எண்ணத்தில் பூத்த வண்ணப் பூக்கள்
வாழ்க்கை
*இனிய வாழ்க்கைக்கு ,பிரச்சனைகளுக்குக் காரணமாக இருப்பதை விட தீர்வாக இருப்பதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்
*எப்படி வாழ வேண்டும் என்று தெரிந்து கொள்ளும் காலம் வரும் போது பெரும்பாலானோர் தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்து விடுகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் இன்னும் வாழக் காலம் கொடுத்தாலும் வாழ்க்கையைப் புரிந்து கொள்வதே இல்லை.
*அறியாப் பருவத்தில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் சில எண்ணங்கள் அறியும் பருவத்தில் செயல்களாக வெளிப்படுவதற்கு மூல காரணமாக இருக்கின்றன பிற் பிறக்கும் செயல்கள் நல்லனவாக இருக்க வேண்டுமானால் முன் தோன்றும் எண்ணங்களும் அப்படியே இருக்க வேண்டும்
*நம்மோடு பிறந்து மடியும் போது உடன்கட்டை ஏறும் இந்த 'நான்' நிரந்தரமானதில்லை நிரந்தரமில்லாத இந்த நானுக்கு மிகைப்பாடான முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை.
*தனக்குக் கிடைப்பது மற்றவனுக்குக் கிடைக்கக் கூடாது என்றும் ,கிடைக்காதது கிடைக்கவே கூடாது என்றும் நினைப்பவர்களே அதிகம்.
*அழிவைச் செய்கின்றவனுக்கு அதன் விளைவில் ஒரு பங்கு எப்போதுமுண்டு .அவன் பங்கு இறுதியில் கிடைப்பதால் அது அவனுக்கு முதலிலேயே தெரியாமல் போய் விடுகிறது. ஒருவன் நன்மை செய்தால் அதிலும் அவனுக்கு ஒரு பங்கு கிடைகின்றது. அது அவனுக்கும் தெரியாமல் அவனுடைய முன்னேற்றத்திற்கு உதவுகிறது.
*ஒரு பல்புக்குள் மின்சாரம் சென்றால் ஒளி வரவேண்டும். ஒரு கம்பிக்கும் மின்சாரம் பாய்ந்தால் வெப்பம் தர வேண்டும். ஒரு குழாய்க்குள் நீர் புகுந்தால் மறு முனையில் வெளியேறவேண்டும் அதைப் போல ஒருவரிடம் சேரும் செல்வமும் மற்றவர்களுக்கும் பயன்படவேண்டும் இயற்கையின் இந்த நடைமுறையை மீறிச் செயற்கையாக வாழ முடியும் என்ற நம்பிக்கையை பெரும்பாலானோர் வளர்ந்துக் கொண்டிருப்பது அழிவுப் பாதைக்கு பிள்ளையார் சுழி போட்டதாகும்.
*நிறைவான ,நிரந்தரமான வளர்ச்சி என்பது உண்மையிலேயே நமது குறிகோளானால் நாம் ஒருவரை ஒருவர் குற்றம் காணும் பழக்கத்தைக் கை விட்டுவிடவேண்டும் .
*பயனுள்ள அனுபவங்களை மட்டும் பிறருக்குச் சொல்லுங்கள் .நீங்கள் நினைப்பதெல்லாம் உங்கள் அனுபவமாகி விடாது என்பதையும் மறந்து விடாதீர்கள்
*தேவை இல்லாமல் தனி மனிதர்களைத் துதி பாடும் பழக்கத்தை விட்டொழிக்காதவரை நாம் உறுதியான, உண்மையான ,நேர்மையான ,நியாயமான எல்லோருக்கும் நலம் பயக்கின்ற முன்னேற்றத்தை எட்டவே முடியாது .
*நாம் பிறருக்காக எதையாவது செய்தால் ,பிறரும் நமக்காகத் தியாகம் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள் ஒன்றைக் கொடுக்க மனமின்றி அதைப் பிறரிடமிருந்து பெற ஆசைப்படுவது எப்போதும் எதிர்பார்த்த பலனை அளிப்பதில்லை .
*உணர்வுகள் என்பது வாழ்கையை நாமாக அறிந்து கொள்ள உதவும் ஒரு மௌன மொழி .
*வாழ்க்கைக்கு பொழுதுபோக்குத் தேவைதான். ஆனால் பொழுது போக்குகளே வாழ்க்கையாகிவிடாது.
*முயன்றால் எதை வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுவிடலாம். ஆனால் காலத்தை இழந்து விட்டால் அதை எவராலும் திரும்பப் பெறவே முடியாது எனவே காலத்தால் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும்
*எல்லோருடைய நம்பிக்கையாக இருந்தாலும் நம்முடைய நம்பிக்கையும் அப்படியே இருக்க வேண்டும் என்பதில்லை .அறிவுப் பூர்வமில்லாத நம்பிக்கைகள் பெரும்பாலும் தவறான முடிவுகளையே மேற்கொள்ளத் தூண்டுகிறது
*நீ வாழ்வது என்பது உன் சம்பந்தப்பட்ட விஷயம்.ஆனால் சமுதாயத்தில் வாழ்வது என்பது உன்னோடு மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயமில்லை இதை புரிந்து கொண்டு வாழ இயலாத போது சிக்கலும் சறுக்கலும் ஏற்படுகின்றன,
*ஒரு மரம் ஒரு காலத்தில் மட்டும் உணவு உட்கொண்டு வளர்வதில்லை. பூத்துக் காய்ப்பதில்லை. பின்னர் ஓய்வாக இருக்கலாம் என்று நினைத்து விரைவாகச் செய்து முடிப்பதும் இல்லை. மனிதனைத் தவிர்த்த எல்லா உயிரினங்களும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்கின்றன வாழ்வதற்காகவே பிறந்தனவை போல.நாமும் அதைப் பார்த்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
*சில சமயங்களில் அதிகமான பாதுகாப்புக் கூட ஆபத்தாக முடியும். குறைவான பாதுகாப்புக் கூட பாதுகாப்பாக அமையும். மிகையும் குறைவும் என்றும் எதிலும் நிறைவைத் தருவதில்லை.
*தேவையில்லாமல் எதையாவது சேர்த்து வைத்துக் கொண்டால் அது வாழ்க்கைக்குத் தேவையில்லாத சுமைதான்.அது பொருளாக இருந்தாலும், எண்ணங்களாக இருந்தாலும் சுமையே. பொருளைக் கொடுத்து விடலாம் ஆனால் எண்ணங்களை ஒருபோதும் மனதிலிருந்து அழித்து விட முடியாது.அந்த வகையில் எண்ணங்கள் பொருளைக் காட்டிலும் கனமானவை. ஒரு முறை ஏற்றுக் கொண்டுவிட்டால் வாழ்கை முழுதும் பாரம்தான்
* வாழ்க்கை முழுத் திருப்தி இல்லாததாக இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் எப்படி வாழ வேண்டும் என்று சிந்திப்பதை விட எப்படி வாழக் கூடாது என்பது பற்றி அதிகம் சிந்திப்பதே ஆகும். பொதுவாக இப்படிச் சிந்திக்கின்ற போது எதிரிடையான எண்ணங்களே மனதில் இடம் பிடித்து விடுகின்றன
*ஏதாவது சிறப்புத் தகுதி இருந்தால் வாழ்கையில் வெற்றி பெறுவதற்குச் சாதகமான சூழ்நிலையை வகுத்துக் கொள்வது எளிதாகின்றது .
*மனிதர்களில் பெரும்பாலானோர் பிறருடைய பலத்தை விட பலவீனத்தையே அதிகம் பயன்படுத்திக் கொள்வதில் விருப்பமுள்ளவர்களாக இருக்கின்றார்கள்
*ஒருவருடைய மனதில் ஏற்படுகின்ற விகார உணர்ச்சிகள் எட்டும் எல்லையைப் பார்க்கும் போது அச்சத்தின் எல்லைக்கே செல்ல வேண்டியிருகிறது.
*சாதனையை எளிமையாக்கிக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். கடுமையாகிக் கொள்வது முட்டாள்தனம்.அதை இயலுவதாக்கிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் வாழ்க்கைப் பந்தயமும் இதைப் போலத்தான். தொடர்ந்து ஓடிக் கொண்டே இருப்பவனும் ,ஓடாமல் இருப்பவனும் வாழ்கையை அனுபவிக்கத் தெரியாதவர்கள்.
