசையால் ஓரளவு குணமடைகின்றார்கள்.இசை,நரம்புகளின் மூலம் நடைபெறும் செய்திப் பரிமாற்றங்களை ஒழுங்குபடுத்துவதால் இந்த உடலியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன எனக் கண்டறிந்துள்ளனர். 
அதற்காக எல்லா  நேரமும் இசையை ரசிக்கிறேன் என்று சினிமாப் பாடல்களையே கேட்டுக்கொண்டிருக்காதீர்கள் . அது இசையும் பாடலும் சேர்ந்தது. பாடல் வரிகளின் தாக்கம் சில சமயங்களில் மிகுந்து ,தவறான பாதையில் துணிந்து செல்ல தூண்டிவிட்டு விடும். பல சினிமாப் பாடல்கள் பொருந்தாக் காதலைத் தூண்டிவிடக் கூடியதாக இருக்கின்றன .காதில் காதருகு (Ear phone) ஒலிப்பான்களை வைத்துக் கொண்டு  உரத்த ஒலியுடன் பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருக்காதீர்கள் . மெல்லிய ஒலியில் கொஞ்ச நேரம் கேட்கலாம். .உரத்த ஒலி காதைச்  செவிடாக்கிவிடும்  .தொடர்ந்து கேட்டால் செவிப்பறை கிழிந்து காயம் கூட ஏற்படலாம்.  எந்தப் பழக்கத்தையும் கற்றுக் கொள்ளலாம் ஆனால் அதற்கு அடிமையாகி விடக்கூடாது. உறுதியான மனம் உள்ளவர்களால், சுய ஒழுக்கத்தைப் போற்றுபவர்களால்  மட்டுமே இது முடியும் . 

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? - 17

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ?
உங்கள் பேச்சு கேட்போருக்கு ஏதாவதொரு வகையில் பயன் தரத் தக்கதாக இருக்கவேண்டும். அப்போது தான் உங்கள் பேச்சு கவனிக்கப்படும். பயனில்லாத பேச்சுக்கள் பிறரால் காதுகொடுத்துக் கேட்கப்படுவதில்லை. அது தொடரும்போது ஒருவர் தன சுய மதிப்பை இழக்கநேரிடும்.
மதிப்பூட்டிய  கருத்தாழமிக்க  பேச்சு (Value added speech) மிக முக்கியம். அதைப் பழகிக் கொள்ளாவிட்டால் சராசரி மனிதனைப் போல நாமும் வாழ்ந்து விட்டுப் போக நேரிடும்.பொதுவாக பெரும்பாலானோரின் பேச்சு 5 % வீதம் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். மீதி 95 % பயனற்றவையாகவே இருக்கும். அதனால் யாருக்கும் யாதொரு பயனும் விளைவதில்லை. இந்த 95 % ல் 2௦ சதவீதம் தவிர்க்க இயலாதது. மீதி 80 சதவீதம் தேவையில்லாதது. இந்த 80 % குறைத்துக் கொண்டால் பேச்சு பயனுள்ளதாக,எல்லோராலும் விரும்பத்தக்கதாக இருக்கும். எவ்வளவுக்  கெவ்வளவு நம் சொல்லும்,செயலும் பயனுள்ளதாக இருக்கின்றதோ அவ்வளவிற்கு அவ்வளவு நம்முடைய மதிப்பு சமுதாயத்தில் அதிகமாக இருக்கும்.
வெற்றிகரமான பேச்சாளராக உருவாவது எப்படி என்பதை  success  என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களே சுட்டிக் காட்டுவதாக சிப் ஹீத் ( Chip Heath) மற்றும் டென் ஹீத் (Den Heath) எழுதிய Made to  stick  என்ற சுய முன்னேற்றத்திற்கான நூலில் குறிப்பிட்டுள்ளார்கள் .வெற்றியின் ரகசியம் வெற்றிக்கான ஆங்கில வார்தைக்குள்ளேயே இருப்பதை வாழ்க்கையில் வெற்றி பெறத்  துடிக்கும் இளைஞர்கள் உணரத்  தவறுவதில்லை.
s  என்றால் பொருளைக் குறிக்கும் subject
முதலில் எதைப் பற்றி பேசப் போகின்றோம் என்பதில் ஒரு தெளிவு இருக்கவேண்டும். இதற்கு முன் கூட்டியே அதை பற்றி தெரிந்து வைத்திருக்கவும் ,தயார் செய்து கொள்ளவும் வேண்டும். அது பற்றி ஒன்றும் தெரியாமல் , முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் ,எல்லாம் தெரிந்தது போலப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் .அது ஒருவருடைய அறியாமையை விரைவில் வெளிப்படுத்திக் காட்டிவிடும் .ஒருவர் தன் சுய மதிப்பை இழப்பதற்கு  அவரே காரணமாகி விடுகின்றார் .
யாருக்காகப் பேசுகின்றோம் , எவ்வளவு நேரம் பேசுகின்றோம் என்பதைப் பொறுத்து  கருத்துக்களையும், செய்திகளையும் கூறவேண்டும் .மாணவர்கள்  என்றால் குறைந்த அளவு , அறிஞர்கள் என்றால் கொஞ்சம் புள்ளி விவரங்கள் . ஒரே செய்தியை காரணமில்லாமல்  மீண்டும் மீண்டும் கூறுவதைத் தவிர்க்க வேண்டும் .
 U என்றால்  பயன்தரு தன்மை , பயன்பாட்டுடைமையைக் குறிக்கும்  utility ,usefulness
வித்தியாசமாகச் சிந்திப்பதில்லை தவறில்லை என்றாலும் நடைமுறைக்கு ஒவ்வாத விஷயங்களினால் பயனில்லை. வித்தியாசமாகச் சிந்தித்தால் அதை நடைமுறைப்படுத்தும் வழிமுறையையும் தெரிந்திருக்க வேண்டும். அதுவும் பொருளாதாரச் சிக்கனமுள்ளதாக இருக்கவேண்டும். பழையனவற்றில் உள்ள குறைபாடுகளை நீக்கவும்,புதிய அனுகூலங்களைத் தருமாறும் இருக்கவேண்டும். கருத்துக்கள் முரண்பாடாக இருந்தால் எதிர்ப்புக்களை சமாளிக்க வேண்டிவரும் . முரண்பாடு அவசியம் என்று நினைத்தால் அதற்கான வலுவான காரணத்தையும் கூறவேண்டும். பொதுவாக எல்லோருக்கும் ஏற்புடைய கருத்துக்களைக் கூறுவதே நல்லது.   புதிய கருத்துக்கள் பின் வரும் சமுதாயத்தினருக்கு வழிகாட்டுதலாக இருக்கவேண்டும். 
S என்றால்  எதிர்பாராதது என்ற பொருள் தரும் Unexpected
இதற்கு யாருக்கும் தெரியாத புதிய செய்திகளைச் சொல்லவேண்டும் என்று அர்த்தமில்லை. பழைய செய்தியையே புதிய தோற்றத்‌தில், கோணத்தில்,'நச்'சுன்னு மனதில் பதியுமாறு சொல்ல வேண்டும். பட்டிமன்றத்‌தில் பேசுபவர்களைக் கவனித்தால் இந்த அணுகு முறை உங்களுக்கு கைவசப்படும்.புதுமைப்படுத்தி செய்திகளைச் சொல்லும் போது கேட்போரை வெகு எளிதில்,இயல்பாக எவ்விதக் கூடுதல் முயற்சியுமின்றி கவரமுடிகின்றது. எதிர்பாராமல் கிடைக்கின்ற நன்மை அதிக மகிழ்ச்சியைத் தரும். அது போல எதிர்பாராத செய்திகளும் மனதில் இனிய தாக்கத்‌தை ஏற்படுத்தும். அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தால் கேட்போருக்கு ஆர்வம் வருவதில்லை.
பெரும்பாலான இளைஞர்கள் சமூக,சரித்திர நாவல்களை விட துப்பறியும் நாவல்களை அதிகம் படிக்க விரும்புகின்றார்கள். இதற்குக் காரணம் அதில் தான் எதிர்பாராத திருப்பங்கள்,போராட்டங்கள் எல்லாம் இருக்கும். நெடுந்தொடர் நாடங்களில். ஒவ்வொரு நாளும் ஒரு எதிர்பாராத திருப்பத்துடன்(Suspense) முடிப்பார்கள். எனென்றால் அப்போதுதான் அந்தத் தொடரை மக்கள் மறுநாளும் பார்க்க வேண்டும் என்று ஆர்வப்படுவார்கள் என்பதைப் போல நம்முடைய பேச்சிலும் திடீர் திருப்பங்கள் இருக்க வேண்டும்
C (1) என்றால்  தெளிவு  மற்றும் உறுதியான என்ற பொருள் கூறும் Clear and concrete
சொல்லப்படும் விஷயங்கள் தெளிவாகவும்,புரியும்படியாகவும் இருக்கவேண்டும். பிறரால் புரிந்து கொள்ள முடிந்தால் மட்டுமே அதனால் பயன் இருக்கும். பயன் இருந்தால் மட்டுமே உங்களுடைய பேச்சை பிறர் ஆர்வத்துடன் கேட்பார்கள். சொல்வதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லுங்கள். அப்படிச் சொல்ல வேண்டுமானால் சொல்லவேண்டிய கருத்துக்களில் தெளிவும், புலமையும் இருக்கவேண்டும். அதுவே ஒருவருடைய  பேச்சுக்கு உயிர் மூச்சாகின்றது. குழப்பம் இருக்குமானால், இரு வேறுபட்ட சிந்தனைகள் பேச்சிலும் வெளிப்பட்டு தடுமாற்றத்தை ஏற்படுத்திவிடும்.சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்று சொல்வார்கள். எனவே சட்டியை முதலில் நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். சட்டி என்பது இங்கே உங்கள் மூளை.உங்கள் விருப்பத் துறை சார்ந்த விஷயங்களை உங்கள் மூளையில் சேமித்து வையுங்கள். திரும்பத்  திரும்ப நினைவுபடுத்தி கருத்துக்களை மெருகூட்டிக் கொள்ளுங்கள் . தொடர்ந்து பொது மக்களுக்கான நூல்களையும் செய்தித் தாள்களையும் படிக்கும் பொழுது தான் இந்த வாய்ப்புக் கிடைக்கும் .
