Sunday, December 3, 2023

திருமண முன்னேற்பாடுகள்

 திருமண முன்னேற்பாடுகள்.

 இருவீட்டாரும் கலந்து பேசி தங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்கான ஒரு நல்ல நாளை முடிவு செய்துகொள்ளவேண்டும் .அதன்பின்னர் இரு வீட்டாரும் திருமணத்திற்கான முன்னேற்பாடுகளை தங்கள்  வீட்டாரின் உதவிகொண்டு செய்யவேண்டும். இருவீட்டாரும் ஒருவரையொருவர் தொடர்புகொண்டு முடிவெடுக்க ஏதுவாக ஒவ்வொருவரும் மற்றவர் களுடைய ஊர் ,பெயர்,விலாசம் ,முகவரி ,தொலைபேசி  எண் போன்ற விவரங்களைப் பரிமாறிக்கொள்ளவேண்டும். திருமண நாள் முடிவு செய்யப்பட்ட பின்பு முதலில் அதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். ஏனெனில்  ஒரே நாளில் ஒரே பங்காளிகள் சுப காரியங்களை நடத்தும் போது பங்காளிகள் அனைவரும் இருவேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழக்கும் நிலை இதனால்  தவிர்க்கப்படுகின்றது. இன்றைக்கு இதை group  whatsapp மூலம் எளிதாக நிறைவேற்றிக்கொள்ள முடிகின்றது 

 

திருமணத்தை திருமண மண்டபங்களில் நடத்த வேண்டிய நிலை இருந்தால் முதலில் திருமண மண்டபத்தை முன்பணம் கட்டி உறுதிசெய்து கொள்ளவேண்டும். திருமண மண்டபத்தின் வசதிகளை அறிந்து கொண்டு தேவையான பிற வசதிகளை குறிப்பாக திருமண மேடை அலங்காரம் போன்றவற்றை  திருமணத்திற்கு முதல்நாள் மேற்கொள்ளலாம். சில நகரத்தார்கள் தங்கள் வீடுகளை கலியாணத்திற்கு வாடகைக்கு விடுகின்றார்கள் . கொஞ்சம் வசதிக் குறைவுதான் என்றாலும் செலவும் கணிசமாகக் குறைவுதான்.      அடுத்து திருமண விருந்திற்கு  சமையல் மேஸ்திரியை அழைத்து முறைப்படி உறுதிப் படுத்திக் கொள்ளவேண்டும் . பின்னொரு நாளில் மேஸ்திரியை வரவழைத்து விருந்தினர்களின் எண்ணிக்கை ,விருந்தின் அட்டவணை போன்றவற்றைக் கருத்திற்கொண்டு எல்லாருடனும் கலந்து செலவினங்களை முடிவு செய்துகொள்ள வேண்டும்.  தீஞ் சாமான்கள் மற்றும் காய்கறிகளை வாங்கிக்கொடுத்தோ அல்லது அவற்றை சமையல் மேஸ்திரியே வாங்கியோ  திருமண விருந்தை ஏற்பாடு செய்து அதற்கான செலவுகளை முன் திட்டமிட்டுக்கொள்ளலாம்  .இன்றைக்கு திருமண விருந்தை சில மெஸ் உரிமையாளர்கள் வழங்குகின்றார்க்ள் . விசாரித்து நல்ல சுவையான விருந்து கொடுக்கக்கூடிய மெஸ் உரிமையாளரை நாம் தேர்வு செய்யவேண்டும்.

 

பொதுவாக நகரத்தார்கள்  பெண் பிள்ளை பெற்றெடுத்த முதல்நாளிலிருந்தே அவர்களுடைய திருமணத்திற்கான  சீர்வரிசைக்கான சாமான்களையும் நகைகளையும் சேமிக்க த் தொடங்கிவிடுவார்கள் .எனினும் தகுதிக்கு ஏற்றார் போல கூடுதல் நகைகள் கொடுக்க வேண்டியிருந்தால் அந்த நகைகளைச் செய்ய  முன்கூட்டியே  ஏற்பாடுசெய்ய வேண்டும்.எதிரி வீட்டாருக்கும் ,உறவினர்களுக்கும் முறைக்குக்  கொடுப்பதற்கான  சாமான்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் .திருமணத்  தம்பதிகளை வாழ்த்தியவர்களுக்கு வழங்கப்படும்  அன்பளிப்புப் பைக்கு ஏற்பாடு செய்துகொள்ளவேண்டும் .

 

மணமகளுக்கு  மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தின் போது கொடுக்க வேண்டிய நகைகளையும் சீர்வரிசைச் சாமான்களையும் வாங்கிவைத்துக்கொள்ளவேண்டும்.பட்டுச் சேலைகள்,சுடிதார் ,நைட் டி மற்றும் பிற உள்ளாடைகள் வாங்க ஒரு இணக்கமான நாளில் மணப்பெண்ணோடு துணிக்கடைகளுக்குச் சென்று மணப்பெண்ணின் விருப்பத்திற்கு ஏற்ப  ஆடைகளை வாங்கலாம் .மாப்பிள்ளைக்கு பெண் வீட்டார் திருமணத்தின் போது கொடுக்கவேண்டிய கைக்கடிகாரம் ,தங்கச் சங்கிலி , கைச் சங்கிலி போன்றவற்றை வாங்க ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும். மாப்பிள்ளை வீட்டாரிடம் ஒரு குறிப்பிட்ட ரூபாயைக் கொடுத்து மாப்பிளைக்கான ஆடைகள் வாங்கிக் கொள்ள ச் செய்யலாம்   

 

திருமணப் பத்திரிக்கை ,அதற்கான கவர் ,பேசி முடித்துக்கொள்ளும் விவரங்களைத் தெரிவிக்கும் அழைப்புக் கடிதம் இவற்றைப் பிழையின்றித் அச்சடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் .உற்றார் உறவினர்களின் சரியான முகவரிகளைச் சேகரித்து அனைவருக்கும் திருமணத்திற்கு 1 மாதம் முன்பாக அவர்களுக்குக் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். முடிந்தால் அவர்களுக்கு அழைப்பிதழ் கிடைத்துவிட்டாத என்பதை தொலைபேசி மூலம் உறுதி செய்து கொள்ளவேண்டும் . தலைப் பிள்ளையாக இருந்தால் மாமவேவுக்கான பத்திரிக்கை அச்சடிக்க வேண்டும். இத அழைப்பை மாமக்கார உறவினர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்துகொள்ளவேண்டும். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய முறைச் சாமான்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக உடன் பங்காளிகளுக்கு இந்த முறையை அழைப்பிதழ் கொடுக்கும்போதே கொடுத்துவிடுவார்கள். மேம்பங்காளிகளுக்கு  திருமணத் தில்  கலந்து கொண்டவர்களுக்கு மட்டுமே கொடுப்பார்கள். மாம வேவை திருமண நாளிலோ அல்லது அதற்கு முதல் நாளிலோ தோதுக்கு ஏற்றார் போல நடத்தலாம் .

No comments:

Post a Comment