Sunday, August 16, 2020

GOD-2

கடவுளைப் பற்றி ஒவ்வொருவரிடமும் பதில் தெரியாத பல வினாக்கள் இருக்கின்றன.. அதனால் தான் மனிதர்கள் கடவுளை எப்போதும்  ஒரு விவாதப் பொருளாகவே எடுத்துக் கொள்கின்றார்கள்,பதில்  தெரியும் என்று சொல்பவர்கள் எல்லோரும் கடவுளை ஒரு மறை பொருளாகவே வர்ணித்தார்கள் . அவர்களுடைய விளக்கம் அவர்களுக்கு மட்டுமே ஏற்புடையதாக  இருந்தது. கடவுளின் மெய்ப்பொருளைத் தெரிவிப்பதை விட அவர்களுடைய மொழி ப் புலமையே அதில் மேம்பட்டுத்  தோன்றியது . அதனால் சாதாரண மக்களுக்கு அது புரியாத மொழியாகவே நிலைத்தது .கடவுளின் மெய்ப்பொருளை முழுமையாக அறியாதவர்களே இப்படி விளக்கம் சொல்லும் போது , மக்களிடையே ஒற்றுமையை ஊட்ட வேண்டிய கடவுள் ,வேற்றுமையைத் தூண்டக்கூடிய காரணிகளில் ஒன்றாகிப் போய்விடுகிறார் .     . ஒவ்வொருவருக்கும் ஒரு கடவுள் . தன்  கடவுளே உசத்தி. என்ற உணர்வின் தாக்கம்  .இனம் ,மதம் ,மொழி , நிறம் என்ற வேற்றுமைக்கான காரணங்களோடு வழிபடும் கடவுளும் சேர்ந்துகொண்டது நமது புரிதலின்மையின் வெளிப்பாடுதான்.   

கடவுள் எப்படித் தோன்றினார் ? மனிதனைப் போல கருச்  சேர்க்கையினால் தோன்றினாரா இல்லை மனிதனின் கருத்துருவாக்கத்தின்  கதாபாத்திரமா ?. கருச் சேர்க்கையினால் தோன்றினார் என்றால் கடவுளுக்கும் முன்னர் மூத்த கடவுள்கள் இருக்க வேண்டுமே . ஏன் அவர்கள் கடவுளாக அறிவிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படவில்லை ? உலக வரலாற்றில் கடவுள் மனிதனுக்குப் பிறகுதான் எழுதப்பட்டிருக்கிறது . அது கடவுள் மனிதனின் படைப்பாகத்தான்  இருக்கவேண்டும்  என்பதைப் பறைசாற்றுகின்றது.

உலக வரலாறு எழுதப்படுவதற்கு முன்பும் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கடவுள் இல்லையா ? பரிணாம  வளர்ச்சியில் மனிதன்  தோன்றுவதற்கு ஒரு மூல காரணம் தூண்டுதலாக இருந்ததைப் போல , கடவுளின் படைப்பிற்கும் எதோ ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும் .பரிணாம வளர்ச்சி  இயற்கை   என்றாலும் அதில் உயிரினங்களின்   உணர்வுகளும் பங்கேற்கின்றன . ஆனால் கடவுளின் படைப்பு மனிதர்களால்  உணர்வுகளுக்கு ஏற்பப் படைக்கப்பட்டது என்றாலும் அது இயற்கையைப் பிரதிபலிக்க இயற்கைக்காகவே உருவாக்கப்பட்டது.. இயற்கையான உள்ளுணர்வின் உந்துசக்தியே அங்கே கடவுளின் வடிவமானது

நம்முடைய சமுதாய வாழ்க்கையில் பின்பற்றி ஒழுகும் சில பழக்க வழக்கங்களின் பின்னணியைப் பார்க்கும் போது கடவுள் எப்படித் தோன்றினார் என்ற வினாவிற்கான விடை தானாகத் தெரிய வருகின்றது .பெரும்பாலானோர் வீடுகளில் பூஜை அறை இருக்கும். அவ்வறையில் கடவுளின் படங்கள் , உருவச் சிலைகள்  தவிர  காலமாகிப் போன அவர்களுடைய முன்னோர்களின் உருவப்படங்களும் கூட இடம்பெற்றிருக்கும் ..அதாவது முன்னோர்களுக்கு முன்னோர்கள் ,தங்கள் முன்னோர்களைக் கடவுளாக மதித்தார்கள் . அதனால் அவர்களும் பிற கடவுளோடு கடவுளாகிப் போனார்கள். இந்தியாவில் இந்தப் பழக்கம் இன்றைக்கும் பலரது வீடுகளில் நடைமுறையில் இருப்பதை பார்க்க முடிகின்றது  முன்னோர்களின் மறைவிற்குப் பின்னர் அவர்களுடைய ஒளிப்படம் கடவுளின் படத்தோடு சேர்ந்துகொள்கின்றது .கடவுள்கள்  கடவுளாகவே பிறப்பதில்லை. மனிதனாகப்  பிறந்த பின்பே கடவுளாகியிருக்கின்றார்கள். என்பது இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளவேண்டிய செய்தியாகும்  .

காலத்தை பின்னோக்கி ஓடவிட்டு கண்ணோட்டத்தைச் செலுத்தினால் , அந்தப் பழக்கத்தின் அடிப்படையைத் தெரிந்து கொள்ள முடிகின்றது . தங்களுடைய வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் முழு முதற்  காரணமாக இருந்து மறைந்து போன முன்னோர்களை மறக்காமல் எப்போதும் நினைவு கூர அவர்களைக் கடவுளாக்கி வணங்கினர் . இன்னும் பின்னோக்கிப் போனால் அங்கு கடவுளே இல்லை . வெட்ட வெளியில் பாதுகாப்பற்று வாழும் போது அவர்களுக்கு காட்டு விலங்குகளை விட இயற்கையின் சீற்றமே அச்சமூட்டியது . காட்டு விலங்குகளை எதிர்த்து வெல்ல முடிந்தது .ஆனால் இயற்கையை அவர்களால் வெல்லவே முடியவில்லை அப்பொழுது தொடங்கி பாதுகாப்புத் தருமாறு  இயற்கையை மட்டுமே தொழுதார்கள். ஒரே சமுதாயமாக இருக்கும் போது இந்த இயற்கை மட்டுமே கடவுளாக இருந்தது . ஆனால் சமுதாயம் விரிவடைந்து பலவாகப்  பிரிந்த போது இயற்கையின் தனித்தனி அம்சங்களைக் கடவுளாக்கிக் கொண்டார்கள் .அவரவர் தொழிலுக்கு  ஏற்ப. அதற்கு உருவம் கொடுத்தார்கள் .பின்னர் சமுதாயத்திற்கிடையே ஏற்பட்ட போட்டி பொறாமையில் கடவுளின் உருவங்களில் மாற்றம் ஏற்பட்டது.     

No comments:

Post a Comment