C (2) என்றால் நம்பகத்தன்மை கொண்ட என்ற பொருள் தரும்  credible
C என்றால்  confidence (நம்பிக்கை), clarity .compitable (முரண்பாடின்றி ஏற்றுக்கொள்ளுதல்) என்றாலும் நம்பகத் தன்மை முக்கியமானது. சொல்லும் எந்தக் கருத்துக்கும் ஒரு நம்பகத் தன்மை இருக்கவேண்டும் .இதற்கு இயல்வாழ்க்கைச் சான்றுகள், பொன் மொழிகள், பழமொழிகள்,இலக்கிய வரிகள். அறிஞர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் போன்றவற்றை எடுத்தாளலாம். நம்பகத் தன்மைக்காக புள்ளி விவரங்களைக் கூறலாம் என்றாலும் அது கேட்போரின் தகுதியைப் பொருத்தது. பொது மக்கள் என்றால் புள்ளி விவரங்கள் அதிகம் தேவையில்லை. தொழிநுட்ப வல்லுநர்கள் என்றால் தேவையான புள்ளி விவரங்களும் இருக்கலாம்.
E என்றால்  (தனிச்சிறப்பானது) extraordinary , (வசீகரமானது) enchanting என்று குறிப்பிட்டாலும் (உணர்ச்சிமயமானது ) emotional முக்கியமானது.
நம்முடைய பேச்சு மற்றவர்களின் உள்ளத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் அது உயர்வாகக் கருதப்படும். எந்த சினிமா நம் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகின்றதோ அது நீண்ட நாட்களுக்கு நம் மனத்தை விட்டு அகழுவதில்லை.
நம்முடைய உணர்ச்சி மற்றவர்களின் உணர்ச்சியோடு ஒத்ததிர்ந்து போக குரலில் ஏற்றத் தாழ்வுகள் ,இடைவெளி இருக்க வேண்டும்.
S என்றால் Story
எந்தக் கருத்தைக் கூறினாலும் அதைக் கேட்போர் உள்வாங்கிக் கொள்வதற்கு ஒரு சிறந்த வழி அக்கருத்தை வழியுறுத்தி ஒரு கதையைப் புனைந்து கூறுவதுதான். உண்மைச் சம்பவங்கள் ஏற்படுத்தும் தாக்கம் இன்னும் அதிகமாக அழுத்தமாக இருக்கும்.
S என்றால் Sense of humour
நகைச்சுவையை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. கதையை நகைச்சுவை உணர்வோடு கூறினால் அது நல்ல பலனை அளிக்கும். பட்டிமன்றங்களில் பேச்சாளர்கள் நகைச் சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
பேச்சு யாருக்காக இருந்தாலும் சுருக்கமாக(Short) , எளிமையாக (Simple) இருக்க வேண்டும். சொல்வதை எப்போதும் புரியும்படிச் சொல்லுங்கள். அவசரப்பட்டு வார்த்தைகளை அடுக்குமொழியில் அள்ளிவிடாதீர்கள். தெரிந்ததை மட்டும் சொல்லுங்கள். தெரியாததை பற்றி மூச்சு விடாதீர்கள் . சொல்வதை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லப் பழகிக்கொள்ளுங்கள் .விளக்கம் கேட்கப்படும் போது மட்டும் விவரம் கூறுங்கள் .கூடுதல் செய்திகள் தனக்குத் தெரியும் என்பதற்காகச் சொல்வதை விட்டுவிடுங்கள். தேவையற்ற செய்திகளைச் சொல்ல அதிக நேரம் எடுத்துக் கொண்டால் பின்னர் முக்கியமான செய்திகளைச் சொல்ல நேரம் கிடைக்காமல் போய் விடலாம்.

Friday, March 29, 2019

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? - 16

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? 
மாணவப் பருவத்திலேயே பேச்சுத் திறமையை வளர்த்துக் கொள்வது நல்லது. .தவறுகளைத் திருத்திக் கொண்டு சிறந்த போச்சாளனாக உருவாக இது தொடர்ச்சியான  அனுபவத்தைத் தரும். இதற்கு நண்பர்களுடன்  உலக நடப்புக்களை மனம்விட்டுப் பேசலாம். பாடம் சம்பந்தமான விஷயங்களை கலந்துரையாடல்  மூலம் ஐயங்களைத் தெளிவு படுத்திக்கொள்ளலாம். இது கூச்சத்தைப் போக்கி எந்தச் சூழ்நிலையிலும் பேசுவதற்கான தைரியத்தைத் தரும் . சொல்லவேண்டிய கருத்தை பிறருக்குத் தெளிவாகப் புரியச் சொல்லும் தன்மையை இது வழங்குகின்றது . இது பணிபுரியும் போது தனக்கு க் கீழ் வேலைசெய்யும் அலுவலர்களிடம் செய்யவேண்டிய வேலைகளைத் தெளிவாகச் சொல்லி வேலை வாங்குவதற்கு பயனளிக்கும் . பேச்சுத் திறமை மொழிப் புலமையை வளர்க்கின்றது. மொழிப் புலமை பேச்சுத் திறமையை வளர்க்கின்றது .மொழிப் புலமை அதிகரிக்கும் போது ,  முன்னோர்களின் இலக்கிய படைப்புக்களில் ஆர்வம் ஏற்பட்டு  நன்னெறிகளை உள்வாங்கிக் கொள்ளும்  வாய்ப்புக் கிடைக்கின்றது .பேச்சுத் திறமை பல அறிஞர்களின் நட்பை அறிமுகம் செய்வதால்  வாழ்க்கையில் முன்னேறுவதற்கான பல புதிய வாய்ப்புக்கள்  கிடைக்கின்றன . வட மாநிலங்களில் , வெளிநாடுகளில் வேலை வாய்ப்புத் தேடுபவர்கள் பிற மொழிகளில் புலமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். இரண்டு மொழிகள் தெரிந்த மனிதன் இரண்டு உழைப்பாளிக்குச் சமம். ஒப்பிட்டால்  சிந்திக்க அவனுக்கு இரண்டு மூளைகள்,செயல்பட நான்கு கைகள்.
வெறும் விதாண்டா வாதம் பேச்சுத் திறமையாகிவிடாது. சமுதாய நியாயங்களுக்கு உட்பட்டுப்  பொருள் பட பேசுவது சமுதாயத்தில் நன்மதிப்பைத் தரும் ..        சித்திரமும் கைப்பழக்கம்  செந்தமிழும் நாப்பழக்கம்  என்று சான்றோர்கள் கூறுவார்கள். பயிற்சி எடுத்துக் கொள்ளக்  கொள்ள பேச்சுத் திறமை தானாக வளரும் என்பது இவர்கள் அறிவுரை. இலக்கியச் சிந்தனைகள் எடுத்துக்காட்டுகளுக்கு உதவும்.  பேச்சுத் திறமையை வளர்த்துக் கொள்ள , நன்னூல்களை அடிக்கடி படிக்கவேண்டும். மேடைப் பேச்சாளர்கள் எப்படிப் பேசுகின்றார்கள் என்பதைக் கூர்ந்து கவனித்து ,மொழி நடை, ,குரலில் ஏற்ற இறக்கம். உடல் மொழி , நகைச் சுவை , உட்கருத்து , போன்ற உட்கூறுகளை  கற்றுக் கொள்ள வேண்டும் .  
நண்பர்களுடன் மட்டுமின்றி ,பெற்றோர்கள்,. உறவினர்களிடமும் மனம்விட்டுப் பேசும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எதிரிகள் இல்லை. வாழ்க்கையின் இறுதி வரை பிள்ளைகளின்  வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்து கொண்டே இருக்கும் உயிர்த் தோழர்கள் . பிரச்சனை எதுவானாலும் அதைப் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மை வளர்த்துக் கொள்ளுங்கள் . இப்படி எல்லோரிடமும் பேசிப் பழகுவது  , ஊமைத்தனம்  மறைந்து எந்தச் சூழ்நிலையிலும் பேசும் தைரியத்தைத் தரும் . இன்றைக்கு மாணவர்கள் கைபேசி, கணனி போன்ற தொழில்நுட்பக் கருவிகளுடன் மணிக்கணக்கில் உறவாடுவதால் நண்பர்களையும், உறவுகளையும் இழந்து வருகின்றார்கள். பேச்சு த் திறமை வளராமல் போவதற்கு இது ஒரு காரணமாக இருக்கின்றது 

Thursday, March 28, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி - 15

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி
கல்வி கற்பது சுய முன்னேற்றத்திற்குத்தான் . அது பெற்றோர்களால், ஆசிரியர்களாலும் காட்டாயப்படுத்தப்பட்டாலும்  அதை ஒரு தண்டனையாக நினைக்கவே கூடாது .கல்வி கற்க மறுப்புக் காட்டப்படும்போதெல்லாம்  அது தன்மீது திணிக்கப்படுவதாக  குழந்தைகள் நினைக்கின்றார்கள்,தன் சுதந்திரம் பறிக்கப்பட்டு விருப்பம்போல செயல்படுவது மறுக்கப்படுகின்றது என்று மாணவர்கள்  நினைக்கின்றார்கள். அதனால் பெரும்பாலான மாணவர்கள் இஷ்டப்பட்டு படிப்பதை விட்டுவிட்டு கஷ்டப்பட்டு படிக்கின்றார்கள். இது புரிதலின் பயனுறுதிறனை  பெரிதும் மட்டுப்படுத்தி விடுகின்றது. இஷ்டப்பட்டு செய்யப்படும் எந்த வேலையும் எளிதாகவும் விரைவாகவும்  முழுமையாகவும் ,நிறைவாகவும் செய்து முடிக்கப்படும் .எண்ணத்தையும் செயலையும் ஒருங்கிணைக்க  மனப்பூர்வமான இந்த  இஷ்டத்தால் மட்டுமே முடியும். தீய செயலாக இருந்தாலும், நல்ல செயலாக இருந்தாலும் எது இஷ்டப்பட்டு செய்யப்படுகிறதோ அது மட்டுமே செயல்களில் தங்கிவிடுகிறது. உண்மையான காரணங்களை அறிந்து கொண்டு  பின்விளைவுகளையும் புரிந்து கொண்டால் எதை  இஷடப்பட்டு கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் ஒரு தடுமாற்றமே ஏற்படுவதில்லை
படிப்பது என்பது கடின உடல் உழைப்பில்லை. ஒரே இடத்தில் இருந்து கொண்டே படிக்க முடியும். அது தேவையான விவரங்களை வாழ்க்கைப் பயன் கருதி  மூளையில் பதிவு செய்வதாகும் மனம் பூரண ஒத்துழைப்புக் கொடுத்தால் இடையூறு இன்றி  பின்னால் நினைவுபடுத்திக் கொள்வதற்கு எளிதாக அழுத்தம் திருத்தமாக  பதிவு செய்து கொள்ள முடிகின்றது .மூளையில் அழிந்து போகாமல்  நிரந்தரமாகத் தங்கி  இருக்கும் பதிவுகள் மட்டுமே வாழ்க்கையை வழிநடத்திச் செல்ல துணை செய்கின்றன. ஒருவருடைய எதிர்கால வாழ்க்கையைத்  தீர்மானிக்கின்றன என்பதால் , தேவையான பதிவுகளை ச் செய்யத் தவறி விட்டாலோ  அல்லது பதிவுகளை இழந்து விட்டாலோ .வாழ்க்கையின் பிற்பகுதி தடுமாற்றத்திற்கு ஆளாகும் நிலையே ஏற்படும்       
ஒரே சமயத்தில் பல பதிவுகளைச் செய்தாலும், அல்லது பதிவுகளை ஒரேசமயத்தில் உள்ளீடு மற்றும் வெளியீடு செய்தாலும் பதிவுகள் அழுத்தமாக எழுதப்படுவதில்லை. .விரைவில் அழிந்து போவதற்கு நாம் மேற்கொள்ளும் இந்த அவசரமே காரணமாகின்றது .பதிவுகள் அழிவது என்பது மறதியாகும். எனவே நினைவாற்றலை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமானால் , பதிவுகளை மேற்கொள்ளும் போது இடையூறுகள் இன்றிச் செய்யவேண்டும் . தாறுமாறாக பதிவு செய்யப்பட்டால் தேவையான போது அதைத் தேடிக் கண்டுபிடித்து நினைவிற்கு கொண்டுவருவதற்கு நெடு நேரமாகும். முதலில் தேவையான வற்றை மட்டும் பதிவு செய்யுங்கள். தேவையில்லாத பதிவுகளால் நிரப்பி மூளையை  ஒரு குப்பைத் தொட்டியாக்கி விடாதீர்கள். தேவையற்ற பதிவுகள் அதிக இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தால் ,தேவையான பதிவுகளைச் செய்ய தேவையான இடமில்லாமல் போகும் . தீயனவற்றை மறப்பதற்கு இந்த மறதி நன்மை செய்கின்றது என்றாலும் . கூடவே நல்லனவற்றையும் மறந்துவிட இதே மறதியே காரணமாகிவிடுகிறது .இதற்குக் காரணம் தீயனவற்றைப் பற்றி சிந்திப்பதற்கும் ,நினைப்பதற்கும் எடுத்துக் கொள்ளும் காலம் , இஷ்டம் , நல்லனவற்றிற்கு இல்லாதிருப்பதே .

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி - 14

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி  
பள்ளியில் படிக்கும் போதே பிற மாணவர்களுடன் நட்புடன் பழகி , இணைந்து செயலாற்றும்  பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் .தவறிவிட்டால் பின்னர் சமுதாயத்தில் வாழும் போது தானும் பிறருக்கு ஒத்துழைப்புக் கொடுக்க முன் வருவதில்லை , பிறரும் நமக்கு ஒத்துழைப்பு தர விரும்புவதில்லை  . இது சமுதாயத்தின் மிகப் பெரிய பலவீனமாகும் . சமுதாய நலனை மௌனமாய்ச் சீரழிப்பதில்  இதன் பங்களிப்பு அதிகம் . ஒற்றுமையின் அவசியத்தை ஒவ்வொருவரும் மாணவர்களாக இருக்கும் போதே உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும் .அது சாகாத சமுதாயத்தின் பாதுகாப்பிற்கு ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி போன்றது 
ஒற்றுமை இல்லாமற் போனதால் நாம் பலமுறை இந்தியாவை இழந்திருக்கின்றோம் . இந்தியாவை ஆண்ட அரசர்களிடம் ஒற்றுமை காணாமல் போனதால் , கில்ஜி , துக்ளக் , மொகலாயர் , ஆங்கிலேயர்கள்  போன்ற ஊடுருவிகளிடம் இந்தியா பறிபோனது .இழந்த இந்தியாவை மீட்டெடுக்க மீண்டும் மக்களிடையே காணாமற் போன அந்த  ஒற்றுமையை ஊட்டவேண்டி இருந்தது , ஒற்றுமையோடு இருப்பதுதான் ஒரு குடும்பத்திற்கு    அழகு ,ஒற்றுமையோடு வாழ்வதுதான் ஒரு சமுதாயத்திற்கு அழகு, ஒற்றுமையோடு பணியாற்றுவதுதான் ஒரு அமைப்புக்கு அழகு .ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதுதான்   ஒரு நாட்டிற்கு அழகு  .ஒற்றுமை  முன்னேற்றத்தின் அடையாளம் என்பதால் எப்போதும்  உயர்வு  தரும்.எப்போதும் இணைந்து செயலாற்றுவது என்பது எல்லோர்க்கும் சமமான நற்பயனைத் தரும். நாட்டின் உண்மையான பாதுகாப்பு என்பது அரணும்,தளவாடளங்களும் அவற்றைக் கையாளும் இராணுவமும் இல்லை,நாட்டு மக்களும் அவர்களின் மன நல்லிணக்கமும்தான். ஒற்றுமையில்லாவிட்டால் எந்தப் பாதுகாப்பும் முழுமையாகப் பாதுகாப்புத் தருவதில்லை.
