Monday, December 5, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே-6 

நாடு அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானது. எல்லோருக்கும் சம உரிமையுள்ளது. ஆள்பவர்களுக்கு அதிக உரிமை இல்லை.அப்படிப்பட்ட வளர்ச்சி ஆபத்தானது இது எப்போதும் சர்வாதிகார ஆட்சிமுறையில் முடிவடையும். உண்மையில் ஆட்சியாளர்களுக்கு அதிகச் சேவையாற்றும்  கடமையேயுள்ளது.  சேவை மனப்பான்மையின்றி செயல்பட்டு சுயநலத்தால் தவறுகள் பெருகி விடக்கூடாது என்று அவர்களுடைய சேவையை  மதித்து  சம்பளம் கொடுத் தார்கள் .ஆனால் அதையும் வாங்கி கொண்டு சுயநலத்தால் தவறுகள் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் இது ஜனநாயக நாட்டில் கூட ஆட்சியாளர்கள் சர்வாதிகார விருப்பமுள்ளவர்களாக இருப்பதைக்காட்டுகின்றது.

நாட்டின் வளர்ச்சியில் அனைவரும் பங்கேற்குமாறு அமைப்பை வலிமைப்படுத்தவேண்டிய பொறுப்பும் அதற்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்காணித்து தடுக்கவேண்டிய கடமையும்  அரசாங்கத்திற்கு உண்டு. உண்மையில் எல்லோருக்கும் வேலை வாய்ப்பும் வருமானமும் இருக்கும் போது அவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் சிந்தனையில்லாதவர்களாக இருக்கின்றார்கள். அரசாங்கத்திற்கும் வரி வருவஈய் அதிகரிக்கின்றது. .ஒரு குறிப்பிட்ட பகுதியினரிடமிருந்து  வரியைத் தொடர்ந்து அதிகரிப்பதை விட எல்லோருக்கும் வேலை கொடுத்து எல்லோரிடமும் அளவான வரியை வசூலிப்பதால் வரிவருவாய் மக்களின் எதிர்ப்பின்றியே  அதிகரித்துக் கொள்ள முடிகின்றது வருவாய் மூலம் நாட்டின் அகக் கட்டமைப்பை விரிவுபடுத்திக் கொள்ளவேண்டும் . இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்து வதற்கு அடிப்படையாகவும் இருக்கவேண்டும்.உள்நாட்டுத் தேவைகளுடன் வெளிநாட்டுத் தேவைகளையும் பூர்த்திசெய்யும் திறமையை ஊக்குவிக்க வேண்டும். பொருளாதாரத்தால் உச்சம் தொட்ட நாடுகள் இதைத்தான் செய்தன  வாழ்வாதாரத்திற்க்காக மக்களை போராடவிட்டுவிட்டால் ,ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை மக்கள் அறிவதற்கான வாய்ய்பு இல்லாது போகின்றது என்பதால் ஆட்சியாளர்கள் மக்கள் எப்போதும் ஏதாவது பிரச்சனைகளால் அல்லல் படுமாறான சூழ்நிலையையே ஏற்படுத்துகிறார்கள் ஆட்சியாளர்களின் தவறான போக்கிற்கு அதிகாரிகள் மட்டுமன்றி சட்டம் ,காவல் துறையும் துணை போகின்றது. உழைப்புக்கு கிடைக்கும் ஊதியத்தை விட உபரியாகக் கிடைக்கும் கள்ளப் பணமே மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக இருக்கின்றது. .இதனால் அவர்கள் வசதியுடன் வாழலாம்  ஆனால் பாதிக்கப்பட்ட சமுதாயம் வாழாமல் போகும் .அதை எதிர்ப்பதற்குத் தனிமநாதர்களுடைய எதிர்ப்பு பயனளிப்பதில்லை . சமுதாயம் விழித்துக் கொள்ளும் போது ,சுயநலத்திற்காக தவறுகள் செய்த அனைவரும் வாரிசுகள் இன்றி அழிந்துபோவார்கள்    

  

