ஊழலற்ற சமுதாயம் – 1
என் நண்பரொருவர் பாலி டெக்னிக்கில் கட்டிடப் பொறியியல் படித்துவிட்டு ஒரு நகராட்சியில் நீர் மேலாண்மைத் துறையில் பணிபுரிந்து வந்தார். அவரது குடும்பம் சிறியது மனைவி, ஒரு மகன், ஒரு மகள். பிள்ளைகள் பள்ளியில் இறுதி வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்கள் வாங்கும் சம்பளம் குடும்பத்தை இனிதாக நடத்திச் செல்லப் போதுமானதாக இருந்தது . செலவு போக கொஞ்சம் சேமிக்கவும் முடிந்தது .குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் தங்களின் நியாயமான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக இருந்தார்கள் .ஒருவரிடமும் ஒளிவு மறைவு இல்லை . வெளிப்படைத் தன்மை இருந்ததால் உறவை பலப்படுத்திக் கொள்ள வாய்ப்பாக இருந்தது. அது எதிர்கால மகிழ்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் உறுதியும் அளித்தது .
ஆற்றில் நீர் எப்போதும் அமைதியாகவே ஓடிக்கொண்டிருப்பதில்லை என்பதைப்போல காலம் எப்போதும் ஒரே மாதிரியாகக் கடந்து செல்வதில்லை உண்மையில் ஆற்றின் ஆழ, அகலத்தைப் பொருத்தும், நீர்ம அழுத்தத்தைப் பொருத்தும் ஆற்று நீரின் அமைதியும் ஆர்பரிப்பும் அமைகின்றது. ஆற்றைப் பொறுத்தவரையில் ஆழமும் அகலமும் அகத் தாக்கம் , நீர்ம அழுத்தம் புறத்தாக்கம். இதைப்போல ஒவ்வொரு மனிதனும் அகத் தாக்கத்தாலும், புறத்தாக்கத்தாலும் பாதிக்கப்படுவதுண்டு ஒரு மனிதன் பிறரைப் பார்த்துத் தானாகக் கெட்டுப்போவது அகத் தாக்கம்,பிறரின் போதனையால் கெட்டுப் போவது புறத்தாக்கம். மனைவி மக்கள் பிறரின் போதனையில் மயங்கி , குடும்பத் தலைவனைத் தவறான வழியில் பொருள் சம்பாதிக்க போதிப்பதிப்பதும் ,நிர்பந்திப்பதும் மிகவும் மோசமானது.ஏனெனில் இது மிக எளிதில் ஒரு தீய எண்ணத்தை உட்புகுத்தி தீய செயலை உடன் செய்யத் தூண்டிவிடும் அகத் தாக்கமானாலும் புறத் தாக்கமானாலும் இரண்டுமே மனம் ஒப்புக்கொண்டு அனுமதித்தால் மட்டுமே நிகழும் என்பதால் ஒருவருடைய நல்ல மற்றும் கெட்ட நிலைக்கு அவரே காரணமாக இருக்கின்றார் என்று சொல்வார்கள்.
பொதுவாக பிறரோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்கும் போது வாழ்க்கை நிலையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் நமக்குள் ஒரு சலனத்தை ஏற்படுத்திவிடுவதுண்டு. மனதைக் கட்டுப்படுத்தி தன் தேவையை மட்டும் உணர்ந்துகொண்டவன் தப்பிப் பிழைக்கின்றான் .மனதில் எழும் போராட்டத்தில் வீழ்ந்துவிடுவதில்லை மனத்தைக் கட்டுப்படுத்தத் தவறியவனே துன்பத்திற்கு ஆளாகின்றான். பொதுவாக அண்டைவீட்டுக்காரர்கள் , அலுவலக நண்பர்கள் ,பணக்கார உறவினர்கள் எல்லோரும் மனதில் ஒரு சலனத்தை தற்பெருமை பேசிப்பேசியே தூண்டிவிட்டுவிடுகின்றார்கள்.ஒரு சிலர் தவறான வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் அறிவுரை கூறுவார்கள். சிக்கிக் கொண்டவர்கள் மாயவலையில் விழுந்து துன்பப் படுகின்றார்கள் . மற்றவர்களோடு வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்காத வரை மனதில் சலனம் ஏற்படுவதற்கு வழியில்லை . அது புறத்தாக்கத்தை அனுமதிக்காத நிலை யாகும் .தேவைகளும் தேவையின்றி அதிகரித்து வாழ்க்கையை பாரமாக்கிவிடுவதுமில்லை.
தவறு செய்பவர்கள் அந்தத் தவறு செய்வதற்கான ஒரு காரணத்தை முன்கூட்டியே மனதில் தேக்கி வைத்திருப்பார்கள் . அது அவர்கள் தவறுகள் செய்வதற்கு சமுதாயம் தந்த அனுமதிச் சீட்டுப்போல நினைத்துக் கொள்வார்கள் பெரும்பாலானோர் வறுமை காரணமாகத் தவறு செய்வதாகக் கூறுவார்கள். வேறு சிலர் குடும்பத்தின் தேவைக்காக, நாகரிக வாழ்க்கைக்காக , தொழிலில் முதலீடு செய்வதற்காக வாங்கிய கடனை அடைப்பதற்க்காக் , வீட்டுக்குத் தெரியாமல் செய்த குற்றங்களை மறைப்பதற்காக , என்று பல காரணங்களை சொல்லுவார்கள். உண்மையில் எந்தக் காரணத்திற்க்காகத் தவறு செய்தாலும் ,அது காலப்போக்கில் அந்த காரணமின்றியே செய்யும் மன நிலையை நிலைப்படுத்திவிடும் . பெரும்பாலும் இவர்கள் மேற்கொள்ளும் உல்லாச வாழ்க்கையிலேயே சீரழிந்து போவார்கள் .
மற்றவர்களோடு வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்காதவரை இனிமையாகக் கழிந்த வாழ்க்கை ஒப்பிடத் தொடங்கிய நிமிடத்திலிருந்து துன்பமாகத் தோன்ற ஆரம்பிக்கின்றது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அவர்களுடை எண்ணத்தைப் பொறுத்து அமைகின்றது. எண்ணங்கள் மாற மாற வாழ்க்கையும் மாறுகின்றது. ஒப்பிட்டுப் பார்க்கும் போது பொறாமை மனதில் வளர்ந்து சுய எண்ணங்களைத் தி ரித்து தீய எண்ணங்களை வளர்த்து விடுகின்றது . இது தேவைகளைத் தேவையின்றி அதிகரித்துக் கொள்ளும் , உழைக்காமலேயே உலக சுகங்களை எல்லாம் ஒருசேர அனுபவிக்க வேண்டும் என்று பேராசைப்படும், தன் வருங்காலச் சந்ததியினருக்கு சொத்து சுகங்களைச் சேர்த்து வைக்கவேண்டும் என்று தகுதியில்லாமல் முயற்சி செய்யும் மனப்போக்கைத் தூண்டி பெரும்பாலும் வாழ்க்கையின் போக்கு திசைமாறிப்போகச் செய்கின்றது . நேர்வழி பிறண்டு தவறான வழியில் அடியெடுத்து வைத்துவிடுகிறார்கள் . இன்றைக்குத் தவறான வழியில் செல்ல மனமாற்றம் கொள்வது தவறில்லை என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு சமுதாயத்தில் குற்றங்கள் மிகவும் சாதாரணமாகி வருகின்றன. யார்தான் தப்பு செய்யவில்லை என்ற ஆறுதல் வார்த்தைகளை நிரபராதிக்கான தீர்ப்பாக எடுத்துக்கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment