Saturday, January 26, 2013

Arika Iyarpiyal


அறிக இயற்பியல்

Q என்ற ஒரு மின்னூட்டம் q மற்றும் Q -q என இரு மின்னூட்டங்களாகப் வகுக்கப்படுகின்றது .எந்த இடைப்பட்ட தொலைவிலும் அவ்விரு மின்னூட்டங்களுக்கு இடையேயான மின்விலகு விசை பெருமமாக இருக்க q விற்கும் Q விற்கும் உள்ள தொடர்பு என்ன ? பெரும விசையில் பாதியளவே மின் விலகு விசையை ஏற்படுத்த மின்னூட்டம் எவ்வாறு வகுக்கப்படவேண்டும் ?

கூலும் விதிப்படி q மற்றும் Q - q என்ற இரு மின்னூட்டங் களுக்கு இடையேயான மின் விலகு விசை F max = q(Q -q )/K r 2 ஆகும் . F max , q மற்றும் Q -q க்கு நேர் விகிதத்தில் இருக்கிறது. q ன் குறைந்த மதிப்புக்கு q வாலும் ,கூடுதல் மதிப்புக்கு (Q -q ) வாலும் மின் விலகு விசை குறைவாக இருக்கும் .q ன் ஒரு குறிப்பிட்ட மதிப்புக்கு மின் விலகு விசை பெருமமாக இருக்கும். அந்நிலையில் dF max /dq = 0 என்பதால் அதைப் பயன்படுத்தி      

q = Q /2 என்ற நிபந்தனைத் தொடர்பைப் பெறலாம் .அதாவது பெரும மின் விலகு விசைக்கு ஒரு மின்னூட்டம் இரு சம மின்னூட்டங்களாக வகுக்கப்படவேண்டும்.இந்த பெரும மின் விலகு விசை F max = Q 2/4 K r 2 ஆக இருக்கும். மின் விலகு விசை பெருமத்தில் பாதியாக இருந்தால்

 F = F max /2 = Q 2/8K r 2 .இது q மற்றும் Q -q என்ற இரு மின்னூட்டங்களுக்கு இடைப்பட்ட மின்விலகு விசை என்பதால் அதிலிருந்து 8q 2 - 8q Q + Q 2 என்ற இருபடிச் சமன்பாட்டைப் பெறலாம். இது q = Q /2 + Q /2(2)1/2 என்ற மதிப்பைத் தருகிறது .

