வேதித் தனிமங்கள்-செம்பின் பயன்கள்
நாணயங்கள் ,சமையல் பத்திரங்கள்,கொதி கலன்கள்,மேற்கூரைகள், கப்பலின் அடிப்பகுதி,நீராவிக் குழாய்கள்,மின் கம்பி,மின்வடம்,மின்வாய், போன்றவை செய்ய செம்பு பயன்படுகின்றது.தீப்பற்றிக் கொள்ளும் ஆபத்தான வேதிப் பொருட்களோடு தொடர்புடைய கருவிகள் மற்றும் சாதனங்களுக்கு இரும்பைக் காட்டிலும் செம்பு நற்பயன் அளிக்கிறது. இரும்பைப் பயன்படுத்தும் போது உராய்வினால் ஏற்படும் தீப்பொறி உண்டாக்கும் விபத்து இதனால் தவிர்க்கப்படுகின்றது .
செம்பு அசிடேட் பிரகாசமான பச்சை வர்ணத்திற்குப் பயன் தருகின்றது .வோல்டாமானி (Voltameter) என்ற மின்னாற் பகுப்பு மின்கலங்களுக்கு செம்பு ஒரு முக்கிய மூலப் பொருள்.செம்பை முதல் நிலை மின்னாற் பூச்சாக இரும்புத் தகடுகளில் பூசுகின்றார்கள் .மின் முலாம் பூச்சிற்கு மிகவும் அனுகூலமான மூலங்களில் ஒன்று செம்பு .செம்பு முலாம் பூச்சிற்கான மின்னாற் பகு நீர்மத்தை காரக் கரைசலாகவோ அல்லது அமிலக் கரைசலாகவோ வைத்துக் கொள்ளமுடியும் .
செம்பின் மின் கடத்து திறன் இரும்பை விட 5 மடங்கும் ,அலுமினியத்தை விட 1.5 மடங்கும் ,துத்தநாகத்தை விட 3 மடங்கும்,டைட்டானியத்தை விட 35 மடங்கும் அதிகமுள்ளது.அதனால் செம்பு மின்துறை வளர்ச்சியின் நெம்புகோலாக விளங்குகின்றது.மாங்கனின் ,கான்ஸ்டன்டன் போன்ற செம்பின் சில கலப்பு உலோகங்கள் உயர் மின்தடை கொண்டுள்ளன. இவை மின்னுலை,மின்னடுப்பு போன்ற கருவிகளுக்கு மின் கம்பியாகப் பயன் தருகின்றது.
மின் மாற்றிகள் ,மின் மோட்டார்கள் ,மின்னியற்றிகள் ,மின் காந்தங்கள் போன்றவைகளுக்கான வரிச் சுற்றுகளுக்கு செம்புக் கம்பி இணக்கமானது செம்பின் மின் தடை குறைவாக இருப்பதால் வெப்ப இழப்பும் குறைந்து மின்சாரம் கணிசமாக மிச்சமாகின்றது.கருவிகளைக் குளிர்விக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை .
செம்பு பலதரப்பட்ட கலப்பு உலோகங்களை வழங்கியிருக்கின்றது செம்பும்(99-70%) டின்னும் (1-30%) கலந்த கலப்பு உலோகம் வெண்கலமாகும் (Bronze).இதில் சில சமயம் ஈயம் அல்லது துத்தநாகம் சேர்க்கப்படும். இது கடினமானது,எளிதில் வார்த்தெடுக்க முடிகின்றது. அதனால் சுழல் வட்டுக்கள் (bearings),ஒருவழிச்செலுத்திகள் (Valve)இயந்திர உறுப்புக்கள்,அணிகலன்கள் ,உலோக ஆடிகள்,சிலைகள் கோயில் மணிகள் போன்றவை செய்யப் பயன்படுகின்றது. சிலிகானும் செம்பும் 20:80 என்ற வீதத்தில் கலந்த சிலிகான் வெண்கலம் அலுமினியமும் செம்பும் கலந்த அலுமினிய வெண்கலம் இவற்றில் சிறிதளவு வெள்ளீயத்தை சேர்த்து நாணயங்கள் ,உலோகச் சிலைகள் செய்யவும் பற்றவைப்புக்கான இடு பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது இக் கலப்பு உலோகங்கள் விமானங்களுக்கான இயந்திரங்கள் சுழலிகளுக்கான விசிறிகள் போன்றவைகள் செய்யவும் பயன் நல்கின. பெல் கலப்பு உலோகம் பாஸ்பரஸ் வெண்கலம், துப்பாக்கி உலோகம் (Gun metal) ஜெர்மன் சில்வர் ,பித்தளை போன்ற பல சிறப்புக் கலப்பு உலோகங்களிலும் செம்பு சேர்ந்துள்ளது.பித்தளையில் செம்பும் துத்தநாகமும் முறையே 60-80 % 40-20 % என்ற விகிதத்தில் இருக்கும்.அதற்கு ஏற்ப நிறமும் செம்பின் சிவப்பிலிருந்து பொன்னிற மஞ்சள் வரை மாற்றமிருக்கும் .துத்தநாகத்தின் செறிவு தாழ்வாக இருந்தால் அதை ஆல்பா பித்தளை என்றும் அதிகமாக இருந்தால் அதை பீட்டா பித்தளை என்றும் கூறுவர் .இது பட்டறைப் பயனுக்கு இணக்கமானது என்பதால் பாத்திரங்கள் செய்யப் பயன்படுகின்றது.
விலங்கினங்களுள் அக்டோபஸ் (Octobus ),கணவாய் மீன்,சிப்பிகள் நண்டுகள்,நத்தைகள் போன்ற கடல் வாழ் உயிரினங்களின்
இரத்தத்தில் செம்பு ஹிமோசையனின் (hemocyanin) நிறமியாக உள்ளது.இதில் செம்பு 0.33-0.38 % அடங்கியுள்ளது. ஹிமோகுளோபினில் இரும்பு எங்ஙனம் செயல்படுகின்றதோ அது போலச் செயல்படுகின்றது. வளி மண்டலத்திலுள்ள ஆக்சிஜனுடன் சேரும் போது இந்த நிறமி நீல நிறம் பெறுகின்றது .இதனால் நத்தைகள் நீல நிற இரத்தம் கொண்டவை எனச் சொல்லப்படுகின்றன.உட்கவர்ந்த ஆக்சிஜனை உடலிலுள்ள திசுக்களுக்கு ஆற்றலாகக் கொடுத்த பின் அவற்றின் இரத்தம் நிறமற்றதாகி விடுகின்றது .
சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 0.005 கிராம் செம்புச் சத்து தேவை. செம்புச் சத்துக் குறைவினால் இரத்தச் சோகை,சோர்வு ஏற்பட வாய்ப்புண்டு.இதனால் பலர் செம்புக்கு மருத்துவ குணமுண்டு என்று சொல்வார்கள்.சில உயிரினங்களுக்கு ஒத்துக் கொள்ளும் செம்பு வேறுசில உயிரினங்களுக்கு ஒத்துக் கொள்வதில்லை.சுறா மீன்களுக்கு செம்பு சல்பேட்டுக்கள் ஆகவே ஆகாது.இதை எதிர் சுறாப் பொருள் (anti shark) என்று குறிப்பிடுகின்றார்கள்.கடலில் சிக்கிக் கொண்டவர்கள் சுறாக்களிடமிருந்து தப்பிக்க இவ் வேதிப் பொருளைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.
No comments:
Post a Comment