Thursday, October 18, 2012

Micro aspects of developing inherent potentials


நினைவாற்றலும் மறதியும்

திரைப்படத்தில் ஹீரோயினின் சின்ன அசைவுகளைக் கூட நீண்ட நாள் நினைவில் வைத்திருப்பார்கள் .ஆனால் மனப்பாடம் செய்த சூத்திரங்களை தேர்வில் தப்புத் தப்பாய் பயன்படுத்துவார்கள்.பணம் கொடுக்க வேண்டி இருந்தால் மறந்ததுபோல் இருப்போம். அதையே வாங்க வேண்டி இருந்தால் மிகச் சரியாக குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் இருப்போம்.   

எவை மனமகிழ்ச்சி தரக்கூடிய ,ஆர்வத்தைத் தூண்டக்கூடிய விஷயங்களாக இருக்கின்றனவோ அவையெல்லாம் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளத்தக்கவாறு .மூளையில் ஆழமாக ,தெளிவாக பதிவாகி விடுகின்றன. அப்படியில்லாதவை மூளையில் ஆழமாகவும் ,தெளிவாகவும் பதிவு செய்யப்படுவதற்கு மனம் ஒப்புதல் அளிப்பதில்லை.இதற்குக் காரணம் பதிவு செய்யப்படும் போது மனதின் சிந்தனைகளும் அவற்றோடு இணைகின்றன என்பதுதான் . மனதை ஒருமுகப்படுத்தி பிற சிந்தனைகளை நீக்கி உணர் உறுப்புகள் மூலம் செய்திகளை மூளையில் பதிவு செய்யும் போது அவை முதல் முயற்சியிலேயே ஆழமாகப் பதிவாகி விடுகின்றன.

மூளையில் செய்திகளைப் பதிவு செய்ய உதவுபவை உடலிலுள்ள உணர் உறுப்புகள்தாம். பார்ப்பதால் கண் மூலமாகவும், கேட்பதால் காது மூலமாகவும், சுவைப்பதால் நாக்கு மூலமாகவும், நுகர்வதால் நாசி மூலமாகவும், தொடுவதால் தோல் மூலமாகவும் செய்திகளைச் சமிக்கை மொழியில் ஒருவர் மூளையில் பதிவு செய்து சேமிக்க முடியும். இதில் ஆறாவதாக மனமும் சேர்ந்திருக்கிறது என்பதை வெகு சிலரே அறிவர். பதிவுகளில் குழப்பத்தை ஏற்படுத்துவது இந்த மனமே . நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ள மனக் கட்டுப்பாடு மிக மிக அவசியம்.

நினைவாற்றல் என்பது முழுக்க முழுக்க மூளையோடு சம்பத்தப்பட்டது அழுத்தம் திருத்தமாக மூளையில் பதிவான விஷயங்கள் மறக்கப்படுவதில்லை. எனினும் காலத்தால் அழியாதது எதுவுமில்லை. அது நினைவுக்கும் மறதிக்கும் காரணமாகும் இந்தப் பதிவுகளுக்கும் பொருந்தும். மூளையில் ஒரு முறை பதிவான விஷயம் ஒரு போதும் அழிக்கப் படுவதில்லை.மீண்டும் நினைவு படுத்திக் கொள்ள முடியாதவாறு மறைக்கப் படுகின்றன அவ்வளவே.அதையே நாம் மறதி என்கிறோம். ஒரு பொருள் பற்றிய செய்திகள் யாவும் மூளையில் ஒரு குறிப்பிட்ட பதிவிடத்தில் பதிவு செய்யப்படுவதால் அவற்றை இனமறிந்து கொள்ளத் தக்கவாறு வேறுபடுத்தி பதிவு செய்துகொண்டால் மட்டுமே மீண்டும் குழப்பமின்றி தேவையான போது மீட்டுப் பெறமுடியும்

இயல்பான நினைவாற்றலையும் மறதியையும் கற்பனை மையால் தெளிவாக்கிக் கொள்ளலாம்.ஒரு கற்பனை மை,அதைக்கொண்டு மூளை எனும் தாளில் எழுதலாம். இந்த மை நிறச் செறிவின்றி நீர்த்து இருப்பதால் எழுதியதைப் பல முறை விளம்பினால் மட்டுமே வேண்டிய அழுத்தத்தைக் கொண்டு வர முடியும். அதாவது ஒரு முறை எழுதினால் அது தெளிவின்றி மங்கலாக இருப்பதால் கண்ணுக்குத்  தெரிவது 1 % மட்டுமே. 2 ,3 .....10 ,20 ......100 முறை விளம்ப அதன் அழுத்தம் அதிகரித்து கூடுதல் தெளிவுடன் தெரிகிறது.பொதுவாக 50 % க்கும் குறைவாகத் தெளிவுடன் எழுதப்பட்டவை குறுகிய கால நினைவகங்களில் பதிவாவது போல பதிவாகின்றன. எவ்வளவு குறைவாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு அவை மறந்து போகும் வாய்ப்பை அதிகம் பெறுகின்றன. 50 % க்கும் அதிகமான தெளிவுடன் எழுதப்பட்டவை நீண்ட கால நினைவகங்களில் பதிவாவது போல பதிவு செய்யப்படுகின்றன. எவ்வளவு அதிகமாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு அவை நினைவிற்கு வரும் வாய்ப்பை அதிகம் பெறுகின்றன.

No comments:

Post a Comment