 பள்ளியில்  படிக்கும் பாடங்கள் அனைத்தும் இந்த ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திக் கூறுகின்றன.
கணிதம்
கணிதப் பாடத்தில் ஓர் எண்ணோடு மற்றோர் எண்ணைக் கூட்ட அதன் மதிப்பு எப்போதும் கூட்டப்படும் எண்களைவிடக் கூடுதலாகவே இருக்கும் . இது நமக்கு ஒரு கருத்தை வலியுறுத்திக் கூறுவதாக இருக்கின்றது. நாம் இணைந்து வேலை செய்யும் பொது ,பயனுறு திறன் மிக அதிகமாக இருக்கும். அது தனி ஒருவனால் பெறப்படும் பயனுதிறனை விட, அவருடைய செயல்திறன் எவ்வளவு அதிகமாக இருந்த போதிலும். ,எப்போதும் அதிகமாகவே இருக்கும்.  எல்லோருடைய அறிவு நுட்பமும்  ஒன்றுபட்டுச் செயல்படும்போது தெரியாமல் செயல் தடைப்பட்டுப்போவதற்கு காரணமில்லாமற் போகும்.அதனால் பிரச்சினைகளின்றி  கடின முயற்சிகளைக் கூட எளிதாக செய்து முடிக்க முடியும். ஒருவர் ஒரு வேலையைச் செய்ய ஐந்து நாட்கள் ஆனது. அதே வேலையை ஐவர் சேர்ந்து செய்தால் எவ்வளவு நாட்கள் ஆகும் என்று ஒரு கணக்கைப் போட்டு தேர்வில் மதிப்பெண் வாங்கினோம். ஆனால் அதே கணக்கை சமுதாய வாழ்க்கையில் போட்டுப்பார்த்து பயன் பெறத் தவறிவிட்டோம்.வெறும் வாய்ப் பேச்சினால் ஒற்றுமை வந்துவிடுவதில்லை .அது உண்மையில் மனதின் மௌன மொழிகளில் அடங்கி இருக்கின்றது .
வேதியியல்
வேதியியலில் எல்லாப் பொருட்களும் மூலக்கூறுகளால் ஆனவை. எல்லா மூலக்கூறுகளும் அணுக்களால் ஆனவை. எல்லா அணுக்களும் ஒரு சில அடிப்படைத் துகள்களால் ஆனவை.  இவையாவும் ஒரு சில குறிப்பிட்ட தனிச் சிறப்புப் பண்புகளைப் பெற்றுள்ளன. இதற்குக் காரணம் அதில் ஒன்று சேர்ந்துள்ள உட் துகள்களே ஆகும்.அதில் ஒரு துகள் இல்லாமற் போகுமானாலும் தன் தனிச் சிறப்புப் பண்புகளை இழந்து அதன் பண்புகளில் முரண்பாடுகள் தோன்றும் .முரண்பாடுகளால் ஆன வளர்ச்சியைத் தவிர்ப்பதற்காக  ஓர் எலக்ட்ரான் எதிர் மின்னேற்றம்   கொண்டிருந்தாலும்   நேர் மின்னேற்றம்  கொண்ட புரோட்டானை காதலிக்கின்றது.நுண் பொருள் உலகில் காணப்படும் இக் காதலே பேரியல் பொருள் உலகமாக ப் பிறந்திருக்கின்றது. இயற்கையின் அந்தரங்கம் நமக்கு உணர்த்தும் மகத்தான மெய்ப் பொருளே இந்த ஒற்றுமைதான் . 