Friday, January 25, 2013

Vinveliyil Ulaa

விண்வெளியில் உலா-கன்னி ராசி மண்டலமும் அண்டை வட்டாரங்களும்
பூட்டெஸ் (Bootes)
ராசி மண்டல விண்மீன் கூட்டங்களுள் இரண்டாவது பெரிய வட்டாரம் விர்கோவாகும் .இவ் வட்டார விண்மீன் கூட்டம் பேரண்டத்தின் நடுவரைக் கோட்டுப் பகுதியில் லியோவிற்கும் லிப்ராவிற்கும் இடையில் அமைந்துள்ளது .சூரியன் கதிர்வீதியில் நகர்ந்து செல்லும் போது இவ் வட்டாரத்தில் செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 31 வரையிலான காலத்தைக் கழிக்கின்றது .இது கன்னி ராசிக்குரிய நட்சத்திரக் கூட்டமாகும் .
இந்த வட்டார விண்மீன் கூட்டம் நீதிக்குரிய பெண் கடவுளான டிக்கியை (Dike) பெருமைப்படுத்துவதற்காக என்று சிலரும், தானியங்களுக்கான                 பெண் கடவுளான டிமெட்டரை (Demeter) நினைவூட்டுவதற்காக என்று வேறு சிலரும் கூறுவார்கள் .இதில் 95 விண்மீன்களை வானவியலார் இனமறிந்துள்ளனர்.இதிலுள்ள முக்கியமான விண்மீன் ஸ்பைகா என அழைக்கப்படும் ஆல்பா வெர்சினிஸ் ஆகும் .இது லியோ வட்டாரத்திலுள்ள ரெகுலஸ் என்ற விண்மீனை விட பிரகாசமிக்கதும், வெப்பமிக்கதும்,பலமடங்கு பெரியதுமாக உள்ளது .இதனுள் 600 சூரியன்களை உள்ளடக்கிவிடலாம் .இதன் முன்னே நமது சூரியன் யானையின் முன்னே பூனை போன்றது .262 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஸ்பைகா விண்ணில் தெரியும் பிரகாசமான விண்மீன்களின் வரிசையில் 15 வதாக உள்ளது .
ஸ்பைகா,ரெகுலஸை விடக் கூடுதலான தொலைவில்,அதாவது 185 ஒளி ஆண்டுகள் தள்ளி இருந்தாலும் ஸ்பைகா ஓரளவு பிரகாசமாக ,தோற்ற ஒளிப்பொலிவெண் 0.98 உடன் காணப்படுகின்றது .ஸ்பைகா வெண் நீல நிறத்துடன் ஒளிர்கின்றது .இதை நம்மவர்கள் சித்திரை என அழைப்பார்கள் .தொலை நோக்கி இதற்கு ஒரு துணை விண்மீன் இருப்பதாகப் புலப்படுத்தவில்லை .ஆனால் ஒளி -மின் அளவீட்டு முறைகள் அதன் ஒளிச்செறிவில் நுண்ணிய அளவு ஏற்றத்தாழ்வுகள் இருப்பதைச் சுட்டிக் காட்டின .அப்போது அதன் ஒளிப்பொலிவெண் 0.1 மாற்றத்திற்கு உட்பட்டிருந்தது.இது அலைவுகால முறைப்படி நிகழ்ந்ததால் ஸ்பைகா ஒரு மறைப்பு வகை இரட்டை விண்மீனாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.ஆராய்ச்சி முடிவுகள் மிகமிக அருகாமையில் ஒரு துணை விண்மீன் 4 நாட்களுக்கு ஒருமுறை ஸ்பைகாவைச் சுற்றி வருவதைத் தெரிவித்தன .
ஸ்பைகா என்றால் லத்தீன் மொழியில் கோதுமையின் கதிர் எனப் பொருள்படும் .இதைக் கன்னிப் பெண்ணொருத்தி இடது கையில் பிடித்திருப்பது போல விர்கோ நட்சத்திரக் கூட்டம் கற்பனை செய்யப்பட்டுள்ளது.
இவ் வட்டாரத்தில் வானவியலாரின் கவனத்தைக் கவர்ந்த மற்றொரு விண்மீன் பொரிமா (Porrima) என்ற காமா வெர்ஜினிஸ் ஆகும்.வெறும் கண்களுக்கு 2.7 என்ற ஒளிப்பொலிவெண் கொண்ட இது ஒரு தனி விண்மீன் போலத் தோன்றினாலும் உண்மையில் இதில் வெளிறிய மஞ்சள் நிறமும்,ஏறக்குறைய சமமாக தோற்ற ஒளிப்பொலிவெண் 3.5 ம் கொண்ட இரு விண்மீன்கள் பொது மையத்தை 169 ஆண்டுகளுக்கொருமுறை சுற்றி வருகின்றன என்று 1718 ல் பிராட்லி என்ற வானவியலார் கண்டறிந்தார். இவற்றின் கோண விலக்கம் சுமார் 5 வினாடிகள் .39 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த இரட்டை விண்மீன்களுக்கு இடைப்பட்ட தொலைவு 44 வானியல் தொலைவாகும் .1836 லும் 2005 லும் இந்த விண்மீன்கள் விண்மீன் கள் நெருக்கமாக இருந்தன 1920 லும் 2089 லும் அதிகமாக விலகி இருக்கும்  
 

Vethith Thanimangal- Chemistry


வேதித் தனிமங்கள் -செம்பு -பிரித்தெடுத்தல்

இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செம்பைப் பற்றி மக்கள் அறிந்திருந்தார்கள்.இதற்குக் காரணம் செம்பு இயற்கையில் ஒரு தனி உலோகமாகக் கிடைப்பதும் அதன் கனிமங்களிலிருந்து மிக எளிதாக ப் பிரித்தெடுக்க முடிவதும் ஆகும்.

