Saturday, January 2, 2021

ஊழலற்ற சமுதாயம் – 1

 

என் நண்பரொருவர் பாலி டெக்னிக்கில் கட்டிடப் பொறியியல்   படித்துவிட்டு ஒரு நகராட்சியில்  நீர் மேலாண்மைத் துறையில் பணிபுரிந்து வந்தார். அவரது குடும்பம் சிறியது மனைவி, ஒரு மகன், ஒரு மகள். பிள்ளைகள் பள்ளியில் இறுதி வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்கள்  வாங்கும் சம்பளம் குடும்பத்தை இனிதாக நடத்திச் செல்லப்   போதுமானதாக இருந்தது . செலவு போக கொஞ்சம் சேமிக்கவும் முடிந்தது .குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் தங்களின் நியாயமான  தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன்  மகிழ்ச்சியாக இருந்தார்கள் .ஒருவரிடமும் ஒளிவு மறைவு இல்லை . வெளிப்படைத் தன்மை  இருந்ததால் உறவை பலப்படுத்திக் கொள்ள வாய்ப்பாக இருந்தது. அது எதிர்கால மகிழ்ச்சிக்கும்  பாதுகாப்பிற்கும் உறுதியும் அளித்தது .   

 

ஆற்றில் நீர் எப்போதும் அமைதியாகவே ஓடிக்கொண்டிருப்பதில்லை என்பதைப்போல  காலம் எப்போதும் ஒரே மாதிரியாகக் கடந்து செல்வதில்லை   உண்மையில் ஆற்றின்  ஆழ, அகலத்தைப்  பொருத்தும், நீர்ம அழுத்தத்தைப் பொருத்தும் ஆற்று நீரின் அமைதியும் ஆர்பரிப்பும்  அமைகின்றது. ஆற்றைப் பொறுத்தவரையில் ஆழமும் அகலமும்  அகத் தாக்கம் , நீர்ம அழுத்தம் புறத்தாக்கம். இதைப்போல ஒவ்வொரு மனிதனும் அகத் தாக்கத்தாலும்,  புறத்தாக்கத்தாலும் பாதிக்கப்படுவதுண்டு ஒரு மனிதன் பிறரைப் பார்த்துத் தானாகக் கெட்டுப்போவது அகத் தாக்கம்,பிறரின் போதனையால் கெட்டுப் போவது புறத்தாக்கம். மனைவி மக்கள் பிறரின் போதனையில் மயங்கி , குடும்பத் தலைவனைத் தவறான வழியில் பொருள் சம்பாதிக்க போதிப்பதிப்பதும் ,நிர்பந்திப்பதும் மிகவும் மோசமானது.ஏனெனில் இது மிக எளிதில் ஒரு தீய எண்ணத்தை உட்புகுத்தி தீய செயலை உடன் செய்யத் தூண்டிவிடும் அகத் தாக்கமானாலும் புறத் தாக்கமானாலும்  இரண்டுமே மனம் ஒப்புக்கொண்டு அனுமதித்தால் மட்டுமே நிகழும் என்பதால் ஒருவருடைய நல்ல மற்றும் கெட்ட நிலைக்கு அவரே காரணமாக இருக்கின்றார் என்று சொல்வார்கள்.

 

பொதுவாக பிறரோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்கும் போது வாழ்க்கை நிலையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் நமக்குள் ஒரு சலனத்தை  ஏற்படுத்திவிடுவதுண்டு. மனதைக்  கட்டுப்படுத்தி தன் தேவையை மட்டும் உணர்ந்துகொண்டவன் தப்பிப் பிழைக்கின்றான் .மனதில்  எழும் போராட்டத்தில் வீழ்ந்துவிடுவதில்லை மனத்தைக் கட்டுப்படுத்தத் தவறியவனே துன்பத்திற்கு ஆளாகின்றான். பொதுவாக அண்டைவீட்டுக்காரர்கள் , அலுவலக  நண்பர்கள் ,பணக்கார உறவினர்கள் எல்லோரும் மனதில் ஒரு சலனத்தை  தற்பெருமை பேசிப்பேசியே தூண்டிவிட்டுவிடுகின்றார்கள்.ஒரு சிலர் தவறான வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் அறிவுரை கூறுவார்கள். சிக்கிக் கொண்டவர்கள் மாயவலையில் விழுந்து துன்பப்  படுகின்றார்கள் . மற்றவர்களோடு வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்காத வரை  மனதில் சலனம் ஏற்படுவதற்கு வழியில்லை .  அது புறத்தாக்கத்தை அனுமதிக்காத நிலை யாகும் .தேவைகளும் தேவையின்றி  அதிகரித்து வாழ்க்கையை பாரமாக்கிவிடுவதுமில்லை.

 

தவறு செய்பவர்கள் அந்தத் தவறு செய்வதற்கான ஒரு காரணத்தை முன்கூட்டியே மனதில் தேக்கி வைத்திருப்பார்கள் . அது அவர்கள் தவறுகள் செய்வதற்கு சமுதாயம் தந்த அனுமதிச் சீட்டுப்போல நினைத்துக் கொள்வார்கள் பெரும்பாலானோர் வறுமை காரணமாகத் தவறு செய்வதாகக் கூறுவார்கள். வேறு சிலர் குடும்பத்தின் தேவைக்காக, நாகரிக வாழ்க்கைக்காக , தொழிலில் முதலீடு செய்வதற்காக வாங்கிய கடனை அடைப்பதற்க்காக் , வீட்டுக்குத் தெரியாமல் செய்த குற்றங்களை மறைப்பதற்காக , என்று பல காரணங்களை சொல்லுவார்கள்.  உண்மையில் எந்தக் காரணத்திற்க்காகத் தவறு செய்தாலும் ,அது காலப்போக்கில் அந்த காரணமின்றியே செய்யும் மன நிலையை நிலைப்படுத்திவிடும் . பெரும்பாலும் இவர்கள் மேற்கொள்ளும் உல்லாச வாழ்க்கையிலேயே சீரழிந்து போவார்கள் .

