எங்கோ போகுது இந்த உலகம்
கடவுள் இல்லையென்று ஒருநாள்
வெளியே பகுத்தறிவு சொல்கிறது
கடவுள் வேண்டுமென்று மறுநாள்
உள்ளே உள்ளுணர்வு கெஞ்சுகிறது
எனக்கு உதவாத எதிரிக்கு உதவும்
கடவுள் பகுத்தறிவில் மறைந்தார்
எதிரிக்கு உதவாத எனக்கு உதவும்
கடவுள் உள்ளுணர்வில் நிறைந்தார்
வேண்டும் வேண்டாம் சிலநேரம்
கடவுளின் கதையே இதுதான்
பகுத்தறிவு முழுதாய் நம்பாது
உள்ளுணர்வு முழுதாய் நம்பும்
முன்னது அறிவியல் பின்னது ஆன்மிகம்
பின்னது நீர் முன்னது நெருப்பு
அது சட்டமென்றால் இது தர்மம்
இது மூளையென்றால் அது இதயம்
பகுத்தறிவுக்கும் உள்ளுணர்வுக்கும்
ஒவ்வொருநாளும் ஓயாத சண்டைகள்
ஒவ்வொருவருக்கும் தீராத பிரச்சனைகள்
ஒருநாட்டுக்கு அதுவே மாறாத சிக்கல்
மௌனமாய் மனதிற்குள் நடக்கும் போராட்டம்
மக்கள் மன்றத்தில் நித்தம் அரங்கேறுது
ஒரு கூட்டம் எல்லாவற்றையும் நம்புது
ஒரு கூட்டம் எல்லாவற்றையும் மறுக்குது
முன்னோர் அடிமைகளானார் பின்னோர் எதிரிகளானார்
இவர்கள் முட்டாளென்றால் அவர்கள் புத்திசாலியில்லை
அவர்கள் புத்திசாலியென்றால் இவர்கள் முட்டாளில்லை
முட்டாள்கள் அதிகமானால் புத்திசாலிகள் பயனில்லை
எங்கோ போகுது இந்த உலகம்
No comments:
Post a Comment