Friday, December 21, 2012


சொன்னதும் சொல்லாததும் -8

ஒவ்வோர் அணுவும் அளப்பரிய ஆற்றலை உள்ளடக்கி வைத்திருக்கின்ற ஆற்றல் மூலங்கள் என்பதை அறிந்து கொண்டவுடன் எல்லோரும் அணுவிலிருந்து ஆற்றலைப் பெரும் வழிமுறைகளைப் பற்றி சிந்திக்கலானார்கள் .அப்போது அறிமுகமானவைகளே அணு உலைகள். கனமான அணுவைப் பிளந்தும் ,லேசான இரு அணுக்களை இணைத்தும் அணுவாற்றலைப் பெறலாம் என்றாலும் இன்றைக்கு நடைமுறைச் சாத்தியமானது அணுக்கருப்பிளப்பு (Nuclear fission) முறையே.இதில் யுரேனியம் போன்ற அணுக்களை நியூட்ரான்களைக் கொண்டு தாக்கி சங்கிலித் தொடர் போன்று தொடர் வினைகளை(Chain reaction) உண்டாக்கி ஆற்றலைப் பெறுகின்றார்கள்.இந்த வழிமுறையில் பல ஆபத்துக்கள் இருக்கின்றன. இது அணுகுண்டு போன்ற மனித குலத்திற்கு பேரழிவைத் தரும் ஆயுதங்களுக்கும் வழிகாட்டியதால் சமுதாயநலவாதிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஹாரி எஸ்.ட்ருமன் (Harry.S.Truman) (1884-1972) 1945 முதல் 1953 வரை இருமுறை அமெரிக்க அதிபராக இருந்தவர்.இரண்டாம் உலகப் பெரும் போரை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதில் அரும்பணியாற்றியவர் . அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் பலதரப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று தொடர்ந்து சொற்பொழிவாற்றினார் .அவருடைய பேச்சில் அப்போது மிகவும் பிரபலமாக பேசப்பட்ட அணு உலை பற்றிய கருத்துக்கள் அதிகம் இருந்தன.அப்போது அவர் சொன்னது " அணு உலை என்பது நாம் செய்யும் மிகப் பெரிய முட்டாள்தனமாகும் " ஆனால் மக்கள் அப்போது அதை ஒரு கேலிப் பேச்சாகவே கருதினார்கள் .அதனால் தவறு செய்வது மனிதத் தன்மையானது (Err is Human ) என்பதைச் சற்று மாற்றி" பிழை செய்வது ட்ருமன் தனமானது" என்றனர் .ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இது பற்றிக் குறிப்பிடும் போது " மூன்றாம் உலகப் பெரும் போரில் என்னென்ன ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்பது எனக்குத் தெரியாது .ஆனால் ஒன்று மட்டும் எனக்கு நிச்சியமாகத் தெரியும் .நான்காம் உலகப் பெரும் போர் நடந்தால் அதில் கம்புகளையும் கற்களையும் கொண்டுதான் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வார்கள் " என்று கூறினார்

அணு ஆற்றல் என்பது ஆக்கப் பூர்வமானதாக இருக்க முடியாது என்றும் அழிவுப் பூர்வமானதாகவே இருக்க முடியும் என்றும் உறுதியாக நம்பியதால் இவர்கள் இதுபோன்ற கருத்துக்களைக் கூறினார்கள் ஆனால் உண்மையில் இவர்கள் அணு ஆற்றல் மீது நம்பிக்கையை இழக்கவில்லை ,அணு ஆற்றலைக் கையாளும் மனிதர்கள் மீதே நம்பிக்கை கொள்ளாதிருந்தார்கள்.

எந்த ஆக்கத்திலும் அழிவும் கூடவே இருக்கும்.அதுபோல எந்த அழிவிலும் ஆக்கமும் இருக்கவே செய்யும். சிறிதும் அழிவில்லாத ஆக்கம் எங்குமில்லை என்பதால் அழிவைத் தவிர்த்து ஆக்கத்தை மட்டும் பயன் படுத்திக் கொள்ள வேண்டியது மனிதர்களின் சமுதாயக் கடமையாகின்றது.மனிதர்கள் தங்களுக்கென்றால் ஆக்கத்தையும் பிறருக்கென்றால் அழிவையும் விரும்புவார்கள். மனிதர்கள் கணப்பொழுதில் எண்ணங்களைச் செயல்படுத்தி விடுவதால் ஏற்படும்  அழிவைத் தவிர்த்து கொள்ள முடிவதில்லை என்பதால் ட்ருமனும்,ஐன்ஸ்டீனும் அப்படிக் கூறினார்கள் போலும்.

கத்தி தானாகத் தவறு செய்வதில்லை.கத்தியைப் பிடித்திருக்கும் கைகளே தவறுகளைச் செய்கின்றன என்று சொல்வார்கள் கத்தி கொலைக்          கருவி என்றும் நெருப்பு தீ விபத்தை ஏற்படுத்துகின்றது என்றும் இவற்றைத் தவிர்த்திருந்தால் நாம் நாகரிக வளர்ச்சியைப் பெற்றிருக்கவே முடியாது.அழிவைத் தவிர்த்து ஆக்கத்தை பயன்படுத்தும் வழிமுறைகளைக் கண்டுபிடிக்க இந்த அழிவுகளே ஒரு தூண்டுகோலாக இருக்கின்றன என்பதை நாம் மறுக்க முடியாது

 

No comments:

Post a Comment