ஒரு நாட்டின் வளர்ச்சிஎன்பது நாட்டு மக்களின் ஒருமித்த வளர்ச்சியே. கருத்து வேறுபாடுகளை ஒருபாற்கோடாமை இன்றி பேசித் தீர்த்துக்கொள்ளலாம் . அப்போது ஒருவருக்கு ஏற்படும் இன்னல்களையும் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்துப் பேசினால் தீர்வு ஏற்படும். சுயநலம் ஒருவரைத் தீயவனாக வளர்த்துவிடுகின்றது. தீயவர்கள் பெரும்பான்மையினராக வளரும் போது தீயவர்களேஆட்சிப்பொறுப்பிற்கு வருகின்றார்கள் . தீயவர்கள் ஆள்பவர்களாக இருக்கும் போது சமுதாயத்தில் தீயவர்களே பெரும்பான்மையாகி விடுகின்றார்கள். தீயவர்களாக இருந்துகொண்டு தீயவர்களை வளர்த்து விடுவதால் காலப்போக்கில் தீயவர்கள் பெரும்பான்மையாகி ,அந்தப் பெரும்பான்மையினைத் தக்கவைத்துக்கொள்ள ஒன்று சேர்ந்து செயல்படு கிறார்கள் . அவர்களுடைய ஒற்றுமையில் நன்மக்கள் அச்சப்பட்டு முடக்கப் பட்டுவிடுகின்றார்கள் .இன்றைக்கு நேர்மையானவர்கள் எவரும் அரசியலில் ஈடுபட விரும்புவதில்லை தப்பித் தவறி வந்தவர்கள் தீயவர்களாக மாற்றப்பட்டு விடுகின்றார்கள் .மாறாதவர் பிழைத்திருக்கவேண்டுமானால் அரசியலை விட்டு விலகவேண்டும். இல்லாவிட்டால் மரணத்தை தழுவ நேரிடும்.
நேர்மைத்தனம் விளம்பரம் தேடுவதில்லை . விளம்பரம் தேடும் நேர்மை உண்மையான நேர்மையாக இருப்பதில்லை . விளம்பரமில்லாத நேர்மை மக்களைச் சென்றடைவதில்லை என்பதால் அதை எதிர்ப்பது விளம்பரத்தால் வாழும் தீயவர்களுக்கு எளிதாக இருக்கின்றது . தீயவர்கள் இந்த அளவிற்கு முன்னேறி வந்ததிற்குக் காரணம் அவர்களுக்குள் இருக்கும் புரிதலுடன் கூடிய உள்ளார்ந்த ஒற்றுமைதான் . உழைப்பின்றி கிடைக்கும் வருமானத்தில் நஷ்டம் என்பதே இல்லை . இலாபத்தில் ஏற்படும் நஷ்டத்தை ஏற்றுக்கொண்டு விடுவதால் இந்த ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுவதில்லை . வருமானம் சீனியர் ,ஜூனியர் அடிப்படையில் பங்கிடப்படுகின்றது . இதில் மாற்றம் ஏற்படும்போது அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேடிக்கொள்கின்றார்கள். கட்சி மாறுவதும் , புதிய கட்சி தொடங்குவதும் இந்த நிலையின் பின்விளைவுகளே.
நேர்மையான அரசியல் இந்திய நாட்டிற்குத் தேவை. அதை நேர்மையான ஒருவரால் மட்டும் தரமுடியாது . நேர்மையானவர்கள் கூட்டு முயற்சியால் மட்டுமே தரமுடியும் .நேர்மையானவர்கள் ஒன்று சேராவிட்டால் இது ஒருநாளும் கைகூடாது.