Friday, October 5, 2012


எழுதாத கடிதம்
ஒரு குடும்பத் தலைவன் சமுதாய உணர்வோடு வாழும் போது தான் ஈட்டிய வருமானத்தைப் பல செலவினங்களுக்கும் பகிர்ந்தளிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பான். பிரியமான மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் கொஞ்சம் ,உறவினர்களுக்குக் கொஞ்சம் , பொழுது போக்கிற்குக் கொஞ்சம் என்று திட்டமிட்டுச் செலவு செய்வார். இதில் எதிர்காலச் செலவுகளுக்கும் தவிர்க்க முடியாத திடீர் செலவுகளுக்கும் மிகவும் குறைவாகவும், தான தர்மங்களுக்கு மிக மிகக் குறைவாகவும் ஒரு சிறு பங்கிருக்கும் .தவிர்க்க முடியாத சூழல்களில் தேவை கருதி ஒன்றுக்கு அதிகமாகச் செலவழிக்க நேரிடும் போது மற்றொன்றில் செலவைக் குறைத்துக் கொள்வார்கள். .இதுதான் உலகப் பொது வழக்கம் .குடும்பத் தலைவன் தன வருமானம் முழுவதையும் தனக்கு மட்டுமே செலவழித்துக் கொள்வதில்லை. அப்படிச் செலவழிப்பார்களே யானால் அவர்கள் குடிகாரர்களைப் போல குடும்பப் பொறுப்பில்லாதவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட வர்களில் சிலர் போதைக்கு அடிமைகளாகி தன் வருமானத்தை இழந்து உறவினர்களின் வருமானம் அல்லது சேமிப்பையும் சுரண்டிவிடுவார்கள் .இவர்கள் எல்லாம் சமுதாயக் களைகள். இந்தியா என்பது ஒரு குடும்பம் போன்ற நாடு. அதன் வளம் என்பது நாட்டின் சொத்து.அதிலிருந்து கிடைக்கும் வருமானம் என்பது குடும்பத்திலுள்ள எல்லோருக்கும் பொது. அது சமமாகப் பங்கீடு செய்வதே முறை ,நியாயமும் கூட .உலகில் ஒவ்வொரு நாடும் தன்னிறைவு பெற்றதில்லை.அப்படி இருக்கையில் ,ஒரு நாட்டின் மாநிலங்கள் தன்னிறைவு பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. .ஒரு மாநிலத்தில் நிலக்கரி ,தங்கம், உரேனியம் கிடைத்தால் அவை அந்தந்த மாநிலங்களுக்கே சொந்தம் என்று சொல்ல முடியாது. அதைப் போலத்தான் நீர் வளமும். ஆறு என்பது எல்லோருக்கும் நீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக இயற்கை செய்த மெகா முயற்சி.நிலத்தில் பெய்யும் மழை நீர் வேகமெடுத்து நெடுந் தூரம் விரிந்து சென்று நிலப் பரப்பில் பரவலாக வாழும் மக்களுக்குப் பயன் தரவேண்டும் என்பதற்காக இயற்கையால் உண்டாக்கப் பட்டதே மலைகள் .இந்த மலைகள் தமிழகத்தில் அமைந்திருந்தால் பெய்யும் மழை மக்களுக்குப் பயனின்றி உடனே கடலில் கலந்து விடும் . கர்நாடகாவில் மழை பெய்து அங்குள்ள மக்களுக்கும் நிலத்தில் ஓடி தமிழக மக்களுக்கும் பயன் தருவதற்காகவே மலைகளை இயற்க்கை கரநாடகாவில் அமைத்துள்ளது. தன் வருமானாம் முழுவதையும் தனக்காகவே செலவழிக்கும் குடிகாரனைப் போல மழை நீர் முழுவதையும் உங்களுக்கு மட்டுமே செலவழித்துக் கொள்ளாதீர்கள். .நாம் ஒரு குடும்பம் என்பதை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். நீரின்றி விவசாயமின்றி ,உணவின்றி ,குடிக்க நீருமின்றி நாங்கள் மடிந்து போவதைத்தான் நீங்கள் விரும்புகின்றீர்களா ? மழை நீரைச் சுமந்து வரும் மேகக் கூட்டங்களை நாங்கள் தான் கர்நாடகாவிற்குள் வழி அனுப்பி வைக்கின்றோம் என்பதை நட்பு உணர்வோடு பாருங்கள்.

No comments:

Post a Comment