Friday, February 15, 2013


எழுதாத கடிதம்

நாட்டிற்காக நாட்டை நேசிக்க வேண்டும் என்று ஆன்றோர்கள் கூறுவார்கள் .நாடு என்பது கடல் மட்டத்திற்கு மேல் தோன்றியிருக்கும் வெறும் நிலம் மட்டுமில்லை.அது அங்கு வாழும் மக்களையும் உள்ளடக்கியது .நாட்டின் நலம் என்பது நாட்டு மக்களின் நலமே.

மக்களை நேசிக்கவேண்டும் என்பதற்காகவே நாட்டிற்காக நாட்டை நேசிக்க வேண்டும் என்று சொன்னார்கள் .நாட்டை நேசித்தல் என்பது தேசிய கீதம் பாடுவது,தேசியக் கொடியையும் தேசத்தலைவர்களையும் வணங்குவது மட்டுமல்ல,அதற்கும் அப்பால் எதோ ஒன்று இருப்பதை நாம் நினைத்துப் பார்க்கத் தவறிவருகின்றோம்.மக்களை மக்கள் நேசிக்கும் அளவை எந்தவொரு காரணியைக் கொண்டு மதிப்பிடும் போதும் இந்த உண்மையை த் தெளிவாக ஒருவர் புரிந்து கொள்ள முடியும்

குப்பைகளையும் ,கழிவுகளையும் கண்ட கண்ட இடங்களில் போடாமல் பொதுவிடங்களைச் தூய்மையாக வைத்திருந்தால் அது நாட்டுப் பற்று.

தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு பொதுச் சொத்துக்களைச் சேதப் படுத்துதல் ஒரு தீர்வாவதில்லை. என்பதை உணர்ந்து பொதுச் சொத்துக்களை பாதுகாத்தால் அது நாட்டுப் பற்று.

பதவிக்காக ஒரு வேலை,பணம் பண்ண ஒரு வேலை என்று இல்லாமல் செய்யும் தொழிலை நேர்மையாகவும் உண்மையாகவும் செய்தால் அது நாட்டுப் பற்று .

நாட்டின் நலனுக்காக உழைக்கும் ஏழை எளியோருக்கு இயன்ற உதவி செய்தால் அது நாட்டுப் பற்று.

பிரச்சனைகளுக்கு ஒரு காரணமாக இல்லாமல் ஒரு தீர்வாக இருக்க நினைத்தால் அது நாட்டுப் பற்று.

கிடைக்கும் ஆற்றலையும் .நீரையும் ,விளை பொருட்களையும் தேவையில்லாமல் வீணாகச் செலவழிக்காமல் தேவைக்கு ஏற்ப அளவாகச் செலவழித்தால் அது நாட்டுப் பற்று.

வருங்காலச் சந்ததியினரை நல்லவர்களாகவும்,வல்லவர்களாகவும் உருவாக்க இயன்ற முயற்சிகளைச் செய்தால் அது நாட்டுப் பற்று .

தேர்தலில் போட்டியிட்டு பதவி பெறுவதும் ,மக்களைக் கவர்வதற்காக வெறும் கவர்ச்சித் திட்டங்களைத் தீட்டுவதும், இலவசப் பொருட்களை வழங்கி உழைப்பின்றி எதையும் பெற்று விட முடியும் என்று மக்களை எண்ணத் தூண்டுவதும் நாட்டுப் பற்றில்லை என்பதை உணர்ந்தால் அது நாட்டுப் பற்று.

நாட்டுப் பற்றை இழந்து விட்டால் ஒரு நாள் நாட்டையே இழந்து விட     நேரிடலாம் பருவம் தவறி பயிர் செய்ததைப் போல,கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதைப் போல காலங் கடந்து நாட்டுப் பற்றை வளர்த்துக் கொள்வது என்பது நல்ல பலன்களைக் கொடுப்பதில்லை.

No comments:

Post a Comment