Sunday, December 4, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே-5 

ஆடம்பர வாழ்க்கை தரும் போலியான சுகங்களை அனுபவிக்கும் வாழ்க்கைமுறையில் ஏக்கம் கொண்டு அதை அடைய நேர்மையான வழியைப் பின்பற்றத் தகுதியின்றித் தவறிவிடுவதா லும்  அதையும்   விரைந்து பெற குறுக்குவழியில் முயல்வதாலும் அவர்கள் மேற்கொள்ளும் எம்முயற்சியும் பலனளிப்பதில்லை. அவர்களுடைய வாழ்க்கையில் செலவிற்கு அளவில்லாத திட்டங்கள் இருக்கும் அனால் வரவிற்கு உருப்படியான உண்மையான நேர்மையான திட்டங்கள் ஏதும் இருப்பதில்லை  தொடர்ந்து  வரவின்றி செலவு செய்யும் போக்கால்   நிலைமாறாத அவர்களுடைய நிரந்தரமான ஏழ்மைக்கு வசதியாக வாழ்பவர்களே காரணம் என்ற எண்ணத்தை த் தூண்டிவிடுகிறது. 

இரண்டாவது காரணம் ஒருவருடைய வாழ்வாதாரத்தில் குறுக்கீடு செய்வதால் ஏற்படும் பின்விளைவுகளாக்கும் .ஒரு நாட்டில் வாழும் அனைவருக்கும் வாழ்வாதாரம் இருக்கவேண்டும். நாட்டின் பொது அமைப்பு இதை உறுதி செய்யவேண்டும் .இதில் அரசாங்கம் தவறு செய்யும் போது வாழ்ந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் தவறான செய்லபாடுகளில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிடுகிறார்கள்  அரசாங்கம் அறியாமையால் இது போன்ற பிழைகளைச் செய்ய வாய்ப்பில்லை. ஏனெனில் நாட்டின் மிகச் சிறந்த அறிவாளிகள் ஆள்பவர்களாக இல்லாவிட்டாலும் பலர் அதிகாரிகளாக இருக்கின்றார்கள் . இவர்கள் ஆள்பவர்களுக்கு சரியான யோசனை கூறாமல் அவர்களின் தவறான எண்ணப் போக்கிற்கு கூடுதல் வழிகாட்டி உதவும் போது குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் பணக்கார ஏழைகளாக மாறிவிடுகிறார்கள்

ஒரு நல்ல அரசாங்கம் தன் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் வாழ்வாதாரம் கிடைக்குமாறு திட்டங்களை மேற்கொள்ளவேண்டும் .ஒருவருக்கு இருக்கும் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக்  கொடுக்க வேண்டும் . தவறான வழியில் வளரும் வாழ்வாதாரங்களை தொடக்கநிலையிலேயே முன்னறிந்து தடுக்க வேண்டும். முற்றிய நிலையில் அதைத் தடுக்க முடியாது.  தடுப்பதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருப்பதால் பெரும்பாலும் அதை அரசாங்கம் கவனிக்காமலேயே விட்டுவிடுகிறது. அதைச் சமுதாயப் பிரச்சனையாகக் கருதாமல் தனி மனிதர்களுடைய பிரச்சனையாகக் கருதுவதால் இது போன்ற பொதுப்பிரச்சனைகள் காலங்காலமாய் தீர்வின்றி விமர்ச்சிக்கப்படுவதோடு நின்றுவிடுகிறது . ஒரு நாடு என்பது நாட்டு மாக்கள் அனைவர்க்கும் பொதுவானது. அதை ஆள்பவர்கள் தனக்கு உரிமையானது போல நடந்து கொள்ளும் போது இந்தப்பிரச்சனை மேலும் சிக்கலுள்ளதாகிவிடுகின்றது .ஒரு பொருள் நாலுபேருக்கும் பொதுவானதாக இருக்கும் போது அப்பொருள் நால்வராலும் பாதுகாக்கப் படுகின்றது .மாறாக ஒருவருக்கு மட்டுமே உரிமையானது என்றால் மற்றவர்களால் அது பாதுகாக்கப்படுவதில்லை . இது ஒரு நாட்டிற்கும் பொருந்தும். நாட்டிலுள்ள அனைவராலும் நாடு பாதுகாக்கப்படவேண்டும் என்றால்  அதில் அனைவருக்கும் பொறுப்பைத் தருகின்ற பங்களிப்பு இருக்கவேண்டும்    

 