*காலையில் விழித் தெழுந்து பகல் முழுதும் வேலைசெய்து இரவு தூங்கிவிடுகின்றோம் இது நம்முடைய ஒரு நாள் வாழ்க்கை..இயற்கையைப் பொறுத்த மட்டில் இந்த சுழற்சி முறையில் மாற்றமில்லை . நம்முடைய யுக வாழ்கையும் இப்படித்தான் இருக்கிறது. பிறந்தெழுந்து வாழ்க்கை முழுதும் உயிர்வாழப் போராடி இறுதியில் இறந்து விடுகின்றோம். இது நம்முடைய ஒரு பிறப்பின் வாழ்க்கை .இதில் இரவுத் என்பது இறப்பிற்கும் அடுத்த பிறப்பிற்கும் இடைப்பட்ட காலம்.
*தவறுகளைக் கண்டு கொள்ளாவிட்டால் தவறுகளே வாழ்க்கையாகி விடக்கூடும்.கவனிக்காது விட்டுவிட்டால் நுண் கிருமிகளைப் போல பல்கிப் பெருகிவிடும்.
*நல்லதொன்றைக் கற்றுக் கொள்ளும் ஆசையில் பல கெட்டவைகளைப் பற்றிக் கற்றுக்கொண்டு விடுகின்றோம்.அதன் பின் நம்முடைய தொடக்க முயற்சியை விட்டு விடுகின்றோம்.பலர் பாதி வழியிலேயே திசை மாறிப் போவது இதனால்தான்.
*வழித்தடங்கள் இல்லாவிட்டால் வழிகாட்டிக்குத் தேவையில்லை. வழித் தடமிருந்தும் தவறான வழிகாட்டி இருந்தால் யாருக்கும் பயனில்லை. முன்பு வழித் தடங்கள் இல்லாமலிருந்தது.இன்றைக்கோ தவறான வழிகாட்டிகள் பெருகியுள்ளனர்.
*வாழ்கையில் எதுவும் நேரலாம் .பணக்காரர் கூட ஏழை வீட்டுக் கதவைத் தட்டலாம், மகன் கூட தந்தைக்கு ஆலோசனை கூறலாம் ,ஆண்டி கூட அரசனாகலாம், .நீதிபதி கூட குற்றவாளிக் கூண்டில் ஏறலாம் .வண்டி மட்டும் தான் படகில் ஏறும் என்பதில்லை. படகு கூட ஒரு நாள் வண்டியில் ஏறலாம்.
*ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு மகத்தான சக்தி உள்ளுக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறது. வாழ்கையில் வெற்றி என்பது இந்த சக்தியை இனமறிந்து அதை முழுமையாக வெளிப்படுத்திக் காட்டுவதில் இருக்கிறது.
*வாழ்கையில் சம்பிரதாயங்கள் இருக்கலாம்.ஆனால் சம்பிரதாயங்களே வாழ்க்கையில்லை.
*பிறருடைய குறைபாடுகளை நம்முடைய குறைபாடுகளுக்கு ஆதரவாக்கிக் கொள்ளக் கூடாது .அது நம்முடைய வாழ்கையை மட்டுமல்ல சமுதாயத்தையே சீரழித்துவிடும் .
*பிறருடைய குறைகளைக் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் தங்களுடைய இயலாமைக்கு ஆதரவு திரட்டிக் கொண்டிருக்கின்றார்கள் .
*உழைக்கும் சாதியாக இருக்க வேண்டும் பிறர் உழைப்பில் வாழும் சாதியாக இருக்கக் கூடாது
*பிறருக்கு நம்மால் கிடைக்கும் சமுதாயப் பாதுகாப்பு உண்மையானதாகவும் நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவும் இருக்குமானால் நமக்குக் கிடைக்கும் பாதுகாப்பும் அப்படியே இருக்கும்.
*வாழ்க்கை என்பது எண்ணங்களினாலும்,உணர்வுகளினாலும் ஆளப் படுகின்றன. வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிக்கும் காரணிகளாக இவை இருப்பதால் ,இவற்றை மேம்படுத்திக் கொள்வது அவசியமாகும் .
*அறிஞனாக வரவேண்டும் என ஒருவர் விரும்பினால் அது தானாக வருவதில்லை அதற்கு அவர் அவரைத் தகுதியுடைவராக்கிக் கொள்ள வேண்டும்.அத் தகுதியும் எல்லோரும் ஆசைப்படுவதைப் போல ஒரு குறுகிய காலத்தில் வந்து விடுவதில்லை.
*வாழ்கை என்பது பிறருக்குப் பயன் தருவதற்கும் அதைத் தொடர்ந்து செய்வதற்கும் தன்னைத் தானே தகுதிப் படுத்திக் கொள்ளும் ஒரு வழி முறை
No comments:
Post a Comment