 உயிரியல்
உயிரியலில் உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் உயிர் வாழ்கையை நிலைப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. ஒரு சிறிய உறுப்பு சிறிது நேரம் ஒத்துழைக்காமல் வேலை நிறுத்தம் செய்யுமானால் உடல் முழுதும் நலம் கெட்டுப் போவதுடன் மரணம் கூட நிகழலாம்
மனிதர்களைப் போல இந்த உடலுறுப்புக்கள் ஒருபோதும் வேலை நிறுத்தம் செய்து தன் ஒற்றுமையின்மையை வெளிக்காட்டுவதேயில்லை. உடம்பில் ஒற்றுமையுடன் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே வரும் உறுப்புக்களைப் பார்த்துக்கூட நாம் ஒற்றுமையின்  அவசியத்தைப்புரிந்து கொள்ளவேயில்லை.சமுதாயத்தின் பொது நலனுக்காக நாம் ஒற்றுமையுடன் செயல் படவேண்டும் என்பதைத்தான் உடம்பின் பொது நலனுக்காக ஒற்றுமையுடன் செயல்படும் உறுப்புக்கள் ஒவ்வொரு நாளும்  வலியுறுத்திக் கூறுகின்றன.
தாவரவியல்
தாவரவியலில் ஒரு மரம் விளை பொருளைத் தருவதற்கு அது நிலத்தடியில் உள்ள வேர் மூலம் நீரை உறிஞ்சி எடுத்து, புறவெளியில் உள்ள இலைகள் மூலம் கார்பன் டை ஆக்சைடையும்  உறுஞ்சி ,சூரிய ஒளியில் உணவுப் பொருளாய் தனக்கும் பிறருக்கும் உற்பத்தி செய்கின்றது அதன் இடைவிடாப் பணியே இந்த உலகம் உயிர்ப்புடன் வாழ உறுதுணையாக இருகின்றது அதன்.அடிமரம் வீசும் காற்றால் நிலை குலைந்து சாய்ந்து போய் விடாமல் காக்கின்றது. கிளைகளையும் இலைகளையும் உயர எடுத்துச் செல்வதால் மரம் அதிக அளவு சூரிய ஆற்றலை உட்கவருகின்றது.அதனால் மரம் இன்னும் உயர உயர வளருகின்றது.ஒற்றுமையுடன் செயல்பட்டால் மனிதன் இன்னும் உயர்வாக  வாழலாம்  என்பதைத்தான் இது அறிவிக்கின்றது
 இயற்பியல்
இயற்பியலில் ஒற்றுமையை முக்கியப்படுத்திக் கூறும் கருத்துக்கள் பல உள்ளன. ஒற்றைக் குச்சி யின் முறிவு நிலை மிகக் சொற்ப   இழுவிசையுடன் நடைபெறுகின்றது. ஆனால் அதுபோன்ற பல குச்சிகள்  ஒன்று   சேர்ந்திருக்கும் நிலையில் அதிக அளவு முறிவிசை தேவைப்படுகின்றது.பலவீனமான தனிக் குச்சிகள் பல ஒன்று சேர்ந்துவிட்டால் பலமான தாக்குதல் கூட ஒரு பாதிப்பை ஏற்படுத்திவிட முடியாது. பலவீனத்தை ஒரு பலமாக மாற்றிக் காட்டக் கூடிய ஒரு  மந்திரத்தை இது நித்தம் உச்சரித்தாலும் அதன் உட் பொருளை நாம் இன்னும் விளங்கிக் கொள்ளவேயில்லை. 
ஒற்றை அலை ஒரு குறிப்பிட்ட அளவு சிறிய ஆற்றலைத்தான் கொண்டிருக்கும்.ஆனால் பல ஒற்றை  நிற அலைகள் ஒன்று கூடும் போது அவை ஓரின அலைக்கற்றையாகி அதன் அலைவீச்சும், ஆற்றலும் பல மடங்கு அதிகரிக்கும். அதன் செயல் திறன் மிகவும் அதிகம்.  இதைதான் லேசர் என்று நம் கூறுகின்றோம். ஒரே அலைக்கட்டங்களில் உள்ள அலைகளினால் மட்டுமே இப்படிச் செய்ய முடியும். வேறுபட்ட அலைக்கட்டங்களிலுள்ள அலைகள் ஒன்றையொன்று அழித்துக் கொள்ளும் .ஒத்த சிந்தனை உடைய மனிதர்களால் மட்டுமே திடமான முன்னேற்றத்தைத் தரமுடியும், மாறுபட்ட சிந்தனைகள் ஒத்த முடிவுக்கு வராததால் முன்னேற்றம் எப்போதும் மந்தமாகவே இருக்கும் என்ற கருத்தை இது அறிவிப்பதாக இருக்கின்றது
சூழலியல்
சூழலியலில் காட்டு விலங்குகள் கூட்டம் கூட்டமாய் கூடி வாழும்போது  அவை இயல்பாகப் பாதுகாக்கப்படுகின்றன.கூட்டம் கூட்டமாய் சேர்ந்து வாழும் போது  அவை பிற விலங்கினங்களால் தாக்கப்டுவதற்கான வாய்ப்பைக்  குறைவாகப் பெறுகின்றன. அதனால் அவை காட்டில் திறந்தவெளியில் தொடர்ந்து வாழும் நிலையைப் பெறுகின்றன. கூட்டத்தை விட்டு அவை தனித்துப் பிரியும் போது அவை மிக எளிதாகப் பிற விலங்கினங்களுக்கு உணவாகி விடுகின்றன  பரிணாம வளர்ச்சியில் விலங்கினங்களுக்குப் புரிந்த இந்த உண்மையை  மனிதன் மறந்து  ஒற்றுமையின் நன்மைகளை  இழந்து பரிதவிக்கின்றான் . 
