Monday, October 15, 2012

அறிக அறிவியல் கதிரியக்கக் கார்பன்(கார்பன்-14) புவி வளி மண்டலத்தில் எப்படி உற்பத்தியாகின்றது ? இதற்குப் பல வழிமுறைகளை ஒருவர் கூறினாலும் இயற்கையில் ஒரு வழிமுறை மட்டுமே சரியானதாக இருக்க முடியும். வேக நியூட்ரான்களும் ,வளி மண்டலக் காற்றில் உள்ள நைட்ரஜனும் மோதிக் கொள்ளும் போது ,அதன் அணுக்கருவால் உட்கிரகிக்கப் பட்டு உண்டாகலாம் என்று சொல்லலாமா ,அல்லது சூரிய ஒளியில் வரும் ஆற்றல் மிக்க புற ஊதாக் கதிர்கள் வளிமண்டலக் காற்றிலுள்ள ஆக்சிஜனுடன் வினை புரிந்து உண்டாகலாம் என்று சொல்லலாமா அல்லது காஸ்மிக் கதிர்கள் எனப்படும் அண்டக் கதிர்கள் வளி மண்டலக் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடுடன் வினை புரிந்து விளையலாம் என்று சொல்லலாமா அல்லது மின்னல் ஏற்படுத்தும் மின்னிறக்கத்தின் போது கதிரியக்க கார்பன் உற்பத்தி செய்யப் படலாம் என்று சொல்லலாமா. இவற்றுள் எந்த வழிமுறை சரியானது ? ஆக்சிஜன் -16 , கார்பன் -14 ஆக மாற வேண்டுமானால்,அதிலிருந்து இரண்டு புரோட்டான்கள் நீக்கப் படவேண்டும். புற ஊதாக் கதிர்களுக்கு அணுக்கருவை ஊடுருவி புரோட்டான்களை வெளியேற்றும் அளவிற்கு ஆற்றல் இல்லை. மேலும் ஆற்றலூட்டப்பட்ட ஆக்சிஜன் கிளர்ச்சியூட்டப் படுவதால் ,ஆற்றலை உமிழ்ந்து அடி மட்ட ஆற்றல் நிலைக்கு வரும். வளி மண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடின் செழுமை ௦.2 விழுக்காடிற்கும் குறைவே.எனவே இந்த வினை நடை பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. மின்னிறக்கம் பொதுவாக வேதியியல் வினைகளை மட்டுமே தூண்டும் அணுக்கரு வினைகளைத் தூண்டுவதில்லை. எனவே அண்டக் கதிரில் வரும் நியூட்ரான்கள் வளி மண்டலத்தில் மிகுதியாக இருக்கும் நைட்ரஜனுடன் வினைபுரிந்து கார்பன் -14 யை உற்பத்தி செய் கின்றன என்பதே சரி.தாவரங்கள் இந்த கதிரியக்க கார்பனை,சாதாரணக் கார்பனுடன்(கார்பன்-12) உட்கிரகித்துக் கொள்கின்றன. கதிரியக்க கார்பன் ஒரு எலெக்ட்ரானை உமிழ்ந்து நைட்ரஜன் -14 ஆக மாறி வெளியேறி விடுகின்றது. எனினும் தாவரம் உயிரோடு இருக்கும் போது சாதாரண கார்பனும் கதிரியக்க கார்பனும் ஒரு சமநிலையில் இருக்கின்றன. தாவரம் இறந்த பின் கதிரியக்கக் கார்பனின் செழுமையில் குறைவு ஏற்படுகின்றது. இதைக் கணக்கிட்டு அறிந்து தாவரப் பொருளின் வயதை அறிவார்கள். இதையே கார்பன் டேட்டிங் (Carbon dating) என்பர். இவ்வாறு பழைய மரத் துண்டுகளின் வயதைக் கணக்கிட்டு அறியும் முறையை 1940 ம் ஆண்டில் அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரைச் சேர்ந்த லிப்பை (willard F .Libby) என்பார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment