Sunday, March 15, 2026

  நீல்ஸ் போரின் அணு தொடர்பான கொள்கை ஒற்றை எலெக்ட்ரானைக்  கொண்டுள்ள ஹைட்ரஜன் அணு மற்றும் ஹைட்ரஜன் போன்ற அயனிகளுக்கு மட்டும் ஏற்புடையதாக இருக்கின்றது . அதனால் அவற்றின் நிறமாலை வரிகள் மற்றும் அயனியாக்க ஆற்றல் போன்ற விவரங்களை துல்லியமாகக் கணக்கிட்டு அறிந்து கொள்ளமுடிகிறது .ஹைட்ரஜனை விடக்  கூடுதலாக அணுவெண்  கொண்ட அணுக்கள்  ஹைட்ரஜனைப் போல ஈருறுப்பு அமைப்பாக இல்லாமல்  பல்லுறுப்பாக இருப்பதால் அணுக்கரு -எலெக்ட்ரான் இடைவினையோடு எலெக்ட்ரான் -எலெக்ட்ரான் இடைவினைகளும் இணைவதால் விளைவுகளில்  குறிப்பிடும்படியான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன . இந்த இடைவினைகள் வட்டப் பாதைகளில் இயங்கும் எலெக்ட்ரான்கள் இயக்க வேகம் , தற் சுழற்சி , இடைத் தொலைவு மற்றும் இடைதொலைவுகளில் ஏற்படும் மாற்றங்கள் இவற்றைச் சார்ந்திருக் கின்றது .இதன் காரணமாக போரின் ஹைட்ரஜன் அணுக் கொள்கை வரம்பு களுக்கு உட்பட்டதாக இருக்கின்றது . போரின் அணுக் கொள்கையை ஹைட்ரஜன் தவிர்த்து பிற அணுக்களுக்கும்  விரிவுபடுத்தும் நோக்கத்தை ஆய்வின் கருவாகக் கொண்டு மறுஆய்வு செய்த போது  முதலில் சிந்தனையைத் தொட்டது வட்டப்பாதைகளில் விரைவாக இயங்கும் எலெக்ட்ரான்களின் சார்பியல் நிறை மாற்றம். வட்டப்பாதையில் இயங்கும் எலெக்ட்ரானின் வேகம் 10^6 மீ /வி என்ற நெடுக்கையில் இருப்பதால் இந்தத்  திருத்தம் தேவை என்று முடிவு செய்யப்பட்டது  .   உயர் அணுவெண் கொண்ட அணுக்களுக்கு போரின் கொள்கையை விரிவுபடுத்தி அவற்றின் நிறமாலை வரிகளை அறியும் வழி முறைகளுக்கு  சார்பியல் சார்ந்த ஹைட்ரஜன் அணுக் கொள்கை   வழி கட்டலாம். இந்த  நோக்கத்தின் அடிப்படையிலேயே  இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment