Monday, February 4, 2013

Sonnathum Sollaathathum-13


சொன்னதும் சொல்லாததும் -13

ஒற்றுமையே உயர்வு தரும் என்பதற்கு எவ்வளவோ எடுத்துக் காட்டுகள் கூறலாம்.ஆனால் யாரும் வாழ்க்கையில்ஒற்றுமையைக் கடைப்பிடிப்பதில்லை. எல்லாம் வெறும் பேச்சுதான்.வெளியில் ஒற்றுமை மனதிற்குள் பகைமை.எல்லோரும் ஒற்றுமையை விட மனதிற்குள் பகமையையே வளர்த்துக் கொண்டு வருகின்றார்கள்.  

உயர்வு தரும் ஒற்றுமையைப் பற்றி துணிவேதுணை (The Ventures) என்ற புனைப் பெயருடன் உலகப் புகழ் பெற்று விளங்கிய இசைக்குழுவினரிடமிருந்துதான் நாம் கற்றுத் தேறவேண்டும் .

1958 ல் அமெரிக்காவில் வாசிங்கடனில் உள்ள ஒரு கப்பல் கட்டும் நிறுவனத்தில் கப்பலோட்டிக் குழுவில் பணிபுரிந்து வந்த பாப் போக்லே (Bob Bogle) டன் வில்சன் (Don Wilson) ம் சந்தித்துக் கொண்ட போது ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்து கொண்டு நட்பை வளர்த்துக் கொண்டார்கள். இருவரும் மட்டுமீறிய,கட்டுக்கடங்காத இசை ஞானமுள்ளவர்களாகவும்,அதை வெளிப்படுத்திக் காட்ட நல்ல வாய்ப்புக் காக காத்துக் கொண்டிருப்பவர்களாகவும்,ஒத்த எண்ணமும்,கண்ணோட்டமும் உள்ளவர்களாகவும் இருந்தார்கள்.அழியாத, உறுதியான நட்புக்கு இவை உறுதுணை புரிந்தன .இருவரும் சேர்ந்துதாக்கம்” (The Impact ) என்ற புனைப் பெயரில் ஒரு இசைக் குழுவைத் தொடங்கினார்கள் .இது கொஞ்சம் பிரபலமானவுடன் நோக்கி எட்வர்ட் (Nokie Edwards) மற்றும் ஸ்கிப் மூரென் (Skip Mooren) என்ற இருவரும் இணைந்து நால்வர் கூட்டணியாகி ,இசைக் குழுவை புதுப்பித்துக் கொண்டு அதற்கு துணிகரம் (The Ventures) என்றும் பெயரிட்டனர். 1960 களில் இவர்களால் வெளியிடப்பட்ட " நட, ஓடாதே " (Walk,Don’t run) என்ற இசை ஆல்பம் அவர்களுக்கு அளவில்லாத புகழையும் பொருளையும் பெற்றுத் தந்தது. இசைக் குழுவில் பின்னர் மெல் டெய்லர்(Mel Taylor),கெர்ரி மெக்கி(Gerry McGee),லியோன் டெய்லர்(Leon Taylor) போன்றவர்களும் சேர்ந்தனர். இவர்கள் 47 ஆண்டுகள் (1958 -2005) வரை ஒற்றுமையாக இணைந்திருந்து 200 க்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளனர் .1000 கவிதைகள் எழுதி இசையுடன் அரங்கேற்றம் செய்துள்ளனர் .இவர்களுடைய இசை ஆல்பம் ஒவ்வொன்றும் கோடிக்கணக்கில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.உலகமே இவர்களுடைய இசைக்கு அடிமையானது .60 களில் வெளிவந்த செப்டெம்பரே வருக (Come September)என்ற ஆங்கிலத் திரைப்படம்(தமிழில் அன்பே வா) வசூலில் சக்கை போடு போட்டதற்குக் காரணம் கதை ,நடிப்பு மட்டுமில்லை, மயக்கும் இவர்களுடைய அற்புதமான இசையும் தான். இசைக்காகவே அந்தப் படத்தை நூறு முறை பார்த்தவர்கள் கூட இருக்கின்றார்கள்.இன்றைக்கும் அந்த இசையைக் கேட்டால் மனதைப் பறிகொடுக்காதவர்கள் உலகில் இருக்க முடியாது.ஒற்றுமையும், தொழிலில் ஈடுபாடும்,கட்டுக் கடங்காத இசை ஞானமும் இருந்ததால்,கிதார் மற்றும் ட்ரம்ஸ் போன்ற இசைக்கருவிகளில் பல புதுமைகளைப் புகுத்த முடிந்தது. இதை இசைக் கலைஞர்கள் கிதார் விளைவு(Gitar effect) என்று குறிப்பிடுகின்றார்கள் .

விருப்பத் துறையில் வெற்றி பெற வேண்டும்,சாதனைகள் புரிய வேண்டும் என்பது நம்முடைய நோக்கமாக இருந்தால்,அதே துறையில் அதே விருப்பங்கொண்டுள்ள நண்பர்களைத் தேடிக் கண்டுபிடித்து விட்டீர்களேயானால் ஏறக்குறைய பாதி வெற்றி பெற்ற மாதிரித்தான் .அவர்களோடு நேர்மையாகவும், உண்மையாகவும் பழகி உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டு ஒற்றுமையாக வாழ்ந்தால் வெற்றி காலடியில் வீழ்ந்து கிடக்கும் என்பதும் வாழ்கையின் இறுதிவரை மகிழ்ச்சி தொடர்ந்து வரும் என்பதும் இவர்கள் நமக்குச் சொல்லாமல் சொல்லும் அறிவுரைகள்

 

No comments:

Post a Comment