செம்பு செம்பாக அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்திலும் ரஷ்யாவில் சில விடங்களிலும்,ஆஸ்திரேலியாவின் தென் பகுதிகளிலும்,பொலிவியா நாட்டிலும் கிடைக்கின்றது .உலோகங்கள் மற்றும் அலோகங்களுடன் செம்பு சேர்ந்து பல வகையான கனிமங்களாகவும் காணப்படுகின்றது .இந்தியாவில் பீகாரில் சிங்பம் மாவட்டத்தில் செம்பு கிடைக்கின்றது .இவற்றுள் முக்கியமானது குப்ரைட் ,மாலசைட் ,அசுரைட் ,சால்கோ பைரைட் ,டெனொரைட் ,போர்னைட் போன்றவைகளாகும் .

கந்தகக் கலப்பில்லாத செம்புக் கனிமத்துடன் கால்சியத்தைச் சேர்த்து அதிலிருந்து ஈரம் மற்றும் கார்பன் டை ஆக்சைடை அகற்றி சூட்டுலையில் கரியுடன் சேர்த்து ஆக்சிஜனிறக்கம் செய்து செம்பைப் பிரித்தெடுக்கலாம் .கந்தகக் கலப்புள்ள செம்புக் கனிமத்தில் இரும்பு ,ஆர்செனிக் ,மற்றும் கந்தகம் வேற்றுப் பொருளாகக் கலந்துள்ளன என்பதால் இவற்றைத் தொடர் வழிமுறைகளினால் மட்டும் தூய்மையூட்டி செம்பைப் பிரித்தெடுக்க முடிகின்றது.தூய்மையற்ற செம்பை மின்னார் பகுப்பு முறை மூலம் 99.99 % வரை தூய்மைப்படுத்தலாம்.சில வகைப் பாக்டீரியாக்களைக் கொண்டும் செம்புக் கழிவிலிருந்து செம்பை தனித்துப் பிரித்தெடுக்க முடிகிறது.இது உயிரி வேதியியல் வழிமுறையாகும் .

பண்புகள்

இதன் வேதிக் குறியீடு Cu ஆகும். பழங்காலத்தில் உள்ள செம்புச் சுரங்கங்களில் மிகவும் பிரபலமானது சைப்ரஸ் ( Cyprus ) தீவிலுள்ளதாகும் .இதிலிருந்துதான் செம்பு என்ற பெயரே உருவானது .இலத்தீன் மொழியில் செம்பிற்கு குப்ரம் (Cuprum ) என்று பெயர் .இதன் அணுவெண் 29 ,அணு நிறை 63.54, அடர்த்தி 8920 கிகி /கமீ ,உருகு நிலையும் ,கொதி நிலையும் முறையே 1356 K ,2853 K ஆகும் .செம்பு செந்நிறமும்,பளபளப்பும்,உறுதியும் கொண்ட ஓர் உலோகம் .இதை அடித்து தகடாகப் பயன்படுத்தவும் கம்பியாக நீட்டி உபயோகிக்கவும் முடிகின்றது. தங்கம் ,வெள்ளிக்கு அடுத்தபடியாக உயரளவு வெப்பம் மற்றும் மின் கடத்தும் திறனைப் பெற்றுள்ளது .வறண்ட காற்று செம்பைப் பாதிப்பதில்லை .ஆனால் ஈரமான காற்று வெளியில் அதன் பொலிவு மங்கிப் போகின்றது .இதற்குக் காரணம் கருமையான குப்ரிக் ஆக்சைடு ஆக்சிஜனேற்றத்தால் படிவதே ஆகும்.இது பச்சை நிறத்தில் சுடர் விட்டு எரிகிறது,காற்றில் எரிவதில்லை ,ஆனால் பழுக்கச் சூடான நிலையில்,அது மெதுவாக ஆக்சிஜனேற்றம் பெறுகின்றது .புளூரின் ,குளோரின் போன்ற வளிமங்கள் செம்பின் புறப்பரப்பைத் தாகுகின்றன .செம்பு ஹைட்ரஜனுடன் நேரடியாக இணைவதில்லை .

குளிர்ந்த நிலையில் நீர்த்த மற்றும் அடர் கந்தக மற்றும் ஹைட்ரோ குளோரிக் அமிலங்கள் செம்பை அரிப்பதில்லை .காற்றின் முன்னிலையில் நீர்த்த கந்தக அமிலம் செம்பை மெதுவாக அரிக்கிறது .சூடான கந்தக அமிலத்தில் செம்பு விரைவாகக் கரைகிறது .அடர் மற்றும் நீர்த்த நைட்ரிக் அமிலத்திலும் செம்பு விரைவாகக் கரைகின்றது .