மனை போடுதல்
கூடியாக்கி
உண்ணும் நாளில் சிலர் மனை போடுவார்கள் . இன்றைக்கு இது பெரும்பாலும் திருமணத்திற்கு
முதல்நாள் காலையில் நடைபெறுகின்றது .வெளியூர் தீர்மானமாக இருந்தால் பெண் வீட்டில் மட்டும்
இது நிகழும். உள்ளூர் திருமணமாக இருந்தால் இருவர் வீட்டிலும் நிகழும்.வளவில் திருமண
வீட்டிற்கு எதிரே பத்தியில் மனை போடுவார்கள் .அப்போது பங்காளிகள் மற்றும் உறவினர்களில்
உள்ள குடும்பப் பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு செங்கலை எடுத்து வைத்து அதன் மீது குழைத்து
வைத்திருக்கும் மண்ணை எடுத்துப் பூசி அதன் மீது சந்தானம் , குங்குமம் மற்றும் பூ இடுவார்கள்
.பின்னர் அதன் மீது கோலமிடப்பட்ட பளிங்கு மனை வைக்கப்படும். பெண் வீட்டில் இரட்டை மனையும்
மாப்பிள்ளை வீட்டில் ஒற்றை மனையும் வைப்பது மரபு . அந்த மனை மீது இரத்தினக் கம்பளத்தாலான விரிப்பு அல்லது கோலம்
பின்னப்பட்ட தடுக்குகளை வைத்திருப்பார்கள். இந்த மனையில்
அமர்ந்துகொண்டுதான்மணமக்கள் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள் அப்பொழுதே பங்காளி வீட்டு மங்களப் பெண்கள் வளவில் இருக்கும் திருமண வீட்டிலும் , வளவின் நுழைவாயிலுக்கு முன்பாகவும் அரிசி மாவினால் கோலமிடுவார்கள். சம்பந்தபுரத்தார் மாப்பிளையுடன்/ பெண்ணுடன் அழைக்கப் பட்டு வரும் போதும் மாமவேவுக்காக மாமக்கார உறவினர்கள் வரும்போதும் அவர்களை இவ்விடத்தில் நிற்கச் செய்து சிலேட்டு விளக்கு
ஏற்றிவைத்து ஆலத்தி எடுப்பார்கள்.
அப்போது விபூதித் தட்டை கையில் கொண்டு முதலில் தனக்குத் தானேயும் பின்னர் மாப்பிள்ளை அழைப்பின் போது அழைத்து வரப்பட்ட மாப்பிள்ளை மற்றும் அவர்களுடைய பெற்றோர் , உடன்பிறப்புக்களுக்கும் பெண்ணழைப் பின் போது மாப்பிள்ளை பெண்ணுக்கும் விபூதி பூசிவிடவேண்டும்.
நடுவீட்டுக்
கோலம்
தும்பு பிடித்தல்
கோலமிட்டு முடிந்தபின்பு திருமண வீட்டின் வளவறையில்
பெண்வீட்டாரின் பெண்கள் குறிப்பாக அத்தைமார்கள் தும்பு பிடிப்பார்கள். கோலமாவு கரைத்த நீரில் ஏட்டுக் கயிற்றை நனைத்து அதைத் திருமண வீட்டின் உட்புறச் சுவற்றின் மீது ஒருவர் விறைத்துப் பிடிக்க வீடு போன்ற தோற்றம் தருகின்ற ஒரு கோலத்தை சுவற்றில் பதியுமாறு மற்றொருவர் கயிற்றைத் தொட்டு அழுத்தவேண்டும்.
மிஞ்சி போடுதல்
மாப்பிள்ளையின் மாமக்காரர் மாப்பிள்ளைக்கு காலில் மிஞ்சி போட்டுவிடவேண்டும். எளிதில் கழன்று விழுந்துவிடாமல் இருக்க முறையாக மிஞ்சியை நெறுக்கிவிடவிடவேண்டும். முடிந்தால் ஆசாரியின் உதவியையும் பெறலாம். பெண் வீட்டில் பெண்ணின் மாமக்காரர் அல்லது அத்தையர் அவரவர் வீட்டு வழக்கப்படி . பெண்ணிற்கு நகைகள் போட்டுவிடுவார்கள்.
நகரத்தார் திருமணங்களில் தாய்மாமன் பங்கு குறிப்பிடத்தக்கது
.மிஞ்சி போடுவதில் தொடங்கி பெண்ணழைப்பு முடியும் வரை அனைத்துச் சடங்குகளிலும் இவர்
இடம் பெறுவார் .தாய் மாமனோ அல்லது மகனோ மாமப்பட்டு என்று அழைக்கப்படும் இரு சிவப்பு
பட்டுத் துண்டை இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொண்டு இச் சடங்குகளைச் செய்வது மரபு.
பெண்ணிற்கு தாய்மாமக்காரர்கள் பலர் இருப்பின் அவர்கள் விருப்பம்போல
ஒருவர் மாற்றி ஒருவர் திருமணத்தின் போது மாமக்காரராக இருந்து செயல்படலாம்.
No comments:
Post a Comment