Saturday, December 2, 2023

கோயில் பொருத்தம்

 

வரன் தேடும் பொழுது முதலில் தெரிந்துகொள்ளவேண்டியது கோயில் பொருத்தம் உள்ளதா என்பதையே. ஜாதகமின்றி திருமணத்திற்காகப் பார்க்கப்படும் பொருத்தங்களுள் ஒன்று கோயில் பொருத்தம். இது நகரத்தார்களின் பண்பாடுகளோடு அறிவியல் பூர்வமான தொடர்புடையது. செட்டியார் இனத்தில் நாட்டுக் கோட்டை நகரத்தார் அவர்கள் சார்ந்துள்ள கோயில் பிரிவுகளால் வேறுபடுகிறார்கள். நகரத்தார்கள் அனைவரும் 9 கோயில் பிரிவுகளில் அடங்குவர் .அவை இளையாற்றங்குடிக் கோயில், மாத்தூர் கோயில் நேமங் கோயில் ,இரணியூர் கோயில் ,பிள்ளையார்பட்டி கோயில் ,இலுப்பைக்குடி கோயில் ,சூரக்குடி கோயில் ,வைரவன் கோயில் மற்றும் வேலங்குடி கோயிலாகும்.

நகரத்தார் கோயில் பிரிவுகளில் உட்பிரிவுகள் உண்டு .கைலாசநாதரை சுவாமியாகவும் நித்யகல்யாணியை அம்மையாகவும் கொண்ட  கல்வாச நாட்டில் இளையாற்றங்குடியான குலசேகரபுரத்தில் 7 உட்பிரிவுகள்  உள்ளன. அவை 1.ஒக்கூருடையார் 2,அரும்பார்கிளையரான பட்டணச் சாமியார், 3.பெருமருதூருடையார், 4,கழனிவாசக்குடியார் 5.கிங்கினிக் கூருடையார், 6.பேர செந்தூருடையார் 7.சிறு சேத்தூருடையார்     

ஐநூற்றிசரை சுவாமியாகவும் பெரியநாயகியை அமையாகவும் கொண்ட கேரள சிங்கவள நாடாகிய பிரம்பூர் நாட்டில் மாற்றூரான வீரபாண்டி புரத்தில்  7 உட்பிரிவுகள் உள்ளன. அவை 1.உரையூருடையார் 2.அரும்பாக் கூருடையார் 3.மணலூருடையார் 4.மண்ணூருடையார் 5.கண்ணூருடை யார் 6.கருப்பூருடையார் 7.குளத்தூருடையார்.

வளரொளிநாதரை சுவாமியாகவும் வடிவுடையம்மையை அமையாகவும் கொண்ட கேரள சிங்கவள நாடாகிய  ஏழகப்பெருந்திருவான வீரபாண்டிபுரத்தில் 3 உட்பிரிவுகள் உள்ளன .அவை 1.பெரியவகுப்பு 2.தெய்யனார் வகுப்பு (தெய்வ நாயகர் வகுப்பு) 3. பிள்ளையார் வகுப்பு.

ஆட்கொண்டநாதரை சுவாமியாகவும் சிவபுரத்தேவியை அம்மையாகவும் கொண்ட கால்வாச நாட்டில் இளையாற்றங்குடியான குலசேகரபுரத்தில் இரணியூர் மருதங்குடியான இராஜ நாராயணபுரத்தில் இரணியூர் திருவேட் பூருடையார் என்று ஒரு பிரிவு மட்டுமே உள்ளது.

திருவீசரை சுவாமியாகவும், சிவகாமவல்லியை அம்மையாகவும் மருதீசரை சுவாமியாகவும் வாடாமலர் மங்கையை அம்மையாகவும் கொண்ட கல்வாசநாட்டில் இளையாற்றங்குடியான குலசேகரபுரத்தில் இரணிவூர் மருதங்குடியான இராஜநாராயணபுரத்தில் பிள்ளையார்பட்டி யான திருவேட்பூருடையார் என்று  ஒரு பிரிவு மட்டுமே உள்ளது.

ஜெயங்கொண்ட சோழேசரை சுவாமியாகவும் சவுந்தர நாயகியை அமமையாகவும் கொண்ட  கேரள சிங்கவள் நாட்டில் நேமமாகிய குலசேகரபுரத்தில் தேனாறு பாயும் இள நலமுடையார் என்று ஒரு பிரிவு மட்டுமே உள்ளது.

தான்தோன்றியீசரை சுவாமியாகவும் சவுந்தர நாயகியை அம்மையாகவும் கொண்ட கேரள சிங்க வள நாட்டில் இலுப்பைக்குடியான புகழிடங்கொடுத்த பட்டினத்தில் சூடாமணி புரமுடையார் என்று ஒரு பிரிவு மட்டுமே உள்ளது

தேசிகநாதரை சுவாமியாகவும் ஆவுடைநாயகியை அமையாகவும் கொண்ட கேரள சிங்கவள நாட்டில் சூரைக்குடியான தேசிக நாராயண புரத்தில் புகழ் வேண்டிய பாரக்கமுடையார்  என்று ஒரு பிரிவு மட்டுமே உள்ளது

சண்டீசுவரரை சுவாமியாகவும் காமாட்சியம்மையை அமையாகவும் கொண்ட கேரள சிங்க வள நாடாகிய பாலையூர் நாட்டில் வேலங்குடியான தேசிக நாராயணபுரத்தில் கழனி நல்லூருடையார் என்று ஒரு பிரிவு மட்டுமே உள்ளது .

 ஒரு கோயில் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஒரே குடும்பத்திலிருந்து விரிந்து வந்தவர்களாவர் .அவர்கள் ஒரே மரபியல்  பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஒருவருக்கொருவர் கோயில் பங்காளிகளாகின்றார்கள் .அதனால் ஒரே பிரிவைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதில்லை என்ற நெறிமுறையை நகரத்தார்கள் இன்றைக்கும் பின்பற்றி வருகின்றார்கள் . இவற்றுள் இளையாற்றங்குடி மற்றும் மாத்தூர் கோயிலைச் சேர்ந்த புள்ளிகள் அதிகமிருப்பதால் ஒரே உட்பிரிவிற்குள்ளேயே வரன் அமைந்துவிடுகின்றது என்பதால் இளையாற்றங்குடி மற்றும் மாத்தூர் கோயில் பிரிவினர் தங்களுடைய உட்பிரிவுகளுக்குள் சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் .வைரவன் கோயில் உட்பிரிவினர் அப்படி சம்பந்தந்தை  மேற்கொள்வதில்லை .பிள்ளையார்பட்டி கோயிலாரும் இரணிக் கோயிலாரும் ஒருவர் பிரிவில் மற்றவர் திருமணம் செய்து கொள்வதில்லை. வரன் பார்க்கத் தொடங்கும்போது கோயில் பொருத்தம் இருக்கின்றதா என்று பார்க்கவேண்டும் . அதாவது இளையாற்றங்குடி மற்றும் மாத்தூரின் 7 உட்பிரிவுகளோடு மற்ற 7 கோயிலாரையும் சேர்க்க மொத்தம் 21 பிரிவுகளாகும். இப்பிரிவினர்  ஒவ்வொருவரும் தமது பிரிவினருக்குள் வரன் தேடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே கோயில் பொருத்தமாகும்

.

No comments:

Post a Comment