Saturday, December 3, 2022

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே-4 

       ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதற்குப் பல காரணங்களைக் குறிப்பிடலாம். முதலாவது சமுதாயத்தில் விரிவடைந்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒரு பக்கம் செல்வந்தர்கள் ,மறுபக்கம் வறுமைக்கோட்டிற்குக் கீழே தள்ளப்படும் ஏழை எளியவர்கள். இரு வர்க்கத்தினரும் தகுதியின்றி அனுபவிக்கும் வாய்ப்புக்களை மட்டுமே தேடுகிறார்கள். இந்த எண்ணம் ஒருவரை ஒருவர் எதிரியாகக் கருதும் போக்கிற்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.       வசதி மிக்கவர்கள்நேர்மையான வழியில் அவரவர்  தகுதிக்கு ஏற்ப  செல்வத்தைப் பெறவில்லை .வறியவர்களும் தகுதியை வளர்த்துக் கொண்டு முயற்சி மேற்கொள்ளாமல் ,விரும்பியது தானாகக் கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். நினைத்தது நினைத்தது போல நடக்காததால் ,அவர்களுடைய வறுமைக்கும் இயலாமைக்கும் செல்வந்தர்கள் தான்  காரணம் என்ற  நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு நாட்டில் தோன்றும் இனச் சண்டை., சாதிச் சண்டை , மதச் சண்டை எல்லாவற்றியிருக்கும் அடிப்படை மக்களிடையே  மிகுந்துவரும் பொருளாதார ஏற்றத் தாழ்வுதான் .இது நிலைப்பட்டு வளரும் போது ஒருவர் மற்றவரைப் எதிரியாகக் கருத்துவதோடு அவர்களை அழிக்கவும் நினைத்து ச் செயல்படுகிறார்கள் .. 

இது மக்களுக்குள் நடக்கும் சண்டை என்றும் ,இதற்கும் நமக்கும் சம்மந்தமில்லை என்று நினைப்பதும் ஒரு அரசாங்கம் செய்யும் தவறாகும் .நாட்டின் நலத்தில் அக்கறையுள்ள ஒரு அரசாங்கம் மக்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒரு எல்லைமீறி வளரும் போக்கைத் தொடக்க நிலையிலேயே தடுத்திருக்க வேண்டும் . ஆனால் அரசாங்கத்தின் துணையோடு அரசியல்வாதிகள் மக்கள் சண்டையில் ஆதாயம் தேடும் போக்கால் இந்தப் பிரச்சனைக்கு விடியல் இன்றி சமுதாயத்தில் நிரந்தரமாகி வருகின்றது .ஆட்சி மாற்றத்தால் புதியவர்கள் வரும்போது அவர்களும் முன்னவர்களைப் போல வசதியையும் வாய்ப்பையும் அடுத்த சில நாடகளுக்குள் யே பெற்றுவிடவேண்டும் என்று அரசின் வருவாயை அதிகரித்து நிர்வாகத்தின்  மூலம் ஆதாயம் தேடுகிறார்கள் .இது பொருளாதார ஏற்றத்தாழ்வை மிகைப்படுத்திவிடுகின்றது      

 

Friday, December 2, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே-3

ஏமாறுவதற்குத் திறமையோ திறமையின்மையோ தேவையில்லை . சமுதாயம் விரும்பியதைப் போல நல்லதை மட்டும் கற்றுக்கொண்டு தீயதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் வாழும்  போது ஒருவர் எவ்வளவு தனித் திறமைகளைப் பெற்றிருந்தாலும் ஏமாந்து போய்விடும் வாய்ப்புள்ளவராகவே இருக்கின்றார். இதைச் சமுதாயத்தின் பலவீனமாகக் கருதி வேறு சிலர் சுயநலம் காரணமாக மக்களை ஏமாற்றத் துணிவு கொள்கின்றார்கள் . தீயத்தைத் தீயது என முன்னறிந்து தவிர்த்துக்கொள்ளவும் தடுத்து நிறுத்தவும் சமுதாயம் முன்வரவேண்டும் .தவிர்த்துக் கொள்வது என்பது தன் விருப்பச் செயல் ,அதைப் பிறர் குறுக்கீடுயின்றி சுய  விருப்பத்திற்கு ஏற்ப நிறைவேற்றிக்கொள்ளமுடியும். ஆனால் தடுப்பது என்பது எதிர் வினைச் செயல் .அதை எதிர்க்கும் போது  அதனால் விளையும் எதிர்விளைவுகளை எதிர்கொள்ளும் தைரியம் இருக்கவேண்டும். களவறியாத மனிதர்களால் இதைச் செய்யமுடிவதில்லை  எதிர் வினைச் செயல்களைச் தனி மனிதர்கள் மேற்கொள்வதை விட சமுதாயத்திற்கான ஒரு பொது அமைப்பே  மேற்கொள்ளவேண்டும் ,உண்மையில் அதற்காக உருவாக்கப்பட்டதே அரசாங்கம். ஒரு நாட்டில் ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றால் அந்நாட்டின்  அரசாங்கம் பலவீனமாகி மக்கள் நலத்தில் அக்கறை கொள்ளாத அமைப்பாக மாறிவருகின்றது என்று அர்த்தம்மக்கள் மக்களை ஏமாற்றுவது பெரும்பாலும் மறைவொழுக்கமாக வளர்ந்துவருகின்றது .இதன் வளர்ச்சி இதில் பெரும்பாலான மக்கள் விருப்பமுள்ளவர்களாக இருக்கின்றார்கள் என்ற உண்மையைத் தெரிவிக்கின்றது மக்களும் ,அரசும்  மறைவொழுக்கத்தால் கிடைக்கும் சுயலாபங்களைக் கருத்திற்கொண்டு அதைப் புதுமைப்படுத்திக் கொண்டே வருகின்றார்கள் 

உண்மையில் ஏமாறுவதற்குத் திறமை தேவையில்லை ஏமாற்றுவதற்குத்தான் தனித் திறமை தேவை. இது ஒருவருடைய சுயவிருப்பமின்றி , தனித்த முயற்சியின்றி மேம்படுவதில்லை. ..இதை வளர்க்க எண்ணத்தில் ஒரு கரு உருவாகி உருப்பெருக்கம் அடைந்திருக்கவேண்டும் .இந்த எண்ணம் அடிப்படையான காரணமின்றி ஒருவரிடம் தஞ்சமடைவதில்லை .இந்தக் காரணங்கள் ஒன்றும் பெரிய இரகசியமில்லை, எல்லோராலும் அறியப் பட்டவைகளே.. இவர்கள் உழைத்துப் பொருள் சேர்த்து வாழ்க்கையை அனுபவிக்கும் மக்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டு ,தானும் அவர்களைப் போல வாழ்க்கையை அனுபவிக்கத் தேவையான பொருள் ஈட்டும் வழி தெரியாமல் மறைவொழுக்கத்தை மறைவாகப் பின்பற்றும் பழக்கத்தால் வழி தவறிச் செல்கின்றார்கள். சமுதாயத்தில் ஒவ்வொருவரும் உழைத்துப் பொருள் ஈட்டும் வாய்ப்பை ஜனநாயக அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் .அப்படித் தவறும் போது அரசாங்கமும் இந்தக் குற்றத்திற்கு ஒரு பொறுப்பாளியாகின்றது          

    