 

மற்றவர்களோடு வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்காதவரை இனிமையாகக் கழிந்த வாழ்க்கை ஒப்பிடத் தொடங்கிய நிமிடத்திலிருந்து துன்பமாகத் தோன்ற ஆரம்பிக்கின்றது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அவர்களுடை எண்ணத்தைப் பொறுத்து அமைகின்றது. எண்ணங்கள் மாற  மாற வாழ்க்கையும் மாறுகின்றது. ஒப்பிட்டுப் பார்க்கும் போது பொறாமை மனதில் வளர்ந்து சுய எண்ணங்களைத் தி ரித்து தீய எண்ணங்களை வளர்த்து விடுகின்றது . இது தேவைகளைத் தேவையின்றி அதிகரித்துக் கொள்ளும்  , உழைக்காமலேயே உலக சுகங்களை எல்லாம் ஒருசேர அனுபவிக்க வேண்டும்  என்று பேராசைப்படும், தன் வருங்காலச் சந்ததியினருக்கு சொத்து சுகங்களைச் சேர்த்து வைக்கவேண்டும் என்று தகுதியில்லாமல் முயற்சி செய்யும் மனப்போக்கைத் தூண்டி பெரும்பாலும் வாழ்க்கையின் போக்கு திசைமாறிப்போகச் செய்கின்றது . நேர்வழி பிறண்டு தவறான வழியில்  அடியெடுத்து வைத்துவிடுகிறார்கள் . இன்றைக்குத் தவறான வழியில் செல்ல மனமாற்றம் கொள்வது தவறில்லை என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு சமுதாயத்தில் குற்றங்கள் மிகவும் சாதாரணமாகி வருகின்றன. யார்தான் தப்பு செய்யவில்லை என்ற ஆறுதல் வார்த்தைகளை நிரபராதிக்கான தீர்ப்பாக எடுத்துக்கொள்கிறார்கள்.

 

Friday, September 4, 2020

God-19

God-19

சொர்க்க லோகம் போன்ற ஓரிடத்தில்  தனியறையில் ஓர் அழகான இளம் பெண்ணும் ,ஓர் இளைஞனும் மட்டும் இருக்கின்றார்கள் . அந்தப் பெண் தன் ஆடைகளை ஒவ்வொன்றாகக் கழற்றி எறிந்து விட்டு இறுதியில் முழு நிர்வாணமாக நிற்கின்றார் .மனப்போராட்டம் நடக்கின்றது. அதன் விளைவு மூன்று விதமாக இருக்கலாம். அந்த இளைஞன் காமத்தால் தூண்டப்பட்டு தவறு செய்யலாம். அல்லது கண்களை மூடிக்கொண்டு சலனப்படும் மணத்தைச் சமாதானப்படுத்தி திசை திருப்பலாம்.அல்லது கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு எதுவும் நடக்காதது போல அமைதியாக இருக்கலாம்.இந்த மனா நிலையைத்தான் தமிழ்ச் சான்றோர்கள் மூன்று மனித நிலைகளாகச் சித்தரிக்கிறார்கள். மனதை அடக்கி ஆளமுடியாதவன் கணப்பொழுது சுகங்களுக்காக ஆசைப்பட்டு தவறு செய்யத் துணிகிறான் .இவன் மனிதருள் அரக்க குலத்திச் சேர்ந்தவன்.தனக்கு உரிமையில்லாத பொருள் தன்னுடைமையாகாது என்று அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள  முடியாமல் அஞ்சி கண்களை மூடிக்கொண்டு  கவனத்தைத் திசை திருப்புபவன்  மனிதன் .நிர்வாணத்தைப் பார்த்தும் மனம் நிர்வாணமாகவே இருக்கின்றது என்றால் அவன் தேவன். இயற்கையில் ஒவ்வொரு மனிதனிடமும் இந்த மூன்று குணங்களும் விகிதாச்சார வேறுபாட்டுடன் இருக்கவே செய்கின்றது 

Wednesday, September 2, 2020

god-18

 God-18

தேவர்கள் நல்லொழுக்கமும், நல்லெண்ணமும் கொண்டு ,ஆக்கச்  செயல்களைச்  செய்யும் இயல்புடைவார்களாக இருந்ததால்  அவர்களுக்கு   சொர்க்கம் கிடைத்தது அசுரர்கள் தீயவொழுக்கமும் ,தீய எண்ணமும் கொண்டு அழிவுச் செயல்களைச் செய்யும் இயல்புடைவார்களாக இருந்ததால் அவர்களுக்கு நரகமே கிடைத்தது.சொர்க்கமும், நரகமும் கொடுக்கப்படுவவ்தில்லை, அது வாழும் முறைக்கு ஏற்ப இயல்பாக அமைவது என்பதை அறிவுறுத்தவே தேவர்களும் அசுரர்களும் கற்பனைப் பாத்திரங்களாகப் படைக்கப்பட்டார்கள் .

மனிதர்களின் நல்வாழ்விற்கு தேவ குணங்கள் உறுதியளிக்கின்றன .தனி மனிதனின்   முதன்மை நற்குணங்களான  அறநெறி ,அன்பு ,நேர்மை ,வாய்மை ஈதல்  போன்றவை முழு சமுதாயத்திற்கும் பாதுகாப்பாய்  விளங்கின. இவர்கள் மனத்தைக் கட்டுப்படுத்தி ஆண்டார்கள் .அதனால் மனம் எப்போதும் உயர்வான வாழ்க்கைக்கு வழிகாட்டியது    மனிதர்களின் தீய வாழ்க்கைக்கு அசுர குணங்கள் காரணமாயிருக்கின்றன. தனி மனிதனின்   முதன்மைத்  தீய  குணங்களான தீவினை ,வெறுப்பு ,பேராசை .பொய்மை , கயமை போன்றவை சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தன. இவர்கள் மனதால் ஆளப்படுபவர்களாக இருந்தார்கள் .மனம்போன போக்கிலே வாழ்ந்ததால் தானும் வாழாமல் பிறரை வாழவும்  விடாமல்  சமுதாயத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தனர்.

     வேண்டிய பொருளைப் பெறும் வழிமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் வேறுபட்டிருந்தது .விரும்பிய பொருளை உழைத்துப் பெறுவது தேவ குணம் அதை மற்றவரிடமிருந்து அபகரித்துக் கொள்வது அசுர குணம்,செய்யும் முயற்சியில் எவ்வளவு இடைத்தடைகள் வந்தாலும் அறநெறி பிறழாமை தேவகுணம். அறநெறி மீறுதலை இயல்பாகக் கொள்ளுதல் அசுரகுணம் .பொய் கூற அஞ்சுவது தேவ குணம், பொய் கூற அஞ்சாமை அசுரர் குணம் , எதையும் எதிர்பாராது பிறருக்கு உதவி செய்வது தேவ குணம். எதிர்பார்ப்புடன் செய்வது  அசுர குணம்.

ஒவ்வொரு மனிதனும் ஒரே மாதிரியான குணத்துடன் எல்லா  நேரங்களிலும் இருப்பதில்லை ..உணர்வுகளின் தாக்கத்தினால் மாற்றம் பெறுவதுண்டு .அதனால் தேவர்கள் சில சமயங்களில் அசுரர்களாகவும் , அசுரர்கள் சில சமயங்களில் தேவர்களாகவும் தாற்காலியமாக தோற்றம் தருவதுண்டு .சூழ்நிலைகளுக்கு ஏற்ப குணங்கள் மனதளவில் மாறிக்கொண்டே இருப்பதால் ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் தேவனும் ,அசுரனும் இருப்பதுண்டு. முழுமையான தேவனோ ,முழுமையான அசுரனோ மனிதருள்ளும்  இல்லை கடவுளிடமுமில்லை. கடவுளைக்  கடவுளாக மட்டுமே  அதாவது மனிதனுக்கு அப்பாற்பட்டவராக வர்ணிக்கும் போது  முழுமையான தேவனாகவும் , மனிதனாகக் கற்பிக்கும் போது தேவனாகவும் அசுரனாகவும் தெரிவிப்பது இதனால்தான், கடவுள்களும் சில சமயங்களில் கோபப்பட்டு சண்டை போட்டுக் கொள்வது அதைப் புலப்படுத்துவதாக இருக்கின்றது.

ஒரு நேர்மையான மனிதன் வறுமையால் அல்லலுற்றான் .வறுமையின் கொடுமை யைத் தாங்க முடியாமல் ஒரு நாள் ஒரு வருக்குச் சொந்தமான பொருளை எடுத்துக் கொள்ளலாமா என்று யோசித்தான் .அப்போது அவன் மனதிற்குள் ஒரு போராட்டம் நடக்கின்றது .திருடு அது தப்பில்லை  என்று ஒரு மனம் கத்துகின்றது திருடு ,அது தப்பில்லை என்று மற்றொரு மனம் கெஞ்சுகின்றது  ஏன் தயங்குகின்றாய் , வறுமையை விரட்ட  இது நல்ல சந்தர்ப்பம்  என்று ஒரு மனம் நச்சரிக்கும் .திருடாதே , அதனால் தண்டிக்கப்படுவாய் .ஒரு முறை கெட்ட பெயர் சம்பாதித்து விட்டால் அதை மாற்றுவது எளிதல்ல . வாழ்க்கை முழுதும் தொடரும் என மீண்டும் கெஞ்சுதல் தொடரும். போராட்டத்தின் முடிவு  மனிதன் தேவனாகவே இருக்கின்றானா அல்லது அசுரனாக இருக்கின்றானா என்பதைப் பொறுத்து அமைகின்றது .. மகாபாரதப் போர் என்பது 100 தீயவர்களுக்கும் 5 நல்லவர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் அது  மனதிற்கும்  மனிதனுக்கும் இடையே நடக்கும் போராட்டமே . சூரசம்காரம் மனதில் குடியிருக்கும் தீய எண்ணங்களை வேரறுக்க வேண்டும் என்பதைக் கூறுவதாக இருக்கின்றது .அசுரன் ஒருவன் தாங்கமுடியாத  கொடுமைகளைச் செய்தால்  அதை எதிர்க்க ஒரு சூரன் வருவான் என்ற உண்மையை சமுதாயத்திற்கு உணர்த்துவது புராணக் கதைகள். 

ஆக்கத்தில் அழிவுமுண்டு அழிவில் ஆக்கமுமுண்டு. மேட்டில் பள்ளமுண்டு ,பள்ளத்தில் மேடுமுண்டு ,இன்பத்தில் துன்பமுண்டு , துன்பத்தில் இன்பமுமுண்டு.பொருளுக்கு எதிர்ப்பொருளுண்டு ,எதிர்பொருளுக்குப் பொருளுமுண்டு . இறுதிச் சமநிலைக்கு இவை இரண்டும் தவிர்த்துக் கொள்ள முடியாதன.  என்பதை உலகிற்கு உணர்த்துவதே கடவுள் குடும்பம் 

Tuesday, September 1, 2020

God-17

 

கடவுள்-17

மனதின் மாயத் தோற்றத்தையே கடவுளாக வர்ணித்துக் கொண்டார்கள் என்பதற்குப் புராணங்கள் ஆதராமாய் இருக்கின்றன.மனதிற்கும் ,கடவுளுக்கும் உள்ள ஒற்றுமைகள் இதற்கு உறுதியளிக்கின்றன .மனதை - தன் மனத்தைக் கூட ஒருவர் ஓர் உருவமாகக் காணமுடியாது.மனதிற்கு சுயஉருவமில்லை .மனதை ஒரு உருவமாகப் பார்க்க வேண்டுமென்று விரும்பினால்  ஒருவர் அவரையே பார்த்துக் கொள்ளவதைத் தவிர வேறு வழியில்லை. அது   மட்டுமல்ல மனதைச் சரியாகப் புரிந்து கொள்ளவும் முடியாது. புரிந்து கொள்வதற்கான தகுதியை வளர்த்துக் கொண்ட பிறகே  மனதைப்  பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொள்ள முடிகின்றது.அது போல கடவுளையும் கண்களால் காணவே முடியாது போதிய தகுதியை வளர்த்துக் கொண்டால் மட்டுமே கடவுளை உணரமுடியும். கடவுளை உயிருள்ள ஒரு உருவமாகப் பார்க்க விரும்பினால் ஒருவர் அவரையே கடவுளாக நினைத்துக் கொள்ளவேண்டும். மனம் ஒன்றைப் பலவாகும் பலவற்றை ஒன்றாகும் . கடவுளும் இயற்கை வடிவில் இதைத்தான் செய்கின்றார் . மனதின் படைப்புத் திறன் அளவற்றது. அது அனுபவங்களைப் பதிவுசெய்து வைக்கின்றது,எண்ணுகின்றது , சிந்திக்கின்றது,  உறுப்புக்களின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துகின்றது, செயல்படத்  தூண்டுகின்றது .அது போல கடவுளின் படைப்புத் திறனும் மதிப்பிட முடியாத அளவிற்கு  அளவற்றது .  மனம் ஆற்றலின்றி பொருள் சமைக்கும் ,பொருளின்றி ஆற்றலை விளைவிக்கும் .கடவுளை போல எந்தவொரு வாகனமோ அல்லது ஊர்தியோ இன்றி பல ஒளியாண்டுகள் தொலைவு நினைத்த நொடியில் கடக்கும்.எதை அடைய  விரும்பி முயற்சி செய்து ஈடுபாட்டுடன்  கூடிய உழைப்பைத் தொடர்ந்தால் அதை நிச்சியமாக அடையமுடியும். ஒன்றைப் பெறுவதற்கான வழி காட்டும் மனதைப்  போல  கடவுளும் தகுதியுடைய மனிதர்களுக்கு வழிகாட்டுகிறார். மனம் முயன்று சரியாகச் செயல்பட்டால் அளவற்ற செலவத்தை எவரும் ஈட்டலாம். கடவுளிடம் வேண்டிக் கொண்டால் பொன்னும் பொருளும் அள்ளித் தருவார் என்பதைப்போல , ஒருவர் தன் மனதை வேண்டிக்கொண்டாலும் அது போல நிகழும் .

எல்லையற்ற பிரபஞ்சத்தை உருவாக்கிக் காப்பதையும் ,பேரூழியில் அழிக்கவேண்டியதை அழிப்பதையும் இடைவிடாது செய்யும் முழுமுதற் கடவுள் சிவன் என்பார்கள்.மும்மூர்த்திகளில் முதல்வன் .சைவ சித்தாந்தத்தின் தலைவன் உண்மையில் .எதுவும் அழிப்பதற்காக ஆக்கப்படுவதில்லை . புதிய இயற்கைச் சூழலுக்கு ஏற்ப ஆக்கப்படுவதற்காகவே அழிக்கப்படுகின்றன.பரிணாம வளர்ச்சியின் அடிப்படையே அதுதானே .சிவன் பொருளென்றால் பார்வதி ஆற்றல். சிவன் அறிவு என்றால் பார்வதி சக்தி. எப்படி பொருளும் ஆற்றலுமின்றி எதையும் ஆக்கமுடியதோ அது போல அறிவும் சக்தியுமின்றி  ஆக்கமுடியாது. அறிவும் சக்தியும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்பதையும், இனப்பெருக்கத்தின் மூல மந்திரத்தைச்   சுயமாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதையும்  மனிதர்களுக்கு அறிவுறுத்தவே அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளித்தார் போலும்.

இந்த அண்டத்தில் உயிர்களை உருவாக்கும் படைத்தல் தொழிலைச் செய்பவர் பிரம்மா ஆவார், ஒருவருடைய மனமே கற்பனை செய்கின்றது ,எண்ணுகின்றது ,சிந்திக்கின்றது, செயல்படுகின்றது. எதையொன்றையாவது படைக்கவேண்டும் என்றால் அதற்கான மூலம் மனமே. மனதின் படைப்புத்  திறனே பிரும்மம் ஆகின்றது. ஒன்றை உருவாக்குவதற்கு  திறமை மட்டும் போதாது அது தொடர்பான அறிவும் தேவை . பிரும்மாவும்  சரஸ்வதியும் இணையும் போது உருவாக்கம் மேம்படும் என்பதை உணர்த்துவது போல இருக்கின்றது  , அவ்வாறு படைக்கப்பட்டவற்றைப் பாதுகாக்கும் காத்தல் தொழிலைச் செய்பவர் விஷ்ணு.,. படைப்பால் பயனீட்டுவது என்பது பொருள் சேர்ப்பதும் .அதைப் பாதுகாப்பாக வைத்துக்  கொள்வதும் , பயனுள்ளவாறு செலவழிப்பதுமாகும். இது மனதின் ஆளுமைத் திறனோடு தொடர்புடையது. ஆளுமைத் திறன் என்பது நேர்மையாகப் பொருளீட்டுவது மட்டுமில்லை அதை  நேர்மையாகச் செலவழிப்பதுமாகும் .இனிய வாழ்க்கைக்கு  உகந்த இரகசியத்தை மனதறியுமாறு எடுத்துரைப்பது விஷ்ணுவும் லட்சுமியுமாகும். உலகில் தீமைகள் ஓங்கும் போது விஷ்ணு அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது மக்கள் நம்பிக்கை.. உலகம் தீமை செய்பவர்களால் அழிவதைக்காட்டிலும் .தீமை செய்பவர்களைக் கண்டும் காணாமல் இருப்பவர்களால்தான் விரைவாக அழிகின்றது என்ற உண்மையை உணர்த்துவது ஆளுமைத் திறனே . ஒவ்வொரு மனிதனும் சுமுதாயக் கேடுகளால் பாதிக்கப்படும்போது அதை எதிர்கத்  துணிவு கொள்வான் .அதையே விஷ்ணு அவதாரம் என்று குறிப்பிடுகின்றார்கள்

 மனமென்று  ஒன்று இருந்தால்தான் அங்கு படைப்புத் திறனும், ஆளுமைத் திறனும் இருக்கக் கூடும். தகுதியான  மனம், மனதின் படைப்புத் திறன், மனதின் ஆளுமைத் திறன் ஆகிய மூன்றும் இயல் வாழ்க்கையில் முதன்மைப் பொருளாகின்றன. இவற்றையே சான்றோர்கள் மும்மூர்த்திகளாக  உருவகப்படுத்தியுள்ளார்கள் . மனதின் மூலப்பொருட்கள் எண்ணங்கள் மட்டுமே.அவை நல்ல  எண்ணங்களாகவும்  இருக்கலாம் , தீய எண்ணங்களாகவும் இருக்கலாம் .வளத்தையும் நலத்தையும் கொடுக்கும் நல்ல  எண்ணங்களை தேவர்கள் என்றும் , அதைக் கெடுக்கும் தீய எண்ணங்களை அரக்கர்கள் என்றும் உருவாகப்படுத்தியுள்ளார்கள். .ஒவ்வொருவருடைய மனதிலும் இவ்விரு எண்ணங்களுக்கிடையே முடிவின்றி நடக்கும்  போராட்டத்தையே  தேவர்களுக்கும் அரக்கர்களுக்கும் நடக்கும் போராட்டமாக சித்தரித்துள்ளார்கள். இந்த அடிப்படைக் கருத்துடன் தான் புராணங்களும் ,இதிகாசங்களும் கதையாக எழுதப்பட்டுள்ளன. அதன் நோக்கமே கருத்து வேறுபாடின்றி எல்லோரும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற உயரிய சிந்தனைதான்..  

