எழுதாத கடிதம்
மக்களின் பாதுகாப்பான சமுதாய வாழ்க்கைக்கு மக்களே அச்சுறுத்தலாக இருந்துவிடக்கூடாது என்று மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப் பட்ட அமைப்பே அரசு.அரசியல்வாதிகளும் மக்களே என்றாலும் அரசியல்வாதியாக மாறியவுடன் அவர்கள் மக்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக் கொண்டு விடுகின்றார்கள். அதனால் வேலியே பயிரை மேய்ந்த கதைதான் .பயிரைக் காக்க வேண்டுமெனில் வேலியை மாற்றுவதைத் தவிர வேற்று வழியில்லை.
பலகோடிகள் செலவழித்து அரசியல்தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை விட்டுவிட்டு நாட்டில்பெண்களுக்குப் பாதுகாப்புக் கொடுங்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரசுக்கு அறிவுரை கூறியிருப்பதைப் பார்க்கும் போது மக்களின் மீது அரசு கொண்டுள்ள அக்கறையின் அளவு தெரிகின்றது. மக்களின் நலங் காக்க வேண்டியது அரசின் கடமையாகும் .அதை வேறொருவர் சுட்டிக்காட்டுவது என்பது அரசின் செயலின்மையே .அரசின் உண்மையான இலக்கணத்தை ஒரு குறளில் எடுத்துச் சொல்லிய வள்ளுவன் செய்யக் கூடாததைச் செய்யாமல் இருப்பதோடு செய்ய வேண்டியதைச் செய்யவேண்டிய காலத்தில் செய்யவேண்டும் என்றும் கூறியிருக்கின்றார் .பாதிப்பு ஏற்பட்டு அது பற்றி மக்கள் பரபரப்பாக விமர்சிக்கும்போது ஒவ்வொருமுறையும் காலங் கடந்து அரசு அதைப் பற்றி யோசிப்பது என்பது அரசின் பலவீனமாகும். வரிப்பணத்தை முறையாக முதலீடு செய்தால் வருங் காலத்தில் இந்தியா நல்லோர் சிலர் கனவு கண்டது போல ஒரு வல்லரசாக மாறும். வல்லரசாக மாறுவதற்கே நம்மிடம் ஒரு திட்டமும் இல்லை படிப்படியான மாற்றங்களினால் மட்டுமே அது இயலும் வல்லரசாக மாறினாலும் அதை நிலைப்படுத்திக் கொள்வது அதைவிடக் கடினமாகும். படிப்பறிவில்லாதவன் கையில் பகவத் கீதை போல ,குருடன் கொண்ட அழகு ஓவியம் போல ,விளையாடும் சிறுவன் கையில் கோகினூர் வைரம் போல தகுதிப் பாடின்றி பெறும் எதுவும் விரைவில் நம் கையை விட்டுப் போகும்.
No comments:
Post a Comment