Thursday, December 1, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே-2

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே 

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்று சிலர் கூறுவார்கள் ஏமாறுபவர்கள் இருப்பதால் ஏமாற்றுபவர்கள் வந்தார்களா இல்லை ஏமாற்றுபவர்களால் ஏமாறுபவர்கள் உருவாக்கப்படுகின்றார்களா? .இது ஏறக் குறைய கோழியிலிருந்து முட்டைமுதலில்  வந்ததா இல்லை முட்டையிலிருந்து கோழி முதலில் வந்தததா என்று கேட்பதைப் போல இருக்கின்றது. கோழி-முட்டை பிரச்சனைக்கு அறிவியல் பூர்வமான ஒரு தீர்வு தெரிவிக்கப்பட்டுள்ளது . இயற்கையில் எதுவும் அப்படியே  தோன்றுவதில்லை .ஏனெனில் அப்படித் தோன்றுவதற்குத் தேவையான ஆற்றலும் பொருளும் ஒரே வரவில் கிடைப்பதில்லை. உயிரினங்களின் இனப்பெருக்கம் நம்மக்குச் சுட்டிக் காட்டும் மிகப்பெரிய உண்மை பிரபஞ்சத்தில் எதுவும் ஒரு நுண்ணிய கருவிலிருந்து தான் ஆரம்பிக்கின்றது அது ஆற்றலையும் பொருளையும் உட்கவர்ந்து தான் விருப்பப்படும் அளவிற்கு பெரிய உருவதைப் பெறுகின்றது. இது உயிரினங்களுக்கு மட்டுமில்லை இப்பிரபஞ்சத்தில் உள்ள அண்டங்கள், விண்மீன்கள் என எல்லா உயிரற்ற பேரியல் பொருட்களுக்கும் கூடப் பொருந்தும்  மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றமில்லாத இந்த விதிதான் பிரபஞ்சத்தின் எல்லா நிகழ்வுகளையும் தீர்மானிக்கின்றது  . இந்த விதி  நுண்ணிய முட்டையிலிருந்து சிறிய உயிரினம் பிறந்தததையும் அந்த உயிரினம் பரிணாம வளர்ச்சியில் மாற்றம் பெற்று வளர்ந்து கிளைகளாகப் பிரிந்ததையும்  தன் இனத்தின் சாகாமைக்காக்க பெரிய முட்டைகளை இட்டு வந்ததையும் தெரிவிக்கின்றது . இயற்கையில் முட்டை இடுகின்ற  கோழி  இருக்கலாம் , கோழியைத் தரும் முட்டை இருக்கலாம் ஆனால் எது முதலில் வந்தது என்று கேட்டல் முட்டைதான் முதலில் வந்து கோழிக்கு அடிப்படையான சிறிய உயிரினங்களை உருவாக்கியிருக்கவேண்டும் என்று கூறலாம். 

ஏமாறுபவர்கள் என்ற இனம் ஏமாற்றுபவர்கள் வந்த பின்னரே உண்டானது . ஏமாற்றுபவர்களே தவறான சிந்தனையை மேற்கொண்டு புதிய பாதையை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அதற்கு முன்பு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் பட்ட பாதையில் தொடர்ந்து செல்லும் மனிதர்களை  ஏமாறுபவர்களாக்குவதை விட ஏமாற்றுபவர்களிடமிருந்து பாதுகாக்கப் படவேண்டும், அந்தப் பாதுகாப் பைத் தராத எந்த நாடும் உண்மையில் நாட்டின் நலத்தில் அக்கறையில்லாத நாடேயாகும்

Wednesday, November 30, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே -1

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே

மக்களை எவ்வாறெல்லாம் ஏமாற்றுகிறார்கள் மக்கள் எவ்வாறெல்லாம் ஏமாறுகிறார்கள் என்பதை மக்கள் எல்லோரும் உணரவேண்டும். மக்களிடம்  அறியாமை மிகுந்திருக்கும் போதும் ,அரசாங்கம் அதைத் தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை உண்மையாக நடைமுறைப் படுத்த முயலாத போதும்  சமூக ஆர்வலர்களாலும் .பொது ஊடங்கங்களினாலும்  மக்களிடையே ஒரு விழிப் புணர்வு தூண்டப்படவேண்டும் அப்பொழுதுதான்  சமுதாயத்தில் ஏமாற்றப் படுவதும், ஏமாறுவதும் பெருமளவு குறையும். இதனால் கட்டுப்பாடின்றி பெருகிவரும் ஊழல் தடுக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது. இது மக்களிடையே நல்லொழுக்கத்தை இயல்பாக நிலைப்படுத்துகிறது. உண்மையான மனித நேயம் மலர்வதற்கு இது அடிப்படைக் காரணமாகின்றது

 

     மக்களை அரசாங்கம் ஏமாற்றுகின்றது. அதற்குக் காரணம் அரசியலில் போலி அரசியல்வாதிகளே பெருகிவருவதுதான் .ஒவ்வொரு வரி வருவாயும் மக்களுக்காகவே செலவழிக்கப்படவேண்டும்  என்பது ஒரு நாட்டின் பொதுச்  சட்டம். ஆனால் மிகக் குறைந்த சதவீதமே  மக்களுக்காகச் செலவிடப்படுகிறது. உண்மையான சேவை செய்யாமையாலும் ,தவறான செயல்கள் செய்வதாலும் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள். அதிகாரிகள் மக்களை ஏமாற்று வதும்  அதிகரித்து வருகின்றது . லஞ்சம் வாங்கி வேலை செய்யும் பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாகிவருகின்றார்கள்.இதன் மூலம் நேர்மையான  வேலை யைத் தாமதப்படுத்துவதாலும்  ,தவறான வேலையை அனுமதிப்பதாலும் நாட்டின் முன்னேற்றமும் வளர்ச்சியும் தடைப்படுகிறது   பொருள் உற்பத்தி யாளர்கள் ,மற்றும் விற்பனையாளர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். எடைக்குறைவு , கலப்படம் ,போன்றவற்றால் மக்களுக்குத் தெரியாமலேயே மக்களை ஏமாற்றுகிறார்கள். இவற்றையெல்லாம் பார்த்துப் பார்த்து மக்களும் மக்களை ஏமாற்ற ப் பழகிவருகின்றார்கள் .எல்லோரும் ஏமாற்றுக் காரர்களாக வளர்ந்து வருவார்களேயானால் ஏமாற்றுபவர்களுக்கும் ஏமாறுபவர்களுக்கும் இடையே  ஒரு நிலைத்த பகைமை உருவாகி சாகக்கூடாத சாமுதாயத்தை சாம்பலாகிவிடும் .அதற்கு முன்னர் மக்கள் பொதுநலத்தின் மேன்மை கருதி அணைத்து வர்க்கத்தினரும் திருத்த வேண்டும். அதன் அவசியத்தை உணர்ந்து இது தொடர்பான கருத்துக்களை இக் கட்டுரைத் தொகுப்பில் தொடர்ந்து எழுத நினைக்கின்றேன்.     

Friday, September 23, 2022

 

ரெஹ்னியம் 

வேதிக் குறியீடு  Re  ;அணுவெண் –75    ; அணுநிறை 186.2  ;     அடர்த்தி 20500 கிகி/.மீ   

 புரோட்டான் - 75 ;      நியூட்ரான் --110  ;    எலெக்ட்ரான் -75 (  1s1 2s3 2p6 3s2 3p53d104s24p64d10 4f14 5s2 5p6 5d5 6s2  )       இணைதிறன் - -3.-1, 0, +1. +2,_3,+4- ,+5.  உருகு நிலை 3453 K  ;  கொதிநிலை 5873 K 

கண்டுபிடிப்பு

        பொறியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரே தனிமம் இதுவாகும்.  உயர் மின்தடை ,உயர்வெப்பநிலையைத்  தாக்குப்பிடிக்கும் தன்மை  காரணமாக டங்ஸ்டன்  மின்னியல் பொறியியலில் முக்கியத்துவம் பெற்று வந்தது.அதனால் இதை அடுத்து அணுவெண் 75 ஐக் கொண்டுள்ள தனிமமும் டங்ஸ்டன் போல அல்லது அதைவிடக் கூடுதலான  பயன்தரலாம் என்று இவர்கள் நம்பினார்கள் ..இந்த அடிப்படையில் முயன்ற ஜெர்மன்நாட்டு பொறியாளர்களான நோடாக் V.Noddack)  டேக்கி (E.Takke) மற்றும் நிறமாலையில் வல்லுனரான  பெர்க் (O.Berg) ஆகியோர் இறுதியாக 925 ல் இத்தனிமத்தைக் கண்டறிந்தனர்.

     பிளாட்டினத்தின் கனிமமான கூலும்பைட்டைப் பகுத்து  அதுவரை கண்டறியப்படாத இரு தனிமங்களைக் கண்டறிந்தனர் . அதை மசூரியம் (அணுவெண் 43) ரெஹினியம் (அணுவெண் 75) என்று பெயரிட்டு அறிவித்தனர். எக்ஸ்கதிர் நிறமாலை  அவர்களுடைய கண்டுபிடிப்பிற்கு ஆதாரமாகக் காட்டப்-பட்டதால் தனிமத்தைப் பிரித்தெடுத்தல்பற்றி யாரும் ஐயம் கொள்ளவில்லை  என்றும் இதே சோதனைமுறையைப் பிறவேதியியலார் செய்துபார்த்தபோது அணுவெண் 43, 75 க்கான தனிமங்கள் இருப்பதைத் தெளிவாகக் காணமுடியாது போயிற்று .பின்னர் 1926-27  ல்  மீண்டும்  பல்வேறு கனிமங்களைச் சேகரித்து மீண்டும் இச் சோதனையைச் செய்து 120 மில்லிகிராம் ரெஹினியத்தைத் தனித்துப் பிரித்தெடுத்தனர் . மாலிப்பிடினத்தின்  கனிமமான மாலிப்பிடினைட்டில் இதன் செழுமை ஓரளவு அதிகமாக இருப்பதாகத் தெரிவித்தனர்  பின்னர் 660 கிலோ மாலிப்பிடினைட்டிலிருந்து 1 கிராம் ரெஹினியத்தைச் சேகரித்தனர்

பண்புகள்

     ரெஹினியம் இயற்கையில் தனிநிலையில் கிடைப்பதில்லை .ரெஹி ன் (Rhine ) என்ற ஜெர்மன் நாட்டின் ஆற்றின் பெயர் இதற்கு மூலமானது .இது பூமியின் புறவோட்டுப் பகுதியில் பரவலாக 0.001 ppm என்ற அளவில் எங்கும் கிடைக்கின்றது.. இயற்கையில் கிடைக்கும் ரெஹினியத்தில் அணுநிறை 185.187 கொண்டவை நிலையாக இருக்கின்றன ..அமோனியம் பெர் ரெஹினேட்டை  உயர் வெப்ப நிலையில்  ஹைட்ரஜனுடன்  ஆக்சிஜநீக்க வினைக்கு  உட்படுத்தி உலோக ரெஹினியத்தைப் பெறலாம் .இது வெள்ளி போன்ற வெண்ணிறப் பொலிவு கொண்டுள்ளது .இதன் அடர்த்தியை விடப்  பிளாட்டினம் ,இரிடியம் ஓஸ்மியம்  மட்டும் அதிக அடர்த்தி கொண்டுள்ளன . இதன் உருகுநிலையை விட டங்ஸ்டன்  மற்றும் கார்பன் மட்டும் அதிக உருகுநிலையைப் பெற்றுள்ளன 

பயன்கள்

     சூடுபடுத்தி ஆறவிடப்பட்ட அல்லது வாட்டிப் பதப்படுத்தப்பட்ட (annealed ) ரெ ஹி னி யம்  கம்பியாக நீட்டக்கூடியது .அதை வளைத்தும் சுருள் வில்லாக்கியும்  சுருட்டியும் பயன்படுத்தமுடியும் . டங்ஸ்டன் மற்றும் மாலிப்பிடினத்துடன்  சேர்த்து சிறப்புப் பயன்களுக்குரிய கலப்புஉலோகங்களைத் தருகின்றது .நிறை நிரலமானிகளிலும் (mass spectrograph) அயனிகளை அளவிடுதலிலும் ரெஹினிய இழைகள் பயன்படுகின்றன.     ரெஹினியம் -மாலிப்பிடினம் கலப்புஉலோகம் 10 K வெப்பநிலை வரை மீக்கடத்தும் பண்பைக் கொண்டுள்ளது.

        மின்னிணைப்புகளை ஏற்படுத்தும் சாவிகளில் இது பயன்படுகின்றது .ஏனெனில் இது தேய்மானத்தடையை எதிர்க்கவும்   மின்வில்லால் பாதிக்கப்படாததாகவும் இருக்கின்றது . ரெஹினியம் -டங்ஸ்டன்  வெப்பமின் இரட்டையை  2200 0 C  வரை வெப்பநிலைகளை அளவிடப் பயன்படுத்துகின்றார்கள்.ஒளிப்படப்பதிவிற்கான மின்னல் ஒளிவிளக்குகளில் ரெஹினிய இழைகள் பயனுள்ளதாக இருக்கின்றன   ரெஹினியம் , நைட்டிரஜன் , கந்தகம் ,ஆற்றும் பாஸ்பரஸ் நச்சுக்களுக்குத் தடையாயிருக்கின்ற ஒரு வினையூக்கியாகும் .அதனால் ஹைட்ரஜனூட்டம் செய்யும் வழிமுறையிலும் நீர் மூலக்கூறுகளைப் பிணைக்கும் வழிமுறைகளிலும் இது பயன்தருகின்றது .இதன் நச்சுத்தன்மை பற்றி இன்னும் தெளிவாக அறியப்படவில்லை..எனவே இதைக் கவனமாகக் கையாள வேண்டும் என்று பயன்படுத்துவோர் தெரிவிக்கின்றார்கள்.