Thursday, August 27, 2020

God-16

God-16 

தமிழ் இலக்கியங்களில் கடவுள் 

தமிழ் இலக்கியங்கள் யாவும், நூலின் கருப்பொருள் எதுவாக இருந்தாலும்  கடவுள் வாழ்த்துடன் தான் தொடங்குகின்றன. தான் சொல்லப்போகும் கருத்துக்கள் யாவும் சமுதாய நலனுக்காக நடுநிலையோடு அமைய தன்னைத் தானே தகுதிப்படுத்திக் கொண்டதை மக்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு ஒழுக்கநெறியாக கடவுள்வாழ்த்தை மேற்கொண்டனர் . இந்த வழக்கம் சங்க காலம் முழுவதும் (கி.மு.10ஆம் நூற்றாண்டி லிருந்து கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை )  நிலைத்திருந்தது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று உருவமற்ற கடவுள் ஒருவராக இருந்தாலும் , மக்களின் மனநிலைக்கு ஏற்ப  உருவமுள்ள தெய்வங்கள் பலவாயின மக்களின் வாழ்வாதார த்திற்கு எது அடிப்படையாக இருக்கின்றதோ அதன் வளத்தை பாதுகாப்பதற்காக இப்படி உருவமுள்ள கடவுள்களை படைத்துக்கொண்டார்கள்  மக்கள் வாழுகின்ற நிலத்தின் இயல்புகளுக்கு ஏற்பத் தெய்வங்கள் முதன்மை பெற்றன. மலைகளைக் கொண்டுள்ள குறிஞ்சிநிலத்தில் முருகனைத் தெய்வமாகக் கொண்டு வழிபாடுகள் டத்தப்பெற்றன. வயல்களைக் கொண்ட மருத நிலத்தில்இந்திரனையும், பெருமணல் உலகம் எனப்படும் நெய்தல்நிலத்தில் வருணனையும் தெய்வமாகக் கொண்டு வழிபாடுகள்நடத்தப் பெற்றன. காடுகளைக் கொண்ட முல்லை நிலத்திற்குத் திருமாலும், பாலை நிலத்திற்குக் கொற்றவையாகிய காளியும் தெய்வங்களாகக் கருதப்பட்டனர். இறைவணக்கம் என்பது நேர்மறையான சிந்தனை , நல்லொழுக்கம் ,சமுதாயக் கட்டுப் பாடு   இவற்றை மக்களிடையே அழிந்துபோய்விடாமல் நிலைப்படுத்துவதற்காகவே வலியுறுத்தப்பட்டது

 

செயற்கைக் கோள்கள் கண்டுபிடிக்கப்படாத அந்தக்காலத்திலேயே தமிழர்கள் 9 கோள்களுக்கும் சிலைவடித்து வணங்கினர் . மக்களின் வாழ்க்கையில் அவை நேரடியான தொடர்பு எதையும் பெற்றிருக்க வில்லை என்றாலும் , பூமித் தாயின் கூடப்பிறத்தவர்கள் என்ற முறையில்  மதிப்புக்கொடுத்தனர் . சூரியக் குடும்பம் என்பது இயற்கையின் ஒரு அம்சம் .இயற்கையின் எந்த  படைப்பையும்  வணக்கத்திற்குரிய ஒரு வடிவமாகக் கொள்வது மரபு . இறந்து இயற்கையோடு இரண்டற க் கலந்தவர்களையும் வணங்குவது இந்த மரபின் அடிப்படைதான் , இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் நடப்பட்ட கல்லை நடு கல் என்பார்கள்.  இறந்தவர்களை நினைவுகூர்வதற்காகவும் , அவர்களுடைய நல்ல எண்ணங்களைக் கொண்டு செலுத்துவதற்காகவும் இந்த நடு கல்லை வணங்குவதை வழக்கமாக கொண்டார்கள் . உண்மையில் இப்படிச் செய்யும் போது பிறப்பு இறப்புடன் தொடர்புடைய  இயற்கை உண்மைகளை உணர்ந்து கொள்ள முடியும் என்று நம்பினார்கள்    “களிறு எறிந்து வீழ்ந்து எனக் கல்லே பரவினல்லது பரவும்
கடவுளும் இலவேஎன்ற புறநானூற்றுப் பாடல் (பா 335) இங்குச்
சுட்டிக் காட்டத் தக்கதாகும்


Wednesday, August 26, 2020

God-15

 ஆண்டுதோறும் கோயில் திருவிழாக்களில் கூட்டம் அலைமோதுகிறது.பணம் வசூலித்து கும்பாபிஷேகம் செய்கின்றார்கள். கடவுளுக்கு  நேர்த்திக்கடன் என்று கோயில் கோயிலாகச் செல்கின்றார்கள்.ஆன்மிகச் சுற்றுலா இன்றைக்கு அதிகரித்திருக்கிறது. கடிய நெடும் பயணத்தை மேற்கொள்ளக் கூடத்  தயங்குவதில்லை.நடைப் பயணமாக ஆன்மிகத் தளங்களுக்குச் செல்வது ,காவடி, பால்குடம் எடுப்பது தீ மிதிப்பது ,விரதம் இருப்பது ,எனக்  கடவுளை நண்பனாகிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். மெய்ப்பொருளை அறியாமல் கடவுளை நாடுபவர்கள் இரண்டு விதம். ஒரு வகையினர்  செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தம் என்று கடவுளுக்கு பொன்னும் பொருளும் அள்ளிக்கொடுக்கின்றார்கள் மற்றொரு வகையினர் உழைப்பைத் துறந்து விட்டு தன்னுடைய பிரச்சனைகளை எல்லாம் தீர்ந்து வைப்பார், கேட்பதையெல்லாம் இலவசமாகத் தருவார் என்று ஒவ்வொரு  கடவுளாக வணங்கி கொண்டே இருக்கின்றார்கள்    இதனால் மக்களுக்கு ஆன்மிக உணர்வும் , உண்மையான கடவுள் நம்பிக்கையும் மேலோங்கி வருகின்றனவா என்று கேட்டால் அதற்கு இல்லை என்ற பதில் வார்த்தையாக வெளிப்படாவிட்டாலும் ஒவ்வொருவருடைய மனதிலும் ஓங்கி ஒலிக்கவே  செய்கின்றது.

கடவுளை நம் முன்னோர்களுக்கு முன்னோர்கள் கடவுளை உண்டாக்கிச்  சமுதாய நலனுக்காக அறிமுகப்படுத்தினார்கள் .சிலர் மெய்ப்பொருளைத் தெரிந்து கொண்டு கடவுளை ஒப்புக்கொண்டார்கள்  பலர் சான்றோர் சொல் தவறக்கூடாது என்று   கடவுளை ஏற்றுக்கொண்டார்கள் .கடவுளால் தனிமனிதனுக்கு நேரடியாகப் பயன் கிடைக்குமோ இல்லையோ ஆனால் சாகாத சமுதாயத்திற்கு பாதுகாப்பு என்று எல்லோரும் நம்பியதால் காலங்காலமாய் கடவுள் மக்களால் மறுப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. கடவுள் வெறும் கடவுளாக மட்டும் இருந்த போது  எல்லோருக்கும் பொதுவானவர் என்ற நிலை இருந்தது. அவர் செல்வந்தராக நிலை மாறியபோது சுயநலவாதிகள் கடவுளைச்  சொந்தம் கொண்டாட முயற்சித்தனர். அச் செல்வத்தை அபகரிக்கவே இப்படி இவர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்று பகைமை ஏற்பட ஆரம்பித்தது . அப்பொழுது தொடங்கி ,கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் ,கடவுளை நம்பிக்கையற்றவர்கள் என்ற பிரிவினை தலையெடுத்தது. சிலர் பிரிந்து சென்று தங்கள் கட்டுப்பாட்டுக்குள் ஒரு புதிய கடவுளை ஏற்படுத்திக் கொண்டார்கள் . உலகில் உள்ள எல்லோருக்கும் கடவுள் பொதுவானர் என்றால் பிரிவினைவாதிகள்  தங்களைக் கடவுளால்  முதன்மைப்படுத்திக் கொள்ள முடியாது போனது. அதனால் தனி மனிதர்களையே கடவுளாக்கிக் கொண்டு தனி மதத்தை தோற்றுவித்துக் கொடார்கள் . பிரிவினை அதிகரிக்க அதிகரிக்க கருத்து வேறுபாடு காரணமாக மக்களிடையே குழப்பம் மேலிட சண்டையும் சச்சரவும் இயல்பாகின. இரு வகையினருமே கடவுளின் மெய்ப்பொருளை அறியாமல் தொடர்ந்து கடுஞ் சொற்களால் சண்டைபோட்டுக் கொண்டு வருகின்றார்கள் .காலங்காலமாய்ப்  பின்பற்றி ஒழுகப்பட்ட ஒரு பழக்கம் திடிரென்று ஒருநாள் முட்டாள்தனமான பழக்கமாகிவிடாது. கடவுளின் மெய்ப்பொருளை அறியாமலேயே நீண்ட காலமாய் கடவுளை என்றுக்கொண்டதின் விளைவே இந்நிலை.

கடவுள் எப்பொழுது யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது ? ஏன் அறிமுகப்படுத்தினார்கள் ?இதன் பின்னணியை நுட்பமாய் ஆராய்ந்தால் நாம் கடவுள் பெயரால் சண்டையிட்டுக் கொள்வது எவ்வளவு தவறானது என்பதைப்  புரிந்து கொள்ள முடிகின்றது .கடவுள் நிச்சியமாக மனிதனின் படைப்பே,சமுதாயத்திற்கு நலம்பயக்கும் என்று உருவாக்கப்பட்ட ஒரு கொள்கையின் தோற்றமே கடவுளானது .கடவுள்  கொள்கையை ஒருவர் பின்பற்றும்போது  அவர் தனக்குத் தானே கடவுளாகிவிடுகின்றார். வேற்று மதத்தினர் இப்படிப்பட்ட மனிதர்களையே கடவுளாக்கி வணங்குகின்றனர்.

கடவுள் பலவாக இருந்தாலும், சிலையாக இருந்தாலும் , மதம் சார்ந்து மதத் தலைவர்களாக இருந்தாலும் அடிப்படையான கடவுள் கொள்கையில்  மாற்றமில்லை . ஒவ்வொரு மனிதனும் தீய செயல்களைச் செய்யாமல். நல்வழியில் வாழ்ந்து, பிறருக்கு முடிந்த உதவிகளை செய்து  தானும் தான் வாழும் சமுதாயமும் வளமோடு நிலைத்திருக்க கடவுள் கொள்கை துணைபுரிகின்றது இது  உண்மையில் ஒவ்வொரு மனிதனும் தங்கள் தரத்தை, தகுதிப்பாட்டை உயர்த்திக் கொள்ளும் வழிமுறையாகும். இயற்கையோடு ஒன்றிணைந்து ஒத்ததிரத் தூண்டும் மனப்போக்கு.இயல்பாக வாழும் கலையை தன்வசப்படுத்திக் கொள்ள தனக்குத் தானே வழிகாட்டிக்கொள்ளும் எளிய அணுகுமுறை. ஒவ்வொருவரும் தங்களுடைய எண்ணங்களைத் தாங்களே தூய்மைப்படுத்திக்கொள்ள உதவும் உன்னதமான வழிமுறை .சாகாத சமுதாயத்தின் மூல மந்திரம் . 

புரிதலின்மையால் கடவுளை ஏற்றுக்கொண்டவர்களும் , கடவுளை மறுப்பவர்களை சண்டைபோட்டுக்கொள்கின்றார்கள் .இவர்கள்   கடவுள் கொள்கையின் மறைபொருளை தாங்களும் அறிந்துகொள்ளாமல் மற்றவர்களும் அறியமுடியாமற்  செய்துவிடுகிறார்கள்.

God-14

 

கடவுள் -14

கடவுள் நம்பிக்கையும், கடவுள் அவநம்பிக்கையும் இன்றைக்கு மிகவும் போலித்தனமாகி வருகின்றது.  இந்த விஷயத்தில் ஏறக்குறைய எல்லோருமே வேஷமிட்டு  நடிக்கிறார்கள் என்று தான்  சொல்லவேண்டும். கடவுள் நம்பிக்கை பெரும்பாலும் மரபு வழியாகவே பின்பற்றப்படுகின்றது. அதனால் கடவுள் கொள்கையை உணர்த்தும் மெய்ப்பொருள் மெல்ல மெல்ல மனதை விட்டு அகன்று இன்றைக்கு அது மொத்தமாகக் காணாமற் போய்விட்டது. கடவுளை மறுப்பவர்களை வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் கடவுள் நமபிக்கையை வளர்த்துக் கொள்வது  கடவுள் நம்பிக்கையாகாது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை வெல்வதை மட்டுமே வாழ்க்கைக் குறிக்கோளாக கொண்டு கடவுளை மறுப்பது கடவுள் அவநம்பிக்கையாகாது .இரு வகையினருமே ஒருவர் மற்றவரை வெல்வதற்காகவே கடவுளை ஒரு கருப்பொருளாக்கிக் கொண்டார்களே ஒழிய நம்பிக்கைக்காகவோ அல்லது அவநம்பிக்கைக்காகவோ இல்லை.

கடவுள் நம்பிக்கை என்பது கடவுளைத் தெரிந்து கொள்வதை விட , அறிந்து கொள்வதை விடப்  புரிந்து கொள்வதாகும் . கடவுள் கொள்கையின் மெய்ப்பொருள் கடுமையானதுமில்லை, விரிவானதுமில்லை .எல்லோராலும் புரிந்து கொண்டு வாழ்க்கையில் பின்பற்றத்தக்கவாறு மிகவும் எளிமையானது . ஒவ்வொருவரும் அவரவர்க்குரிய வேலைகளை அவரவர்களே செய்துகொள்ள வேண்டும் என்று கடவுள் மனிதனையும் பிற உயிரினங்களையும் படைத்தான். மனிதனைத் தவிரப் பிற உயிரினங்களெல்லாம் இதை நன்கு புரிந்து கொண்டிருக்கின்றன. மனிதன் மட்டும் இன்னும் புரிந்து கொள்ளாததுபோல் நடிக்கிறான் .தான் விரும்பும் எதையும் தன்னால் பெறமுடியும் என்ற நம்பிக்கையைத் தரக்கூடிய தகுதியை வளர்த்துக் கொண்டு தன்னோடு தான் வாழும் சமுதாயத்தையும் வளப்படுத்தி அதன் மூலம் தன எதிர்காலச் சந்ததியினரும் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துபவனே உண்மையான கடவுள் நம்பிக்கையுள்ளவன் .இந்த மனப்பான்மை ஆன்மிக நூல்களைக் கற்பதால் மட்டுமே வருவதில்லை.இயற்கையைப் புரிந்து கொண்டு எண்ணங்களை வளப்படுத்திக் கொள்வதால் ஓரளவு தெரிந்து கொள்ள முடிகின்றது .

கடவுள் நம்பிக்கை எவ்வளவு போலியானது என்பதை பெரும்பாலான மனிதர்கள் பின்பற்றும் ஒரு இயல்பான செயல்முறையைக் கொண்டே விளக்கமுடியும்

ஒருவர் இனம்புரியாத ஒரு வகை நோயால் அவதிப்பட்டார் .கைவைத்தியம், மந்திரித்தல். நேர்த்திக் கடன் முடித்தல் ,பூஜை செய்தல் போன்றவற்றோடு மருத்துவர்களையும் பார்த்தார் .குணமாவதில் முன்னேற்றம் இல்லாததால் அடுத்தடுத்து வெவ்வேறு மருத்துவர்களைப் பார்த்து அவர்கள் தந்த பல்வேறு மருந்துகளையும் எடுத்துக்கொண்டார் . சில நாட்களில் அவர் கொஞ்சம் குணமானார். அடுத்தநாள் அவருடைய மனைவிக்கு அதே நோய் தொற்றிக் கொண்டது . ஆனால் அவரால் அந்த நோய் குணமாவதற்கான சரியான வழியைக் கூறமுடியவில்லை. எதிலாவது ஒன்றில் குணமாகும் என்ற நம்பிக்கையில்  ஒன்றில் கூட நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளாததின் பின்விளைவே இது.  பொதுவாகப்  புரிதலின்மை பெரிய அளவில் இருக்கும் போது அவநம்பிக்கையும் அப்படியே இருக்கும் .

கடவுளே எனக்கு லாட்டரியில் முதல் பரிசு கிடைக்கவேண்டும் .கடவுளே எனக்குத் தங்கச் சுரங்கம் போல புதையல் கிடைக்க வேண்டும் . கடவுளே எனக்கு ஒரு தேவதை வந்து பொன்னும் பொருளும் அள்ளித்  தரவேண்டும்.கடவுளே எனக்கு எது கேட்டாலும் அதைத் தரக்கூடிய அட்சய பாத்திரம் வேண்டும் . இப்படி கடவுளிடம் போய் கேட்பவர்கள் நிறையப் பேர். உழைப்பின் மீது நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளாதவர்களே தகுதியை வளர்த்தும் பயன்படுத்தாமல் வீணடிக்கின்றார்கள்.