மின்ணணுவியல்
மின்ணணுவியலில்   ஒரு டையோடு மின் சுற்றில் ஒரு சில வேலைகளைச் செய்யும். சில டையோடுகள் ஒருங்கிணைந்து மின் சுற்றில் வேலையை செய்யும் போது அதன் செயல் திறன் பட மடங்காகும். ஒருங்கிணைந்த சிலிகான் சில்லுகள் கனணியில் வியத்தகு பணிகளை விரைந்து செய்கின்றன.குழுவாக ஒன்று கூடி வேலை செய்தால் பணிப் பளு இல்லை என்பதைத்தான்  இந்த சின்னச் சின்ன  டையோடுகள் தெரிவிக்கின்றன . 
 மொழி 
 மொழிப்பாடங்களும்  இக்  கருத்தை  வலியுறுத்திக்  கூறத்  தவறவில்லை.அர்த்தமுள்ள வார்த்தைகள் ஒரு சில எழுத்துக்களின் கோர்வையால் உருவாகின்றன. சில வார்த்தைகள் சேர்ந்தால் ஒரு செய்தி ஆகின்றது. வெறும் எழுத்துக்களினால் மட்டும் ஒருவர் ஒரு செய்தியை பிறருக்குச் சொல்லவோ அல்லது கேட்கவோ முடியாது. எழுத்துக்களின் ஒற்றுமையே மொழியின் வளம்.

Wednesday, March 27, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 13

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
இணைந்து படிப்பதை பெரும்பலான மாணவர்கள் முழுமனதுடன் மேற்கொள்வதில்லை.அதற்குக் காரணம் தனக்குத் தெரிந்தது நண்பனுக்கும் தெரிந்து தேர்வில் தன்னைக்காட்டிலும் அதிக மதிப்பெண் வாங்கி விடுவான் என்ற பயம் உள்மனதில் ஓயாது ஒலித்துக் கொண்டிருப்பதுதான். இப்படி பள்ளிப் பருவத்தில் வளர்த்துக் கொள்ளும் பொறாமை எண்ணங்கள் ,பிற்காலத்தில்  சமுதாயாயத்தில்  வாழும் போது தானொரு மதிப்புள்ளவனாக இருப்பதை விட  எல்லோரையும் விட ஒரு படி மேலே இருக்க வேண்டும்  என்ற குறுகிய மனப்பான்மையை வளர்த்துவிடுகின்றன. இதனால் புறநிலையில் பிறருடன் ஒன்று சேர்ந்து இருந்தாலும் அவர்களுடன் அகநிலையில்  ஒற்றுமையாக இணைந்து ஒத்துழைக்கும் மனப்பான்மை இல்லாது போகின்றது . 
பேச்சுப் போட்டி . கட்டுரைப் போட்டி, கலை நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு  முறையும் பங்கு பெறுங்கள். ஓவியம் வரைதல், பழுது நீக்குதல் , கலைப் பொருள் சேகரித்தல்,சதுரங்கம் போன்ற உள்ளரங்க விளையாட்டுக்களில் ஒரு சிலவற்றில் ஆர்வம் கொள்ளுங்கள்.  துணைத் திறமைகளை வளர்த்துக் கொள்ள இது உதவும் . துணைத் திறமைகளை வளர்த்துக் கொள்வது , பயனுள்ள பொழுது போக்கு மட்டுமில்லை, மாற்றங்களால் தினம் மாறிக்கொண்டே இருக்கும் சமுதாயத்தில்  மேற்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ள நம்பிக்கைக்கு உகந்த நம்பிக்கையும் அளிக்கும்.  எனினும் துணைத் திறமைகளில் கொள்ளும் ஈடுபாடு ,சமுதாயத்தில் வாழ்வதற்கான  அடிப்படை ஒழுக்கங்களை கற்பிக்கும் கல்வியை மட்டுப்படுத்தி விடாமல் பார்த்துக் கொள்ள  வேண்டும். துணைத் திறமைக்குள்ளே தன் எதிர்கால வாழ்க்கை இருக்கின்றது என்ற உறுதிப்பாடு, நம்பிக்கையை வளர்த்துக் கொண்ட வர்கள் மட்டும் துணைத் திறமைகளில் அதிக ஈடுபாடு காட்டலாம். எனினும் முதன்மைத் திறமையோடு துணைத் திறமையையும் வளர்த்துக் கொள்வதே  இனமறியாத இழப்பிற்கு வாய்ப்பளிக்காத பாதுகாப்பானது.
கல்வியை முழுமையாக முடிக்கும் வரை துணைத்திறமைகளினால் அமையும் வாழ்க்கையைத் தொடங்கி விடாதீர்கள். ஏனெனில் துணைத்திறமைகளைக் காட்டிலும் உண்மையான உயர் கல்வி கூடுதலான பயன்களைத் தரவல்லது , பலருக்கும் உயர்வைத் தரக்கூடியது .